Advertisement

       அழகன் செந்தாமரையின் பாஸ்ட் ஹிஸ்டரி மூன்று மாதங்கள் முன் தான் தொடங்கியது. செந்தாமரைக்கு அப்போது பள்ளியில் வகுப்பு மாற்றியிருந்தனர். சின்ன பிள்ளைகளுக்கு என தனியாக அருகில் வேறு இடத்தில் கட்டடம்  இருக்க, இப்போது தான் ஐந்தாம் வகுப்பு மட்டும் பெரிய பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு மாற்றியிருந்தனர். பிள்ளைகள் இருவரின் இடம் தனியாக இருக்க தாமரையும் மலர்விழியும் காசிநாதன் பைக்கில் சென்று விட்டுவருவார், அதிலும் தாமரை சின்ன பெண் என்பதால் அவள் கிளாஸ் இருக்கும் இடம் சென்று விட்டுவருவார். இன்று முதலாக இடம் மாற்றியதும் தாமரைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ தானும் பெரிய வகுப்பு வந்துவிட்டோம் என உள்ளே ஒரு உற்சாகம்.

     செந்தாமரை புது இடத்திற்கு வந்தவுடன், இடைவெளியில் அக்காவின் வகுப்பை பார்க்கச் செல்ல, புதிதாய் இங்கே வந்திருப்பவள் என முகத்தில் அவளே எழுதி ஒட்டி தேடிக்கொண்டிருந்தாள். 

    அந்த சுபவேளை சுப தினத்தில் அவள் செல்லும் வழியில் தன் பட்டாளத்துடன் கைபிடி சுவற்றின் மீது ஏறி அமர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான் காட்டழகிய சிங்கர். இவளை பார்த்ததும் எங்கோ பார்த்திருக்கும் தோற்றம், மலர்விழி சாயல் லேசாக இருக்க, அடையாளம் சரியாக தெரியவில்லை. 

“ ஏ சின்ன பொண்ணு…ஓய்…” என இவன் சத்தமிட்டு அழைக்க, செந்தாமரை அப்போது தான் முதன் முதலில் அவனை பார்த்தாள். அப்படி ஒருத்தன் இந்த உலகில் இருக்கிறான் என்றே அன்று தான் அவளுக்கு தெரியும். அவனுக்கும் அப்படியே. இருவரும் ஒரே ஊராய் இருந்தாலும், அதிகம் பரிட்சயம் இல்லை. 

அவர்கள் பட்டாளத்தை பார்த்தபடி, இவள் மெல்ல அருகில் செல்ல, அவனை தான் பார்வையால் அளந்துக்கொண்டிருந்தாள். நண்பர்கள் புடை சூழ கால் மேல் கால் போட்டு ஒரு தொடையில் ஒற்றை கையை ஊன்றி, மறுக்கையில் ஒரு சுருட்டிய பேப்பர் வைத்து, நண்பர்களுடன் கன்னக்குழி விழ மிக அழகாய் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தான். இது வரை ஆண் பிள்ளைகளில் இத்தனை அழகாய் யாரையும் செந்தாமரை பார்த்ததில்லை, அவள் பொறுத்தவரை பெண் பிள்ளைகள் தான் அழகாய் இருப்பர் என்ற எண்ணம். வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்து நடந்து வந்தாள். சின்ன பெண்ணிற்கே உரிய அதிசய உணர்வு அவ்வளவே.

அழகனும் இவளை தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே  அவ்வப்போது பார்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இது போல் பார்வைகள் பழக்கமே. சீருடையில் இரட்டை குதிரை வால் போட்டு, பார்க்கவே அப்பாவியாய் நடந்து வந்தாள். 

“ யார் நீ…புதுசா இருக்க, இந்த கேம்பஸ்ஸா…இல்ல சின்ன கிளாஸ் கேம்பஸ்ஸா ? “ என அதிகார தோரணையுடன் விசாரிக்க, செந்தாமரை திரு திருவென விழித்தாள். அதுவும் இப்படி முதல் நாளே இவன் விசாரிக்க, இன்னும் திரு திருவென விழித்தாள்.

அவள் கண் முன் இரண்டு சொடுக்க போட்டவன், “ என்ன இந்த முழி முழிக்குற…உன் அண்ணா யாராவது இங்க படிக்குறாங்களா…அவங்கள பார்க்க வந்தியா.. “ என சாதாரணமாய் கேட்க,

இல்லை என தலையாடியவள், 

“ அக்காவ பார்க்க வந்தேன் ” என சொல்ல. அக்காவின் பெயரை சொல்லவில்லை.

