Advertisement

“ எங்க ஊர் பத்தி கவல இல்ல, ஆனா இங்க வந்து தலைம தாங்குவிங்களோ. பயிர் செய்யமுடியாத படி நிலம் கிடக்கு, அத சரி செய்ய முடியல, இதுல நெல் திருவிழா வைக்குறிங்க. “

“ எங்க ஊர விட்டு வெளியே போங்க. இல்லைனா இப்போ இங்க நடக்க போறத்துக்கு நாங்க பொறுப்பு இல்ல. ” 

என ஒரு மக்கள் கூட்டம் நெற் திருவிழாவில் வெளியே நின்று ஆர்பாட்டம் செய்து செய்துக்கொண்டிருந்தனர்.  

பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்க, தாமரையும் ரோஜாவும் பேருந்தில் இருந்து இறங்கி விட்டனர். இன்று கல்லூரிக்கு சென்றது போல தான் என தாமரைக்கு மலைப்பாக வந்தது. அருகில் இருந்த ஒரு மரத்தடி கல் பெஞ்சில் சென்று தாமரை கையில் இருந்த பையை பத்திரமாய் தோளில் மாட்டியபடி தலையில் துப்பட்டவை போட்டு உட்கார, ரோஜா கூட்டத்தை ஆர்வமாக சென்று பார்த்துக்கொண்டிருந்தாள். 

வெளியே சலசலப்பு கேட்டு வந்த அழகன், 

“ என்ன சித்தப்பா, என்ன சத்தம், இது நம்ப ஃபங்சன் இங்க இப்படிலாம் பண்ணலாமா. “ என கூட்டத்தில் இருந்த ஒருவரை பார்த்துக் கேட்க, 

“ அழகா நீ இதுல தலையிடாத, எல்லாரும் உன் மேல வருத்தமா இருக்கோம். உள்ள இருக்கற அமைச்சர் கட்சி தான இன்னைக்கு நம்ப நிலம் பாசனம் பண்ண முடியாமா இருக்க காரணம். அவர இங்க தலைமை தாங்க கூட்டிட்டு வந்ததே தப்பு. இதுல பஞ்சாயத்து பண்ண நீ இடையில வராத.” என அவர் முறைத்தவாரே சொல்ல, 

“ உங்க அப்பாரு மேல நம்பிக்கை இருந்துச்சு, இவ்ளோ நாள் நம்ப பக்கம் இருந்துட்டு, இப்போ அவங்க பக்கம் நீ செய்யறது நல்லா இல்ல அழகா. நீயும் இந்த ஊரு தான, நீயும் அவங்களுக்கு துணை இருந்தா இன்னும் தான் அவங்க இஷ்டத்துக்கு செய்வாங்க. “ என இன்னொருவரும் சொல்ல, 

“ எல்லாரும் கொஞ்சம் பொறுங்க…என்ன இப்படி சொல்லிட்டிங்க, எல்லாரும் நின்னே பேசிக்கிட்டு, 

எல்லாரும் உட்காருங்க. 

உட்காருங்க” என சொன்னவன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைவரும் நின்றிருக்கும் நடு வீதியில் வந்து அமர, சுற்றி நின்றிருந்த மக்கள் கொஞ்சம் தயங்க, எல்லாம் ஒருவரொருவர் முகத்தை பார்த்து பேசியபடி சலசலப்புடனே அமர்ந்தனர். இவன் ஏதாவது பதிலுக்கு சொல்வான், எப்படியும் போராட்டம் செய்து அமைச்சரை வெளியேற்ற வேண்டும் என எண்ணிக்கொண்டு வந்தவர்களுக்கு இது கொஞ்சம் எதிர் பாராத செயல் தான். இதற்கு முன் இப்படியெல்லாம் அவன் செய்ததில்லை, காரணம் அவன் அப்பா முதற்கொண்டு குடும்பத்தில் யாரும் இப்படி தெருவிற்கெல்லாம் வந்து அமர்ந்ததில்லை. 

“ ராஜாத்தி அக்கா, பெரியசாமி அண்ணே என்ன நீங்க எல்லாம் நின்னிட்டு இருக்கிங்க. இப்படி வந்து உட்காருங்க. “ என அவன் அருகில் இடம் காட்ட, அவர்களும் வாய்க்குள் முனகியபடியே வந்து அமர்ந்தார்.

