Advertisement

                        முன் பனி காலம்

       காலை வேலை இளம் சூரியனின் ஒளி வீச, மலர்ந்து விரியும் பூவின் இதழ் போல் ஒரு சிறு பெண் போர்வையை விட்டு எழுந்தாள். தஞ்சையின் குளிர் காற்று இன்னும் இருக்க, அப்படியே இன்னும் தூங்க வேண்டும் போல் ஒரு எண்ணம், இப்போது நன்றாக போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டாள்.

      அன்று புதிதாய் மலர்ந்த பூவாய் இன்னும் ஒரு சிறு பெண், அருகிலிருந்த வீட்டிலிருந்து இந்த வீட்டிற்கு ஓடி வந்து, 

“ அகிலா சித்தி, பாப்பா எழுந்துடுச்சா. “ என்று ஆர்வமாய் கேட்டு கொண்டு வர, 

” இன்னும் இல்ல மலரு. ” என குரல் கொடுத்துக் கொண்டே பின் தோட்டதிலிருந்து வீட்டின் உள்ளே வந்தார் அகிலாம்பிகை. பளிச்சென பள்ளி செல்ல தயாராகியிருந்தவர், வாசலில் ஊர் மக்கள் சில பேர் அவரின் கணவர் செல்வத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அங்கே செல்லாமல் நேராக அவர் மகள் அறைக்கு மேல செல்ல, அவர் பின்னே அவரின் புடைவையை பிடித்து அதன் துணியில் சிறு சாக்லேட் ஒன்றை வைத்து முடிபோட்டபடி ஏறி வந்தாள் மலர்விழி. 

       அவர்களது தஞ்சையின் மத்திய பகுதியில் விரிந்திருக்கும் ஒரு சிறிய ஊர். அழகிய நிலப்பரப்பில் காவிரி பாய்ந்தோட, பசுமையாக ஊரெங்கும் பயிர் செழித்திருந்தது. அங்கே மக்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அந்த ஊரில் இரண்டு பேரிடம் தான் முக்கியமாக மக்கள் சென்று பேசுவர். அதில் ஒருவர் செல்வம். அங்கே இருக்கும் ஒரு பிரதான கட்சியின் உறுப்பினர். இன்னொருவர் பெருவுடையப்பன், மாற்று கட்சியின் உறுப்பினர். இவர்கள் இருவரும் தான் அங்கே மக்கள் நலன் சார்ந்து ஏதேனும் செய்வர். கட்சி வேறாக இருந்தாலும் ஒருவர் மீது மற்றவருக்கு மரியாதை உண்டு. அதனால் மக்களும் புரிந்து நடந்து கொள்வர். 

     அகிலாவும், மலரும் மேல வர, சூரிய கதிர்கள் முத்தமிட்டும் இன்னும் போர்வைக்குள் இருக்கும் சின்ன பெண் எழவில்லை. உள்ளே வந்த மலர்விழி கட்டினில் மேல் அமர்ந்து போர்வையை இழுத்தாள். 

“ ஏ தாமர எந்திரி. “ என இன்னும் பலம் கொண்டு போர்வையை இழுக்க, போர்வை இன்னும் இறுக்கிக்கொண்டது. அகிலா அருகில் அமர்ந்து போர்வையின் மேல் தட்டி தடவி போர்வைக்குள் இருக்கும் நெற்றியை கண்டுபிடித்து போர்வை மேல் முத்தம் வைக்க, போர்வைக்குள் இருந்த சிறிய முகம் வெளிபட்டது. 

“ குட் மோர்னிங் தாமரை “ என மலர் கட்டிக்கொள்ள, கலைந்த தலை முடியுடன் எழுந்து மலர்விழியை கட்டிக்கொண்டு, “ குட் மோர்னிங் ஃப்ளவர் அக்கா. “ என முத்தமிட்டாள் செந்தாமரை.  

    அகிலாவும் செந்தாமரையும் சேர்ந்து மலருக்கு ஒரே நேரத்தில் ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் வைத்து, “ ஹாப்பி பர்த்டே ” என வாழ்த்த, மலர்விழியின் முகம் ஸ்ட்ராபெரி கிரீம் பூசியது போல ஆகிவிட்டது.  

