Advertisement

      அழகன் கபடி டீம்யில் சேர்ந்து ஒரு வாரம் சென்றிருந்தது. எல்லாரும் கபடி பிரக்டிஸில் பிசியாக இருக்க, இவன் வேர்த்த டி-ஷர்ட்டுடன் கிரவுண்ட்டில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.

      ஒரு வாரம் முன் செந்தாமரை பார்த்த வேலையில் இவன் லீடர் வேலை சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருந்தது. அழகன் அதை நினைத்து கட கட வென தண்ணீரை காலி செய்தவன், இறுதியாக முகத்திலும் ஊற்றியவாரு தன் தகிப்பை தனிக்க, முகத்தை ஒற்றை கையால் அழுந்தி துடைத்து கண் திறந்தால், மிக தூரத்தில் கேண்டீன் இருக்கும் இடத்தில் முதுகில் மாட்டியே பையுடன் துள்ளிக்கொண்டு வந்தாள் செந்தாமரை.

       அழகன் அவளை பார்த்து எண்ணெயில் போட்ட வடையாய்  வெந்துகொண்டிருக்க, பரமுவும், சக்தியும் பிரக்டிஸ் முடிந்து வந்தவர்கள் அழகன் அருகில் ஆளுக்கு ஒரு பக்கமாய் அமர, 

“ லீடரு, உங்க திங்க்ஸ் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிக்கிட்டிங்களா பாருங்க…அப்புறம் கிளாஸ் முன்னாடி அசிங்க படாதிங்க. “ என பரமு சொல்லி எக்கி அழகன் முகத்தின் முன்னே சக்தியிடம் ஹை-பை கொடுக்க, 

“ ஆமா டா…ஹா…ஹா…ஹா…அன்னைக்கு இவன் முகத்தை பார்க்கணுமே…என்ன ஒரு ஒளிவட்டம்…ஹா…ஹா…” என சக்தி ஒரு படி மேல போய் அப்படியே பின்னால் படுத்து சிரிக்க, பரமுவும் குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரை ஏறும் அளவு சிரித்தான்.

   இத்தனை நடந்தும் முகத்தில் ஒன்றும் காட்டாது தூரத்தில் தெரிந்த செந்தாமரையை பார்த்து உள்ளே காய்ந்தபடி அமர்த்திருந்தான். யாராவது அவன் முகத்தை பார்த்தால் சாதாரணமாய் உட்கார்த்திருப்பது போல் தான் தெரியும், ஆனால் உள்ளே செந்தாமரைக்கு என ஒரு பிளான் ஓடிக்கொண்டிருந்தது. 

      ஒரு வாரம் முன் பள்ளிக்கு வரும் மண்சாலையில் இவன் சைக்கிளில் வர, இவனை அடிக்கடி திரும்பி பார்த்தபடி வந்த செந்தாமரை மலர்விழியிடம் ஏதோ காதில் கிசு கிசு என்று சொல்ல, மலரும் தலையாட்டினாள். சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த அழகன் இந்த காட்சியை பார்த்து அலர்ட் மோட்டில் வேகமாக ஓட்ட, சரியாக மலர் பக்கம் வரும் சமயம், 

“ அழகா…ஏ அழகா…” என மலர் கத்தி அழைக்க, சைக்கிளை நிறுத்தி அவளை பார்க்க, சிரித்த முகமாய் இவனை நோக்கி வந்தவள், 

“ அழகா இன்னைக்கு தாமர நிறைய புக்ஸ் எடுத்து வந்துருச்சாம்…அதுக்கு தூக்க கஷ்டமா இருக்காம். உன் சைக்கிள் பின்னாடி அவ பேக் மட்டும் வச்சுக்கிறியா. 

கொஞ்சம் புக்ஸ் அவ கைல எடுத்துக்குவா, அதனால உனக்கும் நிறைய வைட் தெரியாது. உன் பேக்கும் பின்னாடி இருக்குல அது பக்கத்துல வச்சிக்கிட்டா போதும். “ என அப்பாவியாய் சொல்ல, அழகன் உடனே ஒன்றும் சொல்லாமல் முன்னால் திருப்பி பார்த்தான். அண்ணன் அருகில் இருந்தால் அவன் சைக்கிளில் இந்த லக்கேஜ்ஜை ஏற்றி விடலாம் என நினைக்க, ராஜா மிக மிக தொலைவிற்கு சென்றுவிட்டான். இது இல்லாமல் நிறைய மாணவர்கள் அவ்வழியே சென்றுக்கொண்டிருக்க, இவன் கத்தி கூப்பிட்டாலும் அவன் திரும்புவான் என தோன்றவில்லை. 