அனைவரும் அமர்ந்து விட்டனரா என பார்த்தவன், குரல் உயர்த்தி பேச ஆரம்பித்தான்,

“ இப்போ நம்ப பிரச்சனை நம்ப நிலம் தண்ணி இல்லாம கிடக்கறது, ஆறு தூர்வாரமா கிடக்கறது. அதனால நிலம் பாசனம் பண்ண முடியாம இருக்கறது. விளைவிக்குற காய்கறிக்கு சரியான விலை கிடைக்குல.தேவை இல்லாம அளவுக்கு அதிகமா ஆத்து மணல் அள்ளுறது. விவசாயம் செய்ய கடன் வாங்கி திரும்ப கொடுக்க முடியாம இருக்கறது.  இப்படி எல்லாம் சொல்றோமே, 

இது சரி செய்ய நாம என்ன செஞ்சோம்.

அவங்க நேர்ல வந்து பார்த்தா தான பிரச்னை பத்தி அவங்களுக்கு தெரியும். நம்ப கிட்ட இருந்து அவங்க கிட்ட பேச நமக்கு ஆள் வேணும்ல, அதான் நான் இதுக்கு ஏற்பாடு செஞ்சேன். இந்த திருவிழாவ முடிச்சிட்டு அவரு ஊருக்கு திரும்பறதுகுள்ள நம்ப நிலத்தை பார்வையிட சொல்லலாம். அப்போ அவர் மேல் இடத்துல சொல்வாரு. “ என அழகன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, கூட்டத்தில் ஆங்காங்கே சத்தமிட ஆரம்பித்தனர். 

அவன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்திருந்த தாமரை, “ ஆமாமா நல்ல சொல்லுவாரு.” என கடுப்புடன் நினைத்தவள், அவனை பார்ப்பது கூட பிடிக்காமல் திரும்பி அமர்ந்தாள். 

“ என்னப்பா பேசுற நீயி, அந்த காலத்துல நேர்ல வந்தா தான் பிரச்சனை பத்தி தெரிஞ்சுக்கணும். இப்போ அப்படியா, அதெல்லாம் வீட்ல இருந்த படியே  எல்லாம் தெரியுதே. அப்புறம் என்ன அதெல்லாம் மேலிடத்துக்கு தெரியாதா. 

நம்ம பக்கத்து ஊருல ரசாயன கழிவ மண்ணுல விட்டு தண்ணில விட்டு பயிர் வீணாகி, குடிக்க கூட தண்ணிக்கு தவிக்குறாங்க, கால்நடைக்கு கூட தீனி கொடுக்க முடியாம, ஊர விட்டு வேரெடம் பாக்குறாங்க. ஒருதராவது அத சரி செய்ய முடியுதா, எத்தன பேரு வந்து பார்த்தாங்க ? “ என கோபத்தில் அவரவர் கத்த, 

“ எனக்கு உங்களோட ஆதங்கம் புரியுது. 

பக்கத்து ஊர் பிரச்சனையை சரி செய்ய சிரமம் இருக்கு. சட்ட சிக்கலும் இருக்கு. அவங்க வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமா போயிக்கிட்டு இருக்கு. நம்ப ஊருல இருந்தும் பாதி பேரு அங்க போராட்டதுக்கு போறாங்க. ஏன்னா அதுவும் நம்ப விவசாயபூமி தான். 

ஒத்துக்குறேன். 

ஆனா இப்போ நமக்கு இருக்கறது நம்ப ஊர் பிரச்சனைய முதல முடிக்கணும். அப்புறம் தான் பக்கத்து ஊர சரி செய்ய நம்ப எல்லாரும் போராட முடியும்.

நம்ப திடமா நின்னா தான் பக்கத்துல இருகறவங்களையும் சேர்த்து மீட்க முடியும்.

அதுக்காக தான் சொல்றேன், நேர்ல வந்து பார்த்தா தான் நம்ப பிரச்சனையோட ஆழம் புரியும். நம்ப காட்டு கத்து கத்துனாலும் நம்ப பிரச்சனை ஒரு வாரம் பேசுவாங்க, அவ்வளவு தான். அதுக்கு அப்புறம் மறந்துடுவாங்க. இப்போ அமைச்சர் இங்க வர்ரதால, நம்ப பிரச்சனை கவனம் பெரும். “ என அவன் பேச, யாரும் மசிவதாய் இல்லை.