    மலர்விழி, செந்தாமரை இருவரும் பெரியப்பா சித்தப்பா மக்கள். மலர்விழியின் தந்தை காசிநாதன் மனைவி தேவியுடன் அருகே உள்ள வீட்டில் தான் வசிக்கிறார். வீடு தான் தனி மற்றபடி இரு குடும்பமும் நெருக்கமாய் தான் இருந்தனர். 

    அகிலா அங்கே அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். காலையில் செந்தாமரையை பள்ளிக்கு தயார் செய்த பின், செல்வத்திடம் விட்டு பள்ளிக்கு கிளம்பிவிடுவார். அவரது பள்ளி கொஞ்சம் தொலைவில் உள்ளது. ஆனால் செந்தாமரையும் மலர்விழியும் பள்ளிக்கு செல்லும் வரை தேவி பார்த்துக்கொள்வார். அகிலாவும் தேவிக்கும் கருத்து வேறுபாடு  உண்டென்றாலும் குடும்பத்துக்காக அனுசரித்து போவர். குழந்தைகள் விஷயத்தில் அகிலாவும் தேவியும் ஒன்று போல் தான் நடந்துக்கொள்வர்.

      காசிநாதன் அரசியலில் இல்லை, சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருக்க, ஊருக்குள் தேங்காய் வியாபாரம் பார்க்கிறார். அவர் உண்டு தொழில் உண்டு என்று இருப்பவர். தம்பியின் அரசியல் விருப்பத்தில் தலையிட மாட்டார். அவரின் தம்பி செல்வம் அரசியலில் இருந்தாலும் மளிகை கடை வியாபாரமும், வாழை தோப்பும் பார்க்கிறார்கள். அந்த ஊரில் அவர்களது உள்ளூரிலே இருக்கும் கொஞ்சம் பெரிய கடை.

      ஊருக்குள் மக்கள் ஏதாவது தண்ணீர் சேமிப்புகாக தொட்டி வேண்டும், தரமான சாலை வேண்டும் என்றால் செல்வத்திடம் தான் வந்து பேசுவர், அதற்கு இரண்டு காரணம். ஒன்று இப்போது அவர் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்காக செய்யவேண்டும் என்று செய்வார். மற்றொன்று அவர் செய்தால் எதிர் கட்சியான பெருவுடையப்பனும் ஒன்றும் சொல்ல மாட்டார். 

    பெருவுடையப்பன் முன்பு பன்மடங்கு ஊருக்கு செய்திருந்தாலும்  இப்போது அவரால் செய்ய முடிந்ததை மட்டும் செய்வார், அரசாங்கம் அனுமதி கொடுக்கா விட்டால் மிகவும் மெனக்கெட மாட்டார். அவரின் குடும்ப சூழ்நிலை அவரை முழுமையாக அரசியல் பக்கம் செல்ல விடாமல் செய்துகொண்டிருந்தது. அதனால் செல்வம் மீது அவருக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

     செந்தாமரை கட்டினிலிருந்து இறங்கி அருகில் இருந்த மேஜை மேலிருந்த ஒரு ஓவியத்தை கொடுக்க, மலர்விழியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. 

    அந்த ஓவியத்தில் ஒரு ரோஜபூவின் நடுவே மலர்விழியின் முகம் மட்டும் சிரிப்புடன் இருப்பது போல் அமைந்திருந்தது. அந்த பெரிய ரோஜா ஓவியத்தில் மேல் உண்மையான ரோஜா இதழ்கள் ஒட்டாபட்டிருக்க, நடுவே இருந்த மலர்விழியின் முக ஓவியத்தின் மீது வர்ணங்களுக்கு பதிலாக அந்தந்த நிறத்திற்கு ஏற்ப ரோஜா இதழ்கள் நேர்த்தியாய் ஒட்டப்பட்டு அழகாய் மிளிர்ந்தது. 

   அந்த ஓவியத்தை ஆர்ச்சர்யமாய் பார்த்த மலர்விழி தன் சித்தியிடம் காட்ட, அவரும் மகிழ்ச்சியாய் பார்த்திருந்தார். 

