Advertisement

             அது ஒரு ஞாயிறு காலை வேளை, செல்வத்தின் வீட்டின் மாடியறை இளம் தென்றல் வீச என்றைக்கும் இல்லாமல் அதிக மௌனமாக இருந்தது. கட்டிலின் மெத்தை மீது அமர்ந்து மடியில் அட்டை வைத்து அதில் ஒரு ரெகார்ட் நோட்டின் வெள்ளைதாளில் பென்சில் கொண்டு ஏதோ ஒரு பூவின் அச்சை அப்படியே அழகாய் வரைந்துக்கொண்டிருந்தாள் தாமரை. கடந்த அரை மணி நேரமாக மலர் பாவமாய் தாமரையின் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.  

“ தாமரை…ஏன் பேச மாட்டிங்கற… ?” ஐந்தாவது முறையாக மலர் கேட்க, 

 குனிந்த தலை நிமிராமல், “ எனக்கு புடிக்காதனு தெரிஞ்சும் அன்னைக்கு அந்த காட்டு பயனுக்காக எழுந்து நிக்குற, நேத்து அவன் அண்ணனுக்கு வரஞ்சு தர சொல்ற. 

எனக்கே அவன் எனிமி, அவங்க அண்ணக்குனு உன்கிட்ட கேட்பான், நீயும் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்குற.

அவன் வேணும்னு தான் பண்றான். ஒரு டியக்ரம் கொடுத்தா வரையலாம், இப்படி பத்து டியக்ரம் கொடுத்து மூனு நாள்ல முடிச்சு கொடுக்க சொல்றான். அவன நான் பன மரம்னு சொன்னேன்ல, அதன் எனக்கு இப்படி பண்ணிட்டான்.

ஆனா உன்ன கேட்டா உன் ஃப்ரெண்ட் நல்லவன், அப்படி இப்படினு டியலாக் சொல்லுவ.  

நான் ஏன் உன்கிட்ட பேசணும் ஃப்ளவர் அக்கா? “ என நியாயம் கேட்டாள் தாமரை. அவள் சொல்வது உண்மை தான், அழகன் தாமரை சொன்ன காரணத்திற்காக தான் இப்படி செய்திருந்தான்.

“ சரி…அப்போ நீ வரஞ்சது போதும். குடு நான் அவன் கிட்ட கொடுத்துறேன். அவன் அண்ணனே வரஞ்சிகிட்டும். “ என மலர் உம்மென்று எழுந்துக்கொள்டாள். 

“ அத நீ என்கிட்ட கொடுக்க முன்ன கேட்டிருந்த கொடுத்துருப்பேன். நான் ஐஞ்சு படம் முடிச்சிட்டேன். 

ஸ்டார்ட் பண்ணிட்டு ஹாஃப்ல விட முடியாது. அது தெரிஞ்சு தான நீ என்கிட்ட இந்த படம் வரைய கொடுத்த. 

யாருதுனு நான் கேட்டதுக்கு ஃப்ரெண்ட்டோட அண்ணனு மட்டும் நேத்து சொன்ன, ஃபர்ஸ்ட் பேஜ்ல பேர் கூட இல்ல, ரோல் நம்பர் வச்சு டவுட் கேட்க அவங்க கிளாஸ்க்கு போனதும் தானே யாருதுனு தெரியுது. 

நேத்தே பாதி முடுச்சிட்டேன் இன்னைக்கு முழுசா நான் முடிச்சுட்டு தரேன். “ என சொல்லியவள் அக்காவின் முகத்தையே பார்க்கவில்லை. 

மலர்விழி சென்று தாமரையின் முதுகின் மேல் சாய்ந்து கட்டிக்கொண்டு, 

“ லோட்டுஸ்சு, அவன் என் ஃப்ரெண்ட், அவனுக்கு எப்படி நான் நிக்காம இருக்கறது. அதுவும் இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் லீடர் ஆகுறான்.

என் தங்கச்சி நல்லா வரைவானு ஒருதரம் சொல்லிட்டேன், அதான் என்கிட்ட கேட்டான்.  “  

“ நீ என்ன பண்ணாலும் நான் உன் கூட பழம் விட மாட்டேன் ஃப்ளவர் அக்கா. “ என தாமரை இருந்த பிடியிலே இருக்க, மலர்விழி மொத்தமாக தாமரை மீது படுத்து இறுக்கி அனைத்துக்கொண்டாள். 

