Advertisement

“ அண்ணா இப்படியே என்னைய பிடிச்சிட்டு இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ண முடியாதுண்ணா. நீங்க எல்லாம் ஹையர் கிளாஸ் நான் மட்டும் தான் உங்கள விட சின்ன பையன். நீங்க எக்ஸாம் முடிச்சிடிங்கனு உங்களுக்கு பர்மிஷன் கொடுத்துட்டாங்க. எனக்கு அப்படியா, அதான் சொல்லாம வந்துட்டேன். “ என புன்னகையுடன் அழகன் சொல்ல, 

“ அத முதலைய சொன்னா என்னடா. எங்க கிட்டவே ஹேர் ஸ்டைல் பத்தி கிளாஸ் எடுக்கற. “ என அவனது சிகையை விளையாட்டாக கலைத்து விளையாடியபடி அழகனது கழுத்தை ரிலீஸ் செய்ய, இருவரின் முன்னும் மூச்சு வாங்க வந்து நின்றாள் செந்தாமரை.  

“ யார் பாப்பா நீ ? “ என அந்த மாணவன் கேட்க, திரு திருவென விழித்தாள் செந்தாமரை. இவர்களை நோக்கி வரும் போது, இருவரும் சண்டையிடுவது போல் தெரிய, இப்போது அருகில் இருவரும் புன்னகையுடன் நிற்க, இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ இது என் அசிஸ்டண்ட் அண்ணா. “ என அழகன் கெத்தாய் சொல்ல, பேந்த பேந்த விழித்தாள் தாமரை.

“ அழகா உனக்கு அஸிஸ்டண்ட்டா ? “ என அந்த மாணவன் சிரிக்க,     

“ ஆளையும் சைஸ்சையும் பார்த்து சும்மா நினச்சிராதிங்க அண்ணா “ என அவன் நக்கலாய் சொன்னான். 

“ பார்த்தா சின்ன கிளாஸ்ஸா இருக்க, வீட்டுக்கு போகல. “ என அவளிடம் அந்த மாணவன் அக்கறையாய் விசாரிக்க, 

“ அது வந்து “ என தாமரை பதில் சொல்ல ஆரம்பிக்க, 

“ அவங்க அக்கா என் ஃப்ரெண்ட் தான் அண்ணா, இன்னைக்கு இந்த பொண்ணுக்கு ஹாஃப் டே தான். 

எங்களுக்கு தான் புல் டே, இவங்க வீட்ல எங்கயோ வெளிய போயிருக்காங்களாம், அதான் இந்த பொண்ண தனியா விடாம என்னைய பார்த்துக்க சொன்னுச்சு இவங்க அக்கா. 

நீங்க தான அண்ணா சொன்னிங்க பௌலிங் போடுறவாங்க, பந்து எடுத்து போட ஒரு ஆளையும் கூட்டிட்டு வரணும்னு, அதான் என் கூடவே அஸ்சிஸ்டண்ட்டா கூப்பிட்டுக்கிட்டேன். “ என ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பதிலை அடித்து விட்டான். 

‘ அடப்பாவி. எங்க வீட்ல எல்லாரும் இங்க தான் இருக்காங்க. எப்படி பொய்  சொல்றான், புழுகு மூட்ட பைய.‘ என உள்ளே திட்டியவள், அமைதியாக நின்றாள். எத்தனை முறை படையெடுத்தலும் கைக்கு இன்னும் புத்தகம் வராத கோபம் உள்ளே புசு புசு வென கிளம்பியது, அது அப்படியே அவள் முகத்தில் தெரிந்தது. அந்த மாணவன் சற்று தள்ளி வேறு யாருடனோ பேச போக, இவளது அருகில் வந்த அழகன், 

“ அங்க இருந்து பார்த்துட்டு என்னைய பத்தி கம்ப்ளைண்ட் பண்ண வந்தியா?“ என சரியாக கணித்துக் கேட்க, எங்கே “ ஆமாம் “ என்று சொன்னால் இன்னும் வேலை சொல்வனோ என வேகமாக ‘இல்லை’ என தலையாட்டினாள். 

“ உன்ன பார்த்த அப்படி தெரிலையே, நீ என்ன கம்ப்ளைண்ட் பன்னாலும் இங்க ஒன்னும் பண்ண முடியாது, இவங்க எல்லாம் என் அண்ணா ஃபிரண்ட்ஸ்.  இன்னொரு தடவ இப்படி கோக்கு மாக்கா ஏதாச்சும் செய்ய ஓடி வந்த…

டிங் டிங்னு ஆடுதே உன் குதிர வாலு, அதல இருக்க ரிப்பன் என் கைல தான் இருக்கும். “ என மிரட்டிவிட்டே சென்றான். பெருமூச்சுடன் திரும்பியவள் முதல் வேலையாக தான் ரிப்பனை கழட்டி பத்திரப்படுத்தினாள்.    