இவர்களிடம் சொல்லலாமா, வேண்டாமா, பெரிய பசங்களாக இருக்கிறார்களே, அதுவும் இத்தனை பேர் இருக்கிறார்களே, யாரென்றே தெரியவில்லை, அம்மா தெரியாதவருடன் அதிகம் பேசக்கூடாது என சொல்லியிருக்கிறாரே என யோசித்துக்கொண்டே இருந்தாள். சின்ன பெண் தானே, அதனால் வீட்டில் சொல்லியவற்றை அப்படியே யோசித்துக்கொண்டு நின்றாள். 

“ இவ்ளோ குட்டியா இருந்துட்டு என்ன பார்வ… நாங்க இந்த கேம்பஸ்  ஆளுங்க… எல்லா பேரையும் எங்களுக்கு தெரியும்…பேர் சொன்னா கொண்டு போய் விடுவோம்…இல்லைனா இங்கயே புடுச்சு வச்சிக்குவோம். “ என கண்களை உருட்டி அவளை பேச வைக்க அழகன் பயம் காட்ட, கொஞ்சம் பயந்துவிட்டாள். வாயே திறக்கவில்லை. 

“ அழகா…அதுவே சின்ன புள்ள..விடு டா…அதுவே போய் தேடிக்கிட்டும். “ என அழகனின் நண்பன் பரமு தாமரையை பாவம் பார்த்துச் சொல்ல, அவளிடம் விடுபட்ட உணர்வு, பரமுவை பார்த்து உதட்டில் சின்ன புன்னகை பூத்தது. இதனை நன்றாக கவனித்த அழகன், நான் இத்தனை கேட்கிறேன், வாயை திறக்கவில்லையே இவள் என நினைத்தவனுக்கு, எதிரில் நிற்கும் சின்ன பெண் மீது மெல்லிய கோபம் வந்தது. அந்த கேம்பஸ்ஸில் இவனை எல்லோருக்கும் நன்கு பரிச்சயம், இவனிடம் யாரும் இப்படி எல்லாம் நடந்துக்கொண்டது இல்லை. இப்படி யாரிடமாவது முதலில் அரட்டலாய் ஆரம்பிக்கும் பேச்சு இறுதியில் எப்படியும் ஒரு சினேகத்துடன் தான் முடித்து அழகனுக்கு பழக்கம். ஆனால் இந்த சின்ன பெண்ணின் அழுத்தம் இவனது கோபத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அவளிடம் முட்டிக்கொண்ட முதல் நொடி அது தான்.

      இவளை வாயை திறக்கவைக்காமல் விட கூடாது என முடிவு செய்தவன், 

“ சின்ன புள்ள தான் டா…அதுவா போய் தேடுனா…இவ்ளோ பெரிய கேம்பஸ்ல தொலஞ்சி போயிடும்…அப்பறம் யாராச்சும் இவள தூக்கிட்டு போய்டுவாங்க…” என நண்பனை பார்த்து லேசாக கண்ணடித்து தாமரையை பார்த்துச் சிரிக்காமல் சொல்ல, கலவரமாக நின்ற தாமரை சுற்றி முற்றும் பார்த்தாள். 

இத்தனை பேசியும் தன்னை மதிக்காமல் எப்படி பேசாமல் இருக்கிறாள், அதுவும் நண்பர்கள் முன்னே நானும் ரௌடி தான் என்ற ரேஞ்சில் இத்தனை நாள் இருந்து விட்டு, அவர்கள் முன் ஒரு சின்ன பெண்ணால் தன் இமேஜ் உடைவதை விரும்பாமல், கொஞ்சம் டிராக்கை மாற்றிப்பார்த்தான், 

“ ஏய் இங்க பாரு எங்க அப்பா  ****கட்சிகாரரு. அவர் ஃப்ரெண்ட் தான் இந்த ஊர்ல தலைவரு..கட்சில எங்க அப்பா தான் எல்லாம் . நாங்க எல்லாம் பெரிய ஆளு… பயபடாத, பேசு. “ என அழகன் ஊக்கம் கொடுத்தான்.