“ ஃப்ளவர் அக்கா…என்னால மூச்சு விட முடியல. எந்திரி…ஆஆஆ… என் மேல படுத்து உருளாத. “ என தாமரை கத்த, “ நீ பழம் விட்டா தான் நான் எந்திரிப்பேன். “ என மலர் இன்னும் அவளை இறுக்கிக்கொள்ள, சிறிது நேரம் இருவரும் மெத்தை மீது புரள, படுக்கை விரிப்பு பறந்து கீழே விழ, இரண்டு தலையணை கீழ விழ, அதில் இருவரும் விழ என ஒருவழியாக மலையிறங்கி மலரிடம் பழம் விட்டாள் தாமரை. 

     சென்ற வாரம் அழகன் கிளாஸ் லீடர் ஆனதிலிருந்து அவனுக்கு ஏற்கனவே இருக்கும் கொம்புக்கு இந்த பதவி சலங்கையை கட்டி விட்டிருந்தது. 

    வகுப்பை சுத்தமாக வைத்துகொள்ள நிறைய கண்டிப்புகள், பாடத்தில் எதனும் சந்தேகம் என்றால் அதை எழுதி தர வேண்டும், அதில் பெயர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி என்ற முறையை பின்பற்றினான். கரும்பலகையை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு ஆள். சாக் பீஸ் டப்பாவை பாதுகாக்க ஒரு ஆள் என ஏதேதோ வகுப்பில் செய்து வைத்திருந்தான். மலர் இது போல் வீட்டில் வந்து தினமும் ஏதாவது சொல்லிவைக்க, அகிலா வேறு அவனை பாராட்டி வைத்தார். 

‘ சும்மா இதெல்லாம் பண்ணிட்டா அவன் நல்லவன் ஆயிடுவான. சரியான கொம்பு அவன். ‘ என அவனை பாராட்ட தாமரை தயாராகவே இல்லை. 

    நேற்று மலரிடம் ராஜாவின் ரெகார்ட் நோட் தந்து, “ மலரு தாமரை கிட்ட சொல்லி அண்ணாக்கு இந்த டயக்ரம் மட்டும் வரஞ்சு தர சொல்ரியா ? “ என அவனே வந்து மலரிடம் கேட்க, இத்தனை பேர் இருந்தும் தன்னிடம் லீடர் கேட்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை, சரி என ஒத்துக்கொண்டாள் மலர். இதற்கு முன் மலரின் நோட்டில் இருக்கும் வரைபடங்களை ஒரு முறை பார்த்து ஆச்சார்யபட்டவன், யார் வரைந்தது என கேட்க, அப்போது தான் தாமரை வரைவது பற்றி அவனுக்கு தெரியும்.     

      ராஜாவிற்கு அத்தனை வரைய தெரியாது. அவனுக்கு காமர்ஸ் எடுக்க வேண்டும் என்று தான் ஆசை ஆனால் அப்பாவின் பேச்சை தட்டமுடியாமல் சயின்ஸ் குரூப் எடுத்திருந்தான். அதனால் தான் படம் வரைய ஆள் தேடிக்கொண்டிருப்பது.

       அன்று மாலை கௌரி வீட்டில், முன் பக்கம் நிறுத்தியிருந்த ஆட்டோ ஒன்றில் ராஜாவும், அழகனும் அமர்ந்திருந்தனர். அது அவர்கள் டிரவல்ஸ் வண்டி தான், உள்ளூரில் மட்டும் அது போல் பதினைந்து இருந்தது. அதில் ஒன்று வீட்டின் முன் நிற்க, அதில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர். 

ராஜா ஆட்டோவின் முன் பக்கம் அமர்ந்திருந்தவன், “ அந்த புள்ள சரியா வரஞ்சி தருமா அழகா. “ என திரும்பி பின்னால் அமர்ந்திருந்த அழகனிடம் கவலையாக கேட்டான்.

