Advertisement

              அந்த விடியல் காலை வேளையில் தேவி பரபரப்பாக சமயல் செய்துக்கொண்டிருந்தார். அதிரசம், இனிப்பு கொலுக்கட்டை, முறுக்கு எல்லாம் சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்தது. இன்று மலர்விழி வீட்டிற்கு வருகிறாள் என விடியலிலே எழுந்து வேலையில் இறங்கிவிட்டார். 

      வருடங்கள் வேகமாய் சென்றிருக்க, மலர்விழிக்கு திருமணம் முடிந்திருந்தது. செந்தாமரை தன் படிப்பு முடிந்து அதே ஊரில் வேலை பார்க்கிறாள். இன்று தன் அக்காவின் மூன்று வயது மகன் ஆதி வீட்டிற்கு வருவது தனி மகிழ்ச்சியை கொடுத்திருக்க, தாமரை அவளது வீட்டில் பரப்பாக வெளியே செல்ல கிளம்பிக்கொண்டு இருக்கிறாள்.

      இன்று செந்தாமரைக்கு கல்லூரியில் பட்டமளிப்பு விழா. அவளது கனவு இன்று அவள் கையில் கிடைக்கப்பெறவிருப்பது அவளை ஏக போக மகிழ்ச்சியில் தள்ளியிருக்க, தன் அறையை தலை கீழாய் போட்டு தயாராகிக்கொண்டிருந்தாள். 

       தன் மேஜையின் கண்ணாடி முன் நின்றிருந்தவள், விட்டால் கண்ணாடியின் உள்ளே சென்றுவிடுபவள் போல் அதை ஒட்டிக்கொண்டு தன் விழிகளுக்கு மை தீட்டிக்கொண்டிருந்தாள். மெல்லிய ஆரஞ்ச் வண்ண சில்க் காட்டன் சல்வார் ஆங்காங்கே இளந்தங்க நிற வேலைப்பாடுகள் மிக லேசாய் செய்யப்படிருக்க, அடர்ந்த தலைசிகையை தூக்கி ஒரு கேட்ச் கிளிப் போட்டு தயாராகியிருந்தாள். எளிதான ஒப்பனையில் எழிலாய் இருந்தாள் செந்தாமரை. 

  மாடியிலிருந்து தட தடவென ஓடி வர, அகிலா உணவு மேஜையில் பொறுமையாக அமர்ந்து அவர் மாணவர்களின் பரிட்சை தாள்களை திருத்திக்கொண்டிருந்தார். 

“ மா, ஏன் மா என்னய சீக்கிரமா எழப்புல “ என சத்தமிட்டுக்கொண்டே வந்தாள், 

“ இன்னைக்குமா டெஸ்ட் பேப்பர் கரெக்ட் பண்ணிட்டு இருக்கிங்க. நீங்கலாம் ஒரு தாயா.

இப்படி கிராஜூவேஷன் டே அப்போ கூட அமைதியா உங்க வேலைய மட்டும் பார்த்துட்டு இருக்கிங்க. “ என வாயாட, 

“ நான் பெத்த தாயா இருக்க போய் தான் அமைதியா உங்காந்து என் வேலைய பாக்குறேன். 

காலைல சீக்கிரமா அலாரம் வச்சிட்டு எழ மாட்டிங்குற, அட உன் தலை மாட்டுல வச்சாலும் பரவால, என் தலை மாட்டுல வச்சு எழுப்பி விட சொல்லிட்டு, தூங்குற. 

அலாரம் ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் ஊரே கூட்டுற அளவு கத்துது. அது சத்ததுல உன் அப்பா என்ன திட்டுறாரு.  

சரி பாவமே நம்ப பெத்த புள்ள தானனு மெனக்கெட்டு உன் ரூம்க்கு வந்து எழுப்புனா. ஐஞ்சு நிமிஷம்னு சொல்லி பத்து தடவ டைம் கேட்டு ஒரு மணி நேர கழிச்சு எழுந்திருக்கிற. ஏதோ விடாம வேலை பார்த்தவ மாதிரி.

