Advertisement

  “ இங்க செந்தாமரை ஸ்டோர்ஸ்‌ எங்கண்ணே இருக்கு. “

 “ அப்படி வலப்பக்கம் போய் ரெண்டு சந்து தள்ளி ஒரு பெரிய ஆலமரம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் முன்னே அரைக்கா அடி சுவர் வச்சு கடை ஒன்னு இருக்கும் பாரு, அங்கன தான் இருக்கு. “ 

சின்சியராய் கேட்டுக்கொண்டு சைக்கிளை அவர் சொன்ன வழியில்  செலுத்தினான் அழகன். ஞாயிறு பின் மதிய வேளை, செல்லும் வழியில் தெருக்கள் அமைதியாய் இருக்க, சிறு பிள்ளைகள் ஆங்காங்கே விளையாடி கொண்டிருந்தனர்.

    ஆலமரத்தருகே வந்து நின்றான் அழகன். சற்று தள்ளி ஒரு கடையின் மேல் “ செந்தாமரை ஸ்டோர்ஸ் “ என பெரியதாக ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

   இன்று முதலில் மலர் வீட்டுக்கு தான் சென்றான். அங்கே மலரும் செந்தாமரையும் கடையில் இருப்பதாக தேவி சொல்ல, நேரே இங்கே வந்துவிட்டான்.     

   அழகனுக்கு கடைக்குள் செல்லவே மனமில்லை. முதல் காரணம் அவன் அப்பாவின் எதிர் கட்சியினரின் கடை. இரண்டாவது காரணம் செந்தாமரையின் கடை. ஆனால் அவன் அங்கே செல்ல வேண்டும் என முடிவெடுத்து தான் வந்தான். 

செந்தாமரையை இவன் ஏதாவது செய்தாலும் எப்படியோ ஒரு வழியில் அவள் இவனை மாட்டிவைக்கிறாள். இன்று அவளை ஏதாவது பெரியதாக மாட்டிவைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தான். அதற்கு தொக்காய் மலரின் நோட்ஸை திருப்பி தரும் சாக்கில் இங்கே வந்து நிற்கிறான். 

   கடைக்கு அருகே செல்ல, “ அட அழகா வாப்பா.” என உற்சாகமாய் செல்வம் கூப்பிட, இதை சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. 

‘ பச்ச மொளகா ஏதாவது வத்தி வச்சிருப்பாளோ. அதான் என்னைய இவருக்கு அடையாளம் தெரியுதோ. ‘ என உள்ளே தோன்றினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர் முன் சென்று நின்றான். 

“ நம்ப பெரியுடையப்பரு வீட்டு பையன் தானப்பா நீ. எங்க மலரு அப்பப்போ  சொல்லிக்கிட்டு இருக்கும். வா வந்து உட்காரு. “ என அவனை கடையின் உள்ளே அழைத்து ஒரு சின்ன நாற்காலியில் தன் பக்கத்தில் அமரவைத்தார். 

மலர்விழி சொல்லியிருந்தாலும் எதிர் காட்சி வீட்டு பையனிடம் இப்படி பேசுகிறாரே என அழகனுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம் என எல்லாம் கலவையாய் உள்ளே வந்து போனது. அமைதியாய் அவர் கொடுத்த நாற்காலியில் அவன் கொண்டு வந்த பையுடன் அமர்ந்தான். 

“ என்னப்பா கலர் குடிகிறியா. இல்ல இனிப்பு சாப்பிடுறியா ? “ என கேட்டுக்கொண்டே ஒரு ஓரத்தில் இருந்த ஃபிரிஜ்ஜிலிருந்து ஒரு கூல் ட்ரிங் பாட்டில் எடுத்தவர் அதை திறந்து அவன் கையில் கொடுக்க, அவன் வாங்க சங்கடப்பட, வற்புறுத்தி கொடுத்தார்.  

“ வீட்ல எல்லாம் சுகமா இருக்காங்களா. அப்பா எப்படி இருக்காரு. உடம்புக்கு பரவாலையா. 

