Advertisement

                                                                                 மொழி-24
     கோர்ட் பார்மாலிட்டீசை முடித்த குரு, இன்ஸ்பெக்டரிடம், அந்த கல்லூரி இயக்குனரை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்ட்டை நீதிபதியிடமிருந்து வாங்கிக் கொடுத்திருக்க, பேரழகனும், காவலரும், ருத்ரமூர்த்தியை கைது செய்து அழைத்து வந்து கொண்டிருந்தனர் நீதிமன்றத்திற்கு.
     “நினைச்சதை சாதிச்சுட்டேன்னு சந்தோஷமா இருக்கியா?! இந்த நாள் முடியறதுக்குள்ள உன்னை என்ன செய்யிறேன் பாரு” என்று சீறியபடி, அவன் வண்டியிலிருந்து இறங்கி நடக்க,
     ‘ஹே போடா! உன்னை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்தாச்சு!’ என்ற ரீதியில் அவனைப் பார்த்து நின்றான் பேரழகன்.
     பேரழகன் நேரடியாக நீதிபதி மூலம் வழக்கை எடுத்திருந்ததால், காவல்துறையும் வேறு வழியின்றி அந்த வழக்கை பதிவு செய்து வைத்தது சட்டத்திற்கு கட்டுப்பட்டு.
     “சொல்லுங்க ரூத்ரமூர்த்தி. எதுக்காக ரெண்டு காலேஜ் பஸ்களையும் லாரி வச்சுத் தூக்குனீங்க?” என்றான் குரு சுற்றி வளைக்காமல்.
     “பொய்! கேள்வி கேட்குறதுக்கு முன்னாடி யோசிச்சு கேளுங்க வக்கீல் சார்!” என்ற ருத்ர மூர்த்தி,
     “என் பிள்ளைங்களையே தூக்குற அளவுக்கு நான் என்ன முட்டாளா?! எனக்கு என்ன அவசியம் அப்படி செய்யணும்னு?!” என்றான் ஒன்றுமே அறியாதது போல்.
     “அப்டியா?! உங்களுக்கு எந்த அவசியமுமே இல்லையா?” என்ற குரு,
     “யுவர் ஹானர்! நான் இவரோட மகன் மிஸ்டர் வினோத்தை விசாரிக்கணும்” என,
     “யூ கேன் ப்ரோசீட்” என்று அவர் அனுமதி கொடுக்க,
     ‘உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக மனைவியையும் மகனையும், வெளியூர் அனுப்பி வைத்துவிட்டோமே’ என்று நினைத்திருந்த ருத்ரமூர்த்திக்கு, மகன் என்றதுமே லேசாய் வியர்த்தது.
     ஏனெனில் மகன் தங்கள் நண்பர்கள் மீது உயிரையே வைத்திருப்பவன், அதிலும் அவன் நண்பர்களில் ஒருவன் வேறு இறந்துவிட்டான் என்று தெரிந்தால், என்ன செய்வானோ, என்று அவர் யோசித்து நிற்க,
     அவனோ, சாட்சிக் கூண்டில் ஏறியதுமே, “நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ப்பா! ஜஸ்ட் ஒரு பிளேஸ்! இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம் மறுபடியும் முதல் இடத்தைப் பிடிச்சிருக்கும் நம்ம காலேஜ்! ஆனா உங்களோட அந்த முதலிடம்ங்கிற வெறிக்காக, இத்தனை, இத்தனை உயிர்களை பலி வாங்கி இருக்கீங்களே?! அதுவும் ப்ளான் பண்ணி நல்லா படிக்கிற பசங்களை மட்டும் ஏதோ ப்ராஜக்ட்னு சொல்லி முன்னாடியே காலேஜுக்கு வரவச்சிருக்கீங்க அவங்களுக்கு மட்டும் எதுவும் ஆகிடக் கூடாதுன்னு! எல்லாரும் எல்லாரும் நம்ம பசங்கதானே ப்பா! உங்களை நம்பிதானே ப்பா சேர்ந்தாங்க! என் தேவா, தேவா கூட இறந்துட்டான் ப்பா!” என்று அவன் வக்கீலாய் குரு கேள்விகளைக் கேட்கும் முன்பே தந்தை மீது குற்றம் இருப்பதை மற்றவர்களுக்கு புரிய வைத்துவிட,
     “இல்ல! இல்ல வினோ!” என்று அவர் தடுமாற,
     “எனக்கு எல்லாம் தெரியும் ப்பா! நேத்து நைட்டே, தெரியும்! அதனாலதான் நானும், அம்மாவும் நைட்டே ஊர்ல இருந்து கிளம்பினோம்!” என்றான்.
