Advertisement

மலர் தாமரையின் தாடையை பிடித்து கொஞ்சுவதும் அதை தாமரை தட்டிவிடுவதுமாக இருவரும் செல்வது அழகனுக்கு தெரிய, ஒரு புன்னகையுடன் இரு பக்கமும் தலையசைத்து அவனது வகுப்பிற்கு கிளம்பி சென்றான். 

     வகுப்பு ஆரம்பிக்கும் முன் எல்லா பிள்ளைகளும் ஒழுங்காக வந்திருக்கிறார்களா என அவர்களது சட்டை, பாண்ட், சாக்ஸ், ஷூ, நகங்கள் என ஒவ்வொன்றாக அழகன் லீடர் என்ற முறையில் சரி பார்க்க, ஆசிரியர் வந்ததும், 

“ என்ன அழகா எல்லார்த்தையும் செக் பண்ணிட்டியா ? “ என கரும்பலகையில் பாடத்தின் தலைப்பை எழுத்திக்கொண்டே கேட்க, 

“ பண்ணிட்டேன் சர். ரெண்டு பேர் ஷூ போடல, இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் பீரியட் இருக்குனு மறந்துட்டாங்களாம், அப்புறம் ரெண்டு பேர் நெய்ல்ஸ் கட் பண்ணல, மூனு பேர் ஐடி எடுத்துட்டு வரல. “ என வரிசையாக அடுக்க,

“ நீ தான லீடர், சொல்லு இவங்கள என்ன பண்ணலாம். “ என இவனையே அவர் கேட்க, “ கிரவுண்டல த்ரீ டைம்ஸ் ஓட விடலாம் சர். “ என இவன் சொல்ல, 

“ சரி உங்க லீடர் சொல்ற மாதிரி, எல்லாரும் போய் ஓடிட்டு வாங்க, அதுவும் முத பீரியடே இப்படி பண்றிங்க டா எல்லாரும். கிளம்புங்க. “ என அலுத்துக்கொண்டு ஆசிரியர் சொல்ல, அழகனும் சேர்ந்து வெளியில் சென்றான். 

அவன் செல்வதை பார்த்து புருவம் சுருக்கியவர், 

“ அழகா நீ ஏன் வெளிய போற ? “ என கேட்க, 

“ ஐடி மறந்த மூனு பேர்ல நானும் ஒருத்தேன் சர் “ என அசடு வழிய புன்னகையுடன் சொல்ல, மொத்த வகுப்பும் சிரித்தது ஆசிரியர் உட்பட, அழகன் சிரித்தாலும், 

‘ ஏ பச்ச மொளகா உன்னால கிளாஸ் என்னைய பார்த்து சிரிக்குது. பார்த்துக்குறேன் உன்ன. ‘ என நினைத்தது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. 

     அழகனுக்கு நன்றாக நினைவிருந்தது அவன் வீட்டிலிருந்து கிளம்பிய போது ஐடி கார்ட் எடுத்து வைத்தது, வகுப்பிற்கு வந்ததும் முதல் ஜிப்பை திறந்து தேட, ஐடி கிடைக்கவில்லை. மொத்த பையையும் தலை கீழாய் கொட்டித்தேட, அதை மட்டும் காணவில்லை. திரும்ப திரும்ப கலவரமாய் தேட, கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவனது பையில் சின்ன ஓட்டை கூட இல்லை. அவனது பர்ஸ் பத்திரமாக இருக்க, இது மட்டும் எப்படி காணமல் போகும் என யோசித்தவனுக்கு பல்பு எரிய , 

‘ குட்டி பிசாசு, என் ஐடி சுட்டுடுச்சு. ‘ என ஒரு நொடி பல்லை கடித்தவன், அடுத்து நொடி, 

‘ ஐடி தேடுற பிரச்சனையில ஹோம் வொர்க் கம்ப்ளீட் பண்ணாம விட்டுட்டோமே. 

எங்க இந்த மலரு. ‘

 என கண்களை சுழட்ட, அவள் இன்னும் வகுப்பிற்கு வரவில்லை. அங்கே தாமரை மலரை கெஞ்ச வைத்து நேரம் கடத்திக்கொண்டிருந்தாள். எங்கே அக்காவை விட்டால், அவன் வீட்டு பாடம் முடித்து விடுவானோ என நினைத்து அக்காவிடம் சிலுப்பிக்கொண்டு பேசாமல் கெஞ்ச விட்டுக்கொண்டிருந்தாள். 

‘ ரைட்டு விடு.

இன்னைக்கு மூனு தடவ கிரவுண்ட்ல ஓடிருவோம். 

ஃபர்ஸ்ட் பீரியட் மேத்ஸ். ஹோம் வொர்க் வேற பண்ணல, எப்படியும் அதுக்கு இம்பொசிஷன் கொடுப்பார் சர். 

