Advertisement

                அடுத்த நாள் காலை வகுப்புகள் முடிந்து மிதமான மதிய வேளை. பள்ளியின் விளையாட்டு கிரவுண்ட்டின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது பறவைகள் இளைப்பாரிக்கொண்டிருந்தது. உணவு இடைவெளியில் அழகன் செந்தாமரை வருவதற்கு முன்னே அவன் நேற்று சொன்ன இடத்தில் அமர்ந்திருந்தான். மரத்தில் எத்தனை கூடுகள் இருக்கிறது என அழகன் எண்ணிக்கொண்டிருக்க, சுற்றிலும் நிறைய பிள்ளைகள் இடைவெளிவிட்டு ஆங்காங்கே வட்டமாய் அமர்ந்து தத்தமது கூட்டத்துடன் சாப்பிட, செந்தாமரை உணவு பையுடன் அவன் முன் வந்து நின்றாள்.

கண்களில் சிறு கோபத்துடன் உணவு பையை மட்டும் அவனிடம் நீட்ட, 

“ இப்படி கொடுத்துட்டு ஓடி போயிடலாம்னு நினச்சிருக்கியா ? “ என இவன் கேட்டதும் முறைத்தபடி தங்கென அவன் எதிரிலிருந்த பெஞ்சில் அமர்ந்தாள். அவள் பையை வாங்கி பிரித்தவன், வெஜ் பிரியாணியை கபளீகரம் செய்தபடியே, 

“ பிரியாணி மட்டும் தான் கேட்டேன், கூட உருலக்கிழங்கு ஃப்ரை , அப்பளம் எல்லாம் கொண்டு வந்துருக்க. வெரி குட். “ என பாராட்டியபடியே சாப்பிட, 

‘ நான் எங்க டா கொண்டு வந்தேன், நான் வேண்டாம்னு தான் சொன்னேன். எங்க அம்மா தான் எனக்குனு நினச்சு நிறைய போட்டு கொடுத்தாங்க. ‘ என தாமரைக்கு மைண்ட் வாய்ஸ் ஓட,  

‘ என் சாப்பாடு எல்லாம் அவன் சாப்பிடுறான். அப்போ எனக்கு. ‘ என்ற பாவனையில் அவனை பார்த்து அமர்ந்திருந்தாள். இறுதியாக எல்லாம் சாப்பிட்டு முடித்து, அவன் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வந்து அவளிடம் கொடுத்தவன், கை கழுவி விட்டு வந்து, 

“ உன் லஞ்ச் பாக்ஸ் உன் கிட்ட கொடுத்துட்டேன், 

அப்புறம் இந்த கவர்ல உன் அப்பளம் மிச்சம் இருக்கு. “ என கொடுக்க, 

‘ ஹப்பா அப்பளம்மாச்சும் கிடைச்சது. ‘ என அதில் கை வைக்க, 

“ ஹேய் நிறுத்து, உனக்கு ஒன்னு வச்சிருக்கேன். “ என சொல்லி அழகன் அவன் உணவு பையை பிரிக்க, அப்பளத்தை தொட போன கையை கீழே போட்டாள்.

‘ டேய் நான் அப்பளம் தான டா எடுக்க போனேன். அதுக்கு ஏன் டா தொட விடாம செஞ்ச, இன்னும் என்ன டா வச்சிருக்க. ‘ என பீதியாக அவனை பார்க்க, 

“ இந்தா இது என் லஞ்ச் பாக்ஸ், 

இதுல கீரை சாதம் இருக்கு, இத இப்போ காலி பண்ற. 

தொட்டுக்க உன் அப்பளத்தையே வச்சிக்கோ “ என தாராள மனத்துடன் அழகன் நக்கலாய் சொல்ல, 

‘ அடப்பாவி கீரை சாதமா. ‘ என நினைத்தவள், முகத்தை சுருக்கி அதை பிரித்து வாசம் பிடித்தாள். 

“ ஏய்… எங்க வீட்டு சாப்பாடும் நல்ல தான் இருக்கும். “ என அழகன் அதட்ட, பயந்துகொண்டே ஒரு வாய் சாப்பிட்டாள். 

   வள்ளி முருங்கை கீரையை பருப்பில் போட்டு கடைந்து செய்திருந்தார். கூடவே கொஞ்சம் நெய் விட்டிருக்க, அத்தனை ருசியாய் இருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை செந்தாமரை. 

அழகன் என்னமோ அவளுக்கு கீரை சோறு பிடிக்காது என மலர் சொல்லியதை நினைத்து தான் கொண்டுவந்து கொடுத்தான், ஆனால் இப்படி ஒரு ருசியில் இதுவரை செந்தாமரை சாப்பிடாததால், நன்றாக ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டாள். பார்த்திருந்த அழகன் தான் குழம்பி போனான். 