“ இதெல்லாம் ஏத்துக்க முடியாது பா. அவர் இங்க வந்தாலும் நம்ப பிரச்சனைய பத்தி பெருசா யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு செய்தியா  பேசுவாங்க அவ்வளவு தான். நீ சொல்றது சரி வராது. “ என ஆளாளுக்கு பேச, 

“ சரி நம்ப பிரச்சனைய சரி செய்யறேன்னு யாராவது எனக்கு கையெழுத்து போட்டு கொடுங்க, நான் இப்போவே இதுல இருந்து விலகிடுறேன். “ என அழகன் முடிவாய் சொல்லிட,

“ நீ சொல்றது சரி இல்லபா, அதெப்படி முடியும். நடப்புனு ஒன்னு இருக்குல்ல. “ என ஒருவர் சொல்ல,

“ அதே தான் நானும் சொல்றேன், சில விஷயம் சரி செய்ய நடப்புனு ஒன்னு இருக்கு தான, அத தான் நானும் செஞ்சிக்கிட்டு இருக்கேன். நான் கையெழுத்து போட்டு தரேன், இந்த பிரச்சனையே நான் இரண்டு மாசத்துல முடிச்சு தரேன். 

ஒத்துக்குறிங்களா. “ என ஆளுமையாக உறுதியாக உரக்க அழகன் சொல்ல, மக்கள் அமைதியாகினர். 

காரணம் அவன் கட்சி ஆள் பலம். ஆம் அந்த ஊரில் குடும்பத்தில் ஒருவரவது அவன் சுயட்சை கட்சியில் உறுப்பினராக இருந்தனர்.

இரண்டாவது அவன் சொன்னால் நிச்சயமாக செய்திருக்கிறான். அதனால் அவன் அரசியலுக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் அவனை விடாமல் ஏற்றுக்கொண்டனர். 

அவனும் அதை தக்க வைத்துக்கொண்டான்.

அழகனுக்கு இருபத்தி ஐந்து தான், ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அவன் அவனது கட்சிக்கு அடித்தளம் இட்டது அப்படி. 

அழகன் பரமுவை பார்க்க, அடுத்த இரண்டாவது நிமிடம் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதாய் எழுதி வந்தது. அதில் அழகன் ஊர் முன்னிலையில் கையெழுத்திட்டு அவன் அருகில் அமர்ந்த ராஜாத்தி அக்கவிடம் தர, அவர் வாங்க தயங்கினார். 

“ அக்கா இத வாங்கிக்கோங்க. நான் செய்ய முடியரத தான் இதுல எழுதி இருக்கேன். தைரியாம வாங்கிக்கோங்க. “ என ஊக்கினான். அவரும் வாங்கி கொண்டார். அதன் பின்பு எல்லாரும் எழுந்து களைய ஆரம்பிக்க, அழகனும் எழுந்தான் ஒரு முடிவுடன் கையிலிருந்த அணிந்திருந்த காப்பை மேலேற்றியவன், வேட்டியை மடித்து கட்டியபடியே திரும்பி திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி நடந்தான். 

அதையெல்லாம் பார்த்து ரோஜா துள்ளி குதித்துக்கொண்டு தாமரையிடம் வந்தாள். 

தாமரையின் துப்பட்டாவை அவள் தலையில் இருந்து எடுத்தவள், 

“ ஏ தாமரை பார்த்தியா, சிங்கர் எப்படி இந்த பிரச்சனைய ஹாண்டில் பண்ணாருனு. உனக்கு என்னமோ அவர் மேல குத்தம் சொல்லுவ. எங்க இப்போ சொல்லு பார்போம்.” என தாமரை முன் சடக்கு போட்டு ரோஜா கெத்தாய் சொல்ல, 

தாமரை மெதுவாக எழுந்தவள், கைகளில் ஒட்டி இருந்த மண்ணை தட்டிவிட்டு உதட்டை வளைத்த படி,

“ நீ ஒருத்தி லூச இருந்தா கூட பரவால, இங்க நம்ப ஊரே லூசா இருக்கு. உன் சிங்கர் சொன்னானே, குளத்த தூர் வாருறேன், விளைவிக்குற காய்கறிக்கு சரியான விலை வாங்கி தரேன்னு. இதெல்லாம் நடக்குற காரியமா. 

