Advertisement

அழகன் உட்ச பட்ச கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். இப்போது இவள் யார் என கொஞ்சம் பிடிபடுவதாய் இருந்தது. மலர்விழியின் தங்கையாய் இருக்குமோ என நினைக்க, அவள் சாயல் அப்படியே இருக்க, தன்னை முயன்று அடக்கியவன் சுவற்றில் இருந்து குதித்து, இவள் அருகில் மெல்ல வர, இவள் அசையாமல் அவனை முறைத்து தான் நின்றிருந்தாள். 

“ உங்க அப்பாவுக்கு முன்னாடியே எங்க அப்பா தான் ஜெய்சுருக்கார். அப்போலாம் நீ சின்ன பாப்பவா இருந்துருப்ப, அதான் உனக்கு தெரிஞ்சுருக்காது. அதனால உங்க அப்பா தான் ஃபர்ஸ்ட் புஸ்னு ஆயிட்டார்.  

அதுக்கு அப்புறம் எங்க அப்பா எலக்ஷன்ல நிக்காததால தான் உங்க அப்பா அப்போ வின் பண்ணாரு. 

இப்போ என்ன ஆச்சு உங்க அப்பா தோத்துட்டார்ல… 

நாங்க விட்டுக்கொடுத்ததால ஜெய்சிட்டு, எங்க கிட்டவே ஓவரா பேசுரியா…

ஆளே பென்சில் மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு…

ஓடி போ..ஓடி போ..”

 என அவன் கையில் வைத்திருந்த சுருட்டிய பேப்பரால் அவள் தோளில் அடிப்பது போல் வேகமாய் வர, தன் அப்பாவை எப்படி சொல்லிவிட்டான், அதுவும் விட்டுக்கொடுத்து முன்பு வெற்றி பெற்றதாய் சொல்ல, கோபம் ஒரு பக்கம், என்ன பதில் சொல்வது என தெரியாதது ஒரு பக்கம் என எல்லாம் சேர்ந்து அவனை பார்த்தவள் பலம்கொண்ட மட்டும் அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். 

    அவள் எதிர்பாராமல் தள்ளினாலும் கொஞ்சம் தடுமாறியவன் கீழே விழாமல் சமாளித்து நின்றுவிட்டான். ஆனால் சுற்றி நின்ற நண்பர்கள் சிரிக்க, அவனும் விளையாட்டு போல் வெளியில் சிரித்து வைத்தானே தவிர, இன்னொரு முறை அவளை பார்த்தால், அப்போது அவளை கவனித்துக்கொள்ளலாம் என அவனுள் முடிவு செய்து விட்டான்.    

   அன்று வீட்டில் வந்து செந்தாமரை அழகன் பெயர் தெரியாததால் ஏதோ எதிர்கட்சி வீட்டு பையன் என்ற அளவில் மலர்விழியிடம் சொல்ல, அவள் அகிலாவிடம் சொல்ல, அவர் செல்வத்தை பிடித்துக்கொண்டார். 

“ நீங்க கட்சி விஷயம் எல்லாம் உங்க கடையோட முடிச்சுக்கோங்க.வீட்ல இனிமே யாரும் உங்கள பார்க்க வர கூடாது. அப்படியே வந்தாலும் வீட்டுக்குள்ள விட மாட்டேன் அப்படியே திண்ணையில வச்சு பேசி எந்த விஷயமா இருந்தாலும் முடிச்சுகங்க. வேற விஷயமா இருந்தா மட்டும் தான் உள்ள விடுவேன். உங்க கட்சி விஷயம்னா வெளியவே வச்சுக்கோங்க. “ என அழுத்தமாய் சொல்லிவிட, செல்வமும் சரி என்று ஒத்துக்கொண்டார். அன்றிலிருந்து கட்சி ஆட்கள் வீட்டுக்குள் வருவதில்லை. எல்லாம் திண்ணையிலே முடிந்துவிடும். 

