Advertisement

பெருவுடையப்பனுக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் அதிகம் இருக்க, திருமணமே வேண்டாம் என அரசியலில் ஈடுபாட்டோடு மக்களுக்காக  செயல்பட, வீட்டினரால் ஒன்றும் செய்யமுடியவில்லை,  ஆனால் பாண்டியன் திருமண வயதை அடையவும், அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தானும் செய்து கொள்வதாய் அடம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் கௌரியை திருமணம் முடித்தார். கௌரி அவரை விட மூன்று வயது தான் இளையவர். கௌரி சொந்தகார பெண் தான். திருமணம் முடிந்தும் இவர் அரசியல் என்றே சுற்றிக்கொண்டிருக்க, கௌரிக்கும் திருமண கனவு இருக்கும் என்பதை மறந்தார், அதை அவர் உணர்ந்த போது, அரசியலில் இருந்து சிறிது விலகி கௌரிக்காக தன் வாழ்கையை கொஞ்சம் மாற்ற, உற்ற துணையாய் மாறினர் இருவரும். 

ஆனால் பத்து வருடங்களாக குழந்தை இல்லை. அடுத்து பாண்டியனுக்கும் வள்ளியுடன் திருமணம் முடிய, சில வருடங்களிலே ராஜேந்திரனும் பிறந்தான். ராஜேந்திர பாண்டியனுக்கு மூன்று வயது இருக்கும் சமயம், கௌரிக்கு மகன் பிறக்க, வீட்டின் மகிழ்ச்சி கூடிபோனது. பதிமூன்று  வருடங்கள் கழித்து வந்த மகன் என்பதில் குடும்பத்தில் அவனது சித்தப்பாவை தவிர அனைவருக்கும் அழகன் செல்லம்.

     பிள்ளைகள் வளரும் போது குடும்ப சொத்துகள் பிரிக்க பட, பெருவுடையப்பருக்கு எண்ணெய் செக்கு ஆலையும், பாண்டியனுக்கு டிரவல்ஸ் என அவரவர் பிரியப்பட்டதை பிரிக்க, வீட்டை மட்டும் பிரிக்கவில்லை. எல்லாம் ஒரே கூட்டுக்குடும்பமாய் இருந்துவிட்டனர் . பிள்ளைகளை கௌரி ஒரு கடுஞ்சொல் கூட சொல்ல மாட்டார், இருவரிடமும் அத்தனை வாஞ்சை. ஆனால் இருவரிடமும் வள்ளி எத்தனை செல்லமோ அத்தனை கண்டிப்பு . பிள்ளைகளும் அதற்கு ஏற்றார் போல் நடந்துக்கொள்வர். 

    ” நாங்க ஸ்கூல் கிளம்புறோம் …பை…” என ராஜா கௌரிக்கும், வள்ளிக்கும் பொதுவாய் சொல்ல, தம்பியோ இருவரின் அருகிலும் சென்று,

 “ நான் இன்னைக்கு எங்க கிளாஸ் லீடர் ஆக போறேன். 

      அம்மா நீங்க இனிப்பு அப்பம் பண்ணுங்க, வள்ளிம்மா நீங்க எனக்கு ரவ பணியாரம் பண்ணுங்க. “ என எல்லாம் நடக்கும் முன்னே சட்டமாக ஆர்டர் போட்டவன், வெளியே வர, வள்ளி அப்போதே பணியாரம் செய்ய உள்ளே செல்ல, கௌரி செல்லும் மகனை நிறுத்தி, “ நீ லீடர் ஆகு கண்ணு. அம்மா உனக்கு கேசரியும்  பண்ணிவைக்குறேன். ” என ஆசையாய் வழியனுப்பினார். 

“ பெரியம்மா அப்போ எனக்கு…” என ராஜா வெளியில் இருந்து கத்த, “ உனக்கு பாயாசம் பண்றேன் கண்ணு. “  என வெளியில் வந்து அவன் கன்னம் வருடி முத்தமிட, 

“ ப்ச் இப்படி எல்லாம் பண்ணாதீங்க, எங்க கிளாஸ் பசங்க பார்த்த சிரிப்பாங்க.” என கன்னத்தை அவசரமாக துடைந்தவனை பார்த்து, 

“ போடா…நான் என் புள்ளைக்கு கொடுத்தா, அவங்க யாரு சிரிக்க, “ 

என சொல்லிக்கொண்டே திண்ணையில் அமர, அவரை பார்த்து முறைத்தவன், தம்பி எங்கே என பார்க்க, அண்ணன் சைக்கிளில் பின்னே ஏறிக்கொண்டு அமர்ந்திருந்தான். 