‘ இந்த பச்ச மொளகா என்ன இந்த கட்டு கட்டுறா ‘ என பார்த்து அமர்ந்திருந்தான். அவள் சாப்பிட்டதும், மூடி அப்படியே கொடுக்க,

“ யாரு கழுவி தருவா, ஒழுங்கா கழுவிட்டு வா. “ என அதட்ட, 

“ எனக்கு தெரியாது. “ என அப்பாவியாய் தாமரை சொல்ல, 

“ ஆமா சாப்பிட்டத கழுவ தெரியாது, ஆனா என் ஐடி மட்டும் சுட தெரியும்.“ என ஜாடை பேசியவாரே அவளை பார்க்க, அவள் உர்ரென்று அமர்ந்திருந்தாள்.

“ இந்த ஆங்கிள்ல பார்க்க, அப்படியே என் வீட்டு வீரா நாய்க்குட்டி மாதிரி இருக்க. “ என இவன் வம்பு பேச, 

“ நான் நாய்குட்டி இல்ல, 

நான் கிளி “ என ரோஷமாக சொல்லியவள், பின்னால் தள்ளி உட்கார்ந்துக்கொண்டாள்.   

“ ஓ கிளியா…

கீ…கீ…கீ…

கீ…கீ…கீ ” என இவன் சவுண்ட் விட , அருகில் உள்ள சில பேர் இவர்களை பார்த்து சிரித்தார்கள். செந்தாமரை இவனை பார்த்து முறைக்க, 

“ என்ன முறைக்கற, நீ தான கிளினு சொன்ன, அப்போ அப்படி தான் கூப்பிட முடியும். “ என இவன் சின்சியராக விளக்க, 

‘ பேசாம கழுதனு சொல்லிருக்கலாம், அப்போ கழுத மாதிரி கத்திருப்பான். எல்லாரும் இவனை மட்டும் பார்த்து சிரிச்சிருப்பாங்க. 

ச்ச சான்ஸ்‌ போச்சே. ‘ என நினைத்தவள் சாப்பிட்ட பத்திரத்தை ஏனோ தானோ என கழுவ தெரியாமல் கழுவியவள் நன்றாக மூடி கொண்டு வந்து கொடுக்க, வாங்கி வைத்துக்கொண்டான். “ என் டிராயிங் புக் வேணும். “ அடுத்த நிமிடம் செந்தாமரையிடமிருந்து குரல் வந்தது.

“ இன்னும் உனக்கு வேலை இருக்கு, அதுக்குள்ள எஸ்கேப் ஆக முடியாது. “ என அசால்டாய் அழகன் சொல்ல, 

“ நீங்க கொடுத்த கீர சாதம் கூட சாப்பிட்டேன் தான, அப்போ தாங்க.” என தான் பக்கம் நியத்தை சொல்ல, 

“ அதுக்கு மட்டுமா உன்ன புடுச்சு வச்கிருக்கேன். 

எனக்கு இன்னைக்கு ஆஃப்டர்னூன் கிரிக்கெட் மாட்ச் இருக்கு. அதுவும் சீனியர் குரூப்ல நான் பௌலிங்ல இருக்கேன். பந்து தூரமா போயிடுச்சுனா எனக்கு எடுத்து வந்து தரணும். அதுக்கு நீ தான் போய் எடுத்து வந்து தரணும்.” என அசராமல் அடுத்த டாஸ்க்கை சொல்ல, செந்தாமரை திரு திரு வென விழித்தாள். 

“ நான் இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ போடல, என்னால ஓட முடியாது. வெயில் சுடும். “ என ஒன்றை கண்டுபிடித்து செந்தாமரை சொல்ல,

“ அதான் நார்மல் கட் ஷூ போட்டுருக்கல இது போதும். “ என அழகனும் விடாமல் வேறொன்றை கண்டுபிடித்து சொல்ல, வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டாள். 

“ எங்க அக்கா கிளாஸ் தான நீங்க, அவளுக்கு கிளாஸ் இருக்கு, நீங்க கட் அடிச்சிட்டு மாட்ச்காக இங்க இருக்கிங்க, இது தப்புல. “ என அவனை குறு குறு என்று பார்த்துக் கேட்க, 

“ நான் மாட்சுக்கு வந்தாலும் மலர் எனக்கு எல்லா நோட்ஸ்சும் தரும். 

ஏய் இங்க பாரு, இது எல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம். 

நான் பௌலிங் போடுறப்போ கிரவுண்ட் லைன் கிட்ட வந்துடனும். என்னோட பௌலிங் சான்ஸ் வரும் போது மட்டும் வந்து பால் எடுத்து போட்டா போதும். மத்த டைம் இங்கயே என் ஸ்போர்ட்ஸ் பேக் பக்கத்துலயே உட்கார்த்திருக்கணும். 