      அது மட்டும் இல்லாமல் செல்வம் தாமரையை அழைத்து மடியில் அமர்த்தி, 

“ கண்ணு, அந்த கட்சிகாரவரு பெருவுடையன் ஒருத்தரு, ரொம்ப பெரிய மனுஷரு மா. என்னைய விட ரொம்ப வருஷமா இந்த ஊருக்கு நல்லது செய்றாரு. “ 

என சொல்ல, தலை நிமிராமல் அப்பாவின் சட்டை பட்டனை திருகிக்கொண்டிருந்தாள். யார் எத்தனை பெரிய ஆளாய் இருந்தால் என்ன, அவளுக்கு அவள் அப்பா பெரியது தானே, அதனால் உம்மென்று உட்கார்ந்திருந்தாள்.  

அவள் முகத்தை பார்த்தே மகளின் எண்ணம் உணர்தவர் மென்மையாய் மகளை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு,

 “ உனக்கு உன் ஸ்கூல் எவ்ளோ பிடிக்கும். “ என செல்வம் மெல்ல கேட்க, 

“ ரொம்பபப..” என கையை விரித்து தாமரை ஆர்வமாக சொல்ல, அவள் தலையை வாஞ்சையாய் வருடிக் கொடுத்தவர்,  

“ இன்னைக்கு நீ படிக்குற ஸ்கூல் அவர் பதவில இருக்கப்போ கட்டுனது தான். முதல பசங்களுக்குனு தான் ஸ்கூல் இருந்துச்சு.

அவர் தான் பொண்ணுகளுக்கும் சேர்த்து அத புதுசா கட்டுனார். 

நான் வேற கட்சில இருக்கேன்னு பார்க்கம, உங்க அம்மாவுக்கு வேலை கிடைக்க அவர் ஹெல்ப் பண்ணார் மா. 

இனிமே யாராவது அவர பத்தி தப்பா சொன்னா, கண்டுக்காத, அவர் ரொம்ப நல்லவரு தங்கம். “ என பொறுமையாக சொல்ல, அமைதியாக கேட்டுக்கொண்டவள் தலையை குனிந்திருந்தாள்.

“ என்ன மா ? “ 

“ சரி பா, 

ஆனா இன்னைக்கு அந்த பையன் யாரோட பையனு எனக்கு தெரியாது, ஆனா ஆப்போஸிட் சைட் கட்சி பையன் தான் தெரியும். அந்த பையன பார்த்ததும் கோபம் வந்துடுச்சு. நான் சண்ட போட்டுட்டேன். 

நாளைக்கு அவங்க அப்பா வந்து நம்ப அம்மா வேலைய புடுங்கிடுவாராப்பா ? “ என கவலையாய் அவரை கேட்க, பெற்றோர்கள் இருவரும் அவள் கேள்வியில் புன்னகைத்தனர்.

“ என்னப்பா ரெண்டு பேரும் சிரிக்கிறிங்க. உங்களுக்கு பயமா இல்லையா ? “ என இன்னும் கவலையாய் கேட்க, அவள் தலை உச்சியில் முத்தமிட்டவர், 

“ அப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க  மா. நீ இதுக்கெல்லாம் பயப்பட கூடாது. பொம்பள புள்ள எப்போவும் தைரியமா இருக்கணும். அதுக்குனு இப்படி அவன தள்ளிவிட்டலாம் கூடாது. அவனுக்கு அடி பட்டடும்ல  “ என செல்வம் சொல்ல,   

“ சரி ப்பா நான் இனிமே பார்த்துக்குறேன் “ என சொல்லி அவர் மடியில் இருந்து கீழே இறங்கியவள் மேல ஓட, பின்பு ஏதோ யோசித்தவள் அவரிடம் திரும்பி ஓடி வந்தாள்,

“ அப்பா அவன் வீட்டுக்கு போய் என்னைய பத்தி சிரிப்பானா ? “ என மூக்கை  சுருக்கி கேட்க, 

பெற்றோர்கள் ‘ இல்லை ‘ என சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அப்போதைக்கு அவள் சமாதானமாகி அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

     இங்கு அழகன் வீட்டிலோ, வள்ளி அவனை உண்டு இல்லை என செய்துக்கொண்டிருந்தார். பரமு வழியே வீட்டில் விஷயம் தெரிய, உர்ரென அழகன் அவர் முன் நின்றுக்கொண்டிருந்தேன். பரமுவுக்கும் தாமரையின் பெயர் தெரியாததால், ஏதோ ஒரு சின்ன பெண், அவளிடம் சண்டை என்ற அளவில் வீட்டில் தெரியும்.