நீ எல்லாம் ஒரு புள்ளையா. “ என பதிலுக்கு அகிலா பேச, 

அவர் முன் நில்லாமல் முன்னறைக்கு சென்று 

“ நான் உங்களுக்கு புள்ளையா இருக்க போய் தான் நீங்க செய்ற சாப்பாட குறை சொல்லாம சாப்பிடுறேன். அதுவே ஒரு பெரிய வேலை தான்மா. என் டிஃபன் பாக்ஸ் ரெடியா. “ என சத்தமிட்டுக்கொண்டே அவளது பையை தேட,  

“ உனக்குனு எல்லாம் காலைலயே ரெடியா செஞ்சு வச்சுட்டு ஸ்கூல்க்கு போறேன் பாரு. என்னய சொல்லணும். 

கிராஜூவேஷன் டேக்கு போறவ இங்கயே சாப்பிட்டு போக வேண்டியது தான. அதுக்கு எதுக்கு டிஃபன் பாக்ஸ். “ என அகிலா சொல்லியவாரே எழுந்து பரிட்சை தாள்களை பத்திரப்படுத்தியவர் அவள் டிஃபன் பாக்ஸை அடுக்க,

“ மா மணி என்னாகுது பாரு மா. இன்னேரத்துக்கெல்லாம் சாப்பிட முடியாது. நான் காலேஜ் போய் சாப்பிட்டுக்குறேன். “ என தன் பையை எடுத்துவைத்தவாரு பேசியவள், தன் பையை மாடியறைக்கு எடுத்து செல்ல படியில் கால்வைக்க, அகிலா சட்டென அவளது கூந்தலை கொத்தாக பிடித்து இழுத்தார். 

“ மாஆஆஆஆ. “ என தாமரை கத்த, வெளி திண்ணையில் செய்திதாள் படித்துக்கொண்டிருந்த செல்வம் உள்ளே வந்தவர், 

“ அகிலா ஏன் புள்ளைய கத்த வைக்குற. “ என தாள்களை மடித்தபடி இவர்கள் அருகில் வந்தவர், அகிலா ஒரு கையில் வத்திருந்த டிஃபன் பாக்ஸை வாங்கி தாமரையின் பையில் வைத்தார்.  

“ ஆமா உங்க பொண்ண நான் தான் கத்த வைக்குறேன். “ என நொடித்தவர்,

“ ஹேர் கட் பண்ணி இப்போ இருக்க ட்ரெண்ட்க்கு ஏத்த மாதிரி வச்சுக்கோனா கேக்குதா உங்க பொண்ணு . 

என்னமோ இவ முடிய வச்சு தான் நம்ப கேணில தண்ணி எடுக்குற மாதிரி இத்தன நீளம் வளத்து வச்சிருக்கா. அதுவும் ஈரமா விட்டுருக்கா. இப்படியே விட்டா தலைல நீர் கோர்த்துக்கும். “ என சொல்லி சிகையை பிரித்து நன்றாக உதறினார். 

“ கண்ணு அம்மா சொல்றதையும் கேளு மா. “ என செல்வம் அகிலாவுக்கு பரிந்து பேச, 

“ ப்பா எனக்கு லாங் ஹேர் தான்ப்பா பிடிச்சிருக்கு. அம்மா என் உரிமைல கை வைக்குறாங்கப்பா. “

“ அகிலா தாமரை சொல்றதையும் கேளு மா. “ என செல்வம் இப்போது தாமரைக்கு பரிந்து பேச, 

“ ஆமா மா…கேளு மா. “ என ஒரே நேரத்தில் அம்மாவும் மகளும் ராகமாய் இழுத்து சொல்ல, செல்வம் இருவரையும் அப்பாவியாய் பார்த்து நின்றார். அவரை பார்த்து இருவரும் சிரிக்க, 

“ மத்ததுல எப்படியோ என்னைய பேசறதுக்கு மட்டும் அம்மாவும் பொண்ணும் கூட்டணி போட்டுக்கறது. “ என சொல்லியவர் தேங்கா பூ துண்டை எடுத்து தோளில் போடவர், தாமரையுடன் செல்ல தயாராயினார். 