“ என்ன டா. ஏன் உன் சைக்கிள் எடுக்கல. “ என ராஜா புரியாமல் கேட்க,

“ அதெல்லாம் சொல்ல முடியாது. என்னைய கூட்டிட்டு போவியா மாட்டியா.“ என அழகன் கறாராக கேட்க, இருவரும் கிளம்பினர். 

  இருவரும் அவரவர் சைக்கிளில் கிளம்பவது தான், ஆனால் இன்று கடவுளிடம் டீல் போட்டதால், அழகன் அதை அப்படியே கடைப்பிடித்தான். 

      அது ஒரு மண் சாலை பாதை ,ஒற்றையாய் ஆரம்பித்து, வாய்க்கால் வழி சென்று பெரிய மண் சாலையில் சேரும். பள்ளி மாணவர்கள் காலைவேலையில் அதில் தான் சாவகாசமாக சென்றுகொண்டிருப்பர். நடப்பவர் பாதி, சைக்கிளில் பாதி என பிள்ளைகள் செல்ல, ராஜாவின் சைக்கிளும் அதில் கலக்க, சிறிது தூரம் முன்னே மலர்விழியும், அவள் கையை பிடித்து செந்தாமரையும் சென்றுகொண்டிருந்தனர்.

“ நான் நீ முடிஞ்சு வச்ச சாக்லேட்ட கண்டுபிடுசிட்டேனே. “ என செந்தாமரை அக்காவிடம் சொல்லிக்கொண்டு வர, மலர்விழி பட்டு பாவாடை சட்டையில் கொழு கொழுவென இருக்க, பால் நிற எழில் முகத்தில் சிறிய கோபுர போட்டு வைத்து, காதில் ஜிமிக்கி, இரண்டு கைகளிலும் நிறைய வண்ண வளையல்கள், குண்டு மல்லிச்சரத்தை  பிறை போல இரட்டை சடையில் சூடி, அதில் ஒரு ரோஜாவும் வைத்து நடந்து செல்ல, அவள் அருகில் இரட்டை குதிரைவால் போட்டு வெள்ளை ரிப்பன் கட்டி, அதில் ஒற்றை ரோஜாவை ஒரு பக்கம் சூடி, வெள்ளை நிற சட்டை, நீல நிற பாவாடை அணிந்து, கோதுமை நிறத்தில் செந்தாமரை பளிச்சென்ற அழகு முகத்தில் வட்ட பொட்டு வைத்து,  மெலிவாய் இருந்த உடல் மேல் பள்ளி சீருடை நிற்காமல் அதற்கு அங்கொன்றும் இங்கொன்று ஊசி குத்தி நிறுத்திருக்க, இருவரும் சிரித்தபடி நடந்துக்கொண்டிருந்தனர்.

       ராஜா வீட்டில் இயல்பாக இருப்பான் ஆனால் வெளியில் ஒரு அமைதி புறா, அடக்கம் என்றால் அவனிடம் தான் இ‌எம்‌ஐ போட்டு வாங்க வேண்டும், வெளியில் நிறைய பேச்சே இருக்காது, அதனால் பெரிய நண்பர்கள் வட்டம் கிடையாது. மிக சிறிய அளவே. ஆனால் தம்பி அப்படி இல்லை. நண்பர்கள் மிக அதிகம். 

      ராஜா சைக்கிளில் மலர்விழியை கடந்து செல்ல, அழகன் பின்னே திரும்பி பார்க்க, அவனை கண்டு மலர்விழி சிரிக்க, செந்தாமரை கண்களில் ஃபயருடன் அவனை முறைத்துப் பார்த்திருந்தாள். 

    மலர்விழியை பார்த்து சிரித்தாலும், செந்தாமரையின் ஃபயரில் எண்ணெய் ஊற்ற நக்கலாக அவளை பார்த்து சிரித்திருந்தான் அழகன்.     