     உள்ளுக்குள் சற்றே தடுமாறிப் போனாலும், மெல்ல தன்னைச் சுதாரித்துக் கொண்டு,
     “என்மேல இப்படி ஒரு குற்றத்தை சுமத்தி இருக்கீங்களே! நான்தான் அப்படி செய்தேன்னு என்ன ஆதாரம் இருக்கு?!” என்றார் இப்போதும் கம்பீரமாய் இருப்பது போல்.
     அவர் கேள்விக்கு பதிலாய், அவர் கண்முன்னே இரு லாரி ஓட்டுனர்களும் வரவழைக்கப் பட, அவர்களைப் பார்த்தவருக்கு முதலில் அதிர்ச்சி ஏற்பட்டாலும்,
     “இது மாதிரி பொய் சாட்சிகளை எத்தனைப் படத்தில் பார்த்திருப்போம் லாயர் சார்!” என்றார் நிதானமாய்.
     “ஓ! அப்படியா?! இவங்க வேணா பொய் சாட்சியா இருக்கலாம்! இவங்க!” என்று அவரது நண்பர் சண்முகத்தையும், ருத்ரமூர்த்தியின் மகளையும் கைகாட்டி குரு கேட்க, அவருக்கு நொடியில் வியர்த்தது.
     ‘நீ அப்படிப் பேசும் போதே நான் சுதாரிச்சிருக்கணும்டா!’ என்று நண்பனை எண்ணிக் கருவியவர்,
     ‘திவிம்மா! காலையில கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு நீ இவன் வீட்டுக்குத் தான் போனியா?!’ என்று கலங்கியபடி, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பார்த்தார் ருத்ரமூர்த்தி.
     அவளோ, “அப்பா! ஏன் இப்படிப் பண்ணீங்க?! நேத்து சாயந்திரம் நீங்க அந்த டிரைவர்ங்க கிட்ட போன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன். அம்மாவும், அண்ணாவும், ஊர்ல இல்லையா, எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை! நான் உங்ககிட்ட ஏதாச்சும் கேட்டு, நீங்க என்னையும் ஏதாச்சும் பண்ணிட்டீங்கன்னா? அதான் பயந்து போய் அம்மாக்கும், அண்ணாக்கும் போன் பண்ணி சொல்லி உடனே வர சொன்னேன்!” என்று தேம்பியபடி சொல்ல அவர் தலை குனிந்து நின்றார்.
     ஆயிற்று! ஒரே நாளில் எல்லாம் தலை கீழாய் மாறி இருக்க, ருத்ரமூர்த்தி ஒரே நாளில், தன் குடும்பம், மதிப்பு, மரியாதை எல்லாவற்றையும் தொலைத்த ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் துடித்துக் கொண்டிருந்தார்.
                                     **********
     அக்காவும், அக்கா மகனும், இரவோடு இரவாக கோயம்பத்தூரிலிருந்து, சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள் என்று காலை தாய் வீட்டிற்கு சென்ற பிறகே அவனுக்குத் தெரிய வர, ருத்ரமூர்த்திக்கு ஃபோன் செய்தான் சங்கர், கோயம்பத்தூரின் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் கவுன்சிலர். அதாவது முன்பு பேரழகனால் தகுதியற்றோருக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கிக் கொடுத்த வழக்கில் மாட்டி அவனால் அவமானப்பட்ட அதே கவுன்சிலர்.
     ருத்ரமூர்த்தியின் கைப்பேசி காவலரால் கைப்பற்றப் பட்டதால் அணைத்து வைக்கப் பட்டிருக்க, அவரது போன் எடுக்கப் படாததால், அக்காவிற்கு அழைக்கத் துவங்கினான் பதட்டத்துடன்.