“ மா ஜடை பின்னாதிங்க. ஃபிரெஞ்சு பளாட் ரோஜா பிண்ணுவா. “ என வம்படியாய் அம்மா கையிலிருந்து விடுபட்டவள் மேல தட தட வென ஏற, 

“ நான் போடுற சாப்பாட்டால தான் நீ இப்படி ஒடுற. இல்லைனா நீ இருக்க சைஸ்க்கு பறந்து போயிருப்ப. “ என அகிலா சிரித்துக்கொண்டே சொல்ல, 

“ ரொம்ப பண்ணாதிங்க மா. உங்க சாப்பாட சாப்பிடுறதால தான் நான் ஒடிசலாவே இருக்கேன். முதல பெரியம்மா சாப்பாட்டுக்கு மாறணும் “ என கத்திக்கொண்டே ஓட,

“ அவங்க வடிச்சு கொட்டுனாலும் ஓணான் நண்டா மாறாது. “ என கீழிருந்து சத்தமிட்டார். 

மேலே வந்து ஒரு கட்டபையை அலுங்காமல் எடுத்தவள், அணைவாய் அதை பத்திரமாக மெதுவாய் கீழே எடுத்து வந்தாள். அதை பார்த்தவர், அவளை கேள்வியாய் பார்க்க, 

“ மா ரோஜாக்கு கொடுக்க, அவள பார்த்து ஒரு வருஷமாகுது. அவளுக்கு என்னோட கிஃப்ட் இது. “ என தாமரை சொல்ல, 

“ கண்ணாடி பொருளு பார்த்து பத்திரமா கொண்டு போ “ என சொல்லியவர் அவளை வழியனுபினார். 

செல்வத்தின் பைக்கில் பின்னே அமர்ந்து செல்ல, 

“ கண்ணு அக்கா, மாமா, ஆதி வந்ததுக்கு அப்புறம் நாங்க எல்லாரும் வந்துருவோம். “ என சொல்லி ஊரின் பேருந்து நிறுத்தம் வரை அழைத்து சென்றார். 

     விடிந்து ஒரு மணி தான் சென்றிருந்தது, பேருந்து வர, அந்த நேரத்திலும் மிதமான கூட்டம் இருக்கவே செய்தது. உள்ளே ஏறியவுடன் நேராக கடைசி இருக்கைக்கு முன்னால் உள்ள இருக்கைக்கு சென்றாள். ஜன்னலோரம் ரோஜா அமர்ந்திருக்க, அருகிலும் ஒரு பெண் அமர்ந்திருக்க, ரோஜாவின்  மடியில் சென்று அமர்ந்துகொண்டாள். அங்கே சுற்றி அமர்ந்திருந்தவர்கள் நின்றிருந்தவர்கள்  இவர்களை ஆர்சர்யமாய் பார்க்க, 

கண்டக்டர், 

“ என்ன மா தாமரை நல்லா இருக்கியா. காலேஜ் பழக்கம் இன்னும் விடலையா, நாங்க இத்தன பேரு நிக்கோம், நீ உம் பாட்டுக்கு வந்து இடம் புடிக்குற.”  என புன்னகையுடன் விசாரித்தபடி டிக்கெட் கொடுத்தார்.

“ நான் நல்ல இருக்கேண்ணே, உங்க சீட் தந்தா, நான் அங்க வந்து இடம் புடிக்குறேன். “ 

“ ஏன் மா வரம் கொடுத்தவன், தலைல கை வைக்கலாமா ? “ 

ஒரு வருடம் கழித்து இப்படி ஒரு பயணம் என்பதால் உற்சாகமாய் இருந்த ரோஜா, “ நீங்க எங்க வரம் கொடுத்திங்க, டிக்கெட் தான கொடுத்திங்க, அதுவும் கிழிஞ்சு போன டிக்கெட்டு, பேலன்ஸ் ரெண்டு ரூவா இன்னும் கைக்கு வரல.“ என கணக்காக சொல்ல, 

“ ஏ ஆத்தா, ஒரு வருஷம் கழிச்சு வர ஒரு ரெண்டு ரூவா தரமாட்டியோ. “

“ நீங்க எங்க காலேஜ் வாசலயே நிறுத்துங்க, எனக்கு ரெண்டு ரூவா பேலன்ஸ் தரவேணாம். “ என விடாமல் ரோஜா வாயாட,

“ ஏன் மா வாசலயே நிறுத்திக்கிட்டு, காலேஜ்க்கு உள்ளயே போய் நிறுத்துறேன், இறங்குறீகளா ? ” என அவரும் வாயாட,

ரோஜாவும் அவள் மடியில் அமர்ந்திருந்த தாமரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள், 