“ அண்ணா நிறுத்து…என் கிளாஸ் மலர் வருது…நான் பேசிட்டு வரேன். “ என மலர்விழியை பார்த்துக்கொண்டே சொல்ல, “ பேசாம வாடா பொம்பள புள்ள கூட வெளியில என்ன பேச்சு. “ என தம்பியை அடக்கி கொண்டே சைக்கிளை நிறுத்தாமல் செல்ல, அண்ணனை கண்டுக்கொள்ளாம், ஓடும் சைக்கிளிலிருந்து அப்படியே இறங்க, ராஜா தட்டு தடுமாறி .நிறுத்தியவன், தம்பியை திரும்பி முறைக்க, 

“ அண்ணா உன் பயோலஜி டிராயிங் விஷயமா தான் பேசபோறேன்…” என அவனிடம் ஒரு கட்டையை போட்டு அவனை நிறுத்தியவன், ராஜா பதில் பேசும் முன் இருவரையும் பார்த்து நடந்தான். 

    அவன் நடையிலே ஒரு துள்ளல் இருக்க, ‘ இன்னைக்கு என்ன ஒரண்ட இழுக்கபோறான், இவன் கிட்ட கேர்ஃபுல்லா இருக்கணும். காட்டு பய ‘ என மைண்ட் வாய்ஸ் செந்தாமரைக்குள், கூடவே கூர்மையான பார்வையும் அவன் மேல். 

இவர்களிடம் புன்னகையுடன் வந்தவன்,

“ மலரு… ஹாப்பி பர்த்டே..” என வாழ்த்தி கை கொடுத்துவிட்டு “ இந்நேரம் ஸ்கூல்க்கு போயிருப்ப…இன்னைக்கு என்ன லேட்டா… ? “ என இவன் மலரை பார்த்துக் கேட்க, 

‘ உனக்கு சொல்லணும்னு இல்ல டா டால்டா. ‘ என தாமரை நினைக்க, மலரோ, “ தாங்க்ஸ் அழகா…எப்படி கண்டுபுடுச்ச…இந்தா சாக்லேட். “ என பையில் முன்பக்கம் இருந்த சாக்லேட் டப்பாவை அவனிடம் நீட்டினாள். 

 ‘ லூசு அக்கா…இன்னைக்கு கலர் டிரஸ் போட்டா பர்த்டேனு கூடவா கண்டுபிடிக்க மாட்டாங்க…இந்த அக்காவை வச்சிக்கிட்டு.’  என தாமரை மனதுக்குள் தலையில் அடித்துக்கொண்டாள். 

   கன்னக்குழியுடன் சிரித்து மலரிடம் இருந்து சாக்லேட் ஒன்றை எடுத்தவன், “ தாங்க்ஸ் மலரு…நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. “ என இயல்பாய் சொல்ல, 

“ அப்படியா…நிஜமாவா…உன்ன விடவா.. ” என ஆர்வமாய் கேட்டவள் தன் உடையை தானே குனிந்து பார்க்க, சிகப்பும் மஞ்சளும் கலந்த பட்டு பாவாடை சட்டையில் அழகாய் பொம்மை போல் இருந்தாள். 

இந்த சமயம் தாமரை மலரின் கையை ரகசியமாய் சுரண்ட, மலர் அவனை பார்த்து சிநேகமாய் சிரித்துவிட்டு மெல்ல தங்கையின் பக்கம் குனிய, 

” நெஜமாவே நீ அவன விட அழகு தான்…இத போய் அந்த காட்டு பய கிட்ட கேப்பியா ? ” என ரகசியமாக கிசு கிசு குரலில் சொல்ல, அவளை ஓர விழியால் கண்டிக்கும் பாவனையில் பார்த்த மலர், ” அவனது சாமி பேரு தாமர, அப்படி எல்லாம் சொல்லாத, கன்னதுல போடு. இன்னைக்கு வேற உனக்கு ரிபோர்ட் கார்ட் தராங்க, அப்புறம் மார்க் குறஞ்சிட போகுது ” என கொஞ்சம் சீரியஸாக  சொல்ல, சின்னவள் அப்படியும் இருக்குமோ என நினைத்து கன்னத்தில் தப்பு போட, அதை பார்த்து அழகன், 

” என்ன சொல்றா லோட்டஸ்சு…” என தாமரையை பார்த்துக்கொண்டே மலரிடம் கேட்க, அவள் பதில் சொல்லும் முன் கோவமாக அவனை பார்த்த தாமரை, ” என்னைய லோட்டஸ்சுனு உன் ஃப்ரெண்ட் கூப்பிட கூடாது ” என அவனை பார்த்து கண்கள் உருட்டிச் நேராக சொல்ல,

” அப்படினு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன. சரி இனிமே பொந்துனு சாரி செந்தூனு கூப்பிடுறேன். ” என வேண்டுமென்றே ஆழகன் குறும்பாய் சொல்ல, இப்போது மிகவும் சூடேறிய தாமரை, “ அப்புறம் நானும் உன் ஃப்ரெண்ட்ட  பனைமரம்னு கூப்பிடுவேன். “ என அக்காவை பார்த்துச் அவளிடம் பஞ்சாயத்தை கூட்ட, மலர்விழி கலவரமாக இருவரையும் பார்த்திருந்தாள். 