     ‘நேத்து நடந்த காலேஜ் பஸ் விபத்துக்கும், இன்னிக்கு மாமாவோட போன் ஆஃப் வைச்சி இருக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இல்லையே! மாமா நேத்து நைட் பேசும்போது கூட கமிஷனர் கிட்ட பேசிட்டேன்! கேசை விபத்தாவே முடிச்சிட சொல்லிட்டாருன்னு சொன்னாரே! அப்புறம் என்ன பிரச்சனையா இருக்கும்?! நேத்து ராத்திரியில இருந்து இந்த டிரைவர் பயலுங்களும் போனை எடுக்கலை! சரி குடிச்சிட்டு எங்கயாச்சும் படுத்திருப்பானுங்கன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தது தப்போ?!’ என்று எண்ணியபடி லைனில் காத்திருக்க யாரும் அழைப்பை ஏற்பதாய் இல்லை!
     தனது தம்பியும், அவரும் மிக ஒற்றுமை ஆதலால், அக்கா, அவனது குணம் தெரிந்து போனை எடுக்காமலேயே இருக்க, அவன் அடுத்ததாய், அவனது அக்கா மகனிற்கு ஓயாமல் போன் அடிக்கத் துவங்கினான்.
     கோர்டில் சாட்சி சொல்லிவிட்டு இறங்கிய வினோத், ‘என்ன மாமா இத்தனை போன் பண்ணி இருக்கார்?!’ என்று எண்ணியபடியே,
     “நான் கோர்ட்டில் இருக்கேன் மாமா. வெளியே வந்து பேசறேன்!” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் இருவரும் கூட்டுச் சதிகாரர்கள் என்று தெரியாமல்.
     கோர்ட் என்றதுமே, ஏதோ பிரச்சனை என்று உறுதியாகிவிட, ‘இனி போன் எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று நேரிலேயே சந்திக்கக் கிளம்பிவிட்டான் சங்கர்.
                                    *******
     “தாங்கக் யூ குரு சார்!” என்று காவலர் சொல்ல,
     “தாங்க்சை உங்க ஆர்டிஓ ஆபீசருக்கு சொல்லுங்க! நாங்க கூட ஒரே நாள்ல கேஸ் ஸ்டடி பண்ணி இன்வெஸ்டிகேட் பண்ணி தீர்ப்பு வழங்குற அளவுக்கு கொண்டு போயிருக்க மாட்டோம்!” என்று குரு சொல்ல, அவன் உண்மையாய் சொல்கிறானா, நக்கலடிக்கிறானா என்று புரியவில்லை பேரழகனுக்கு.
     இருந்தாலும், குரு காலை நடந்து கொண்ட முறையில் அவனுக்கு நன்றி சொல்ல விருப்பமின்றி பேரழகனும், முறுக்கிக் கொண்டே நிற்க,
     “சார்! உங்களைத்தான் சொல்றார்” என்றார் அந்தக் காவலர்.
     “ம்!” என்ற பேரழகன்,
     “தாங்க்ஸ் எதிர்பார்த்து நான் எதுவும் செய்யிறது இல்லை! இதுல நாம மூணு பேருமே சரியா செயல் பட்டதுனாலதான் கேஸ் ஈசியா முடிஞ்சது! எல்லாத்தையும் விட ருத்ரமூர்த்தியோட நண்பரை நீங்க சரியான நேரத்துல பேச வச்சதுனாலாயும், அந்த டிரைவரோட, மனைவியையும், மகளையும் அவன் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினதுனாலயும்தான் வேலை சீக்கிரம் முடிஞ்சுது.
     “அதோடு, அந்த ருத்ர மூர்த்தியோட பெண், அவன் மனைவி, மகன்னு எல்லாரும் நல்லவங்களா இருக்கப் போய்தான் ஒரே நாள்ல இவ்ளோ சுலபமா கேஸ் முடிஞ்சுது!” என்று உண்மையைச் சொன்னவன்,
     “எனிவே தாங்க்ஸ் பார் யுவர் ப்ரெசென்ஸ் இன் திஸ் கேஸ் மிஸ்டர். குரு!” என்றான் தானும் உனக்குக் குறைவில்லை என்பது போல் காலையில் அழைத்த சாரை விடுத்து.