உன் படிப்பெல்லாம் எப்படி போகுது. உங்க வீட்ல உங்க அண்ணன் கூட இருப்பாருல. அவர் எப்படி இருக்காரு. “ என அவன் கையை வாஞ்சையாய் பிடித்துப் பாசமாய் பேச, 

“ எல்லாரும் நல்லா இருக்காங்க. “ என பதில் பேசுவதற்குள் குரல் உள்ளே சென்று வந்தது. நிச்சயமாக அவன் இத்தகைய விசாரிப்பை எதிர்பார்க்கவில்லை. ராஜாவை கூட இத்தனை மரியாதையாக சொல்வார் என நினைக்கவில்லை. தன்னை பெரிதாக கண்டு பேசமாட்டார் என நினைத்திருந்தான். ஆனால் அவர் இப்படி எல்லாம் பேச கொஞ்சம் திக்கு முக்காடி போய்விட்டான் அழகன்.

“ உங்க அப்பா பதிவில இருந்தப்போ ஊருக்கு நிறையா செஞ்சாரு கண்ணு .

    உங்க அப்பாவ பார்த்து தான்ப்பா நானும் கட்சியில சேர்ந்தான். என்ன எங்க கட்சி கொள்க வேற உங்க அப்பா கட்சி கொள்க வேற, அவ்ளோ தான். ஆனா செய்யறது எல்லாம் நம்ப ஊருக்கு தான, அதுல எல்லாம் பொதுவா செய்யறது தான். “ என செல்வம் பேசிக்கொண்டே செல்ல, அழகனின் அப்பாவை பார்த்து தான் தானும் அரசியல் வந்ததாக சொல்லியவை எல்லாம்  அவனால் நம்பவே முடியவில்லை. 

அவனுக்கு எல்லாம் புதிதாய் இருந்தது. அவர் பேச்சிற்கு இவன் தலையாட்டியபடி அமர்ந்திருந்தான். நிமிடங்கள் செல்ல செல்ல, இவனிடம் பேசிக்கொண்டே கடைக்கு வந்த மக்களிடமும் வியாபாரம் பார்த்துக்கொண்டு, அவர்களிடம் இவனை இன்னாரின் மகன் என மகிழ்ச்சியாய் அறிமுகப்படுத்திச் சொல்ல, அழகனுக்கு இது எல்லாம் புது அனுபவமாக  இருக்க, அவரை பற்றிய பிம்பம் முற்றிலும் மாறிக்கொண்டிருந்தது. 

இறுதியாக, “ இங்க என்ன வேலையா வந்தப்பா ? “ என அவர் கேட்கவும்தான் மலர் நோட்ஸ் பற்றிய நினைவு வர, கொண்டு வந்த பையிலிருந்து நோட்டை எடுத்தவன், 

“ அங்கிள் இது மலருது. நேத்து நோட்ஸ் எழுத வாங்கிட்டு போனேன். அதான் கொடுக்கலாம்னு. “ என முடிக்க, 

“ உள்ள ஸ்டோர் ரூம்ல இருக்குப்பா. இந்தா கூப்பிடுறேன். “ என இவர் சத்தமிட்டு அழைக்க, மலர் வரவில்லை. சில நிமிடங்கள் பொருத்தவர், இவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, முதல் அறையில்  சிறியதாய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒரு அறை, அதற்குள் போக, மலரும் செந்தாமரையும் டி‌வியில் சத்தமாக பாட்டு வைத்து ஆடிக்கொண்டிருந்தனர்.

    ஆளுக்கொரு துப்பட்டாவை இருவரும் தலையில் அணிந்துக்கொண்டு கழுத்தில் நீளமான பிஸ்கட் பாக்கெட்களை மாலையாய் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். அழகனை பார்த்ததும் ஆட்டம் நிற்க, செல்வம் டி‌வி சத்தத்தை குறைத்தார். 