“ மலரு வரையாது, அதோட தங்கச்சி தான் வரையும், கொஞ்சம் சேட்ட புடுச்ச பொண்ணு, ஆனா நல்லா வரையும். “ என சீட்டில் படுத்துபடியே அலட்டாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ அது தெரியும் டா, என் கிளாஸ்ல வந்து சில டியக்ரம் டவுட் கேட்டுச்சு, ஆனா எனக்கு தான் அது வரையுதுனு அதுக்கு தெரியாது போல, என்னைய பார்த்ததும் ஷாக் ஆகிடுச்சு. நீ சொல்லலையா டா. “

“ ப்ச் அண்ணா, நான் மலர்கிட்ட தான் சொன்னேன், அவ சொல்லாம விட்டுருப்பா நினைக்கிறேன். “ என சமாளித்துக்கொண்டிருந்தான். அவன் வேண்டுமென்று தான் பெயர் இல்லாத ரெகார்ட் நோட்டை கொடுத்தது. பெயர் தெரிந்தால் எங்க முதலிலே மாட்டான் என்று சொல்லிவிடுவாளோ என ஒரு எண்ணம், அதான் இப்படி கொடுக்க, அண்ணனிடம் அநாயசமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.  

      இவர்கள் இங்கே இப்படி இருக்க, மலரும் தாமரையும் ரெகார்ட் நோட்டுடன் அவர்கள் வீட்டிலிருந்து அழகன் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர். காதில் சூடாக புகையை வெளியிட்டபடி வந்த தங்கையிடம் கெஞ்சிக்கொண்டு வந்தாள்.

“ லோட்டுஸ்சு…அவன் என் ஃப்ரெண்ட் அவன எதுவும் சொல்லிடாத ? “

“ பார்போம் பார்போம் ஃப்ளவர் அக்கா…ஆளும் அவன் மூஞ்சியும். ஏன் நாளைக்கு ஸ்கூல்ல கொடுத்தா பத்தாதா ? “ என அவனை திட்ட, 

“ அது… மிஸ் யாராவது பார்த்துட்டா அவங்க அண்ணன திட்டுவாங்கள்ள அதான். “ என மலர் விளக்க, 

“ சரியான கேடி உன் ஃப்ரெண்ட். “ 

“ ஏய் அப்படி எல்லாம் சொல்லாத, அவன் நல்லவன் தெரியுமா, ஏதோ அவங்க அண்ணாக்கு டிராயிங் வரதாம், அதான் இப்படி. “ என எதேதோ பேசிக்கொண்டே இருவரும் நடந்து இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். 

     மலர் மட்டும் வந்திருப்பாள் தான், ஆனால் இது வரை அழகன் வீடு வரை எல்லாம் சென்றதில்லை, அதனால் தங்கையை துணைக்கு அழைக்க, பிடிக்காவிட்டாலும் அக்கவிற்காக செந்தாமரை கூட வந்தாள். 

    வீட்டின் அருகே வந்ததும் பார்த்தது ஆட்டோவை தான். அதில் பின்னே அழகன் உல்லாசமாய் படுத்திருக்க, முன்னே ராஜா சாவகாசமாய் அமர்ந்து இருக்க, இவர்களை பார்த்ததும் ராஜா முன் சீட்டில் இருந்து இறங்கி விட்டான். 

“ வா தாமரை…” என இவர்களை அழைத்தவன் உள்ளே கௌரியை அழைக்க சென்றான், வந்தவர்களை படுத்தவாக்கிலே தலையை தூக்கி பார்த்தான் அழகன். மலர் சாதாரணமாய் பாவாடை சட்டை போட்டு இரட்டை பின்னால் போட்டு நன்றாக தயாராகி வந்திருக்க, தாமரை தொள தொளவென ஒரு கௌன் போட்டு, இருக்கும் அளவான கூந்தலை எல்லாம் அப்படியே விட்டு முன்பக்கத்திலிருந்து ஹேர் பெண்ட் போட்டு அப்படியே விட்டிருந்தாள். 

மலர் அழகனை சிநேகமாய் பார்க்க, தாமரை அவனை முறைப்பும் இல்லாமல் சிரிப்பும் இல்லாமல் பொதுவாய் ஒரு பாவனையில் பார்த்துவைக்க, தாமரையை கண்டுகொள்ளாது மலரை மட்டும் பார்த்து “ வா மலரு “ என அழகன் அழைக்க, தாமரை மலரைப் பார்த்து முறைத்தாள். மலர் கண்களிலே தாமரையிடம் கெஞ்ச,

“ என்ன அதுக்குள்ள டிராயிங் எல்லாம் முடிச்சிடியா. “ என கேட்டபடி அழகன் எழுந்து ஆட்டோவிலிருந்து இறங்க, 

“ ஆமா அழகா…தங்கச்சி சீக்கிரம் முடிச்சிட்டா. “ என நோட்டை நீட்ட, அதை வாங்கியவன், பக்கத்தை புரட்டி புரட்டி சரி பார்க்க, தாமரையும் அவனை குறு குறு வென பார்த்துக்கொண்டு தான் நின்றிருந்தாள். 

