Advertisement

“ ஹேய், அது என் சமோசா. 

அது வாங்க கூட்டத்துல எவ்ளோ நேரம் நின்னேன் தெரியுமா. 

எனக்கு என் சமோசா வேணும். 

இப்போவே வேணும். “ என கோபமாய் அடம் பிடித்து குதித்தாள் செந்தாமரை.  

“ ஒரு சமோசா சாப்பிட்டதுக்கு எவ்ளோ குதி குதிக்குறா…

இப்போ உன் எல்லா அப்பளத்தையும் சாப்பிட போறேன் பாரு. “ என சொல்லி அடுத்த விரலில் இருந்த அப்பளத்தை உருவி எடுத்து வாயில் போட, அவளது கையை அவனிடமிருந்து விடுவிக்க செந்தாமரை போராட, அழகன் இப்போது உருவுவதை விட்டு அவளது அப்பளம் மாட்டிய இரண்டு கைகளையும் சேர்த்து தர தர வென கொஞ்சம் தூரம் இழுத்து சென்று வேறு ஒரு திசையில் திரும்பி நிற்க வைத்து, அவளது கைகளை சேர்த்தவாரே அவனது கர்சீப் கொண்டு கட்டினான்.

“ இங்க பாரு இப்போ எல்லா அப்பளத்தையும் நான் சாப்பிட போறேன். “ என அவள் கைகளை அருகே இழுக்க, 

“ இல்லை….எனக்கு தான் அப்பளம். அது என்னோடது. “ என பலம்கொண்டு மட்டும் குதித்துக்கொண்டே அவள் போராட, 

“ சரி, அப்போ ஒழுங்கா இங்கயே இந்த டைரக்ஷன்ல நின்னு சாப்பிடு, திரும்புன உன் எல்லா அப்பளமும் எனக்கு தான். “ என மிரட்டி விட்டு அவள் முன்பு அமர்ந்திருந்த கல் மேடையை நோக்கி வேகமாக நகர்ந்தான். 

செந்தாமரையோ எங்கே திரும்பினால் அப்பளத்தை பிடுங்கி விடுவானோ என திரும்பாமல் அவசரமாக ஒவ்வொன்றாய் உள்ளே தள்ளினாள். அந்த சமயம் மேடை மேலிருந்த அவளது பையை சத்தமில்லாமல் வேகமாய் திறந்து உள்ளே கைக்கு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து பனியனை தூக்கிவிட்டு இடுப்பு பான்ட்டில் மேலாக சொருக்கி அதன் மேல் பனியனை இழுத்து விட்டு மூடி வேகமாக மேடைமேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட்டான். எங்கே சாதாரணமாய் உட்கார்ந்தால் உள்ளே இருக்கும் புத்தகத்தின் வடிவம் மேல பனியன் மீது தெரிந்து விடுமோ என முன்னெச்சரிக்கையாக அமர்ந்துவிட்டான். 

     செந்தாமரையோ அப்பளத்தை காலி செய்யும் முனைப்பில் இருந்தவள், அதை அவசரமாக சாப்பிட்டு முடித்து திரும்பி பார்க்க, அழகன் அமர்ந்திருப்பது தெரிய, அவனிடம் ஓடினாள். 

“ நான் திரும்பவே இல்லை. 

என் அப்பளம் நான் சாப்பிட்டேன்.

கர்சீப் கழட்டுங்க.

என் கைய ப்ரீயா விடுங்க. “ என கையை அவன் முன் நீட்ட, சாவகாசமாய் அவள் கை கட்டை அவிழ்த்துக்கொண்டே, 

“ பாவமா முகத்த வச்சுகிட்டு என்ன வேலை பார்த்துருக்க.

அன்னைக்கு என் பேக்ல இருந்து ஐடி சுட்டதும் இல்லாம மலர் கிட்ட சைக்கிள இருந்து உன் பேக் எடுத்தப்போ ஏதோ என் ஐடி தெரியாம உன் ஜிப்ல மாட்டிக்கிச்சுனு பொய் சொல்லி, அத அவ கிட்ட அடுத்த நாள் நல்ல புள்ள மாதிரி கொடுத்து விட்டுருக்க. 

என்ன ஒரு தில்லாலங்கடி நீ. “ என சொல்லிக்கொண்டே கட்டை முழுதாய் அவிழ்த்து விட்டான். அவனை முறைத்து கொண்டே அவள் பையை எடுத்து முதுகில் மாட்டி கொஞ்சம் தூரம் நடந்தவள், 

“ நான் ஒன்னும் உங்க அளவுக்கு தில்லாலங்கடி இல்ல. “  என திரும்பி இவனை பார்த்து கத்த, அழகன் பல்லை கடித்து இவளை நோக்கி செல்ல கோபமாய் எழ, ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடி விட்டாள்.

‘ அடங்குறாளா பாரு, திமிர் முடிச்ச பச்ச மொளகா. நாளைக்கு இருக்கு உனக்கு. ‘ என நினைத்தவன் நண்பர்களை நோக்கி சென்றான். 