     மலர் தாமரையை சுற்றி கடைக்கு புதிதாக வந்த தலைமேல் புசு புசுவென வெள்ளை பிடரி வைத்த பொம்மை பென்சில், பென், மினுமினுப்பாய் வண்ணம் உள்ள ஸ்கேல் என ஆங்காங்கே இருந்தது. இன்னும் ஏதேதோ பொருட்கள் எல்லாம் ஒரு ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்க, தாடையில் சாக்லேட் கரையுடன் இருவரும் நின்றிருந்தனர். 

   மலர் புன்னகையுடன், 

“ வா அழகா, அதுக்குள்ள நோட்ஸ் முடிச்சிட்டியா ? “ 

என கேட்க, செல்வம், “ பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரேன். “ என சொல்லி  வியாபாரம் பார்க்க வெளியே வந்தார். அழகனை முறைத்த தாமரை தாமதிக்காமல் பொம்மை பென்சிலை எடுத்துக்கொண்டு பின் பக்க கதவு வழியே வெளியே ஓடிவிட்டாள். 

“ ம்‌ம்‌ முடிச்சிட்டேன், இந்தா. “ என நோட்ஸ் கொடுத்தவன், “ சன்டேலாம் கடைல தான, ஒரே டான்ஸ்ஸா இருக்கு ? “ என சிரித்தபடி வினவ, 

“ ஆமா சன்டே சித்தப்பா கடைக்கு வந்துடுவோம். இங்க புதுசா வந்துருக்க திங்க்ஸ்லாம் நாங்க ஃபர்ஸ்ட் எடுத்து வச்சுப்போம். டி‌வி வேற இருக்கா, எவ்ளோ சவுண்ட் வச்சாலும் இங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. 

இந்தா சாக்லேட் சாப்பிடு. “ என அவனுக்கு ஒரு சாக்லேட் கொடுக்க, வாங்கிக்கொண்டான். 

“ லோட்டஸ்சு என்னைய பார்த்ததும் ஏன் ஓடி போயிடுச்சு. “ 

“ அது டான்ஸ் அடுனப்போ வந்துட்டல்ல அதான் ஓடி போய்டுச்சு. “ 

“ அது இல்ல மலரு, நேத்து என் பேட்ல நிறைய டிராயிங் பண்ணிட்டா, அதான் எங்க நான் திட்டுவேனோனு ஓடி போயிடுச்சு. இங்க பாரு. “ என எடுத்து காண்பித்தான். 

உண்மையில் அது மிக அழகாய் இருந்தது. அது அழகனுக்கும் தெரியும். வீட்டில் சென்று எடுத்து பார்த்தபோது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நேற்று பிரின்சிபலிடம் மாட்டிவிட்டு சென்றுவிட்டாள் என்பதால் அவன் வேண்டுமென்றே இவ்வாறு சொன்னான்.    

ஏதோ தாமரை தவறு செய்துவிட்டாள் என்ற கோணத்தில் சொல்ல மலர் அதை பார்த்ததும், அதன் அழகை உணர்ந்தாலும் பாராட்டினால் நண்பன் தவறாக எடுத்துக்கொள்வானோ என நினைத்து வாய் மேல் கை வைத்தவள், 

“ அச்சச்சோ சாரி அழகா. 

நான் அவள சாரி கேட்க சொல்றேன். “ 

என மலர் வெளியே கிளம்ப பார்க்க, அவளை தடுத்தவன் அவன் கொண்டு வந்த பையை கொடுத்து, 

“ அதெல்லாம் உன்னால அவள சொல்ல வைக்க முடியாது. அத நான் பார்த்துக்குறேன். 

நீயே வெளிய போ வேணாம். 

இதுல நான் செஞ்ச சின்ன சின்ன மர பொம்ம இருக்கு. பத்து இருக்கு, அதெல்லாம் இதே மாதிரி கலர் பண்ணி கொடுக்க சொல்றியா. 