கிரிக்கெட் ஆரம்பிக்க, மாணவர்கள் எல்லாரும் அவரவர் இடத்தில் தயாராய் நின்றனர். அழகன் நன்றாக பௌலிங் போடுவான் என அவனை மட்டும் எதிரணியில் சேர்த்திருந்தனர். ஒவ்வொரு பௌலராய் வந்து போட, பாதி நேரம் அதை கவனித்தாள், மீதி நேரம் அழகனது ஸ்போர்ட்ஸ் பேக்கை கிளறினாள். 

     செந்தாமரை கையில் எதிர்பாராத விதமாக இரண்டு பேட் பட, ஒன்று சாதாரணமாக இருந்தது. இன்னொன்று அழகாய் செதுகப்பட்டிருந்தது. பேட்டின் மொத்த வடிவம் எல்லாம் மாறி ஒரு மர பூங்கொத்தை கையில் வைத்திருப்பது போல் ஒரு தோற்றம். பேட் முழுவதும் நிறைய வித விதமான பூக்கள் செத்துகப்பட்டிருக்க, முடிவில் K.A.S என சிறியதாய் செதுகப்பட்டிருந்தது. 

இத்தனை நேர்த்தியாய் இப்படி ஒன்றை அவள் இதுவரை பார்த்ததில்லை. மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் கை தானாக பெயிண்டிங் செட் எடுத்து வண்ணம் தீட்ட ஆரம்பித்தது. 

    நேரம் போனதே தெரியவில்லை, ஒரு அரை மணி நேரம் சென்று அழகன் கத்தி கூப்பிட, வண்ணம் தீட்டுவதை விட்டு மனமே இல்லாமல் சென்றாள். 

    விளையாட்டில் பந்து தூரமாக விழுந்தால், பூனை நடை நடந்து ஆடி அசைந்து எடுத்து வந்தாள். வேண்டுமென்றே ஓரிடத்தில் செருப்பை கழட்டி விட்டு நேரம் தாழ்த்தி எடுத்து வந்தாள். அது மட்டும் இல்லாமல் நேற்று அவளது கைகள் சீராய்த்து இருக்க, கரடு முரடான இடத்தில் பால் தேடி எடுக்க, கை வேறு எரிச்சலாய் இருந்தது. அதனால் அவளது ஸ்கர்ட் நுனியில் பால் பிடித்து எடுத்து வர, அதை பார்த்து அழகனை அவனது சகாக்கள் திட்ட, அவன் அதை இவளிடம் காண்பிக்க, உள்ளே அவனை திட்டிக்கொண்டே வேகமாக எடுக்க பழகினாள். எப்படியோ அவனது முறை முடியாவும் இவள் இங்கே வந்து வண்ணம் தீட்ட, மர பூங்கொத்து மெல்ல மெல்ல உயிர் பெற்று சிறிது சிறிதாய் வண்ணப்பூங்கொத்தாய் மாறிக்கொண்டிருந்தது. 

‘ இந்த காட்டு பயனுக்கு இப்படி ஒரு திறமையா…’ என நினைத்தாலும், அதற்காக அவனை அப்படியே விட மனமில்லை. 

அவனது பேட்டின் இறுதியில் இருந்த ‘K.A.S’  என்ற எழுத்தை மட்டும் நன்றாக அடர் நிற வண்ணம் கொடுத்து மறைத்து விட்டாள். வந்து பார்த்தால் என்ன நினைப்பான் என யோசித்தாள், 

‘ நான் கலர் தான பண்ணேன், வேண்டாம்னா தண்ணி விட்டு அழிச்சிக்கிட்டும். என் டிராயிங் புக் கொடுக்கல தான அவன், அப்போ இதுல தான் பெயிண்ட் பண்ண முடியும்னு சொல்லிக்கலாம். ‘ என ஒரு முடிவெடுத்து தொடர்ந்தாள்.  

இது செய்து முடிப்பதற்குள் இடையிடையே மூன்று முறை பந்தை எடுத்து கொடுக்க கூப்பிட்டு நன்றாக அவளை ஓட விட்டான். 