அழகனுக்கு உள்ளே பற்றினாலும் குரலை அமைதியாகவே வைத்து,

 “ இன்னொரு தரம் சொல்லு, நீ கிளாஸ்ல இருக்கும் போது உன் மேல கரம்பான்பூச்சிய புடிச்சு போட்டுறேன்.” 

என விளையாட்டுக்கு சொல்வது போல் புன்னகையுடன் தாமரையிடம் சொல்லிவிட்டு, அவளை அத்தோடு விட்டு மலரிடம் திரும்பி, 

“ மலரு, கிளாஸ்ல இன்னைக்கு லீடர் செலக்ட் பண்ண போறாங்க. எப்படியும் நம்ப கிளாஸ்ல எல்லார்த்தையும் யாராருக்கு சப்போர்ட்டுனு கை தூக்க சொல்லுவாங்க, நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவியா. “ என நடு சாலையில் கேன்வாஸில் இறங்க, தாமரை மைண்ட் வாய்ஸோ, 

‘ இவன் விளையாட்டுக்கு எல்லாம் சொல்லல, நிஜமாவே கரம்பபான் பூச்சி புடுச்சு போட்டாலும் போடுவான், ஆனா மூஞ்ச பாரு எப்படி நல்ல புள்ள மாதிரி வச்சிருக்கான். ‘ என அவன் முகத்தை ஆராய்ந்துக்கொண்டு இருந்தாள்.  

    “ உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் அழகா. நான் உன் நேம் சொல்லும் போது கை தூக்குறேன்.” என மலர் உடனே ஒத்துக்கொள்ள, 

“ தாங்க்ஸ் மலரு…கிளாஸ்ல பார்க்கலாம்.” என சொல்லி, “ பை பொந்து சாரி செந்தூ…” என தாமரையை டென்ஷன் ஆக்கிவிட்டே அங்கிருந்து திரும்பினான். அழகன் இன்னும் அத்தனை உயரம் வளரவில்லை, ஆனால் அவன் உச்சி சிகை மட்டும் நெட்டாய் நின்றிருக்கும், அவனை போலே அடாங்க முடி அது. அதை வைத்து நண்பர்கள் கேலி செய்ய, சில சமயம் முகத்தை சுருக்குவான். அதை வைத்து இன்று தாமரை பேசவும் இவனும் அவளை பேசிவிட்டான்.

“ அவன் மட்டும் என்னைய பொந்துனு கூப்பிடுறான், நான் அவன பனைமரம்னு கூப்பிட்டா, என் மேல கரப்பான்பூச்சி புடுச்சி போடுவானா, 

அவன் மட்டும் அப்படி பண்ணட்டும் அவன் மூஞ்ச்செல்லாம் கலர் பெயிண்ட்  அடிச்சிடுவேன். 

நீ அவனுக்கு லீடர் ஆக கை தூக்குவியா. நீ மட்டும் அப்படி பண்ணா நான் உன் கூட பேசவே மாட்டேன். “ என தாமரை முகத்தை உர்ரென வைக்க, மலர் தான் இருவர் நடுவிலும் சிக்கிக்கொண்டாள். 

நண்பர்கள் சில பேர் அவனை வம்பிழுக்க அப்படி கூப்பிட்டு தாமரை கேட்டிருக்கிறாள். அதை சொன்னால் அவனது முக மாறுதலையும் கவனித்திருக்கிறாள். அதான் அப்படி சொல்லி பார்த்தாள், அதற்கு அவன் இப்படி எதிர்வினையாற்றுவான் என தாமரை நினைக்கவில்லை. செல்லும் அவனை ஃபயருடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் தாமரை.