பேட்ல பண்றதுக்கு இதுல பண்ணலாம்.

அதுவும் நாளைக்குள்ள தர சொல்றியா “ என தோழமையுடன் கேட்டான்.

அவன் சொன்னபடி வண்ணம் தீட்ட இரண்டு நாட்கள் ஆகும் என தெரிந்தும் கேட்டான். சரி என மலரும் அப்பாவியாய் ஒத்துக்கொண்டாள். 

    அழகன் மலரை பார்க்கும் சாக்கில் அவனது பேட்டை காண்பித்து செல்வத்திடம் தாமரையை போட்டுக்கொடுக்க தான் வந்தான். ஆனால் அவரது பாசமும் பேச்சும் ஏதோ செய்ய, அவனால் அவரிடம் தாமரையை பற்றி சொல்ல முடியவில்லை. 

அது மட்டும் இல்லாமல் அப்படியே இவன் போட்டுக்கொடுத்தாலும் அவர் புது பேட் வாங்கி தருகிறேன் என சொல்லிவிட்டால், தாமரை தப்பித்து விடுவாளே. அதனால் இந்த வேலையாவது கை வலிக்க செய்து தரட்டும் என முடிவு செய்து சொன்னான். மலரிடம் பொதுவாய் பேசிவிட்டு கிளம்ப, ஒரு பை நிறைய கடலை உருண்டை, தட்டை, முறுக்கு என செல்வம் கொடுத்தனுப்பினார். 

    மலரிடமும் செல்வத்திடமும் விடை பெற்று சைக்கிளில் கிளம்பியவன் சிறிது தூரம் செல்ல, ஒரு வீட்டின் பின் வாசலில் இரண்டு சிறுவர்களோடு சேர்ந்து ஒரு வீட்டின் சறுக்களில் சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் தாமரை. அதுவும் தலையில் பொம்மை பென்சிலை சொருக்கிவைத்து அதை சுற்றி துப்பாட்டவை ராணி தலை பாகை போல் கட்டி, கழுத்தில் பிஸ்கட் மாலையுடனே விளையாடிக்கொண்டிருந்தாள். 

தாமரை உற்சாகம் சிரிப்புமாய் விளையாடிக்கொண்டிருக்க, அவள் முன்னால் சரக்கென அழகானது சைக்கிள் வந்து நிற்க, நிமிர்ந்து பார்த்தாள். 

     கண்கள் அகண்டு விரிய உடனே எழுந்து ஓட, அவளை துரத்தியபடி இவனும் சைக்கிள் ஓட்டினான்.

அந்த சின்ன தெருவின் சந்து பொந்துகளில்லெல்லாம் ஓட, தன்னை துரத்தி வருபவனை நோக்கி கோழியை குஞ்சுகளோடு மூடி வைக்கும் கூடையை தூக்கி போட்டாள். அது அவனை தாக்காமல் முன்னால் விழந்து அவளை ஏமாற்றியது. 

   ஆனால் அதில் அடைபட்ட கோழிகள் சிதறி ஓடி, அந்த வழியில் செல்ல முடியாமல் அழகன் லாக் செய்து தாமரைக்கு உதவ, வேறு வழியில் சைக்கிளை செலுத்தினான்.  

ஒரு முட்டு சந்தில் அவளை மறிக்க, அகப்பட்டுக்கொண்டாள். 

தஸ் புஸ்சென மூச்சு வாங்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்திருந்தனர். 

செந்தாமரை மாட்டியதில் அழகன் கொஞ்சம் அசுவாசப்பட்டு,

“ லோட்டஸ்சு…” என ஓர புன்னகையுடன் நக்கலாக அழைத்தவன்,

“ நேத்து பிரின்சி சர் கிட்ட போட்டுக்கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்ட, என் பர்மிஷன் இல்லாமல் என் பேட்ட கலர் பண்ணி வச்சிருக்க, இப்போ உன்ன மாட்டிவிடுறேன் வா. “ என உதட்டை மடித்துச் சொல்லி பயம் காட்டினான். 

