Advertisement

      காலை வேளையில் பச்சை நிற வயல்களில் கொக்கு கூட்டமாக பறக்க, முகத்தில் சில்லென்று காற்று வீச, சுவாசத்தில் நாற்றுகளின் ஈர வாசம் என ரம்யாமாக இருக்க, அத்தனையும் அனுபவித்து கடந்து மெயின் ரோடு வந்து சில நிமிடங்களில் தன் ஸ்கூட்டியில் கடையின் முன் வந்திறங்கினாள் செந்தாமரை. 

வெளியில் பரமு நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, இவளை பார்த்ததும், அதை முடித்து இவள் அருகில் வந்தான்.

“ என்ன தாமரை, டிகிரி வாங்கிட்ட போல, அப்படிய புது வண்டில மிதந்து வர மாதிரி தெரியுதே, இனிமே இங்க கடை பக்கம் கால வைக்கமாடிங்கனு செய்தி காத்துல வந்துச்சு உண்மையா ? “ என புன்னகைத்துக்கொண்டே வம்பிழுக்க, 

“ இது மாமா எனக்கு கிஃப்ட் கொடுத்தாங்க. அவங்க ஃபங்சனுக்கு வரல, அதான் லஞ்சம் வாங்கிட்டேன். 

எங்க அக்கவோட கடை இது, சில கொள்ள கூட்ட தலைவரோட கால் படுறப்போ, என் கால் எல்லாம் இங்க வைக்கலாம். தப்பில்லை. “ என புன்னகைத்துக்கொண்டே தோரணையாக சொல்ல, 

“ வாய், அம்புட்டு வாய் உனக்கு. இப்படியே பேசிக்கிட்டு இரு அழகன்கிட்ட ஒரு நாள் வாங்கி கட்ட போற. 

பாக்க தான் சாஃப்ட், ஆனா சண்டனு வந்துட்டா டெர்ரர் ஆகிடுவான் பார்த்துக்கோ. “

“ ஓஹ் இப்படி ஊருக்குள்ள பேச தான் உங்க சிங்கரு உங்கள கூட வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காறா ? எவ்ளோ கமிஷன் ? “

“ ஹேய், இப்படி உண்மையெல்லாம் பொதுவெளியில சொல்ல கூடாது. அப்புறம் எங்க பொழப்பு என்ன ஆகுறது. நாங்களும் ஊருக்குள்ள ஒரு ஆள டெவலப் ஆக வேண்டாமா. உள்ள ஓடி போய்டு. “ என போலியாக மிரட்ட, 

“ சரிங்கண்ணா நான் எந்த அனிமல் பத்தியும் பேசல. பட் என்கிட்ட வந்து அவர் அப்படி இப்படினு சும்மா கூட சொல்லாதிங்க. கடுப்பாகுது. “ என கண்கள் சுருங்கச் சொல்ல, 

“ அவன் உனக்கு அனிமலா. ரெண்டு பேரும் இவ்ளோ வளர்ந்துட்டிங்க, இன்னும் அடிச்சுக்கிறிங்க, வெட்கமா இல்ல “ என திட்ட,

“ நீங்க தான் ஊர் பூரா போஸ்டர்ல சிங்கத்த அடிச்சி நடுவயல நிப்பாட்டி வச்சுறிக்கிங்க. அப்போ உங்க தலைவர அப்படி தான கூப்பிட முடியும். இவ்ளோ வளர்ந்தாலும் உங்க சிங்கரு இன்னும் பொய் பொய்யா சொல்லிக்கிட்டு வெட்கமே இல்லாம ஊருக்குள்ள திரியராரு, அவர கேட்க மாட்டிங்குறிங்க, என்ன மட்டும் கேக்குறிங்க, இது என்ன நியாயம். “ என வாசலிலே பஞ்சாயத்து வைக்க, 

“ உன் கிட்டலாம் போய் அவன பத்தி பேசுனேன் பார்த்தியா, என்னைய கல்லு கட்டி கிணத்துல இறக்கிவிடணும், அப்போ தான் எனக்கு புத்திவரும். “

“ அண்ணா உங்க மேல தப்பு இல்ல, உங்க சேர்க்க சரியில்லா, நீங்க கல்ல  கட்டி கிணத்துல இறங்கறப்போ, கூட உங்க சிங்கரையும் சேர்த்து பெரிய பாறாங்கல்லா கட்டி இறக்கி விடுங்க, ஊரே உங்களுக்கு ஸ்வீட் கொடுத்து  கொண்டாடும். “ 