“ என்ன மலரு செம்பருத்தி பூ இப்படி கோனையா இருக்கு, இலை எல்லாம் குட்டியா இருக்கு, என்ன உங்க வீட்டு செடியில இருக்க பூவ அப்படியே பார்த்து உன் தங்கச்சி வரஞ்சிடுச்சா ? “ என சிரிப்புடன் இவன் கேட்க, 

மலர் கெக்க பெக்க என சிரித்து அவனை கையில் இரண்டு அடி அடித்தாள். ஆனால் தாமரை கண் எல்லாம் அனல் பறக்க அவனை பார்த்திருந்தாள். எத்தனை பார்த்து வரைந்தாள் இப்படி சொல்லிவிட்டானே என்று அத்தனை கோபம் வந்தது.

அத்தோடு விட்டிலிருந்தால் பரவாயில்லை, 

“ என்ன மலரு இன்ஸெக்ட் டியக்ரம் எல்லாம் டிசைன் டிசைனா இருக்கு,  தவளை கண்ணாடி போட்ட மாதிரி இருக்கு. பாக்டீரியாக்கு காய்ச்சல் வந்த மாதிரி இருக்கு, 

இது என்ன பூச்சினு தெரியலையே…இது ஏன் சொங்கி போயிருக்கு. “ என நோட்டை தலை கீழாய் திருப்பி திருப்பி பார்க்க, மலர் இன்னும் சத்தமாக சிரிக்க, தாமரை இன்னும் தகித்தேவிட்டாள், அழகனை ஏதோ சொல்ல போக,

அதற்குள் ராஜாவும் கௌரியும் வர, தாமரை சைலன்ட் மோடிற்கு மாறிவிட்டாள்.  

“ வாங்க கண்ணுங்களா…வீட்ல அம்மா அப்பா எல்லா சுகமா இருக்காகளா ?  “ என வாஞ்சையாய் உள்ளே அழைத்து செல்ல, 

“ ஹான் நல்லா இருக்காங்க…நீங்க நல்லா இருக்கிங்களா ஆண்டி ?” 

என மலர் பதில் சொல்லிக்கொண்டே தங்கையை இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல, தாமரை உள்ளே வர மாட்டேன் என்பது போல் தலையசைக்க, என்னவென்று மலர் தாமரையை பார்க்க, தாமரை பயமாக ஒரு பக்கம் பார்க்க, அங்கே வீட்டின் வெளியே அழகனின் நாய்க்குட்டி நின்றிருந்தது. அதை அழகனும் கவனித்துவிட்டான். மலர் அழகனை பார்க்க, அவன் தாமரையை நமட்டு சிரிப்புடன் பார்த்தபடி நாய்குட்டி அருகே சென்று பிடித்து வைத்துக்கொண்டான். 

    தாமரை அவனை முறைத்துக்கொண்டும் நாய்க்குட்டியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டும் உள்ளே சென்றாள். 

   அழகனது அவன் தாத்தா காலத்து வீடு, நல்ல விஸ்திரமாக இருந்தது, வீட்டின் வெளியே நல்ல பரந்த இடம். நுழைவாயிலின் வெளியே இரண்டு பக்கமும் திண்ணை, உள்ளே சென்றால் ஒரு விசாலமான வரவேற்பறை, அதற்கு உள்ளே அடுத்த கட்டில் இரண்டு படுக்கை அறை, அதற்கு அடுத்த கட்டில் ஒரு சிறிய படுக்கை அறை அதற்கு எதிர்புறம் சாமி அறை, அதை தாண்டி உள்ளே சென்றால் சமையல் அறை, அதன் பின் சிறிய வீட்டுத் தோட்டம். 