“ சூப்பர்ரா இருக்கு தாமர…என் செல்ல குட்டி. “ என மலர்விழி அவளுக்கு முத்தமிட்டவள். “ சித்தி உங்களுக்கு சாக்லேட் கொடுத்துட்டேன்…தேடி எடுத்துக்கோங்க. “ என கத்திக்கொண்டே அந்த ஓவியத்தை தேவியிடம் காட்ட கீழே விரைந்து ஓடினாள்.

“ தாமர அவ சாக்லேட் கொடுத்துட்டேன் சொல்றா…எங்க வச்சுருப்பான்னு தெரில டா. “ என அகிலா சொல்ல, 

“ அத நான் கண்டுபுடிக்குறேன் மா… நீங்க என்ன பூ கைல வச்சிருக்கிங்க. “ என அகிலாவின் மூடியிருந்த கையை பிடித்து அருகே இழுத்து வாசம் பிடிக்க, கைக்குள் இருந்து ரோஜாவின் வாசம் வர, அதை பிரித்து பார்த்தாள், அதில் இரண்டு இளம் ஆரஞ்சு நிற ரோஜா இருக்க, 

“ மா இன்னைக்கு என்ன ரெண்டு மட்டும் இருக்கு. உனக்கும் பெரியம்மாவுக்கும் இல்ல. “ என கேட்க, 

“ திருட்டு பூனை…நீ தான மத்த ரோஜா எல்லாம் எடுத்து வந்து உன் டிராயிங்க்கு யூஸ் பண்ணிருக்க. “ என கன்னத்தை கிள்ள, 

“ ஆமால மா, அத மறந்துட்டேன் மா…ரோஜா ஸ்மெல் கூட கேசரி ஸ்மெல்லும் உன் கைல இருந்து வருது. “ என  கூடுதல் தகவல் சொல்ல,

“ ஹா ஹா ஆமா டா, அம்மா கேசரி பண்ணிருக்கேன், அக்காக்கு இன்னைக்கு கொடுக்கலாம்னு பண்ணுனேன். சரி குளிச்சிட்டு கீழ வா. “ என சொல்லி அறையை விட்டு வெளியேற,

“ மா நா பூனை இல்ல மா… நான் கிளி. “ என மேலிருந்தே கத்தியவள் அவளது மேஜை அருகே சென்று அதன் மேலிருந்த கின்னத்திலிருந்த சோள முத்துக்களை எடுத்து அங்கே இருந்த ஜன்னல் வழியாக தன் சின்ன கையை நீட்டி ஓட்டின் மேல் தளம் மீது தூவ, இரண்டு பச்சை கிளிகள் வந்து கொத்தி உண்ண ஆரம்பித்தது. “ என் கிளி வந்துடுச்சு. “ என உற்சாகமாக கத்தியவள், குளிக்க சென்றாள்.      

    பெருவுடையப்பனும் அவரது தம்பி பாண்டியனும் கூட்டுக்குடும்பமாய்  அதே ஊரில் வசிக்கின்றனர். பெருவுடையப்பனுக்கும் அவரது மனைவி கௌரிக்கு ஒரு மகன். இப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.  தம்பி பாண்டியனுக்கும் அவரது மனைவி வள்ளிக்கு ஒரு மகன், அவன் முதலில் பிறந்தலால் இப்போது அவன் பதினொன்றாம் வகுப்பு. அவர்களது ஊரில் நன்கு தெரிந்த குடும்பம். இப்போது அவர்கள் வீட்டு பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.

 “ கண்ணு ராஜா, தம்பி குளிச்சிட்டானா பாரு. அப்படியே கையோட கூடிட்டு வா. “ என கௌரி குரல் கொடுக்க, வள்ளியின் மகன் ராஜேந்திரன், பின்னால் இருந்த குளியல் அறை பக்கம் சென்றான்.

     ராஜேந்திரனை பார்த்தால் பதினொன்றாம் வகுப்பு என சொன்னால் நம்ப முடியாத தோற்றம், காலேஜ் முதலாம் ஆண்டு என்று சொன்னால் நம்புவார்கள். தம்பியிடம் மட்டும் தான் அதிகாரம், மற்ற இடங்களில் எல்லாம் தன்மையாய் நடந்துக்கொள்வான்.   