:” கிராதகி, சின்ன பிள்ளைனு பார்த்தா, எங்களுடைய சோலிய முடிக்கறதுலயே குறியா இருக்க. ஹான் அப்புறம் ஸ்வீட்னு சொன்னதும் நியாபகம் வருது. உன் ஃபங்சன் நடந்த அன்னைக்கு மதியம் மேல அழகன் வீட்டுக்கு போயிருந்தேன் வித விதமா பலகாரம் கொடுத்தாங்க. உங்க பெரியம்மா கிட்ட சொல்லு, எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. வீட்டுக்கு கொடுத்து விட்டாங்க, தம்பிக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. “ என உளமாற சொன்னான் பரமு. 

பள்ளியிலிருந்தே பரமு இருவருக்கும் தெரியுமாதலால், அவ்வப்போது நடுவில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவான். முதலில் அழகனுக்கு தான்  நெருங்கிய நண்பன், ஆனால் தாமரை கடைக்கு வேலையென வந்த பிற்பாடு  பரமு நன்றாக பழக, நல்ல நட்பு இருவருக்கும். கூடவே சிறு வயதிலிருந்து பார்க்கும் உரிமையும் கலந்து விட, ஜவ்வு மிட்டையாக ஒட்டிக்கொண்டனர் இருவரும். 

இருவரும் வாயாடியபடியே வாசலில் நிற்க, பரமுவின் தோளில் தங்கென்று ஒரு கை அழுத்தி தன் பக்கம் இழுத்தது. 

“ என்ன பரமு, நம்ப ஸ்டாஃப் கிட்டலாம் பங்சுவாலிட்டி இல்லையே, யாரோ  வேலை பார்க்காம பேசிக்கிட்டே இருக்காங்க போல. நீ கொஞ்சம் கேட்டு வைடா. இல்லைனா ஏத்தம் கூடி போயிடும். “ என தாமரையை பார்த்தவாரே பரமுவிடம் முடித்தான் அழகன். 

அழகனை பார்க்காமல், தாமரை அவனை மதிக்காமல் திரும்பி வேறு புறம் பார்க்க, 

“ பங்கு நீ ஏன் டா இப்படி போற வரவங்க கிட்டலாம் நின்னு பேசிக்கிட்டு இருக்க. உனக்கு கால் வலிக்க போகுது. வா உள்ள போலாம். “ என அழகன் அவனின் தோளை இழுக்க, 

“ தாமர, எனக்கு கை உடம்பெல்லாம் ஒரு பக்கமா இழுக்குது, வா நம்ப உள்ள போலாம். “ என பரமு பதமாக அழைக்க,

“ பக்கவாதம் வர்ரதுக்கு சிம்டம்ஸ் காட்டுதுனு நினைக்கிறேன். அப்படியே நம்ப வயக்காடு பக்கம் போனிங்கன்னா லைட் ப்ரௌன் கலர்ல ஓணான் ஓடும், அது போடுற முட்டைய பச்சையா சாப்பிட்டா, இத கை இழுக்குறது உடம்பு இழுக்கறது எல்லாம் சரியா போயிடும்.“ என அழகனையும் பரமுவையும் பார்த்தவாரே சொல்லி உள்ளே சென்றுவிட்டாள்.  

“ மாப்பிள, அவ என்னைய பேசண்ட் ஆக்கிட்டு போறா டா. எல்லாம் உன்னால.” என அழகனின் கையை தட்டிவிட்டு உள்ளே செல்ல பார்க்க, அவனை விடாமல் இன்னும் அழுத்தி இழுத்தவன், 

“ இப்போ எங்க உள்ள போற, வா நாம் வெளிய போலாம். “

“ இப்போ தான் உள்ள கூப்பிட்ட. “

“ என்னோட எதிர் கட்சி உள்ள போய்ட்டா. இனி அந்த இடத்துல நமக்கு வேலை இல்லை, வா நாம நகர் வலம் போவோம். “ என இழுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். 

இருவரும் அரசு அலுவலகம் சென்று சில நில விவரங்களை பெற்று இன்னும் சில விவரங்களை கேட்டறிந்து ஊர் வர, மதியம் ஆகி விட்டது. இருவரும் கட்சி அலுவலகம் சென்றனர். 