    மலரும், தாமரையும் வரவேற்பறை சோபாவில் அமர, அழகன் உள்ளே வந்து இருவரையும் கௌரிக்கும் வள்ளிக்கும் அறிமுகம் செய்து வைத்தான். வள்ளி இனிப்பு அப்பமும் சூடாக பாதாம் பால் கொடுக்க, மலரும் தாமரையும் மறுக்க, 

“ ரெண்டு பேரும் சாப்பிடலைனா உங்க ரெண்டு பேரையும் இங்கேயே புடுச்சு வச்சுப்பேன். “ என வள்ளி உரிமையாய் அதட்ட, மலரும் தாமரையும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

   மலரும் தாமரையும் பலகாரம் சாப்பிட, ராஜா ரெகார்ட் நோட்டை எடுத்து பார்த்தவன், அதை கௌரியிடமும் வள்ளியிடமும் காட்ட, 

“ தாமரை… அருமையா வரஞ்சிருக்க கண்ணு. “ என கௌரியும்

“ உன் கைக்கு தங்க காப்பு தான் போடணும் ராஜாத்தி. “ என வள்ளியும் ஆளுக்கொருவராய் பாராட்ட, இன்முகமாக அவர்களிடம் நன்றி சொன்னவள், அழகனை நக்கல் பார்வை பார்த்து உதட்டை சுழித்துக்காட்ட, 

‘ நீ எல்லாம் ஒரு ஆளா, போடி.’ என அவன் திமிர் பார்வை பார்க்க, 

‘ நீ பாருடா வெள்ளெலி …உனக்கு இருக்கு ‘ என நினைத்தவள் அமைதியாக சாப்பிட, கௌரியும் வள்ளியும் இருவரிடமும் ஆசையாக பேசிக்கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் பெண் குழந்தைகள் இல்லை என்பதால் இவர்களிடம் பேசியே ஒரு நெருக்கம் வந்திருந்தது. 

இருவரும் வெவ்வேறு கட்சி குடும்பம். பெரியவர்கள் நடுவே அரசியல் வேற்றுமை இருக்க, வீட்டினருக்கு இல்லை. அப்படியே சிறிது நேரம் செல்ல, எல்லாம் பேசி முடித்து பிள்ளைகள் கிளம்ப பார்க்க,

“ மலரு, நம்ப ஆட்டோல போலாமா ? “ என அழகன் ஆர்மாவாய் கேட்க, 

“ எப்படி நீ இந்த ஆட்டோ ஓட்டுவியா ? “ என மலரும் ஆர்வமாய் கேட்க, புன்னகைத்தவன், விரைவாக வெளியே சென்று ஆட்டோவின் முன் பக்கம் ஓட்டுவது போல் அமர்ந்து,

“ எங்க போகணும் ? “ என கேட்க 

ஆட்டோவின் பின்னால் ஏறிய மலர் “ எனக்கு மார்க்கெட் போகணும். “ என விளையாட்டாய் கத்த, 

“டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வாயிலே அழகன் வண்டி ஓட்டி விளையாட, சத்தம் கேட்டு தாமரை, ராஜா, வள்ளி, கௌரி வெளியே வர, இவர்கள் செய்வதை பார்த்ததும் தாமரைக்கும் ஆசையாக இருக்க, அப்படியே பார்த்திருந்தாள். 

ராஜாவோ, “ அழகா நீ பின்னாடி உட்காரு. நான் ஓட்டுறேன்.  தாமரை நீயும் வா. “ என சொல்லி அழைத்து போனான். 

அழகன் பின்னால் சென்று ஓரமாக அமர, அவன் பக்கத்தில் மலர், அவள் பக்கத்தில் தாமரை என வரிசையாக அமர, முன்னே அமர்ந்த ராஜா உண்மையில் ஆட்டோவை ஓட்ட எடுத்துவிட்டான். 

“ அம்மா நம்ப தெரு முனை வர கூட்டிட்டு போய்ட்டு வந்துறேன். “ என சொல்லி அனைவரையும் அழைத்து செல்ல, 

“ உங்க அண்ணாக்கு லைசென்ஸ் இருக்கா ? “ என மலர் ஆச்சர்யமாய் கேட்க, 

“ இன்னும் இல்ல, ஆனா வீட்டு பக்கத்துல சும்மா ஒட்டி பழகுவான். “ என அழகன் சொல்ல, தாமரை தங்களுக்காக மட்டும் ஒரு வண்டி வருகிறது என  சீட்டில் அமர்ந்தபடியே “ ஹேய் ஹேய். “ என மகிழ்ச்சியாய் குதித்துக்கொண்டிருந்தாள்.    