“ எங்களுக்கு ஓகேண்ணே. “ என ஒரே குரலாய் சொல்ல, 

“ என் வேலைக்கு வெடி வைக்கலாம்னு வெள்ளனே கிளம்பியிருக்கிங்கனு தெரியாம வாயகொடுத்துட்டேன். இந்த மா உன் ரெண்டு ரூவா. “ என சிரிப்புடன் அவர் கொடுத்துவிட்டு செல்ல, 

“ ரோஜா பூ, ரொம்ப அழகா ஆயிட்ட “ என ரோஜாவின் தடையை பிடித்து தாமரை மெல்ல சொல்ல,  

“ அப்படியா தெரியுறேன், தாங்க்ஸ் தாமு. இன்னைக்கு நான் போட்ட எஃபர்ட்க்கு நீ தான் ஃபர்ஸ்ட் சொல்லிருக்க. 

வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க. “

“ எல்லாரும் நல்லாயிருக்காங்க. கிராஜூவேஷன்க்கு வீட்ல எல்லாரும் வராங்க. அக்கா, ஆதி, மாமா கூட வராங்க.

ரோஜா பூ, உங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்காங்களா. யார்லாம் வராங்க?“

“ நல்ல இருக்காங்க தாமு. அம்மா மட்டும் தான் வராங்க, அண்ணே வேல விஷயமா துபாய் போயிருக்கு. “ என கொஞ்சம் உள்ளே போன குரலில் ரோஜா சொல்ல, அதை புரிந்துகொண்டவள், 

“ அது சரி உன் ஆள் வருவாங்களா ? “ என தாமரை கண்ணடித்து கேட்க, 

“ வராம, அதெல்லாம் வருவாங்க. “ என ரோஜா மலர்ந்து சொன்னாள். ரோஜாவிற்கு அவளது சொந்தத்தில் மாப்பிள்ளை பேசியிருக்க, அவரை தான் தாமரை கேட்டுக்கொண்டிருந்தாள்.   

“ அப்புறம் தாமு உங்க வீட்டு கடைல போய் ஜாயின் பண்ணிட்டு ஒரே ரணகள பெர்ஃபார்மன்ஸ்னு சொன்ன, இப்போ எப்படி போகுது“ என தாமரையை பார்த்து நமட்டு சிரிப்புடன் ரோஜா கேட்க, இந்த நல்ல நாளில் அதெல்லாம் நினைக்கவேண்டுமா என  தாமரைக்கு உள்ளுக்குள் புகை கிளம்பினாலும் அதை விடுத்து,

“ உனக்கு மட்டும் எஃபர்ட் போட்டா போதுமா, உன்ன நம்பி தான் தலை கூட வாராம வெறும் கேட்சஸ்சோட வந்துருக்கேன். “ என பேச்சை மாற்றினாள்.

“ அதெல்லாம் சிறப்பா செஞ்சுடலாம். “  என இருவரும் பேசியபடியே செல்ல, இனிமையாகவே சென்றது பயணம். வழியில் ஓரிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட, வண்டி நின்றது. மக்கள் காற்றுகாக கீழே இறங்க,  

“ ஏ தாமு, இந்த பக்கம் உட்காரு. “ என சொல்லி அருகில் காலியான இடத்தில் தாமரை அமர்ந்தவுடன், ரோஜா கடகடவென பையிலிருந்து மொபைல் எடுத்தவள், காமிராவை தயாராக வைத்திருக்க, 

“ ஏ ரோஜா பூ, என்ன பண்ற ? “

“ பார்த்தா தெரியல, போட்டோ எடுக்க போறேன். என் சைட் கூட. “

“ ரோஜா பூ, இது எப்போ இருந்து. “ என தாமரை ஆச்சர்யமாக கேட்க, 

“ தாமு நீ பார்த்ததும் தெரிஞ்சுப்ப. இரு வரேன். என் சீட் பார்த்துகோ. “ என சொல்லி ரோஜாவும் கீழே இறங்கி முன்னே செல்ல, பேருந்தின் முன் நிறைய கூட்டம். 

“ யாராவது ஹாஸ்பிட்டல் போறவங்க இருந்தா இந்த வேன்ல வாங்க, இலவசம் தான், இன்னும் மினிஸ்டர் வண்டி வர பத்து நிமிஷம் ஆகும். 

