Advertisement

அதன் பின் அன்று தாமரை கடைக்கு வந்ததும் அழகன் வந்ததை பற்றி மலர் சொல்ல, 

“ நீங்க ஏன் ப்பா அவனுக்கு கல்ல உருண்டைலாம் கொடுத்திங்க. 

அவன் குட் பாய் இல்ல ப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட பையன். “

என செல்வத்திடம் தாமரை சண்டை போட்டாள். அவர் காரணம் கேட்டால் தான் செய்ததையும் சேர்த்து சொல்ல வேண்டி வருமே என அதை மட்டும் சொல்ல மறுத்தாள். அவர் எத்தனை சொல்லியும் இறுதியாக அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் மலர் தான் தலையால் தண்ணி குடிக்க வேண்டியதாய் இருந்தது. 

   தாமரையின் பொம்மை வைத்த பென்சில் முக்கியம் என்பதற்காக விடிய விடிய அமர்ந்து அவன் தந்த மர சிற்பங்களை வண்ணம் தீட்டினாள். ஆனால் முதலில் அவன் மேல் இருந்த கோபத்தில் அதை கையில் எடுத்தாலும், அதன் வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் ஆச்சர்யப்பட்டு ஆசையாகவே  செய்தாள். ஏனோ தானோ என செய்யாமல் கைகள், கால்கள், முகம், உடைகள் என அனைத்திற்கும் பார்த்து பார்த்து தான் வண்ணம் கொடுத்தாள். அவளது ஆர்வம் அவளை சோர்வடையவிடாமல் ஒரே இரவில் முடிக்கவைத்துவிட்டது. ஆனால் விடிய விடிய தூங்காமல் இருந்தது அவளது கண்களை காந்தியது. முதுகும் கைகளும் வலியெடுக்க, தாமரையால் உட்காரவே முடியவில்லை. சோர்ந்த கண்களுடனே பள்ளிக்கு கிளம்பினாள். 

 மதிய உணவு இடைவெளியில் தாமரை அவனது வகுப்பு முன் காத்து நிற்க, அவன் சாவகாசமாய் வந்து பையை வாங்கினான். 

“ லோட்டஸ்சு எங்க மலர காணோம். ஏன் லீவ் ? “ என பையில் உள்ள பொம்மைகளை சரி பார்த்துக்கொண்டே அழகன் விசாரிக்க, 

“ பெரியம்மா, பெரியப்பா, ஃப்ளவர் அக்கா எல்லாரும் ஃப்ளவர் அக்காவோட அம்மாச்சி வீட்டுக்கு ஓரத்தநாடு வர போயிருக்காங்க. அதான் அக்கா லீவ். 

என் பென்சில் தாங்க “ பதில் தந்தாலும் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தாள். 

அழகனுக்கு பொம்மையின் வண்ணங்கள் மிகவும் பிடித்தது ஒவௌன்றாய் சரி பார்த்தவன், பாராட்டலாம் என வாய் திறந்தான், ஆனால் அவள் அதற்கும் ஏதேனும் சிலுப்புவாள் என எண்ணினானோ என்னவோ அப்படியே சொல்லாமல் விட்டான். 

அவளை மேலும் கீழும் பார்த்தவன், 

“ என்ன பாக்குறப்போலாம் எதுத்து பேசறது, ஐடி சுடுறது, பிரின்சி கிட்ட போட்டுக்கொடுக்கறது, இன்னும் நீ என்ன பண்ணாலும் என்கிட்ட ஏதாவது மாட்டிக்குற. 

நானும் உன்ன பனிஷ் பண்ணி டயர்ட் ஆயிட்டேன். “ என சோம்பல் முறித்து சொன்னவன். ‘ அதுக்கு ‘ என்பது போல் அவனை பார்த்தாள் தாமரை.