இவர்கள் தனி கட்சி ஆரம்பித்த உடனே தனியாக இடம் பார்த்து அளவாக ஒரு அலுவலகம் கட்டிவிட்டான் அழகன். அங்கே தான் அவன் கட்சி ஆட்கள், நண்பர்கள், ஊர் ஆட்கள் என எப்போதும் யாராவது வந்து செல்ல, எப்போதும் அங்கே யாராவது இருப்பர். இவன் சென்றதும் இருவர் அமர்ந்திருக்க, 

“ வாங்க பெரியப்பா, எப்போ வந்திங்க. “ என வரவேற்று பேச, அவர் முகத்தை உர்ரென வைத்தபடி, 

“ ம் வர்ரேன்.  நீ சொன்னது ஒன்னும் நடக்க மாட்டிங்குதே. “ என அவன் முகம் பார்த்தும் பார்க்காமலும் அவர் பேச, 

“ எல்லாம் கவர்ன்மெண்ட் ஆஃபிஸ்ல பேசிட்டு தான் வரேன். ஊருக்குனு பொது நிலம் இருக்கு.அதுல நீர் தேக்க தொட்டி ஒன்னு பாசனம் பண்றதுக்குனு பெருசா கட்டணும். அது வழியா ரிமோட் பிராசஸ் வச்சு இங்க எல்லாருக்கும் அவங்வங்க நிலதுக்கு தண்ணி வர மாதிரி பைப் போடலாம். “

“ நீங்க பைப் போடுவிங்க, நாங்க எங்க பிடிச்சு வைப்போம். “

“ எல்லாருக்கும் தனி தனியா தொட்டி கட்ட இப்போ சாத்தியம் இல்லனு தெரியும் பெரியப்பா. இப்போதைக்கு சின்டக்ஸ் வாங்கி நில வாரியா வச்சுக்கலாம். அப்புறம் அவங்கவங்களுக்கு வசதிபடும் பொது தொட்டி கட்டிக்கிட்டும். “ 

“ அடுத்து மணல் எடுக்கறது நிறத்தணும். அதுக்கு போராட்டம் நம்ப செஞ்சா தான் தீர்வு வரும். அப்புறம் அதுக்குனு தேதி சொல்லி அனுப்புறேன். வீட்டுக்கு ஒரு ஆளாவது வரணும். “

“ அது எப்படி அழகா முடியும். வர முடிஞ்சவங்க வருவாங்க, எல்லோரையும் வற்புறுத்த முடியாது. “ 

“ முடியணும் பெரியப்பா. நான் ஒன்னும் பெரிய பெரிய பிரச்சனைக்குனு கூட்டம் சேர்த்து போராட்டம் பண்ணனும் சொல்லல. 

நமக்காக தான் பண்ண சொல்றேன். நம்ப வீட்டுக்கு தண்ணி வேணும். பாசனத்துக்கு தண்ணி வேணும். ஆறுனு ஒன்னு இருந்தா தான மழை தண்ணி நிக்கும், அந்த ஆத்துல வரைமுறையே இல்லாம மண்ணு எடுக்குறாங்க. அதுக்கு நம்ப தான போராடணும். 

வீட்டுக்குள்ள உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம்னா ஒன்னும் நடக்காது. இப்போ இந்த போராட்டம் நடக்கலைனா தண்ணி பிரச்சனைனு என்கிட்ட சொல்ல கூடாது. “ என முடிவாக கறாராகச் சொல்லி அவரை பார்க்க, அவரிடம் பதிலில்லை. 

“ இன்னொரு இடம் பார்த்துருக்கேன். காய்கறிய அப்படியே வித்தா விலை நிலையில்லாம இருக்கு, அதனால மதிப்பு கூட்டி விக்கிறதுக்கு தனியா சந்தை மாதிரி வச்சுக்கலாம். இதெல்லாம் இன்னும் ஒரு மாசத்துல முடிச்சுடலாம். ஆனா போராட்டம் மட்டும் அடுத்து வாரம் பக்கம் ஆரம்பிக்கணும். “ என சொல்ல, அவரும் சரி என ஒருவாறு ஒத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

பரமு எல்லாவற்றையும் பார்த்திருந்தவன், அமைதியாக இருந்தான். அவர்கள் சென்றவுடன், 

“ நீ இன்னொரு விஷயமும் வச்சுருக்க, அதையும் சொல்லலாமே. “ 

Advertisement