 “ நான் உன்ன இப்படி நினைக்கவே இல்ல கண்ணு…ஒரு பொம்பள புள்ள கிட்ட இப்படியா நடந்துப்பா…அதுவும் ரொம்ப சின்ன பொண்ணு.

எவ்ளோ பயந்துருக்கும். உனக்கும் கூட ஒரு அக்கா இருந்தா தெரிஞ்சிருக்கும். இந்த ராஜாவும் பையனா போய்ட்டான்.  “ என அவர் அங்கலாய்ப்பாய் சொல்ல, சம்பந்தமே இல்லமல் ராஜாவின் பெயர் நடுவில் வர, டி‌வி பார்த்துக்கொண்டிருந்தவன் ‘ இவனுக்காக நான் ஏன் பொண்ணா பொறக்கணும். ‘ என நினைத்துக்கொண்டிருந்தான். 

வள்ளி பேசியதை கேட்டு வாய்க்குள் அழகன் சிரிக்க, 

“ ம்மா இவன் சிரிக்குறான் மா. “ என தம்பியை போட்டுக்கொடுக்க, 

“ சிரிக்குறியா கண்ணு நீ, குழந்தைய போய் பயபடுத்திட்டு வந்துருக்க.

இதுவே என்னைய யாராவது இப்படி பேசுனா நீ இப்படி தான் சிரிப்ப போல… நீ என்கூட பேசாத. “ என சொல்ல, 

“ அவ குழந்தையா…எவ்ளோ திமிரா பேசுனா…பச்ச மொளகா. “ என சொன்னவன், வள்ளி அவனிடம் பேசாமல் அறைக்குள் செல்ல, அவர் பின்னே சென்று அவரை கட்டிக்கொண்டான். அவர் இவன் கையை பிடித்து எடுத்து விட்டு அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டார். சாற்றிய கதவை ஏக்கமாய் பார்த்து நின்றிருந்தான் அழகன்.

இது எல்லாம் வீட்டினர் முன் தான் நடந்துக்கொண்டிருந்தது. அப்போது  இரவு உணவு முடிந்து டி‌வி பார்த்துக்கொண்டிருந்தனர்.  பெருவுடையப்பன் அமைதியாக எல்லாம் பார்த்திருந்தவர், மெதுவாக எழுந்து துண்டை  தோளில் போட்டவர், 

“ அதிகமா சாப்பிட்டேன், கௌரி நான் வெளிய கொஞ்சம் நடந்துட்டு வரேன். “ என்றவர், “ அழகா அப்பாவுக்கு துணைக்கு நீ வரியா ? “ என முகம் பார்க்காமல் மகனிடம் கேட்க, அவனும் ஆசையாய் ஒத்துக்கொண்டான்.  

   அப்பாவும் மகனும் வெளியில் நடந்தனர், அழகனின் கை பிடித்து பெருவுடையப்பன் நடக்க, அவனுக்கு இரவு நடை மிகவும் ரம்மியமாய் இருந்தது. எட்டாவது படித்தாலும் அவருக்கு அவன் இன்னும் சின்ன குழந்தை தான். நிறைய வருடங்கள் கழித்து பிறந்த மகன் என்று எப்போதும் அவன் மீது மிகுந்த அன்பு உண்டு. அவனுக்காக அவர் அரசியலில் இருந்து மிகவும் தள்ளி நின்றார். மகன் பிறந்ததிலிருந்து அவனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டுமென்றே ஆசை அவருக்கு, இப்போதும் அரசியலின் கடைசி படியில் தான் நின்றுக்கொண்டிருக்கிறார். எல்லாம் அவனுக்காக. ஆனால் கட்சிக்காரர்களும் ஊர் மக்களும் இவரை விடுவதாய் இல்லை. அதனால் எப்படியோ இவரால் முற்றிலும் விலக முடியவில்லை. 