“ அதனால உனக்கு உன் பென்சில் கிடையாது. நீ செஞ்ச எல்லா தப்புக்கும் அது என்கிட்டவே இருக்கட்டும். “ என சொல்லி அவன் உள்ளே போக பார்க்க, அவனை அசராமல் பார்த்த தாமரை, 

“ ஒரு நிமிஷம். “ என தடுக்க, அவன் ஒரு புருவம் உயர்த்தி திரும்ப, தாமரை கையில் மறைத்து கொண்டு வந்திருந்த இங்க் பாட்டிலை அவன் முகத்தில் ஒரே வீச்சில் ஊற்ற, முகம் சட்டை முழுவதும் நீல இங்க் வழிந்து நனைத்தது. 

    அழகனை பார்த்து வருவோர் போவோர் சிரிக்க, தாமரையை உச்சபட்ச  கோபத்தில் முறைத்தவன், 

“ ஏய்..லோட்டஸ்சு. உனக்கும் இத பூசி விடுறேன் பாரு. “ என அருகில் வர,

“ அங்கயே நில்லுங்க, என் பென்சில் எனக்கு கொடுத்துடிங்கன்‌னா உங்களுக்கு சோப்பும் புது ஷர்ட்டும் தரேன். என் பேக்ல கொண்டுவந்துருக்கேன்.

அப்படி இல்லைனா எனக்கு இங் நீங்க பூசி விட்டாலும் எனக்கு சோப்பும் வேற யு‌னிபார்மும் வீட்ல இருந்து கொண்டுவந்துருக்கேன். அத போட்டுப்பேன்.  “ என முதுகில் மாட்டிய தன் பையை காண்பித்து தயங்காமல் டீல் பேசினாள். 

அவளை கண்களிலே வறுத்தவன், ஒன்றும் பதில் பேச முடியாமல் வகுப்பு உள்ளே சென்று பொம்மை பென்சில் எடுத்து வந்து தர, அதை வாங்கியவள், 

“ நீங்க தில்லாலங்கடினு தெரியும். ஆனா நான் சொன்னத நம்பி திரும்பி கொடுத்து இன்னைக்கு நீங்க fool ஆயிட்டிங்க. “ என பின்னால் அடி மேல் அடி வைத்துக்கொண்டே சொல்லி எதிர்பாரா நேரம் சிட்டாய் ஓடி விட்டாள். 

அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி கையை குத்திய அழகன் வலியில் முகத்தை சுளிக்க, அப்படியே ஓய்வறைக்கு சென்றான். முகத்தை எத்தனை கழுவியும் இங் அழிவேனா என அழிச்சாட்டியம் செய்தது. 

    அவன் நேற்றே சொல்லியது போல் பேசாமல் பென்சிலை கொடுத்திருந்தால் அவளும் அமைதியாய் சென்றிருப்பாள், ஆனால் இவன் இப்படி எல்லாம் செய்ய கூடும் என ப்ளான் B உடன் வந்து தாக்கிவிட்டு பறந்துவிட்டாள். 

    அழகனின் நண்பன் பரமு ஓய்வறைக்கு வர, 

“ அழகா…என்ன டா புது மேக் அப் எதுவும் ட்ரை பண்றியா. அம்சமா இருக்க டா. “ என கண்ணாடியில் பார்த்து சிரிப்புடன் சொல்ல, கொலைவெறியில் அழகன் திரும்பினான். 

அவனது பார்வையில் கொஞ்சம் மிரண்டவன், 

“ டேய் டேய் இருடா. 

விஷயம் கேள்வி பட்டு தான் வந்தேன். கபடி டீ ஷர்ட் உன்னோடது நேத்து எனக்கு கொடுத்துட்டு போனியே, அத எடுத்துட்டு வந்துருக்கேன். 

கேண்டீன்ல நம்ப பையன் ஒருத்தன் சோப் வாங்க போய்ருகான். வைட் பண்ணு வந்ததும் ரெடி ஆகிடலாம். “

      ஆழகன் சட்டை மாற்றினாலும் கழுவிய முகத்தில் மட்டும் இங் சுவடு ஆங்காங்கே தெரியத்தான் செய்தது. சால்க் பீஸ் பவுடரை முகத்தில் இங்க் இருந்த இடத்தில் ஒத்தி எடுத்தவன் ஒருவாறு கிளம்பி வகுப்பிற்கு சென்றான். 