“ சரி வாங்க போலாம், எங்க அப்பா எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு. என் கலரிங்க் எங்க அப்பாவுக்கு பிடிக்கும். “ என அசராமல் பதில் சொன்னாள். 

அவளது பதிலை அழகன் எதிர்பார்க்காவிட்டாலும், கொஞ்சம் யோசித்த அழகன், அப்படியே பேச்சை மாற்றினான். 

“ உங்க கடைல இருந்து தான் வரேன். உங்க அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணுவாருனு எனக்கு தெரியும். அதுக்குனு உன்ன அப்படியே விட்டுடுவேனா, எங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போக வந்தேன். “ என இவன் சீரியஸ்ஸாய் முகத்தை வைத்து சொல்ல, தாமரையோ திரு திருவென விழித்தாள்.

“ நான் வர மாட்டேன். “ என சொல்லி அவன் எதிர்பாரா நேரம் அவனது சைக்கிள் பின் கேரியரில் ஏறி அமர்ந்து மறுபக்கம் குதிக்க பார்க்க, தாமதிக்காமல் அவளது கையை இவனது கையால் சங்கிலி போல் மாட்டிக்கொண்டு, அப்படியே சைக்கிளை திருப்பி பெடல் செய்தான். அவன் முன்பக்கம் பார்த்த வாக்கிலும் இவள் பின்புறம் திரும்பி அமர்ந்த வாக்கிலும், எதிரெதிர் திசையில் அமர்ந்து செல்ல,

“ நான் வர மாட்டேன். 

நான் வர மாட்டேன். ” என காலை உதறி அடம் செய்தாள். 

“ லோட்டஸ்சு, இன்னைக்கு எங்க வீட்ல உனக்கு நல்லா இருக்கு. உன் குதிர வால ஆட்டு வாலாகி, எங்க வீட்டு வீர நாய்குட்டியோட உன்ன கட்டி வைக்க போறேன். “

என வேண்டுமென்றே சொல்ல, பயந்துவிட்டாள் சிறுபெண். அவன் வீட்டு நாய்க்குட்டியே மிக மிக சிறிய குட்டி. அதற்கு கடிக்க கூட தெரியாது. இவன் விட்ட கதையில், 

“ என்ன காப்பாத்துங்க…காப்பாத்துங்க…” என கத்த ஆரம்பித்துவிட்டாள். 

இவளது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்த இரண்டு பெண்கள் என்னமோ ஏதோ என வெளி வந்து பார்க்க, இருவரும் சைக்கிளில் அமர்ந்திருந்த தினுசை பார்த்து சிரித்துவிட்டனர்.

“ அக்கா காப்பாத்துங்க. “ என தாமரை இன்னும் கத்த,

“ அட சின்ன புள்ளையே இறக்கி விடேன் பா. பய படுதுல. “ 

என சிபாரிசுக்கு வந்தனர். யார் வீட்டு பிள்ளைகள் என ஊருக்குள் தெரியும் என்பதால் இயல்பாய் வந்தது பேச்சு.

“ சும்மா விளையாட்டுக்கு அக்கா. 

இறக்கி விட தான்க்கா போறேன், வீட்ல. “ 

என அவளை விட இவன் சத்தமாக சொல்லிக்கொண்டே மின்னல் வேகத்தில் சைக்கிளை நிறுத்தாமல் வேறு வழியில் பயணித்தான். மற்றவர்களை நம்பி பயனில்லை என முடிவு செய்தவள்,

“ நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். 

வேணும்னா சாரி கேட்குறேன். என்ன விடுங்க. “ 

என கெஞ்சுவது போல் சொல்ல, ஒரு நிமிடம் நின்றவன், கொஞ்சம் யோசித்து ஒரு கையை மட்டும் விடுவித்து அப்படியே அவளது தலையில் சொருகியிருந்த பொம்மை பென்சில்லை உருவிக்கொண்டான்.