      அடுத்த நாள் மதிய வேளையில் கிரவுண்டின் வேறொரு பகுதியில்  அழகன் கபடி பிரக்டிஸில் இருக்க, அங்கே இருந்த கல் மேடையில் பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் பைகள் அடுக்க பட்டிருக்க, பைகளோடு பையாய் சிவந்து போன உப்பிய விழிகளுடன் செந்தாமரை அமர்ந்திருந்தாள்.

நேற்று வீட்டிற்கு சென்று பாட புத்தகங்களை படித்து விட்டு அடுக்க, அவளது படம் வரையும் புத்தகம் காணவில்லை. அவளுக்கு வரைவது என்றால் மிக மிக பிடித்தம். இரண்டு வேளை சாப்பிட மறந்தாலும் வரைவது மறக்காது. வீட்டையே ஒரு புரட்டு புரட்டி தேடியவள், கிடைக்கவில்லையே என ஆழ, வீட்டில் எப்படியோ சமாதானப்படுத்தி அவளை உணவு ஊட்டி தூங்க வைக்க, அவள் தூங்காமல் மௌன கண்ணீர் வடித்து உறங்கி போனாள். 

     இன்று வகுப்பிற்கு வந்ததும் எல்லோரிடமும் கேட்டு பார்க்க, இல்லை என்ற பதிலே வர, சோர்ந்துப்போய் விட்டாள். மதிய உணவு இடைவெளியில் சாப்பிடும் போது, நேற்று அழகன் பையின் அருகில் அமர்ந்திருந்தது நினைவில் வர, சாப்பிட்டு முடித்ததும் அக்காவின் வகுப்பிற்கு ஓட, அங்கே மலர் இருந்தாள், ஆனால் அழகன் இல்லை. அவன் எங்கே என்று விசாரித்து கிரவுண்டிற்கு வர, அங்கே அவன் கபடியில் பிசியாக இருக்க, நின்று நின்று பார்த்தவள், மதிய வகுப்பு தொடங்கியும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள். 

      நேற்று இரவு அழுததில் கண் சிவந்து போய் உப்பி இருக்க, காய்ந்து போன உதட்டை ஈரம் செய்தபடி கபடியை பார்த்தவாரு ஒரு மணி நேரமாய் அமர்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து தான் அழகன் வந்தான். அவன் வந்ததும் அவனை நோக்கி ஓடி வழியை மறித்தவாரு நிற்க, அவளை ஒற்றை கையில் தள்ளி நிறுத்தி, அவன் பையின் அருகில் சென்று அமர்ந்தான். அவன் பின்னே ஓடி வந்தவள் அவன் மேடை மேல் அமர்ந்ததும், அவன் முன் மூக்கு சிவந்தபடி நின்றாள். 

     ஒரு முழு பாட்டில் தண்ணீரை காலி செய்தவன், நெற்றியில் வழிந்த வேர்வையை துடைத்துவிட்டு தன் பையை அடுக்க, 

“ என்னோட டிராயிங் புக் உங்க கிட்ட இருக்கா ? “ என ஆவலாய் அவனை பார்த்து கேட்க, அவன் மருந்துக்கு கூட இவள் முகம் பார்க்காமல், தன் பையை அடுக்க, 

“ எடுத்திருந்திங்கனா கொடுத்துடுங்க…“ என முறைத்துக்கொண்டே  செந்தாமரை கேட்க, அவளை அசால்டாக பார்த்தவன், எழுந்து அவன் உயரத்திற்கு நிமிர்ந்து, குனிந்து அவளை பார்த்தவன்,

“ ஆமா எடுத்தேன். ஆனா கொடுக்க மாட்டேன். நீ என்ன வேணா செஞ்சுக்கோ. “ என சொல்லி முன்னால் நடக்க, முதலில் அதிர்ந்து பார்த்தவள், பின்பு அவன் பின்னே ஓடிக்கொண்டே, 

“ நான் ஒரு டவுட்ல தான் கேட்டேன், நிஜமா நீங்க தான் எடுத்திங்களா ? “ என மறுமுறையும் உறுதி செய்துக்கொள்ள கேட்க, ஒரே நொடி நின்றவன்,

“ ஆமா எப்படி உனக்கு டவுட் வந்துச்சு. “ என புருவம் சுருக்கி கேட்க, 

“ நீங்க தான தில்லாலங்கடி, அதான் டவுட் வந்துச்சு. “ என அப்பாவியாய் அவளுக்கு தோன்றிய பதிலை அப்படியே சொல்ல, அவன் ஏகத்துக்கும் அவளை முறைக்க, 

“ நீங்க தான என் பேக் பக்கத்துல உட்கார்ந்திருந்திங்க. அதான் கேட்டேன். “ என அவன் முறைப்பில் பதிலை மாற்றி சொன்னாள். 

    அழகன், நன்றாக கைகளை குறுக்காக கட்டியவன், 

“ தர முடியாது, நீ கீழ புரண்ட அழுதாலும் சரி, இல்ல உன் வீட்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணாலும் சரி, அவங்க வந்து கேக்கறதுக்குள்ள, உன் டிராயிங் புக் கிழுஞ்சு போயிருக்கும்.

