Advertisement

                                                                        
     “ஏய்! நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! என்ன கிறுக்கு கிறுக்கு புடிச்சுகிச்சாடி உனக்கு?!” என்று செல்லம்மா அவளை அடிக்கக் கையோங்க,
     “அடிச்சுக் கொன்னுடு! தினம் தினம் இப்படி சித்ரவதை அனுபவிக்காம ஒரேயடியா போய் சேர்ந்துடறேன்” என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதவளுக்கு டென்ஷனில் பிபி அதிகமாகி படபடப்பாய் வர, லேசாய் தள்ளாடினாள் நிற்க முடியாமல்.
     நல்லவேளையாக அருகே நின்றிருந்த ரவி, “அக்கா என்ன பண்ணுது?!” என்று அவளைத் தாங்கிப்  பிடிக்க,
     “ஐயோ தேனு! என்னடி பண்ணுது” என்று செல்லமாவும் அவளைப் பற்றிக் கொண்டார்!
     “ம்மா! ஏதோ படபடப்பா வருதும்மா!” என்றவளை பிடித்து அருகே இருந்த நாற்காலியில்,
    “உட்காரு உட்காருடி!” என்று அமர வைத்து அவர் தண்ணீர் கொடுக்க,
    மெல்லமாய் தண்ணீரை விழுங்கியவள், “ம்மா! எனக்கு ஏதோ மாதிரி பண்ணுதும்மா! ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போ!” என்று சொல்லி மீண்டும்  அவர் தோள் மீது சாய, பயந்து போன செல்லம்மா,
     “டேய் ஆட்டோ சாவியை எடுடா, அக்காவை ஒரு கை பிடி” என்று துரிதமாய் செயல்பட்டு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
     அவளைப் பரிசோதித்த மருத்துவர், “என்ன ஆச்சு?! எப்டி இவ்ளோ பிபி இன்க்ரீஸ் ஆச்சு? அதுவும் கர்ப்பமா இருக்க நேரத்துல கவனமா பார்த்துக்க மாட்டீங்களா?!” என்று சத்தம் போட,
     “அது வந்தும்மா!” என்று செல்லம்மா கண்கலங்க,
     “நல்லவேளை கொஞ்சமாதான் இன்க்ரீஸ் ஆகி இருக்கு! ரொம்ப அதிகமா ஆகி இருந்தா கர்ப்பம் கலையக் கூட வாய்ப்பிருக்கு!” என்று மருத்துவர் சொல்ல, செல்லம்மா இடிந்து போனார்.
     தேனுவும் அவர் சொன்னதில் பயந்துவிட, அவள் முகம் அப்பட்டமாய் பயத்தைப் பிரதிபலித்தது.
     “இல்லை! பயப்படாதீங்க! இனி கவனமா இருக்கணும்னுதான் அப்படி சொன்னேன்! இந்த மாத்திரை ஒரு ரெண்டு நாள் சாப்பிடுங்க! அதுக்கப்புறம் செக்அப் பண்ணிட்டு பிபி இருந்தா கண்டினியு பண்ணிக்கலாம்” என்றார்.
     “ம்!” என்றவள், மெல்ல எழுந்து, “குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்காதே!” என,
     “ஒன்னும் இல்லை! யு ஆர் ஆல்ரைட் நவ்! மூணாம் மாசம் தொடங்கிடுச்சா?!” என்ற மருத்தவரிடம்,
    “ம் இன்னிக்குதான் டாக்டர்!” என,
     “சரி! இதுல குடுத்திருக்க அட்டவணைப்படி உணவை எல்லாம் சாப்பிடுங்க!” என்று இன்னும் சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர்.
     வீடு திரும்பிய தேனு, செல்லமாவைப் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டு, “அம்மா! தயவு செஞ்சு என்னை கொஞ்ச நாளைக்கு என் போக்குல விடு! நான் என் குழந்தையை நல்லபடியா பெத்தெடுக்குற வரைக்குமாச்சும்!” என, இதுநாள் வரை, செல்லமாவிற்கு சந்தேகமாய் இருந்த விடயம் இன்று தெள்ளத்தெளிவாய் ஊர்ஜிதமானது! பிரச்சனை இவள் ஆட்டோ ஓட்டக் கேட்டதோ இல்லை பணத்தைப் பற்றியதோ இல்லையென்று!