ரொம்ப வருஷம் முன்னாடி ஊர் குளத்த தூர் வாராதுக்கு நம்ப ஆட்களே கரெக்ட்டா சீஸன் வந்ததும் குளத்துக்கு போய் தூர் வாருவாங்க. அப்போதான் அந்த சீஸன் மழைக்கு குளம் ரெடியாகும். 

அப்படி தூர் வாரனு மணல் எல்லாம் ஊர் மக்களே அவங்களுக்கு எவ்வளவு வேணுமோ அத எடுத்து அவங்க நிலத்துக்கு போடுவாங்க, ஏன்னா அந்த மண்ணுல நிறைய ஈரபதம் இருக்கும். நிலத்துல விளைச்சலும் நல்ல இருக்கும். 

வேணும்கரவங்க அளவான ஆத்து மண்ணுல நல்லா வீடும் கட்டிக்குவாங்க. ஆனா அதெல்லாம் ஊர் மக்களே அவங்க தேவைக்கு பயன் படுத்திக்குவாங்க. ஆனா அப்போலாம் மணல் கொள்ளைனு எதுவும் இருந்தது இல்லை. 

ஆனா இப்போ நிலைமை அப்படி இல்ல.

ஊர் குளம் தூர் வார்ரது இப்போ கவர்ன்மெண்ட் கைல இருக்கு. 

அவங்க தான் குளத்துல எதுவும் பண்ண முடியும். கவர்ன்மெண்ட் சட்டம் போட்டாலும், சில பேர் தப்பா பயன்படுத்தி மணல் கொள்ளைக்கு பயன்படுத்துறாங்க. 

இதுல உன் சிங்கர் என்ன செய்ய முடியும். தூர் வார முடியுமா, இல்ல மணல் கொள்ளைய தடுக்க முடியுமா ?

உன் தலைவன் தான் காத்துல படம் வரையுறான்னா, அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு. 

அவன் ஒன்னும் பிரச்சனை முடிச்சு வேட்டிய மடிக்கல, அதுல மண்ணு ஒட்டிக்குச்சுனு அத தெரியாம இருக்க தான் லாஸ்ட்ல வேட்டிய மடிச்சு கட்டுனான். 

இன்னைக்கு நம்ப காலேஜ் போய் சேர்ந்த மாதிரி தான். “ என அழகனை பங்கமாய் வாரிவிட்டு சலிப்பாய் சொல்லி பேருந்தை நோக்கி நகர, ரோஜா கோபமாக செல்லும் தாமரையை முறைத்திருந்தாள். 

ரோஜாவை திரும்பி பார்க்காமலே, “ முறைச்சது போதும் வா. “ என சொல்லி தாமரை பேருந்தின் அருகில் அசல்டாக நடக்க, ரோஜா ஓடி வந்தவள், 

“ என் சிங்கர் பத்தி இந்த மாதிரி எதுவும் சொல்லாத. எனக்கு ரொம்ப ஃபீல் ஆகும். “ என ரோஜா முகத்தை உம்மென்று வைத்து சொல்ல, 

தாமரை ஒரு நொடி நின்று அவளை புருவம் உயர்த்தி பார்த்தவள், 

“ நீ ஃபீல் ஆகு, நல்லா ஃபீல் ஆகு. எனக்கும் ஒன்னும் இல்ல. “ என சொல்லி செல்ல, ரோஜா பல்லை கடித்த படியே அவள் பின்னே சண்டை பிடித்தபடி சென்றாள். இருவரும் பேருந்தில் ஏறி ஒரு மணி நேரம் தாமதமாக கல்லூரி வந்திறங்கினர்.

அவர்கள் கல்லூரி வாசலை அடைந்த பின்பு, சண்டைகள் மறந்து மனதில் உற்சாகம் தானாய் பிறக்க, இருவரும் உள்ளே பறந்தனர். பட்டமளிப்பு விழா இன்னும் ஆரம்பிக்கபடாமல் இருக்க, சரியான இடத்தை பிடித்து சென்று கல்லூரி தோழிகளுடன் அமர்ந்து விட்டனர். 