பின்பு “ தண்ணி எடுத்துட்டு வா, ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வா. “ என தனியாக வேறு வேலை வைத்தான். தலைமுடிகள் கலைந்து, மேல் சட்டை எல்லாம் மண் ஒட்டி, உள்ளங்கைகள் சிவந்து, பார்க்கவே பரிதாபமாக இருந்தாள் செந்தாமரை. 

விளையாட்டு முடிந்து அவன் வருவதற்குள் அந்த வண்ண பேட் முழுதாக தன் வண்ணங்களை உள்வாங்கியிருந்தது. அதை அப்படியே எடுத்த அவனது ஸ்போர்ட்ஸ் பேக்கில் வைத்து மூடினாள். 

விளையாட்டில் அழகனது அணி வெற்றி பெற, களைப்புடன் இருந்தாலும் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து தண்ணீர் பாட்டில் எடுக்க, அது காலியாக இருந்தது. 

“ நான் புடுச்சிட்டு வரேன். அதான் இவ்ளோ நேரம் இருந்தேன்ல, என் டிராயிங் புக். “ என மெல்லமாய் தாமரை பாவமாய் கேட்க, 

‘ இவ இத விடமாட்டா போல இருக்கு. ‘ என நினைத்தவன் அவனது ஸ்போர்ட்ஸ் பேக்கின் அருகில் இருந்த அவனது நண்பனது பையிலிருந்து டிராயிங் புக்கை எடுத்து அசராமல் பார்த்து இவளது கையில் கொடுக்க, வாய்யை பிளந்தபடி ‘ஆஆ’ என நின்றிருந்தாள். 

‘ இவ்ளோ நேரம் இங்க தான் உட்கார்ந்த்திருந்தேன். அதுவும் இந்த பேக் பக்கத்துல தான் இருந்திருக்கு. இது தெரியாம போயிடுச்சே. 

இதுக்காக என்னைய எவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டான். ‘ என செந்தாமரைக்கு ஆற்றாமையாக இருந்தது.     

“ நீ கிளம்பு, நான் தண்ணி புடுச்சிக்குறேன். “ என பெரிய மனது செய்து சொல்ல, 

“ இனிமே என் கிட்ட ஏதாச்சும் வாலாட்டுன, இப்படி தான் நடக்கும். புரிஞ்சுதா.“ என மெல்லிய மிரட்டல் விட்டே அவளை ரிலீஸ் செய்தான். 

செந்தாமரை அவன் விட்டால் போதுமென ஓடிவிட்டாள். 

ஆனால் பள்ளியின் வாசலை நோக்கி நடந்துகொண்டே நிதானித்து சில ப்ளானிங்க் போட்டவள் பள்ளி கிரவுண்ட் விட்டு பிரின்சிபல் ரூம் அருகே வந்தாள். பையில் டிராயிங் புக் வைத்து பத்திரப்படுத்தினாள். 

வெளியே இருந்து ஓரமாய் உள்ளே எட்டி பார்க்க, பிரின்சிபல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். 

     தாமரை சத்தம் செய்யாமல் பின்னால் நகர்ந்தவள், ‘ இந்த காட்டு பயல சும்மா விடக்கூடாது ’ என நினைத்து அவளது லஞ்ச் பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வேண்டுமென்றே ‘டக் டக்‘ என ஷூ சத்தம் செய்ய அவர் ரூம் வாசல் அருகே இருந்த வாட்டர் ஃபில்டரில்  தண்ணீர் பிடிக்க, அவர் நிமிரவில்லை. 

‘ அச்சோ அவர் பார்கலையே. ‘ 

என நினைத்தவள், வேண்டுமென்றே அவளது பாட்டிலை கீழே போட்டாள். அப்போது சாளரம் வழியாக அவர் வெளியே பார்க்க, இவளது கண்கள் குறும்பாய் மின்னியது. கீழே இருந்த பாட்டிலை எடுத்து மறுமுறையும் தண்ணீர் பிடித்தாள். 

பிரின்சிபல் மெதுவாக வெளியே வந்து, “ பாப்பா என்ன கிளாஸ் நீ. “ என விசாரிக்க, 

“ நான் பிஃப்த் ஸ்டாண்டர்ட் சர். “ என பவ்வியமாய் பாவமாக சொல்ல, 

“ ஹாஃப் டே தான உனக்கு, இன்னும் என்ன பண்ற. “ 

“ அது நம்ப கிரவுண்ட்ல மாட்ச் சர். 