     ‘ஒருவேளை அன்னிக்கு மாப்பிள்ளை குழந்தை வேண்டாம்னு சொன்னதா சொன்னாளே! இப்போ இவ உண்டானதுனால ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோ என்று எண்ணியவர், அதைக் கேட்டும் விட,
     “தயவு செஞ்சு என்னை நிம்மதியா இருக்க விடும்மா! இனி அவரைப் பத்தி எதுவும் பேசி நீயே என் புள்ளைக்கு எமனாயிடாத!” என்று அவள் மனம்கசந்து சொல்ல,
     “ஐயோ ஏன்டி இப்படில்லாம் பேசுற! நான் பேசலை! இனி நான் எதுவும் பேசலை” என்ற செல்லம்மா அதன் பின் மறந்தும் அவன் பேச்சை எடுக்கவில்லை முதலில் பிள்ளை ஒழுங்காய் பிறக்கட்டும் என்று!
     எல்லாவற்றிலும் பிள்ளையின் நலன் பார்த்த தேனு, ஆட்டோ ஓட்டும் எண்ணத்தை மட்டும் கைவிடவில்லை! அவளுக்கு அவன் ரவிக்கு பீஸ் கட்டியது முதல் எல்லா கடனையும் திருப்பி அடைத்து விடவேண்டும். தங்கள் ஏரியாவைச் சுற்றி இருக்கும் இடங்களில் மட்டுமே சவாரி சென்று வந்தவள், கண்ணும் கருத்துமாய் இருந்தாள் ஆட்டோ ஓட்டும் சமயங்களில்!
     ஜெயாவும் சில நாட்கள் சொல்லிப் பாத்துவிட்டு இவள் பிடிவாதத்திற்கு முன் எதுவும் செய்ய முடியாது விட்டுவிட்டாள்.
                                 ******
     அங்கு அவள் வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல் அவன் அனுபவிக்கும் நரக வேதனை கொஞ்ச நஞ்சமல்ல!
     மூன்று நாட்களில் திரும்பி விடுகிறேன் என்று சொன்னவர்கள் ஒரு வாரம் அங்கே தங்கிவிட்டு வருகிறோம் என்றதை நிம்மதியாய் எடுத்துக் கொண்டு, தன் அடிபட்ட காலுடன் இளங்கோவின் உதவியோடு, நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான், அவள் அவர்கள் வருவதற்குள் திரும்பி வந்துவிட மாட்டாளா என்று! ஆனால் அவள் வருவது என்ன? அவன் கைபேசிக்கு கூட அழைக்கவில்லை!
     இவனுக்கோ சும்மாவே கோபம் வரும்! அதிலும் அவள் தன்னை ஏமாற்றி மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தியதை மறைத்ததில் இருந்து, தான் வெளியே சென்று திரும்புவதற்குள் வீட்டை விட்டே வெளியேறியது எல்லாமுமாய் சேர்ந்து அவனுள்ளும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
     ‘நானா அவளை வீட்டை விட்டுப் போக சொன்னேன்! அவதானே போனா அவளே வரட்டும்! மாத்திரையை சாப்பிடாம மறைச்சுதுல இருந்து என்னைப் பிரிஞ்சு போற அளவுக்கு அவளுக்கு அவ பிள்ளை மேல பாசமோ?! என்னை விட அவ பிள்ளைதான் அவளுக்கு முக்கியமாப் போயிடுச்சு! போடி! போ!’ என்ற வீம்பு அவனுக்கு!
     இதில் தன் வீட்டினர் ஊரிலிருந்து திரும்பியதும், ‘தேனு எங்கே?!’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,
     “அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா போதுமா!” என்று எல்லோரிடமும் எரிந்து விழுந்ததோடு,
     “என்னை மீறி யாரும் அவளைப் பார்க்கவோ பேசவோ நினைச்சீங்கன்னா அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று குண்டைத் தூக்கிப் போட, அனைவரும் கதிகலங்கி நின்றனர்.
    எனினும் சிறிது நேரத்தில் சுதாரித்த மீனா, அவன் பேச்சையும் மீறி தேனுவின் கைபேசிக்கு அழைக்க, தேனு என்ன சொல்வது அவரிடம் என்று புரியாமல் அவர் அழைப்பை ஏற்காமல் விட, அவரும்,
     ‘என்ன இந்தப் பெண்? இப்படிச் செய்கிறாள்?! சரி என்ன பிரச்சனையாக இருந்தாலும் கணவன் மனைவியோடு இருக்கும் வரைதான் அது அவர்களுக்கு நல்லது! அவ்வளவு அந்நியோன்னியமாய் வாழ்ந்தவர்களால் பிரச்சனையையும் பிரிவையும் நெடுநாள் நீட்டிக்க முடியாது! அவர்களே சரியாகி விடுவர்” என்று காத்திருக்க நினைத்தார்.