கல்லூரி ஆடிட்டோரியம் கிட்டதட்ட இரண்டாயிரம் மாணவர்கள் அமர்ந்திருக்க, காற்றில் முழுக்க மகிழ்ச்சியான பேச்சுக்கள் சத்தம் நிறைந்திருக்க, அவரவர் பரஸ்பர விசாரிப்புகள், சேட்டைகள், நட்பான அனைப்புகள், செல்ல அடிகள், சிரிப்பு என உற்சாக அலை ஓயாமல் இருந்தது. 

நெற் திருவிழாவில் தலைமை தாங்கிய அமைச்சர் தான் இங்கும் பட்டம் கொடுப்பதாய் இருக்க, அவர் வரும் வரை இங்கே தாமதமானது. அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். 

ஆடிட்டோரியம் உள்ளே அமைச்சர் வர, எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர். அமைச்சரை அடுத்து அழகனும் பார்மல்ஸில் உள் நுழையே, மாணவர்கள் இடையே “ ஹேய்…ஊ…” என இன்னும் கை தட்டல் அதிகரிக்க, 

ரோஜா, “ ஏ தாமு, அவர் அங்க பார்த்த மாதிரியே இங்கயும் வந்துருக்காரு, ஆனா பார்மல்ஸ் நல்லா இருக்குள்ள ?” என தாமரையின் காதை கடிக்க, தாமரை திரும்பி அவள் முகம் பார்க்க, ரோஜா மெய் மறந்து அழகனை பார்த்துக்கொண்டிருந்தாள். 

“ அவர் சார்மிங்கா இருக்காருல்ல, பார்க்கவே ஃபிரெஷ்ஷா இருக்கருல்ல, அங்க ரோட்டல பேசுனப்போ கூட செம்ம கியூட்டா இருந்தார்ல.“ என அவள் அடுக்கி கொண்டே போக, 

“ ஏ லூசு புள்ள, கொஞ்சம் வாய திறக்காத. நல்ல மூட்ல இருக்கேன். என்னைய காண்டாக்காத. “ என அவள் புறம் சாய்ந்து தாமரை சொல்ல,

“ ஓஹ் காண்டாகுறியா, ஆகு, நல்லா ஆகு. “ என ரோஜா தாமரையை பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டு திரும்பி அழகனை பார்த்துக்கொண்டே,

“ செம்ம ஸ்மார்ட் மை சிங்கர். “ என இன்னும் சொல்லிக்கொண்டே போக, பின்னால் இருந்த பெண்கள் பக்கம் அழகனை பார்த்ததும் நிற்காமல் சத்தம் வந்துகொண்டே இருந்தது. 

தாமரை காதை இரு கைகளையும் வைத்து மூடிக்கொண்டாள்.

அழகனும் அதே கல்லூரியில் தான் மூன்றாண்டுகளுக்கு முன் படித்திருந்தான். அதனால் கல்லூரி நிர்வாகம் அவனுக்கு நெருக்கம். இப்படி பட்டமளிப்பு விழா வரப்போகிறது என அவனிடம் நிர்வாகி ஒருவர் சொல்லியிருக்க அவன் நெற் திருவிழாவில் கலந்துக்கொள்ளும் அமைச்சரை இங்கே அழைத்து வரமுடியுமா என அவனிடம் கேட்டு பார்க்க, “ நம்ப காலேஜ்க்கு கண்டிப்பா கூட்டிட்டு வரேன். “ என சொல்லியவன் அதே போல் அமைச்சரை இங்கே பட்டம் கொடுக்க அழைத்து வந்திருந்தான். 

தான் படித்த கல்லூரியில் இத்தனை வரவேற்பு கிடைக்குமென அவனே எதிர்பார்க்கவில்லை. தங்களை சேர்ந்தவன் இப்போது அவனது ஊரிலும் சரி  மாவட்டத்தில் முக்கிய நபராய் இருப்பது, மானவர்களுக்கு உரிய உற்சாகத்துடன் அவனை வரவேற்க, அழகனுக்குமே அது புது உணர்வு தான். 

இந்த வரவேற்பு எளிதில் அவனுக்கு கிடைத்தவிடவில்லை. அத்தனையும் அவன் உழைப்பு. அவர்கள் ஊரில் இளம் வயதில் யாரும் நெருங்க முடியாத நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருந்ததின் அடையாளம். 

       

             

     

Advertisement