நான் தண்ணி கேட்டா கொண்டு வந்து கொடுக்கணும். என் ஸ்நாக்ஸ் பாக்ஸ் இதுல இருக்கு. நான் அத கேட்டா கொண்டு வந்து கொடுக்கணும். எங்கயாவது விளையாட ஓடி போன, அவ்ளோதான் நீ. “ என கறாராக சொல்ல, தலையை ஆட்டிக்கொண்டாள். 

“ என்ன சரினு சொல்லாம மண்டைய மண்டைய ஆட்ற ? “ 

“ இல்ல நான் எவ்ளோ நேரம் பேக் பக்கத்துல உட்காரது. எனக்கு போர் அடிக்கும். நீங்க என் டிராயிங் புக் தந்தா நான் கலர் பண்ணிட்டு ஊர்கார்ந்திருப்பேன். “ என சொல்லி லஞ்ச் பேக்கின் இடப்பக்க ஜிப்பிலிருந்து பெயிண்டிங் செட் ஒன்றை எடுத்து காட்ட, இரண்டு புருவமும் உயர்த்தி அவளை பார்த்தவன், 

“ அடேயப்பா…என்ன ப்ளானிங்க் உனக்கு. அதெப்படி பெயிண்டிங் செட் காமிச்சா உனக்கு போர் அடிக்கும்னு நான் டிராயிங் புக் தந்துடுவேனு ஒரு ஐடியா. 

உன்ன சும்மா சொல்ல கூடாது, கிடக்குற பேப்பர்ல எல்லாம் பட்டம் விட பாக்குற. 

நீ தான அன்னைக்கு சொன்ன நான் உன்ன விட பெரிய தில்லாலங்கடினு. அதான் உன்னோட டெக்னிக் எல்லாம் என்கிட்ட நடக்காது. போய் உட்காரு.“ என இரக்கம் காட்டாமல் சொல்ல, அவனை அடிக்கண்ணால் முறைத்தாள். 

“ இந்த கண்ண உருட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம். அப்புறம் டிராயிங் புக் அடுத்த வாரம் தான் கிடைக்கும் பரவாலயா. “ என பயம் காட்ட, உதடு பிதுக்கிய படி அமைதியாக அவன் பேக் அருகில் அமர்ந்தாள். 

   சிறிது நேரதிற்கெல்லாம் அவனது சீனியர்ஸ்‌ வர, இவனும் அவர்களிடம் சென்றான். அங்கே கையில் பேட்டுடன் நின்ற ஒரு பதினோராம் வகுப்பு மாணவனிடம், 

“ அண்ணா நான் பால்ஸ் கொண்டு வந்துட்டேன். “ என அழகன் உற்சாகமாய் சொல்ல,

“ வா அழகா. எப்படி உங்க கிளாஸ்ல ஆலோவ் பண்ணாங்க. “ 

“ அதெல்லாம் பார்த்துக்கலாம்ண்ணா. “ என அழகன் தலை கோதிய படி அலட்டாமல் சொல்ல, 

“ டேய் எட்டாவது படிக்கும் போதே மாட்ச்க்கு கிளாஸ் கட் அடிக்குற, இதுல பார்த்துக்கலாம்னு டயலாக் வேற. “ என ஒரு கையால் அழகனை கழுத்தோடு பிடித்து அனைத்து ஒரு சுத்து சுத்த, 

‘ அட, இந்த காட்டு பையன மிரட்ட ஒரு ஆள் இருக்கா. அந்த அண்ணா கிட்ட போய் ஹெல்ப் கேட்கலாமா. ‘ என்ற மைண்ட் வாய்ஸ்ஸோடு அந்த காட்சியாய் தூரத்தில் இருந்து அதிசயம் போல் பார்த்திருந்தாள். 

“ அண்ணா…ண்ணா விடுங்கண்ணா, அப்புறம் ஹைர் ஸ்டைல் மாறிடும். “ என அழகன் சிரித்துக்கொண்டே அந்த மாணவனின் சுற்றுக்கு ஈடு கொடுத்து மாட்டிக்கொண்ட கழுத்துடன் சுற்ற, 

“ டேய், என்னடா சீனியர்ஸ்னு பயம் இருக்காடா, சும்மா அடுச்சு விடுற, அப்புறம் இந்த மாட்ச் விட்டு எடுத்துடுவேன் பார்த்துக்கோ. “ என அந்த மாணவனும் அழகனை விடாமல் மிரட்டல் தொனியில் முகத்தை சீரியஸ்ஸாய் வைத்து விளையாட, இதை பார்த்திருந்த செந்தாமரை, 

‘ நெஜமா அந்த அண்ணா பெரிய ஆள் தான் போல, இவனையே மிரட்டுறாங்க. இவங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம். ‘ என எழுந்து அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள். 

      

        

  

  

            ‌ 

         ‌    

       

  

Advertisement