    ராஜா குளியல் அறை கதவை தட்ட, அது தானாக திறந்து கொண்டது.

‘ உள்ள இந்த பையன் என்ன பண்றான். ‘ என நினைத்துக்கொண்டே கதவை திறக்க, அங்கே 

“ முக்காலா… 

முக்காபுலா…

லைலா 

ஓ லைலா… ”

என பாடிக்கொண்டே ஒரு பதினாலு வயது மதிக்கதக்க ஒரு சிறுவன் தண்ணீரை எடுத்து தலை மேல் ஊற்றிக்கொண்டு உல்லாசமாக கை கால்களை முண்ணூற்றி அறுபது டிகிரிகளிலும் வீசி ஆடிக்கொண்டு இருந்தான். 

“ அழகா…டேய்…மணி என்ன ஆகுது…டான்ஸ் அடிக்கிட்டே இருக்க, சீக்கிரம் வா டா. குளிக்கும் போது கதவ தாப்ப போட மாட்டிய டா கிறுக்கு பயலே …ச்ச ச்ச…பேட் பாய் டா நீ “ என பதினேழு வயது ராஜா திட்டிகொண்டிருந்தான். 

“ நானா உன்ன கதவ திறக்க சொன்னேன்…நீயா வந்த…வாண்டெட்டா நான் குளிக்கரத பார்த்துட்டு…இப்போ என்ன சொல்ரியா டா அண்ணா…

நீ வேணா சீக்கிரம் ஸ்கூல்க்கு போ… அப்படியே நான் குளிக்கறதுல பிஸியா இருக்கேன்னு ஒரு லீவ் லெட்டர் எழுதி என் கிளாஸ்ல சுதா கிட்ட கொடுத்துடு…” என சொல்லிக்கொண்டே சோப் போட, காண்டான ராஜா குளியல் அறை உள்ளே சென்று அங்கே இருந்த சின்ன அண்டாவிலிருந்த தண்ணீரை எடுத்து தம்பியின் தலை மேல் ஊற்ற, கோபம் கொள்ள வேண்டிய அழகனோ, ஷவர் திறந்து விட்டார் போல் ஜிலு ஜிலு என தலையை காட்டி குளித்துக்கொண்டிருந்தான். 

“ ச்சை உனக்கு ரோசமே இல்லையா டா…டக்குனு குளிச்சிட்டு வரமா… டான்ஸ் ஆடி குளிக்குற நீ… வெளிய வா நீ… அப்பா கிட்ட சொல்றேன். “ என பயம் காட்ட,

“ சித்தப்புக்கு எல்லாம் பயந்தா வாழ முடியுமா…” என எகத்தாலமாக சொல்லியவன்,

“ தலைல தண்ணி மட்டும் ஊத்துன போதுமா…இடுப்புல துண்டு யாரு கட்டிவிடுவா…அதையும் நீயே பண்ணிரு. “ என தலை முடியை ஒற்றை கையால் சிலுப்பி ராஜாவின் முகத்தில் தண்ணீர் தெறிக்கும் படி செய்தவன், குறும்பாக புன்னகைக்க, 

“ நீ வீட்ல பண்ற சேட்டையெல்லாம் உன் கிளாஸ் மிஸ் கிட்ட சொல்லி உன்னை முட்டிக்கால் போட வைக்கறேன் டா…அப்போ தான் திருந்துவா நீ. “ என சொல்லிக்கொண்டே அங்கே கதவின் மீது தொங்கிய துண்டை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு தம்பியின் இடுப்பில் கட்ட, 

“ ஆஆஆ…” என அழகன் கத்த 

“ என்ன டா.. “ ராஜா என்னமோ ஏதோ வென கண்ணை திறந்தான். 

“ என் அரஞாகொடியில அழுத்தி கட்டிட டா…” என மூஞ்சை சுருக்கியவன் கம்ப்ளைண்ட் சொல்ல, 

“ ச்சை லூசு பயலே…நான் தான் கண்ண மூடிட்டுருந்தேன்ல…நீ பார்த்து சரியா கட்டமாட்டா. எல்லாம் அம்மா கொடுக்கற இடம், ஒரு வேலை ஒழுங்கா செய்யறது இல்லை. “ என திட்டிக்கொண்டிருந்தாலும் கை தானாக தம்பியின் துண்டை சரி செய்தது. 