       அழகன் யோசனையாய் முன்னே பார்த்திருக்க, மலர் முகம் வாடிவிட்டது, 

“ சரி அழகா…உனக்கு பின்னாடி வைட் நிறையா இருக்கு போல, அதான் யோசிக்குற. நீ கிளம்பு. நான் தாமரைய பார்த்துக்குறேன். “ என சொல்லி வாடியே முகத்துடன் திரும்பி செல்ல, அழகனுக்கு தாங்கவில்லை. 

     மலர் எல்‌கே‌ஜியில் இருந்து தோழி, மிகவும் பிடித்த தோழி, இவன் ஏதாவது உதவி வேண்டும் என்று சொன்னாலும் அவள் நிச்சயம் செய்வாள். அவனும் அப்படியே. இப்போது தாமரைக்காக வந்து கேட்க, 

“ ஏ மலரு.. “ என அழகன் கூப்பிட, மலர் திரும்பி இவனை பார்க்க, 

“ கொண்டு வர சொல்லு…ஸ்கூல்ல வந்து சீக்கிரம் வாங்கிக்க சொல்லு. “ என சொல்ல, 

“ தாங்க்ஸ் அழகா “ என மலர்ந்த முகத்துடன் சொல்லிவிட்டு தாமரையிடம் ஓடி சென்று சொல்ல, தாமரையும் மலரும் அழகனிடம் வந்தவர்கள், அவன் சைக்கிள் பின்னால் பேக்கை வைத்து திறந்து சில புத்தகங்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, மாற்றதை பேகில் விட்டு நன்றாக நிறுத்திவைத்தனர்.

அழகன் தாமரையை சந்தேகமாக பார்க்க, அவள் இவனை கண்கொண்டும் பார்க்கவில்லை. தன் கையுண்டு புத்தகங்கள் உண்டு என ஒரு நன்றி கூட சொல்லாமல் முன்னே நடக்க, 

“ ரொம்ப தாங்க்ஸ் அழகா. “ என தாமரை தான் இருமுறை கூறிவிட்டு, தங்கையுடன் சென்று சேர்ந்து நடக்க துவங்கிவிட்டாள். 

‘ இவளே ஒரு லக்கேஜ்…இவளுக்கு ஒரு குட்டி லக்கேஜ். அத தூக்க கூட சத்து இல்லை. ‘ என தாமரையை உள்ளே வறுத்துக்கொண்டே சைக்கிள் ஓட்டி பள்ளிக்கு சென்றுவிட்டான். 

    தாமரையும், மலர்விழியும் பள்ளிக்கு வந்தவர்கள், நேராக சைக்கிள் ஸ்டாண்ட் செல்ல, அங்கே அழகன் சைக்கிளை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தான், அவனே கூட அவளது பையை இறக்கி வைத்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. 

முதல் காரணம் அவளது பையையை தொட்டால், ‘ இவன் தூக்கி என் பேக் பிஞ்சு போச்சு. ‘ என சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. இரண்டாவது  ‘ பேக் எடுக்கிறேன் ‘ என்று சொல்லி எடுக்க தெரியாதது போல் நடித்து சைக்கிளை கீழே தள்ளிவிட்டு விடுவாளோ என அலர்ட் மோட்டில் அப்படியே அமர்ந்திருந்தான்.  

“ தாங்க்ஸ் அழகா. “ என மூன்றாவது முறையாக மலர் சொல்ல, 

“ பரவால மலரு. 

இதுக்கு போய் எதுக்கு இத்தன தாங்க்ஸ்

நீ மேத்ஸ் ஹோம் வொர்க் சம்ஸ் போட்டியா. 

எனக்கு கொஞ்சம் தரியா, பாதி போட்டுட்டேன் பாதி தெரியல. 

இன்னைக்கு அதான் ஃபர்ஸ்ட் பீரியட், போடலைனா சர் ஏதாச்சும் சொல்வாரு.” 