      எல்லாரும் பள்ளிக்கு சென்று அவரவர் வகுப்பில் உட்கார, தாமரைக்கு மட்டும் எங்கே அழகன் வந்து தன் மேல் கரம்பான்பூச்சியை போட்டுவிடுவானோ என அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வகுப்புகளை கவனிக்க, காலை வேளையில் அனைத்து வகுப்புகளும் வேகமாய் முடிய, இடைவெளி வந்தவுடன் செந்தாமரை வேகா வேகமாக கீழே ஓடி மலர்விழியின் வகுப்பின் அருகே நின்று ஒதுங்கி மறைந்தும் மறையாமல் ஓர ஜன்னல் வழியே உள்ளே பார்க்க, வகுப்பே பரபரப்பாக இருந்தது. மலர் அவளிடம் சொல்லியிருந்தாள் இடைவேளையில் தான் லீடர் தேர்வு என, மூச்சு வாங்க தாமரை சுவற்றுடன் ஒட்டி நின்றுக்கொண்டாள்.

     ” ஸ்டூடண்ட்ஸ் இப்போ லீடர் செலக்ட் பண்ணபோறோம். யார் யார் நிக்குறிங்க ” என ஆசிரியர் கேட்க, அழகனுடன் சேர்த்து மூன்று பேர் எழுந்து நின்றனர். கரும்பலகையில் அவரவர் பெயர் எழுதி, 

” யார் யாருக்கு சப்போர்ட்னு நில்லுங்க. ” என சொல்ல, அவரவர் எழுந்து நின்றனர். அதில் அழகனுக்காக மலர்விழியும் நின்றிருந்தாள். ஆனால் அழகனை மட்டும் பார்த்திருந்ததால் மலரை கவனிக்கவில்லை தாமரை. அழகனுக்கும் இன்னொரு மாணவன் சக்திக்கும் சரிவிகிதம் இருக்க, மற்ற மாணவனுக்கு சற்று குறைவாகவே இருந்தது. அதனால் அந்த மாணவனும் அவன் ஆதரவாளர்களும் அமர்ந்துவிட்டனர். 

” உட்கார்ந்தவங்க இப்போ ஏற்கனவே நின்னவங்களுக்காகவும் கை தூக்கலாம். அப்போ தான் யாராவது ஒருத்தர் செலக்ட் பண்ணலாம் ” என சொல்ல, அமர்ந்த மாணவர்கள் அவரவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். 

வெளியில் நின்றிருந்த செந்தாமரை கண்களை இருக்க மூடி, 

‘ சாமி… பிளீஸ், பிளீஸ், இந்த காட்டு பய லீடர் ஆக கூடாது. 

அவன் கிட்ட இருந்து இந்த கிளாஸ்ஸ காப்பாத்திரு, சும்மாவே ரொம்ப பேசுவான், லீடர் ஆயிட்டா என்னைய ஓவரா டார்ச்சர் பண்ணுவான்.

பிளீஸ் சாமி…காப்பாத்துங்க ‘ என அவசரமாக வேண்ட, 

‘ சாமி என்னைய எப்படியாச்சும் லீடர் ஆக்கிடு. நான் சொன்னபடி என் திங்க்ஸ்லாம் உனக்கு விளையாட கொடுப்பேன். ‘ என அழகன் மனதுக்குள் தீவிரமாக வேண்ட, அவன் முகம் முழுவதும் ஆர்வத்தை காட்டிய படி நின்றிருந்தான். 

மூன்று பேர் கை தூக்கி அவரவர் விருப்பம் சொல்ல, ஆசிரியர் கரும்பலகையில் கை தூக்கியவர் கணக்கை எழுத,  

” நம்ப கிளாஸ் லீடர் செலக்டட். ” என அவர் மாணவர்களை திரும்பி பார்த்து புன்னகையுடன் சொல்ல, ” போர்டு பார்த்து யாருனு சொல்லுங்க. ” என கேட்க, அப்போதும் தாமரை கண் திறக்கவில்லை, கடவுளிடம் வேண்டியபடியே இருந்தாள். 

   கரும்பலகையில் இருந்த எண்களை பார்த்த மாணவர்கள் ஒரே குரலாய், 

   ” காட்டழகிய சிங்கர். ” என உற்சாகமாய் சத்தமிட, செந்தாமரை அதிர்ந்து கண் விழித்து பார்த்தாள். 

வகுப்பு மேடை மேல் ஏறி இரண்டு கைகளையும் தலை மேல் தூக்கி வணங்கியபடி பக்கா அரசியல்வாதி போஸ்ஸில் நின்று சிரித்தபடி முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தான் அழகன் என்ற காட்டழகிய சிங்கர்.   

Advertisement