“ எனக்கு பஸ் ஸ்டண்ட் போகணும். “ என தாமரை உற்சாகமாய் கத்த, அது மலருக்கும் தொற்ற,

 “ எனக்கு தியேட்டர் போகணும். “ என இப்போது என மாறி மாறி ராஜாவிடம் இன்னும் உற்சாகமாய் கத்திக்கொண்டும், சீட்டில் குதித்துக்கொண்டும், உள்ளே இருந்த கம்பியை பிடித்து ஒற்றை காலை வெளியில் விட்டு தொங்கிக் கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். 

தாமரை மட்டும் என்றால், “ எங்க வண்டி, நீ அமைதியா வா “ என அதட்டி சொல்லிருப்பான், ஆனால் மலர் அவன் தோழி அல்லவா, அதனால் வாயை மூடிக்கொண்டு அமர்ந்த்திருந்தான். 

ஆனால் தாமரையை அப்படியே விட்டால் அவன் அழகன் இல்லையே  

“ ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

ஊசி போல உடம்பு இருந்தா தேவை இல்ல பார்மசி…” 

என இவன் பாட, அப்பாவி மலரும் என்ன எதுவென்று புரியாமல் சேர்ந்து உற்சாகமாய் பாட, ராஜா “ ல ல ல. “ என ராகம் இழுத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அவன் பாடலின் பொருளை புரிந்துக்கொண்ட தாமரையோ பாடவில்லை, அவனை கண்ணில் முறைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவளை தவிர மற்றவர் பாட, ஒரு சுற்று ஓட்டி விட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டான் ராஜா. எல்லாம் ஆடி பாடி கீழே இறங்க, அழகன் மலரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.  அதை யாரும் பெரிதாக பார்க்கவில்லை. பின்பு வெளியே வந்த கௌரியும் வள்ளியும் பிள்ளைகள் கையில் ஒரு டிஃபன் பாக்ஸ் நிறைய இனிப்பு அப்பமும், ஒரு கவரில் இரண்டு முழம் பூ வைத்து கொடுக்க, மலர் வாங்கி கொண்டாள். இருவரும் ஆட்டோவில் சென்றதை பற்றி பேசி சிரித்தவாரே வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய பிள்ளைகள் அன்று இரவு உண்டு முடித்து வீட்டில் எல்லாம் சொல்ல, அகிலா இனிப்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க, இரவு உணவு முடிந்து தேவி வீட்டில் மலர் அறையில் பிள்ளைகள் ஒன்றாய் படுக்க, மலர் போர்வை போர்த்திய படியே, 

“ தாமரை, அழகன் உன் டிராயிங்க கிண்டல் பண்ணதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன். “ என தாமரையின் கன்னத்தில் முத்தம் வைக்க, தாமரையும் பதிலுக்கு அக்காவின் கன்னத்தில் முத்தம் வைத்து படுத்துவிட்டாள். ஆனால் அக்காவின் வார்த்தைக்கு சரி என்று சொல்ல வில்லை. சிறிது நேரம் இருவரும் அரட்டை அடித்தார்கள். பிறகு அமைதியாக மலர் உறங்கிவிட, தாமரை உறங்கவில்லை, 

‘ இந்த வெள்ளெலிய சும்மா விட கூடாது, கண்டிப்பா ஏதாச்சும் பிளான் பண்ணனும் .‘ என நினைத்தவள், தங்கள் பாஸ்ட் ஹிஸ்டரியை புரட்ட, அழகனுக்கும் தாமரைக்கும் நிறைய சின்ன மோதல்கள், அதை நினைத்தபடியே எப்படியோ தூங்கி போனால் தாமரை. 

    ஆனால் அழகனோ கட்டிலில் தலை வரை போர்வையை போர்த்திக்கொண்டு ‘ இந்த ஊசி சுண்டக்கா சும்மா இருக்க மாட்ட, நம்ப பேசுன பேச்சுக்கு ஏதாச்சும் செய்வா, கேர்ஃபுல்லா இருக்கணும் டா அழகா ‘ என யோசித்துவிட்டே தூங்கினான்.            

    

  

      

   

 

                  

 

                            

                  

           

        

        

       

Advertisement