பெரிய அண்ணாங்க கூட எங்க அக்கா ஃப்ரெண்ட்டும் விளையாடுறாங்க, அதான் அவங்களுக்கு தண்ணி பிடிக்க வந்தேன் சர். “ என மின்மினியாய் சொல்ல, 

“ உங்க அக்கா எந்த கிளாஸ் ? “

“ எய்த் ஸ்டாண்டர்ட். “

“ லவன்த் பசங்க தான் மாட்ச் விளையாட பர்மிஷன் கேட்டாங்க, நீ என்ன இப்படி சொல்ற, அவன் பேரு என்ன ? “ என சீரியஸாய் கேட்க,

“ காட்டழகிய சிங்கர் சர். “ என சின்சியராய் போட்டு கொடுத்தாள். 

“ சரி நீ வீட்டுக்கு கிளம்பு. “ என சொல்லியவர், அப்படியே கிரவுண்ட் பக்கம் கிளம்பினார். செந்தாமரைக்கு உற்சாகம் பொங்க, ‘ காட்டு பய இன்னைக்கு மாட்டுனான். ‘ என குதுகளித்தவள், அவர் பின்னே ஒரு மிக பெரிய இடைவெளிவிட்டு பதுங்கி சென்றாள். 

    கிரவுண்ட்டில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் கூச்சலிட்டு உற்சாகமாய் பேசிக்கொண்டும் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் ஊற்றி வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்க, பிரின்சிபல் சொல்லாமல் வரவும் திக்கு தெரியாமல் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தவர்கள் சுதாரிக்க, அழகன் இருந்த மகிழ்ச்சியில் கண் மண் தெரியாமல் ஒருவன் மீது தண்ணீர் உற்ற, அது சரியாய் பிரின்சிபல் சட்டையில் பட்டுவிட்டது. 

       பதுங்கி ஒளிந்து, தான் பிடித்த தண்ணீரை சப்பி குடித்து கொண்டிருந்த  செந்தாமரையோ ‘ இன்னைக்கு சட்னி தான் டா நீ. ‘ என நினைத்து குதூகலிக்க, 

அழகன் உச்ச பச்ச அதிர்ச்சியில் அவரை பார்க்க, அவனது எக்ஸ்பிரஷனை  பார்த்து பிரின்சிபல் சிரித்துவிட்டார். 

இதை பார்த்து அதிர்ச்சியில் சுற்றி நின்ற மாணவர்களும் சிரிக்க, செந்தாமரைக்கு முகம் பொக்கென ஆனது. ஆனால் சில மணி துளிகளிலே அவள் முகம் மலரும் படி பிரின்சிபல் அழகனுக்கு ஐம்பது தண்டால் எடுக்க சொல்லி தண்டனை கொடுக்க, இறுதியில் அழகன் சக்கையாய் பிழியப்பட்டிருந்தான். அதை பார்த்து துள்ளி குத்திதபடி பள்ளியின் வாயில் அருகே வந்து செந்தாமரை நிற்க, மணி அடித்து மலரும் வர சரியாக இருந்தது.

பள்ளிவிட்டு செல்லும் வழியில் மலர் அவளது வகுப்பு கதைகளை சொல்லியடி வர, செந்தாமரை ஒரு தனி மகிழ்ச்சியில் மிதந்தபடி வந்தாள். அழகன் அவனது சைக்கிளில் வந்து இவர்களிடம் நின்று மலரிடம் அன்றைய வகுப்பு நோட்ஸ்‌ வாங்கிக்கொண்டு வண்டியை முன்னால் செலுத்தினான். 

அவன் முன்னால் செல்லும் வரை அமைதி காத்த செந்தாமரை, அவன் சற்று முன்னே சென்றதும் மலரிடம் இன்று நடந்ததை எடிட் செய்து இறுதியாக அழகன் தண்டால் எடுத்ததை பாவனையாய் கைகளை ஆட்டியபடி சொல்லிக்காட்டி சிரிக்க, முன்னால் சற்று தள்ளி இருந்தாலும் சைக்கிள் மிர்ரரில் அத்தனையும் அழகனுக்கு தப்பாமல் தெரிந்தது. 

‘ பச்ச மொளகா எவ்ளோ சிரிப்பு உனக்கு. நான் பனிஷ்மெண்ட் வாங்குனப்போ நீ கிரவுண்ட்ல இல்ல.

இப்போ ஆக்ஷனோட சொல்ற மாதிரி இருக்கே…  

ஓ நீ பார்த்த வேல தானா அது.“ என கண்டுகொண்டவன் ஒரு முடிவுடன் சைக்கிளை அழுந்த மிதித்தப்படி பறந்தான் அழகன்.       

Advertisement