இந்த கிரவுண்ட் பனிஷ்மெண்ட் எடுத்துக்கிட்டா, இம்பொசிஷன்ல இருந்து தப்பிச்சுடலாம்.’ என கூலாக ஒரு முடிவை எடுத்தவன், அதை செயல் படுத்திவிட்டான். 

இது தான் அழகன். 

பிரச்சனைகள் பற்றி எல்லாம் கவலை கிடையாது. எது வந்தாலும் அதற்கு தீர்வு ஒன்றை கண்டுபிடித்து, அது தண்டனையாக இருந்தாலும் அதை சிறியதாகி, தனுக்கு ஏதுவாக்கி, அதை செயல்படுத்தும் வித்தகன். 

      அழகனுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர். அதில் பரமுவும் அடக்கம். அனைவரும் கிரவுண்ட்டில் ஓட, 

“ அழகா என்னடா இப்படி பண்ணிட்ட, நீ தான லீடர், பக்கத்து கிளாஸ்ல ஐடி வாங்கி திருப்பி வச்சு போடுக்க வேண்டியது தான, நீயும் எதுக்கு ஒத்துகிட்ட ? “ என ஒருத்தன் கேட்க,

“ அப்படி இல்ல டா, நானே உங்கள சொல்லிட்டு, நான் மட்டும் அப்படி முடியாது. 

இதெல்லாம் நம்ப வரலாறுல பொறிக்கபட வேண்டிய சம்பவம் டா “ என கிரவுண்டில் ஓடிக்கொண்டே கிடைத்த சந்தர்ப்பத்தில் கெத்தாக தன் இமேஜை உயர்த்த, இதனை கேட்டவன் 

“ நிஜமாவா அழகா, நீ க்ரேட் டா. “

 என அப்பாவியாய் நம்பிக்கொண்டு ஓட,  பரமுவோ

“ நீ பொழச்சுக்குவ டா “ என சொல்லிக்கொண்டே அழகனை லேசாக கட்டியனைத்து விடுவித்து சிரிப்புடன் ஓட, அழகன் புன்னகைத்துக்கொண்டான். 

‘ இதெல்லாம் யோசிக்க மாட்டோமா டா.  

மேத்ஸ் ஹோம் வொர்க் மட்டும் முடிச்சிருந்தேன், இந்நேரம் நான் ஏன் டா ஓட போறேன். 

ஆனாலும் நம்ப என்ன சொன்னாலும் நம்பறத்துக்குனு நாலு பேர் இருக்கத்தான் செய்றான். 

இத இப்படியே மெயின்டய்ன் பண்ணிறணும் டா அழகா. ‘

என மைண்ட் வாய்ஸ்‌ ஓட, இடது கையால் தலைசிகையை சிலுப்பி சீர்படுத்திக்கொண்டே ஓட, இந்த அரும் பெரும் காட்சியை ஜன்னல் வழியே பார்த்த தாமரை, மனதில் ஒரு குத்தாட்டமே போட்டுக்கொண்டிருந்தாள்.

    பிள்ளைகள் வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருக்கும் வரை பொறுமையாக ஓடினார்கள். அதுவும் கிரவுண்டில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் இருக்கவும் ஓடினார்கள், இல்லையேல் அங்கேயே அமர்ந்து பேசி முடித்து, முகத்தில் ஆங்காங்கே தண்ணீர் விட்டு வேர்வை என பெயர் பண்ணி வகுப்பு வந்து சேர்ந்திருப்பர். இறுதியாக வேர்த்து விறுவிறுத்து வகுப்புக்குள் நுழைய கணித ஆசிரியர் வெளியே செல்லும் முன் அடுத்து வந்த சமூகவியல் ஆசியரிடம் நடந்ததைச் சொல்லி சிரிக்க, 

“ அழகா…லீடரா இருந்துக்கிட்டு நீயே மறக்கலாமா. 

நீ என்ன பண்ற என் கிளாஸ் முடியர வரை பெஞ்ச் மேல நிக்குற. “ என அவர் புன்னகையுடன்  கட்டளையிட, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். 

அழகன் முகத்தில் சிறு அதிர்வு அப்பட்டமாய் தெரிய, இதனை கேட்டு வகுப்பு மொத்தமும் சிரிக்க, கொஞ்சம் தெளிந்தவன், நன்றாக சிரித்துக்கொண்டே, 

“ சர் ஆசப்பட்டுடிங்க, 

அத நான் நிறைவேத்த மாட்டேனா. “ 

என விளையாட்டாய் சொல்லிக்கொண்டே ஷூவை கழட்டி விட்டு பெஞ்ச் மீது ஏறி புன்னகையுடனே நிற்க, பிள்ளைகள் எல்லாம் அவனை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க, இவனும் சிரித்துக்கொண்டே நின்றிருந்தான்.