   அழகனுக்கு அவனது அப்பா என்றால் அத்தனை பிரியம். எப்போதும் ஒரு பார்க்கவியலா ஒரு நேசம் இருவருக்கு நடுவிலும் உண்டு. சிறுவயதிலிருந்து ஒரு வார்த்தை இது வரை கடுமையாய் சொன்னதில்லை அவனிடம், பாண்டியன் தான் கொஞ்சமாவது கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று இரு பிள்ளைகளிடமும் சிறிது அதிகாரமாய் நடப்பார். ஆனால் இவர் அப்படி இல்லை, எதுவாயினும் பிள்ளைகளுடன் பொறுமையாக உரையாடுவார்.  

“ அழகா அந்தா தூரத்துல தெரியுதுல டாங்க். அது எதுக்கு சொல்லு. “ என மெல்ல பேச்சை ஆரம்பிக்க, 

“ அது தெரியும் பா, எல்லாம் எதிர் கட்சி ஆளுங்க கட்டுனது, இது எத்தன தடவ சொல்லிட்டிங்க, கேட்டா ஊருக்குனு குடி தண்ணி சேமிப்புக்கு அவங்க நல்லது செஞ்சாங்க, அது இதுனு சொல்லுவிங்க. “ என இவன் எடுத்ததும் முடிக்கும் படி பேச, 

“ பொறுமையா சொல்றத கேளு. “ என அவர் தன்மையாக பேச   

“ அப்பா பிளீஸ் அந்த சின்ன பொண்ணகிட்ட சண்ட போட்டுட்டேன்னு அவங்க அப்பா கட்சி பத்தி என்கிட்ட சொல்லாதிங்க. நீங்க தலைவரா இருந்தப்போவும் நிறைய செஞ்சிருக்கிங்க, அதுவும் எனக்கு தெரியும். 

நீங்க செய்யாதத எதுவும் பெருசா அவங்க செஞ்சிடல.

அவங்களுக்கு சப்போர்ட்டா எதுவும் பேசாதிங்கப்பா. “ என இவன் முகம் சுருக்க, பெருவுடையப்பன் மௌனமாக நடக்க ஆரம்பித்துவிட்டார். 

“ என்னப்பா வேற எதுவும் பேச மாட்டிங்களா ? “ என இவன் உள்ளே போன குரலில் கேட்க, 

“ இல்ல அழகா, நீ பேசறத நான் கேட்டுட்டு இருக்கேன். நீ பேசு. “ என மென்மையாகவே சொன்னார். 

“ கோவமா ப்பா. “ என இவரது முகம் பார்த்துக்கேட்க, 

“ இல்ல ப்பா அப்பாவுக்கு உன் மேல கோவம் எல்லாம் இல்ல. அப்பா சொல்லவந்தத நீ கொஞ்சம் கேட்டுருக்கலாம் நினைச்சேன் ப்பா அவ்ளோ தான். “ என மறுமுறையும் அவர் ஆரம்பிக்க, 

அழகனுக்கு, ‘ முதல இருந்தா. ‘ என தான் தோன்றியது. அவனுக்கு எதிர்கட்சி பற்றி பேச்சு பிடிக்கவிட்டாலும், அப்பாவிடம் பேசுவது பிடிக்கும், வேறு வழி இல்லை, இதை பற்றி பேசினால் தான் உண்டு என்று தோன்ற, 

“ சரி சொல்லுங்க அப்பா. அந்த தண்ணி டாங்க் என்ன அவ்ளோ ஸ்பெஷல் ?“ என ஏனோ தானோ என்று ஆர்வமில்லாமல் கேட்டாலும் அப்பாவிற்காக இறங்கி வந்து கேட்டான். அவனது குரல் அவருக்கு தெரியாத என்ன, 

“ அந்த தண்ணி டாங்க் இருக்க இடம் எதிர்கட்சி செல்வம்துடையது  தான்ப்பா. ஊருக்கு நல்லது நடக்கணும்னு அரசாங்கதுக்கு கொடுத்துட்டார். அவர் கிட்ட அந்த இடம் இப்போ இருந்ததுனா நமக்கு எல்லாம் நல்ல தண்ணி எப்படி ஈசியா இப்போ பைப்ல வரும் ? 