     ஆனால் இதோ அதோ என்று வாரங்கள் கடந்து ஒரு மாதமும் ஓடிவிட, அப்போதுதான் அவள் மறுபடி ஆட்டோ ஓட்டுவதையும் அவள் ஆட்டோவிலேயே அவன் வந்து இறங்கியதையும் கண்டார் மீனா. அதன் பின் நடந்தவைதான் நமக்குத் தெரியுமே! என்ன, இன்றும் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் இன்னமும் இவர்கள் பிரச்சனை ஓய்ந்ததாயில்லை!
     அந்த நீண்ட இரவு கடந்த காலங்களின் நினைவில் இருவருக்குமே உறக்கமற்றதாய்ப் போக, விடியற்காலையில் தான் அவள் தனை மறந்து உறங்கி இருந்தாள். அவனோ துளியும் கண்மூடவில்லை!
     அவள் கர்ப்பமாய் இருந்தது தெரிந்த நொடி முதல் அவனுள் போராட்டம்தான்! குழந்தை வேண்டாம் என்று மறுக்கிறான்தான்! ஆனால் அதெல்லாம் உதட்டளவில் மட்டுமே! உண்மையில் அவளைவிட அவன்தான் தன் பிள்ளைக்காய் தினமும் பரிதவித்துக் கொண்டிருந்தான்.
     ‘உலகில் எந்த ஒரு தகப்பனுக்குமே இப்படி ஒரு நிலை வரக் கூடாது! தன் ரத்தத்தை தானே வேண்டாம் என்று நினைக்கும் துர்பாக்கியம்! ஆனால் அவன் செய்த பாவத்திற்கான தண்டனை அதுவாக மட்டுமே இருக்க முடியும் என்பது அவன் நினைப்பு! இருந்தாலும் தான் செய்த குற்றத்திற்காய் தன் மனைவியும், பிள்ளையும் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மனசாட்சி அவனை வாட்டி வதைத்தது.
     அவள் தன் தாய் வீட்டில் இருந்தபோதே அவனுள் இப்படிப்பட்ட எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தாலும், அவள் ஒரே நாளில் தன்னைத் தூக்கி போட்டுவிட்டு சென்றதில் அந்த குற்றஉணர்ச்சி சற்று மட்டுபட்டு ஈகோ தலை தூக்கி இருந்தது. இன்று தினம்தோறும் தன் கண்ணெதிரே கர்ப்பிணியாய் அவள்  நடமாட நடமாட, எல்லோருக்கும் துரோகம் செய்வதாய் அவனுள் உறுத்திக் கொண்டே இருக்க, மிகவும் மன உளைச்சளுக்கு ஆளாகி இருந்தான்.
     காலை அவள் கண்விழிக்கும் போதும் அவன் நேற்றிரவு அமர்ந்த நிலையிலேயே அமர்ந்திருக்க, அவளால் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை!
     எழுந்து அவன் அருகே சென்றவள், “உங்களுக்கு என்னதான் பிரச்சனை?! ஏன் இப்படி என்னையும் சித்ரவதை செஞ்சு நீங்களும் தவிக்கிறீங்க?!” என்றாள் சோர்வுடன்.
     அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக,  “நம்ம குழந்தை இல்லாம போயிட்டா நீங்க பழையபடி சந்தோஷமா இருப்பீங்க! அப்படிதானே?!” என்று அவள் கேட்க, அவன் நெஞ்சில் சுருக்கென்றது! அவன் கண்களில் வலியுடன் அவளை நோக்க,
     “சரி! இப்போவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை! நாலாம் மாசம்தானே நடக்குது. அதனால நீங்களே நம்ம குழந்தையை அழிக்க உங்க கையால மருந்து வாங்கிட்டு வந்து குடுங்க! நான் சாப்பிடுறேன்” என்றாள் உணர்வுகளற்று!
    இவ்வார்த்தைகளில் அவன் விளுக்கென்று நிமிர, “குழந்தை உருவாகாம இருக்க மாத்திரை கொடுத்தவருக்கு, இதுவும் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே! வாங்கிட்டு வந்து கொடுங்க! நான் சாப்பிடறேன். உங்க குழந்தையை நீங்களே கொன்ன பெருமை உங்களுக்குக் கிடைக்கட்டும்” என வார்த்தைகளை அவள் முள்ளாய் இறக்க,
     “ம்! செஞ்ச கொலைக்கான பாவத்தையே இன்னும் போக்க முடியாம தவிச்சிட்டு இருக்கேன்டி! நீ என் பாவத்தை மேலும் மேலும் கூட்டிகிட்டே போகப் பாக்குற” என்று விரக்தியுடன் அவன் தன்னுள் புதைந்து கிடந்த ரகசியத்தை உடைக்க, அவள் ஸ்தம்பித்து நின்றாள்…
                                       -மௌனங்கள் மொழி பேசுமா?!
              
    
    
 

Advertisement