    ராஜா, தம்பியின் கழுத்தை பிடித்து தர தர வென உள்ளே இழுத்து வந்து, அவர்களது அறைக்குள் சென்றான். 

“ உன்னால என் டிரஸ் எல்லாம் ஈரம்…நான் வேற மாத்தணும்.. அடக்கமா குளிக்க மாட்டியா டா நீ… சீக்கிரம் ஸ்கூல் டிரஸ் போடு…மணி வேற ஆகிட்டு இருக்கு, உன்ன வேற ஸ்கூல்க்கு இழுத்துட்டு போகணும்…சீக்கிரம் டிரஸ் பண்ணு டா வெண்ண. ” என திட்டிக்கொண்டு ராஜா வேற உடைக்கு மாறி வரவேற்பறைக்கு சென்றான்.

அண்ணனுக்கு இருக்கும் அவசரம் தம்பிக்கு இல்லை போலும், சாவகாசமாக உடைக்கு மாறி, முகத்திற்கு ஸ்பெஷலாக கிரீம் போட்டு, ஒரு கர்சீப்பி‌ல் ஒரு சிறிய டம்ளர் அளவு பவுடர் கொட்டியவன், முகம் முழுவதுக்கும் ஒத்தி ஒத்தி எடுத்து பின்பு உடல் முழுவதும் பவுடர் பறக்க அடித்தான். அழகன் இத்தனை ஒப்பனை செய்யாவிட்டால் கூட அழகாய் தான் இருப்பான், பெயருக்கு ஏற்றார் போல் வெறும் அழகன் இல்லை, பேரழகன்.     

இறுதியாக சீப்பை எடுத்து ஒரு பதினைந்து நிமிடம் இப்படியும் அப்படியும் தலைவாரி ஒரு வழியாக வெளியில் வந்தான். அவன் வந்ததை பார்த்ததும், பூஜை அறையில் இருந்த வந்த வள்ளி, அவனின் நெற்றியில் திருநீரிட்டு,

 “ போய் சாமி கும்பிட்டு வந்து சாப்பிடு கண்ணு. “ என சொல்லி அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சியவர், சமையல் அறைக்கு சென்றார். பூஜை அறைக்கு சென்றவன், சாமி கும்பிட்டு,

 ‘ எல்லோரும் நல்லா இருக்கணும்….பட் இன்னைக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நல்லா இருக்கணும். கிளாஸ்ல லீடர் செலக்ட் பண்ண போறாங்க. நான் செலக்ட் ஆகணும். 

அப்படி நான் லீடர் ஆயிட்டா, என்னோட கேரம் போர்டு, செஸ் போர்டு, சைக்கிள் எல்லாம் உனக்கு ஒரு நாள் விளையாட தரேன். ‘ 

என கடவுளிடம் டீல் போட்டவன், நேராக வரவேற்பறைக்கு வர, வெளியே நின்று அவனது நாய்க்குட்டி சத்தமிட, அதனை பார்க்க வெளியே சென்றான். அழகனை பார்த்ததும் துள்ளிக்குதித்து அவனது கால்களை நக்க, அதனை ஆசையாக தடவிக்கொடுத்தவன், “ வீரா…நான் இன்னைக்கு கிளாஸ் லீடர் ஆகணும். நீ எனக்கு விஷ் பண்ணு. “ என அதன் முன்னங்கால் ஒன்றை பிடித்து இவன் குழுக்க, அது அவன் கையை நக்கி கொடுத்தது. அழகன் முகத்தில் முழு புன்னகை விரிய, அதை தடவி கொடுத்துவிட்டு எழுந்து சமையல் அறை சென்றான்.    

    அங்கே ராஜா ஓரத்தில் இருந்த டைனிங் டேபிள் மேல் அமர்ந்து மூன்றாவது முட்டை தோசையை சாப்பிட்டு கொண்டிருந்தான். இவன் சென்று அமர்ந்து, “ வள்ளிமா எனக்கு முட்டை இல்லாத தோசை தாங்க. “ என இவள் சொல்ல, ராஜாவிற்கு புரை ஏறிவிட்டது. இருக்காதா பின்னே, எப்போதும் முட்டை தோசை என்றால் வகைவகையாக அடுக்குபவன், இன்று இவ்வாறு சொல்ல புரை ஏறிவிட்டது.