இப்போ அந்த நிலம் அவர்கிட்ட இருந்ததுனா அவருக்கு வசதி தான், அவர் ஊருக்குனு கொடுக்கணும்னு இல்ல, 

ஆனா அவர் செஞ்சார். ” என சொல்ல, இவன் மௌனமாக நடந்து வந்தான். அவனுக்கு தான் அவர் யாரின் அப்பா என்று தெரியுமே.

“ யாரும் எப்போவும் நிரந்தர பகைலாம் இல்லப்பா. எல்லாம் இங்க நம்ப ஊரு ஆளுங்க தான். எல்லாம் ஒரே மண்ணுல தான் வாழ்றோம், இங்க எல்லாம் எல்லாத்துக்கும் கிடைக்கணும்னு தான் நானும் நினைக்குறேன், எதிர்ல நிக்குறவங்களும் நினைக்கிறாங்க. “ 

“ நீங்க நினைக்கிறிங்கனு சொல்லுங்கப்பா, எதிர் சைட் பத்தி வேணாம். “ என மகன் உடனே சொல்ல, இவருக்கு புன்னகை தான் அரும்பியது. இனி என்ன சொன்னாலும் அவன் இதை ஒரே கோணத்தில் இருந்து தான் பார்ப்பான் என நினைத்தார். சில விஷயங்களை எடுத்து சொல்ல முடியும். ஆனால் சொல்வதை விட அவனே போக போக அனுபவத்தில் புரிந்துக்கொள்வான், என என அந்த பேச்சை அப்போது விட்டார். 

“ சரி அழகா, எதிர் சைட் பத்தி பேசல, ஆனா ஒன்னு மட்டும் சொல்லுதேன், எங்க ரெண்டு பேர் கட்சிலையும் ஆயிரம் இருக்கும், அதுக்குனு குடும்ப ஆளுக கூடவெல்லாம் சண்ட போட்டுகிட்டதில்ல, பொம்பள புள்ளக்கிட்ட சண்ட பிடிக்க கூடாது. ” என சொல்ல, 

“ ம்‌ம் “ என அழகன் பட்டும் படாமலும் சொல்லிவைத்தான். சண்டையிட மாட்டேன் எனவெல்லாம் சொல்லவில்லை. 

   இப்படி அவரவர் பிள்ளைகளிடம் புரியவைக்க முயல, அதெல்லாம் ஓரளவு தான் வேலை செய்தது. ஆனால் அடுத்தடுத்து பள்ளியில் இருபிள்ளைகளுக்கும் அமைதியாக முட்டிக்கொண்டு தான் இருந்தது. 

   அதன் பின் வந்த மூன்று மாதங்களில் செந்தாமரை அக்காவுடன் நடந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். அப்போதெல்லாம் அழகன் செந்தாமரையை பார்த்தாலே அவளை ஏதாவது சொல்வதும், அதற்கு சிலிர்த்துக்கொண்டு தாமரை பதில் கொடுப்பதுமாக செல்ல, நேற்று அவள் வரைந்த படத்திற்காக வம்பிழுதிருக்க, இன்று பள்ளிக்கு அண்ணனுடன் தன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவன் ‘உஷாரா இருக்கணும் டா…’ என நினைத்து முன்னே நடந்து சென்ற தாமரையை கூர்மையாக பார்த்துக்கொண்டே ஓட்ட, தாமரை இவனை அடிக்கடி திரும்பி குறு குறு வென பார்த்திருந்தாள், ஒரு தனி பிளான் உள்ளே ஓட, அவள் முகத்தில் ஒரு சிறு கீற்று வெற்றி புன்னகை ஒரே நொடி வந்து போனது. 

            

Advertisement