இதுவும் அழகன் தான். 

   எது நடந்தாலும், அது பாராட்டோ தண்டனையோ எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வான். அவனுக்கு பெரிய நட்பு வட்டமே இதனால் உண்டு. பகைமை பாராட்ட மாட்டான். 

ஆனால் இதற்கெல்லாம் ஒரே விதி விலக்கு செந்தாமரை மட்டுமே. 

     அன்று அந்த வகுப்பு முடியும் வரை பெஞ்சில் நின்றவன் பாடம் நடத்திக்கொண்டே ஆசிரியர் கேட்ட கேள்விக்கெல்லாம் கலகலப்பாக பதில் சொல்லி இனிமையாக நிறைவு செய்திருந்தான். 

ஆனால் அவன் வகுப்பு பிள்ளைகளோ அன்றிலிருந்து அவனை மேடை மீது ஏறி நின்று முதலில் அவன் சரியாக இருக்கிறானா என்பதை பரிசோதித்து விட்டே தங்களை பரிசோதிக்க வேண்டும் என சொல்ல, அவனும் தினமும் மேடை மேல் ஏறி டான்ஸ் அடி கொண்டே “ இதான் என் ஷூ, டை, நெய்ல்ஸ், ஐடி. “ என விளையாட்டாய் உற்சாகமாய் ஒவ்வொன்றாய் பாடிக்கொண்டே விளக்க, மொத்த வகுப்பும் சிரிக்கும். அதெல்லாம் அவன் விரும்பி செய்வது தான். அவன் எதற்கும் கவலை எல்லாம் கொள்வது இல்லை. ‘ இதான் வேணுமா உங்களுக்கு, அத என் ஸ்டைல்ல செஞ்சுட்டு போறேன். ‘ என்பதாய் தான் இருந்தது.

போத குறைக்கு நண்பர்கள் வேறு அந்த சம்பவத்தை பற்றி ஏதாவது இவனை கிண்டல் செய்து வைப்பர். அதெல்லாம் இவனை ஒன்றும் பாதிக்கவில்லை.     

ஆனால் ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. இதுவே இவன் உண்மையில் ஐடியை மறந்திருந்தாலும், அவன் இப்படி தான் எதிர்க்கொண்டிருப்பான், ஆனால் செந்தாமரை இப்படி செய்து அதனால் மாட்டியதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

    தண்டனைகள் எல்லாம் அவன் பொருட்டில் சர்வ சாதாரணம். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. கிண்டல் பேச்சுக்களும் அப்படியே, ஆனால் எத்தனை சொன்னாலும் செய்தாலும் மீண்டும் மீண்டும் தன்னிடம் முட்டும் தாமரையின் சேட்டையை மட்டும் அடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பிரதானமாய் வந்தது. 

     இவ்வாறு எல்லாம் நினைத்து அமர்ந்தவன் கண் முன் தான் இப்போது தொலைவில் தாமரை கேண்டீன் அருகில் நிற்பது தெரிய, அதனை பார்த்தவன் அருகில் அமர்ந்த பரமுவின் காதில் ஏதோ காரணம் சொல்லி கேண்டீனை நோக்கி ஓடினான். 

    கேண்டினில் கூட்டம் குறைய இப்போது தான் தாமரையின் முறை வந்தது. தாமரை என்ன வாங்கலாம் என யோசிக்க, முதலில் அவள் கண்ணில் பட்டது சமோசா. அடுத்தது குடல் அப்பளம். இரண்டையும் வாங்கி சற்று தள்ளி இருந்த கல் மேடையில் அமர்ந்து பேப்பர் தட்டிலிருந்த சமோசாவை மேடை மீது வைத்து, குடல் அப்பளத்தை பிரித்து ஒவ்வொரு விரலின் நுனியிலும் சொருகி, அதை ஆசை தீர பார்த்து அமர்ந்திருந்தாள். 

   செந்தாமரை ஆள்காட்டி விரலில் இருந்த அப்பளத்தை பார்த்து சப்பு கொட்டியவள் அதை சுவைக்க உதட்டருகே எடுத்துப்போக, அவள் கையை பட்டென பிடித்த அழகன் அந்த விரல் அப்பளத்தை உருவி எடுத்து தன் வாயில் போட,  

 “ ஹேய் அது என் அப்பளம் “ என சிலிர்த்தெழுந்து இரட்டை குதிரைவால் ஆட கேட்க, அவன் அடங்காமல் அவள் அருகில் இருந்த சமோசாவையும்  எடுத்து ஒரே வாயில் உள்ளே தள்ளி அவளை எகத்தாளமாய் பார்த்துக்கொண்டே ருசித்து மெல்ல, அதிர்ந்து அழகனை பார்த்தாள் செந்தாமரை. 

                

   

    

Advertisement