 இதெல்லாம் அவன் அப்பாவிடம் பேச வருவோர்களின் பேச்சு. பிள்ளைகள் எதை வீட்டில் பார்க்கிறார்களோ சில விஷயங்களில் அதை தானே வெளியில் செய்கிறார்கள். அதை தான் செய்தான் அழகனும். இத்தனை நேரம் பேசாமல் கலவரமாக நின்றிருந்த தாமரை, அவனை குறு குறு வென இப்போது உத்து  பார்க்க, அது இன்னும் அவனை காண்டாக்க, 

“ ஏய்…இவ்ளோ சொல்லிக்கிட்டே இருக்கேன்…பேசாம இருக்க…

பரமு, நீ போய் ஒரு சாக்கு பை எடுத்துட்டு வா…இவள அதுல புடிச்சிட்டு போயிடலாம். “ என அவளிடம் ஆரம்பித்தவன் நண்பனிடம் முடிக்க, 

இத்தனை நேரம் பார்க்க மட்டும் செய்தவள், இப்போது கோபமாக அழகனை  முறைத்து, 

“ ஹலோ எங்க அப்பா ****கட்சிக்காரரு. போன தடவ எங்க அப்பா தான் ஜெய்சாரு. அதுவும் உங்க அப்பாவுக்கு ஆப்போஸிட்டா நின்னு. எங்க அப்பா தான் ஃபர்ஸ்ட் வின் பண்றாரு. உங்க அப்பா அப்போ தோத்து பூஸூனு ஆயிட்டார் . “ என கையை விரித்து காட்டிக்கொண்டு அவனை பார்த்து நக்கலுடன் முடிக்க, அவள் பேச்சில் இவன் அதிர்ந்து போனான். நண்பர்களும் தான். 

      இருவரின் தந்தைமார்களும் வேறு வேறு கட்சி என்றாலும் அவர்களுக்குள் பகைமை இருந்ததில்லை, ஆனால் பிள்ளைகளுக்கு கட்சி பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும், தத்தமது தந்தையைர் வெற்றிபெற்றாலோ அல்லது தோற்றலோ எதிர் நிற்பவர் தான் காரணம் என்ற நினைப்பு. 

அப்பாவின் வீட்டிற்கு வரும் கட்சி தொண்டர்கள் பேசிக்கொள்வது, நண்பர்கள் பேச்சு, உறவினர் வாழ்த்தோ அல்லது கேலியோ ஏதாவது சில நிகழ்வுகள்  பிள்ளைகள் முன் நடந்திருக்க, பிள்ளைகளுக்கு அவரவர் தந்தை தானே பெரியது, மற்றவர் எல்லாம் ஒரு கணக்கே இல்லை என்ற நிலை தானே. இதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இரு பிள்ளைகளுக்கும் இந்த எண்ணம் உண்டு. 

இதற்கு ஒரே விதி விலக்கு மலர்விழி.

     மலர்விழி, சிறு வயதிலிருந்தே அழகனுடன் ஒரே வகுப்பு என்பதால், அவளை வேற்றாளாய் எல்லாம் அவன் நினைப்பதில்லை. செந்தாமரை பற்றி மலர்விழி சொல்லியிருந்தாலும் நேரில் பார்த்ததில்லை. அதே போல் அழகனை பற்றி மலர் சொல்லி அவ்வப்போது செந்தாமரை கேட்டிருந்தாலும், அவள் பெரிதாக எடுத்ததில்லை. ஆனால் இந்த முறை செல்வம் தோற்றிருக்க, அழகனது தந்தையின் நண்பர் வெற்றிபெற்றிருக்க, வீட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் சிலர் செல்வத்திடம் இப்படி ஏதோ சொல்லிவைக்க, இப்போது இவனை நேரே காண, இவன் மீது அத்தனை கோபம் வந்தது. எல்லாம் இவன் தந்தையால் தானே என்ற எண்ணம் தாமரையை அப்படி பேச வைத்தது. இடம் நேரம் எதுவும் பார்க்காமல் வார்த்தைகள் வந்துவிட்டது. 

மற்றவர்கள் எல்லாம் பெரிய பிள்ளைகள் என்பது மறந்து அப்பாவின் கட்சி எதிரி வீட்டு பையன் என்பதே பிரதானமாக இருக்க, சுற்றம் மறந்து அவனை பார்த்த நொடி அவளிடம் தயங்காமல் வார்த்தைகள் வர, சுற்றி நின்ற நண்பர்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு சிரிக்க, அழகனின் புருவம் நெறிய ஆரம்பித்தது.

Advertisement