வாங்க மக்களே. “ என ஒரு டெம்போவின் மீது ஸ்பீக்கர் கட்டி பேசிக்கொண்டிருந்தனர் சிலர், அதற்கு ஏற்றாற்போல் மக்களில் சிலர் அதில் ஏற, வேன் கிளம்பியது. அது சென்றதும் இன்னொரு வேன் வந்து அதே போல் ஸ்பீக்கரில் பேச, பெரிதாக யாரும் செல்லவில்லை. எல்லாம் காற்று வாங்கி கொண்டு ஆங்காங்கே கூட்டமாக  நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். 

“ என்னையா இப்புட்டு கூட்டம் நிக்குது. எந்த மந்திரி வாராரு. “ என ஒருவர் கேட்க,

“ இந்தா பாரு பேனர் எப்படி கட்டி வச்கிருக்காய்ங்க. “ என இன்னொருவர்  காட்ட, அங்கே அருகில் ஒரு வயலுக்கு மத்தியில், நீளமான பெரிய பேனர் காற்றில் அசைந்துக்கொண்டிருந்தது. 

   இப்போது தாமரை ஜன்னல் ஓரம் நகர்ந்திருக்க, இருக்ககையின் அருகில் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு காதில் விழ, தாமரையும் பேனரரை பார்த்தாள்,

         “  எங்கள் தஞ்சைக்கு வருகை தரும்

           மகத்தான தலைவனை 

           எங்கள் மனிதம் விரும்பும் காவல் தெய்வம்

           காளையர்கள் கண் பட்டும்  

           கட்டழகு தேயாமல் இருக்கும் 

           எங்கள் காட்டழகர் 

           உங்களை வருக வருக 

           என வரவேற்கிறார்  “ 

என வாசகம் எழுத்தி மந்திரியின் புகைப்படம் ஒருபக்கம் இருக்க, அழகனின் புகைப்படம் இன்னொரு புறம் இருக்க, தாமரைக்கு அதை பார்த்ததும் ‘ இன்னைக்கும் இவன பார்க்கணுமா’ , என தோன்ற கண்களை மூடி திறந்தாள். 

திடுமென சரவெடி பட்டாசு வெடிக்க, நின்றிருந்த கூட்டத்தில் கட்சி கோஷங்கள் எழுப்ப, தாமரை வெளியே எட்டிப்பார்த்தாள். மேள வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பித்தது. சைரன் வைத்த கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து முதலில் மந்திரி இறங்கினார். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட, சிலர் அவர் அருகில் சென்று புகைப்படம் எடுக்க, அவரும் புன்னகைத்தபடி போஸ் கொடுத்தார். மேள வாத்தியங்களின் இசை இன்னும் அதிகமாய் ஒலிக்க ஆரம்பிக்க, இப்போது காரின் மறு கதவு திறந்தது. 

     வெள்ளை வேட்டி சட்டை, வலது கையில் இறுகிய காப்பு, அதே கையில் ஒரு மீடியம் சைஸ் செயின் ப்ரேஸ்லெட், மறு கையில் வாட்ச்,  பாம்பொடார் சிகைஅலங்காரத்தில் தாடியும் அடர்த்தியாய் இருக்க, நெற்றியில் அளவாய் சந்தன கீற்று என அசத்தலாய் வந்திறங்கினான் அழகன். 

    கட்சி ஆட்கள் சிலர் மந்திரிக்கு மலர் மாலை அணிவிக்க போட்டி போட, பலர் அழகனுக்கு மாலை போட, சுற்றி நின்றிருந்தவர்கள் அவசரமாய் செல்ஃபி எடுக்க, அதில் ரோஜாவும் அடக்கம். 

அழகனுடன் ரோஜா புகைப்படம் எடுத்ததும், அவனுக்கு கை கொடுக்க, அழகன் புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தான். அவனது செய்கை பார்த்து ரோஜாவும் வணக்கம் தெரிவிக்க, பஸ்ஸில் அமர்ந்திருந்த தாமரை இதை பார்த்து நக்கலாய் புருவம் உயர்த்தினாள். 