 மொத்தமா காணாம போயிரும் “ என அடிக்குரலில் மிரட்ட, பேந்த பேந்த விழித்தாள் செந்தாமரை. 

“ போய் உங்க வீட்ல சொல்லு போ. “ என சொல்லி திரும்பி நடக்க, அவன் பின்னே ஓடி வந்தாள், 

“ என் டிராயிங் புக் எனக்கு வேணும். 

அத கிழிக்க கூடாது.

நான் என்ன செஞ்சா எனக்கு டிராயிங் புக் கிடைக்கும். ” என டீல் பேசினாள்.

    அழகன், நடந்துக்கொண்டிருந்தவன் அந்த நொடி அப்படியே நின்றான், அவன் இப்படி நிற்பான் என எதிர்பார்க்காமல் வந்த செந்தாமரை, வந்த வேகத்தில் மோதி கீழே விழ, அவள் ஊன்றிய உள்ளங்கைகள் நன்றாக சீராய்த்து விட்டது. அதை ஊதி துடைத்துக்கொண்டே எழுந்தவள், அப்போதும் விடாமல் அவன் முகத்தை பதிலுக்காக பார்க்க, அழகன் இரண்டு நொடி அவளை உற்றுப் பார்த்தான். 

 “ நாளைக்கு உங்க வீட்ல மட்டன், சிக்கன் எடுப்பிங்களா ? “ என சம்பந்தமில்லாமல் அழகன் கேட்க,

“ சன்டே மட்டும் தான் எடுப்போம். நாளைக்கு சாடர்டே, அம்மாக்கு ஸ்கூல் இருக்கு, அதனால செய்ய டைம் இருக்காது. “ என செந்தாமரை நீண்ட விளக்கம் தர, 

தாடையை ஒற்றைக்கையால் தேய்த்தவன், “ சரி அப்போ நாளைக்கு நீ வெஜ் பிரியாணி கொண்டு வர, மதியம் என்கூட தான் உன் லஞ்ச். அதோ தெரியுதுல அந்த பெஞ்ச், அங்க வைட் பண்ற.

அப்புறமா உன் டிராயிங் புக் பத்தி யோசிக்குறேன். 

நாளைக்கு சாடர்டே தான, உனக்கு ஹாஃப் டே, அதனால பெல் அடிச்சதும் உன் பேக் எடுத்துட்டு பறக்காம, என்கூட கிரவுண்ட்ல தான் இருக்க.” என கட்டளை மேல் கட்டளையிட்டான் அழகன். 

“ வெஜ் பிரியாணி உங்களுக்கு கொண்டு வரேன், ஆனா ஆஃப்டர்னூன் இருக்க முடியாது. 

நான் வீட்டுக்கு போகணும். பெரியப்பா தேடுவாங்க. “ அழகனிடம் தப்பிக்க, தனக்கு தெரிந்த காரணத்தை சொல்ல,

“ அப்போ சரி, உன் டிராயிங் புக் மறந்துடு.” என திரும்பி வேகமாய் அவன் நடக்க, இப்போது ஓடிப் போய் அவன் முன்னே கைகளை நீட்டி மறித்தவாரு நின்றாள்.  

“ சரி இருக்கேன் “ என தலையாட்டி ஒப்பந்தம் போட்டாள். 

“ இப்போ மட்டும் எப்படி சொல்ற, என்ன ரீஸன் சொல்லுவ வீட்ல ? “ என ஒற்றை புருவம் உயர்த்தி தெனாவெட்டாய் அழகன் கேட்க,

“ நாளைக்கு ஃப்ளவர் அக்காக்கு, உங்களுக்கு எல்லாம் ஃபுல் டே தான, அதனால அக்கா கூட ஈவினிங் வருவேன்னு சொல்றேன் . “ என விடை கண்டுபிடித்த மகிழ்வில் புன்னகையுடன் செந்தாமரை சொல்ல,

“ பரவால, கரெக்ட்டா ரீஸன் கண்டுபிடிச்சு வச்சிருக்க, 

அது சரி நீ என்னைய விட பெரிய தில்லாலங்கடினு மறுபிடியும் ப்ரூவ் பண்ற. “ என நக்கலாய் அழகன் சொல்ல, செந்தாமரையின் மலர்ந்த முகம் கூம்பி விட்டது.  

“ நாளைக்கு டைம்க்கு வந்து சேரு. “ என அதட்டி விட்டு சென்று விட்டான். 

‘ இவனுக்கு என்னலாம் செய்ய வேண்டி இருக்கு, காட்டு பைய, என் டிராயிங் புக் மட்டும் என் கைக்கு வரட்டும், அப்புறம் உன்ன பார்த்துக்குறேன். ‘ 

என நினைத்தவள், என்ன செய்யலாம் என யோசித்தபடி வகுப்பிற்கு சென்றாள்.

Advertisement