“ அழகா நாக்குட்டிய தொட்டல, முதல கைய கழுவு. “ என வள்ளி தோசை வார்த்துக்கொண்டே கண்டிப்புடன் சொல்ல, அதை தட்டாமல் செய்தவன், அங்கே மர டேபிளளில் அடுக்கி வைக்கபட்டிருந்த வாழை இலை ஒன்றை கையோடு எடுத்து வந்து அமர்ந்தான். 

” டேய் என்ன விஷயம், இன்னைக்கு மேக்கப் எல்லாம் ஓவரா இருக்கு. சும்மாவே ஐஞ்சு வெரைட்டி தோச அசால்ட்டா முழுங்குவ, அதுவும் இன்னைக்கு முட்ட தோசை வேணாம் சொல்ற. என்ன டா ” என தம்பியை அறிந்தவனாய் ராஜா ஒற்றை புருவத்தை உயர்த்தி சந்தேகமாக கேட்க, 

” நான் இன்னைக்கு லீடர் ஆகணும்னு சாமிக்கிட்ட அப்ளிகேஷன் கொடுத்துருக்கேன். சோ அவர நைஸ் பண்ண ஒன் டே எக்லெஸ் தோச சாப்பிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன் அண்ணா. ” என கண்களில் ஆர்வம் மின்ன சொல்ல, 

“ முதல மேக்கப்ப குறை டா…பார்க்க சுண்ணாம்பு டப்பா மாதிரி இருக்க, இதுல இன்னும் பாயிண்ட் அடிச்சு வச்கிருக்க… ஸ்ப்பா என்னால முடியல டா” என ராஜா அங்கலாய்த்துச் சொல்ல, 

“ டேய் அண்ணா, நீ ஆர்ம்ஸ்லாம் வச்சு பார்க்க பெரிய பையன் மாதிரி இருக்க, நான் அப்படியா, எனக்கு ஃபேஸ் மட்டும் தான் டா எல்லாரும் ஆசையா பாக்குறாங்க, அதான் இன்னைக்கு எக்ஸ்ட்ரா கோடிங்க் போட்டேன். “ என தீவிரமாய் காரணம் சொன்னான் அழகன். 

மெலிதாய் புன்னகைத்த ராஜா, “ நீயும் பெரிய பையன் ஆனா உனக்கும் ஆர்ம்ஸ் வரும் டா. அதலாம் ஒரு விஷயமே இல்ல, நீ முதல நம்ப ஸ்கூல் கபடி டீம்ல ஜாயின் பண்ணு. சும்மா உர சுத்திக்கிட்டு இருக்கறதுக்கு ஒழுங்கா பிரக்டிஸாவது பண்ணலாம் .“ என சொல்லி பின்பு, 

“ நீ என்ன பண்ணிட்டேனு இப்போ லீடர்க்கு நிக்குற ?” என வம்பிழுக்க,

” எங்க கிளாஸ்ல பசங்களுக்கு எக்ஸ்ட்ரா வாட்டர் பாட்டில் வீட்ல இருந்து எடுத்துட்டு போய், எங்க கிளாஸ் தண்ணி பஞ்சத்த தீர்த்துருக்கேன். எங்க கிளாஸ் விண்டோஸ்க்கு எல்லாம் வள்ளிமாவோட பழைய புடைவைய ஸ்கிரீன்னா நான் ரெடி பண்ணி தந்தது தான். பசங்க லீவ் போட்டா, நான் அட்டெண்டன்ஸ்ல ப்ரெசெண்ட் போட்டுருக்கேன்,

இதெல்லாம் உனக்கு தெரியும்ல. “

என அழகன் சொல்லி முடிக்கையில் வள்ளி நெய் தோசையோடு வர, மூன்று சட்னி வைத்திருந்தார். ஆனால் ராஜாவின் இலையிலோ ஒரு சட்னி தான் இருந்தது. 