     ரோஜா அழனிடம் நெருங்கி ஏதோ சொல்லியவள் பேருந்தை காட்ட, தாமரை எட்டி பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அந்த காலைவேளை சூரிய வெளிச்சத்தில் அவளது நக்கல் முகம் பாவம் அந்தனை கூட்டதிலும் அழகனுக்கு தப்பாமல் தெரிய, இவன் ‘ இன்னைக்கும் என் கிட்ட சிக்கிட்டியே’ என நினைத்தவன் “ லோட்டஸ்சு ” என லேசாய் உதடு பிரித்து எள்ளல் பாவனையில் உச்சரிக்க, தொலைவில் இருந்ததாலும் அவன் தன்னை தான் பார்க்கிறான் என தாமரைக்கு நன்கு தெரிந்தது. 

     அவனது முகத்தை பார்த்ததும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டவள், தள்ளி உட்கார்ந்தாள். சில நிமிடங்களில் ரோஜா பேருந்தில் உள்ளே வரவும், ஜன்னல் அருகில் சென்று ரோஜா அமர, அவளை பிடித்துக்கொண்டாள் தாமரை,

“ இவர் தான் உன் சைட்டா, இவருக்காகதான் நீ ஓடுனியா. ? “ என பொரிய, ரோஜா காதிலே வாங்காமல், ஜன்னல் வழியே கூட்டத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள்.    

     அழகனுக்கு கழுத்தளவு மாலை நிறைந்ததும் இன்னும் ஆட்கள் முந்திக்கொண்டு வர, அழகன் பரமுவை பார்க்க, அவசரமாக அழகனின் அருகில் பூங்கொத்துடன் வந்தவன், அதை அழகனிடம் கொடுத்துவிட்டு, கழட்டிய மாலைகளை வாங்கியவாரு காதருகில்,

“ அழகா ஃபங்சன் ஸ்டார்ட் பண்ணனும், இன்னும் பத்து நிமிஷம் தான் நல்ல நேரம். “ என கிசுகிசுக்க, அழகன் மற்றவர்களை விலக்கி சென்று மந்திரியிடம்,

“ ஐயா, எங்க ஊருக்கு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.” என சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்றவன், 

“ வாங்க உள்ள போகலாம். நல்ல நேரம் முடியாரதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடலாம். “ என முறையாய் அழைக்க, அவரும் உடன் நடந்தார். 

“ என்ன சிங்கரே, உங்க ஊர் ஆளுங்க என்னைய பார்க்குறாங்களோ இல்லையோ உங்கள ரொம்ப பாக்குறாங்க போல. “ என மந்திரி புன்னகையுடன் கேட்க, 

“ அப்பா காலத்துல இருந்து என்னைய பாக்குறாங்க. அப்பா மேல இருக்க மதிப்பு, இப்போ என்கிட்ட காட்டுறாங்க, அவ்ளோ தான்யா “ என அவரிடம் மாறாப்புன்னகையுடன் சொல்ல, 

“ நல்லது தம்பி. நீங்க சுயட்சியா நிக்கறத விட, நீங்க நம்ப கட்சிலயே இணைஞ்சுடலாமே. “ என அவர் இவன் தோளை பிடித்துக்கேட்க, இந்த காட்சியை புகைப்படம் எடுத்தார்கள் பத்திரிக்கையாளர்கள் .  

“ நீங்க சொல்றது சரி தான்யா, ஆனா அத எங்க மக்கள் விரும்பல போல, அதான் என்னைய தனியாவே நிக்க சொல்லிட்டாங்க. “ என புன்னகையுடனே அடக்கமாய் சொன்னாலும் தொனியில் ஏதோ இருந்தது.   

அவன் தோளில் இருந்து மெல்ல கை எடுத்தவர், மென்புன்னகையுடன் அவனை பார்த்து, “ அதேப்பெடி தம்பி எங்களோட சேர மக்கள் விரும்பலனுறிங்க, இப்போ என்னைய சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டுருக்கிங்க. இந்த முடிவ நீங்க மறுபரிசீலனை பண்ணனும் தம்பி. “ என சொல்லிவிட்டு முன்னே சென்றார். அழகனும் பின் தொடர்ந்தான். 

    அரங்கத்தின் உள்ளே நெற் பயிர்கள் ரக ரகமாய் அடுக்க பட்டிருக்க, மந்திரி ரிப்பனை கத்தரிதார். அவர் உள்ளே செல்ல, அவர் பின் அழகன்,  பத்திரிகையாளர்கள், மக்கள் என வரிசையாக சென்றனர். 

     நெற்பயிர்கள் கண்காட்சி இனிதே தொடங்கபட, வெளியில் சலசலப்பு.             

                    

                     

         

Advertisement