     வகுப்பில் கிண்டல்‌ செய்ய, அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. தானும் சேர்ந்து சிரித்து வைத்தான். தன் மீது இங் ஊற்றப்பட்டது கூட அவனுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அது தாமரை என்பது தான் அவனுக்கு பிரச்சனையாகி போனது. 

     பள்ளி முடிந்து மாணவர்கள் கிளம்ப, தாமரை எப்போதும் போகும் மண்  சாலையில் நடப்பதை பார்த்து அழகன் சைக்கிளில் மெதுவாக தொடர்ந்தான். 

     ஆகாயத்தில் வெண்கொக்கு போல் இருந்த மேகத்தை பார்த்தவாரு புன்னகையுடன் தாமரை நடந்து செல்ல, கீழே பார்க்கவில்லை. சைக்கிளில் வந்த அழகன், அவள் சரியாக கவனியாத நேரம் லேசாக இடித்து முன் சென்றான். செந்தாமரை ஒரு சிறிய மண் சேற்றில் போய் தொப்பென விழுந்தாள். 

    தாமரை உருண்டு எழுந்து நிற்க, சைக்கிள் மிர்ரரில் சேற்றில் புரண்ட வான் கோழியாய் அவள் தெரிய, அழகனது முகம் புன்னகையை தத்தெடுத்து, ‘ லோட்டஸ்சு உன்ன சேத்துல மலரவச்சாச்சு. ‘ என நினைத்துக்கொண்டே உற்சாகமாய் வீடு போய் சேர்ந்தான். 

     அழுது கொண்டே வீட்டிற்கு வந்த செந்தாமரையை தண்ணீர் பிடிக்கும் ட்யூப்பில் வாட்டர் வாஷ் செய்து குளிக்க வைத்து தலை துவட்ட, மலரிடம் வாய் ஓயாமல் அழகன் தான் தன்னை தள்ளிவிட்டிருப்பான் என சாட்சியம்  இல்லாத கம்ப்ளைண்ட் வாசித்துக்கொண்டிருந்தாள்.  

    அதன் பின் வந்த நாட்களில் அழகன் செந்தாமரையை பார்த்தால் சும்மா இராமல் அவளது ஹேர் பெண்ட்டை பறித்து வைத்துக்கொண்டு அலைய வைப்பது, தண்ணீர் பாட்டிலை வம்படியாய் வாங்கி காலி செய்வது, ரிப்பனை பிடித்திழுத்து சடையை கலைத்து விடுவது, இப்படி டிசைன் டிசைனாக தொல்லை கொடுக்க, செந்தாமரையும் அவன் ஸ்போர்ட்ஸ் பீரியட்டில் கழட்டி வைக்கும் வாட்ச், கழுத்தில் அணியும் டை என எடுத்து வைத்துக்ககொள்வது, சைக்கிளை பஞ்சர் செய்வது என அவனுக்கு ஆட்டம் காட்டுவாள். 

     நாளும் இவர்கள் மோதகள் தொடர, எப்படியோ பள்ளியை முடித்து அவரவர் விரும்பிய துறையில் பயணித்தனர். அவர்களின் வேனிற்காலம் நிறைவு பெற்று கார்காலம் தொடங்கியது.

      வாழ்வின் பாதைகள் நால்வரையும் அவரவர் விரும்பிய திசையில் கொண்டுசேர்த்திருந்தது. ராஜேந்திரன், செந்தாமரை, மலர்விழி, அழகன் என அனைவரது வாழ்விலும் நினைத்து பார்க்கவில்லா மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது. சில எதிர்பாரா சம்பவங்களால் நால்வர் வாழ்வும் ஒன்றோடு ஒன்று இழையப்பட்டிருந்தது.       

Advertisement