“ அது என் பென்சில். புதுசு. தாங்க.

எனக்கு வேணும். அது என்னுது. “ என அமர்ந்த படியே அடம் பிடிக்க, அவன் அதை அவனது சட்டையின் உள்பக்கத்தில் வைத்துக்கொண்டான்.

இன்னொரு கையை விடாமல், அப்படியே அவளை இறங்க சொன்னவன், தன் முன் நிறுத்தி, 

“ கேளு. “ என சிகையை கோதிக்கொண்டே தெனாவெட்டாய் சொல்ல, 

“ என்னது. “ என புரியாமல் தாமரை சொல்ல, 

“ சரி வா, உன்ன எங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போறேன். “ என இவன் அவள் இன்னொரு கையை பிடிக்க போக, 

“ வேணாம் வேணாம். ” என அவசரமாக தலையை ஆட்டியவள். 

“ சாரி. “ என கண்களை சுருக்கியவாரே முணுமுணுக்க, 

“ உன் சாரி எல்லாம் நம்ப நான் தயாரா இல்ல. உங்க அக்கா கிட்ட, என்னோட மர பொம்ம கொஞ்சம் கொடுத்துருக்கேன். அத அந்த பேட்ல பண்ண மாதிரியே கலர் பண்ணி கொடு. அதுவும் நாளைக்கு வேணும். லஞ்ச் பிரேக்ல வந்து தர. “ என சட்டமாய் சொன்னவன்,  

“ கலரிங்லாம் பொம்மைல பண்ணனும். பேட்லயா பண்ணுவாங்க. “ என இயல்பாய் கேட்க,

“ நீங்க மட்டும் பேட்ல செதுக்கிருக்கிங்க. ஷேப் மாறிபோயிருக்கு. அது மட்டும் பரவாலையா. “ என இவளது நியாயம் பேச, அழகனுக்கு அநியாயமாய் கன்னம் சிவந்தது. 

“ நீ இப்படி கேள்வி கேட்டுகிட்டு இரு. நான் சொன்னத செய்யலைனா நாளானைக்கு எங்க அப்பாவ ஸ்கூல்க்கு கூட்டிட்டு வந்து, உன்ன பத்தி நீ செஞ்சது எல்லாம் சொல்லுவேன். 

அதுவும் நீயே தான் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணனு சொல்லுவேன். “ 

 என சிறுபெண்ணை மிரட்ட, தாமரை முகத்தை உம்மென்று வைத்து சரி என தலை ஆட்டினாள். அவளது செய்கையில் தலையில் கட்டியிருந்த துப்பட்டா அவிழ்ந்து கீழே விழ, அதை பார்த்து சிரித்தவன்,

“ நல்லா மண்டைய மண்டைய ஆட்டு. 

இவ்ளோ ஓடி வந்தியே இந்த பிஸ்கட் பாக்கெட் சரத்த மட்டும் கீழ விடல. 

அப்போ அதுவும் எனக்கு தான். “ என சொல்லி அவளிடம் இருந்து அதையும் எடுக்க பார்க்க, அதை கொடுக்க மாட்டேன் என இவள் போராட, அதையும் வம்படியாய் வாங்கி இவன் அணிந்துக்கொண்டான். 

“ லோட்டஸ்சு… என்ன இப்போ எவ்ளோ ஓட விட்டுருக்க 

சோ பிஸ்கட் பாக்கெட் எனக்கு தான். அது கொடுக்க மாட்டேன்.   

ஆனா நாளைக்கு நீ கலரிங்க் முடிச்சா உன் பொம்ம பென்சில் உனக்கு கொடுத்துடுறேன். “ என சொல்லியவன், அவள் கையை விடுத்து சைக்கிளை கிளம்பினான். 

செல்லும் அவனை அனல் மூச்சுகள் விட்ட படி பார்த்துக்கொண்டிருந்தாள் செந்தாமரை.

    

                

                  

  

      

   

     

           

       

 

     

Advertisement