” மா என்னமா அவனுக்கு மட்டும் மூனு சட்னி…எனக்கு ஒன்னு தான் இருக்கு. ” 

” நீ ஒரு சட்னினாலும் சாப்பிட்டுக்குவ… அவன் முட்ட தோசை வேண்டாம்டான் அதான் புதுசா இப்போ ரெண்டு சட்னி அரைச்சேன்…பாவம் புள்ளைக்கு வயிறு நிறையாது. மூனு சட்னி இருந்தா ரெண்டு தோசை கூட சேர்த்து  சாப்பிடுவான்ல அதான் கண்ணு. ” என சொல்லியவர், அவனது இலைக்கும் புதிதாக அரைத்த சட்னிகளை வைத்துவிட்டு அடுத்த தோசை எடுக்க விலகி சென்றார்.   

ராஜாவை பார்த்து அழகன் “ நான் கிளாஸ் லீடர் ஆகணும்னு எக்லெஸ் தோசை கேட்டதுக்கு உனக்கும் சேர்த்து ரெண்டு சட்னி கிடச்சிருக்கு. 

என்னமோ நான் என்ன பண்ணிட்டேன்னு கேட்ட, இப்போ பார் என்னால உனக்கு தான் எக்ஸ்ட்ரா டிஷ். ஹா ஹா ஹா…” என நக்கலாய் சிரிக்க,   

” பொடி பையன்… உனக்கு மூனு சட்னி கேட்குது…பொய் அட்டெண்டன்ஸ் போட்டு ஆஃப்பென்ஸ் பண்ணிட்டு, அம்மா நம் வீட்டுக்குனு புடைவைய ஸ்கிரீன்னா தெச்சு வச்சிருந்தா, அத சுட்டு போய் உன் கிளாஸ்க்கு   ஸ்கிரீன்னா போட்டுட்டு… பேச்ச பாரு… நீ எல்லாம் லீடர்ரா வந்தா கிளாஸ் உருப்படடுமா டா. ” என தம்பியின் காதை பிடித்து திருக, 

” அண்ணா இதுல உனக்கும் ஒரு நல்லது இருக்கு தெரியுமா… எங்க கிளாஸ் மிஸ் தான் உனக்கு பயோலஜிக்கு வராங்க…நீ தான் நல்லா படம் வரையாம திட்டு வாங்குவல்ல. நான் லீடர் அயிட்டா ஏன் கிளாஸ் மலர் கிட்ட சொல்லி உனக்கு படம் வரஞ்சு தரேன். 

இப்போ சொல்லு நான் லீடர் ஆகணுமா வேணாமா. ” என அடுத்த டீல் பேச, ராஜா குறு குறு என தம்பியை பார்த்தவன், அவனது காதை விட்டு கையை எடுத்தான். அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக தோசையை உள்ளே தள்ளியவன், 

” சரி சரி நீ என்னமோ ஆகி தொல… எனக்கு படம் வரஞ்சா போதும். ” என சொல்லி தட்டை கழுவ எழுந்துக்கொண்டான். 

ராஜா எழுந்ததும் மௌனமாக குறும்பாக புன்னகைத்தான், இளையவன். இடது கையால் தலை முடியை வருடிக்கொடுத்து லேசாக கலைத்துவிட்டவன், காதை நீவிக்கொண்டே எழுந்து தட்டை சிங்கில் வைக்க, வள்ளி அவன் பின்னே வந்தவர்,

” கண்ணு நம்ப சாப்பிட்ட தட்டு நம்ப தான் கழுவணும், செய் கண்ணு. ” என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியவர், ஹாலுக்கு சென்றார். அவனுக்கு எத்தனை செல்லம் கொடுத்தாலும் இது போல் பழக்க வழக்கங்களில் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். அவனும் வள்ளி சொன்னால் கேட்டுக்கொள்வான். பல நேரங்களில்  வள்ளிமா சில நேரங்களில் வள்ளி என்று தான் அழைப்பான். வள்ளி என்றால் அவனுக்கு தனி பிரியம் தான், ஆனால் பாண்டியன் சித்தப்பா என்றால் பத்து அடி தள்ளி தான் நிற்பான்.  

    

Advertisement