என சைக்கிளை விட்டு இறங்காமல் மலரிடம் பேச்சை வளர்த்தான், செந்தாமரையை திரும்பியும் பார்க்கவில்லை. எங்கே பார்த்தால் ‘ என் பேக்கை உன் தூக்கிட்டு வர வச்சிட்டேன்…பார்த்தியா. ‘ என நக்கலாய் பார்ப்பாளோ என தோன்ற அவன் திரும்பவே இல்லை.

      மலரும் அழகனும் பிசியாய் பேசிக்கொண்டிருக்க, செந்தாமரை அவள் கைலிருந்த புத்தகத்தை எல்லாம் அடுக்கிக்கொண்டே, அழகனின் பையை பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒரு கை புத்தகத்தை அடுக்க, மறு கை அழகனின் பையில் முன்னிருந்த சின்ன ஜிப்பை மெல்லமாய் திறக்க, 

‘ உள்ளே என்ன இருந்தாலும் எடுத்துக்கணும். ரெண்டு நாள் நல்லா தேட்டட்டும், அப்புறம் கொடுக்கலாம். ‘ என நினைத்து உள்ளே கைவிட்டு தேட, முதலில் அகப்பட்டது அவனது பர்ஸ், அதை அப்படியே விட்டவள், வேறு பென், பென்சில், ஸ்கேல் ஏதாவது இருக்கிறதா என தேட, அகப்பட்டது ஒரு பொருள். அதை அப்படியே சுட்டவள், மகிழ்ச்சியாக எடுத்து தன் பையில் வைத்து, தன் புத்தகத்தையும் அடுக்கி மூடி எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டாள். 

“ எல்லாம் எடுத்து வச்சிட்டியா தாமரை.  நீயும் ஒரு தாங்க்ஸ் சொல்லு. “ என மலர் சொல்ல, 

அழகனை பார்த்து நன்றாக சிரித்துக்கொண்டே 

“ தாங்க்ஸ். “ என சொல்லியவள், மலரின் கை பிடித்து நிற்க, அழகனால் நம்ப முடியவில்லை. அவளை மேலும் கீழும் ஒரு பார்வைப் பார்த்தவன், 

“ இவ்ளோ புக்ஸ் எடுத்துட்டு வரணும்னு தெரியுதுல, அப்போ அதுக்கு ஏத்த மாதிரி சாப்பிடணும். 

இப்படி ஒல்லிக்குச்சியா இருந்தா ஆடி மாச காத்துல பறந்து போய் மரத்துல  சொருக்கிடுவ. 

தூக்கிட்டு வர புக்ஸ்க்கு ஈக்வல்லா சத்து இருக்கணும். “ என இவன் அவளை வார, மலரும் அவனுடன் சேர்ந்து கொண்டு, 

“ நல்லா சொல்லு அழகா. வீட்ல ஒழுங்காவே சாப்பிட மாட்டா, டெய்லி சித்தி திட்டுவாங்க. மூனு இட்லி வச்சா ரெண்டு தான் சாப்பிடுவா. 

கீரை சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிப்பா, இப்போ தான் கீரை சாப்பிட ஆரம்பிச்சுருக்கா. இனிமே தான் ஒவ்வொன்னா கொடுத்து பழக்கணும். “ என அக்காவின் அக்கறையாய் மலர் சொல்ல, தாமரை மலரை முறைத்து அவளது கையை பின்னாலிருந்து கிள்ளினாள். 

“ ஸ்‌ஸ்‌ஸ் ஆஆஆ…பாருடா அழகா என்னைய கிள்றா. “ என கையை தேய்த்துக் கொண்டே அதற்கும் மலர் கம்ப்ளைண்ட் வாசிக்க, அழகன் நக்கலுடன் தாமரையை ஒரு பார்வை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, அவனை பார்த்து முறைத்தவள்,

“ நான் என் கிளாஸ்க்கு போறேன். “ என சொல்லி திரும்பி நடக்க, 

“ அவ கோச்சுக்கிட்டா போல டா. நீ கிளாஸ் போ நான் வந்து மேத்ஸ் நோட் தரேன். “ என சொல்லி தாமரை பின்னால் ஓடினாள் மலர். 

    

Advertisement