     அவனது மாற்றத்தை புரிந்து கொண்ட குரு, தெனாவட்டான சிறு பார்வையிலேயே அவன் நன்றிக்கு பதில் கொடுத்துவிட்டு, எப்போதும் போல் யாரிடமும் எந்த மரியாதையையும் எதிர்பார்த்து நிற்காமல், எந்த மாரியாதையையும் கொடுக்கவும் விரும்பாமல்,
     “ஓகே இன்ஸ்பெக்டர்! பீஸை என் அக்கவுண்ட்ல செட்டில் பண்ணிட சொல்லுங்க உங்க ஆபிசரை!” என்றுவிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பியேவிட்டான்.
     குரு கிளம்பியதும், “ஏன் சார் நீங்களும் இப்படி?!” என அந்தக் காவலர் கேட்க,
     “இல்ல இன்ஸ்பெக்டர்! என்னதான் பெரிய ஆளா இருந்தாலும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும்! அதுதான் என் பாலிசி! அப்படி இல்லாத பட்சத்துல அவங்க எப்படியோ நானும் அப்படிதான்! அவர் திறமைசாலிதான், கெத்துதான்! அதுல சந்தேகம் இல்லை! ஆனா எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கும் இல்லை?!” என்றான் குரு செல்வதைப் பார்த்தபடியே.
     “அதுவும் சரிதான் சார்!” என்ற இன்ஸ்பெக்டரும் குரு காரில் ஏறுவதைப் பார்க்க,
     “பட் ஐ லைக் ஹிம்! குரு ஹிஸ் சம்திங் டிபிரென்ட்! திறமையும் தெனாவட்டும் ஒரே இடத்துல குவிஞ்சு இருக்கு!” என்று லேசாய் புன்னகைத்தபடி சொன்ன பேரழகன்,
     “தாங்கஸ் பார் அரேஞ்சிங் ஹிம் அஸ் மை லாயர் இன்ஸ்பெக்டர்” என்று நன்றி உரைத்தான் மனதார…
                                      *********    
     மகன், மகள், மனைவி என்று தன் குடும்பமே தனது குற்றத்திற்கு சாட்சி ஆகிவிட்டதால், தப்பிக்கும் வழியற்றுப் போக, ஒரே நாளில், குற்றத்தை கண்டுபிடித்து அதை சாட்சியோடு நிரூபித்த, பேரழகனுக்கும், குருவிற்கும், அந்தக் காவலருக்கும் பாராட்டுகள் தெரிவித்த நீதிபதி, ருத்ரமூர்த்திக்கு தக்க தண்டனையும் வழங்கி இருக்க, மீடியாக்கள் ஒரே நாளில் தீர்ப்பு கிடைத்த இந்த வழக்கை அதிசயம் போல் விமர்சித்துக் கொண்டிருந்தன தங்களது தொலைக்காட்சிகளில்.
     தொலைக்காட்சிகளில் வெளிவந்ததும், விஷயம், கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களது வீட்டினருக்கும் தெரியவர, அதிர்ச்சியும், ஆத்திரமுமாய் ருத்ரமூர்த்தியின் கல்லூரியை துவம்சம் செய்து கொண்டிருந்தனர் இறந்து போன மாணவர்களின் உறவினர்கள்.
      கல்லூரியின் வாட்ச்மேன் மூலம், விஷயம் கேள்விப்பட்டு வினோ, அவர் அம்மா, தங்கை மூவரும், கல்லூரியை நோக்கிப் பயணித்தனர் அவர்களைச் சமாதனப் படுத்த…
                                      **********
     அடுத்த சில மணிநேரத்தில், தனது அக்கா கணவரின் முன்னே நின்றிருந்த சங்கர், அருகே இருந்த காவலரை, ஒரு பார்வை பார்க்க, அவர் தூரமாய் சென்று நின்று கொண்டார்.
     “என்ன மாமா இது ஒரே நாள்ல?! எப்படி இப்படியெல்லாம்?! அந்த டிரைவர் —— காசையும் வாங்கிட்டு காட்டியும் கொடுத்துட்டானுங்க!” என்று அவன் வஞ்சத்துடன் மொழிய,
     “ம்! அவனுங்க காட்டிக் கொடுத்தது கூட பெரிசில்லை சங்கர்! அதைக்கூட நம்ம லாயரை வச்சு கேசை திசை திருப்பி இருக்கலாம்! ஆனா நான் பெத்ததே எனக்கு எமனா மாறிடுச்சு! உன் அக்காவும், அந்த வினோ பயலும் கூட, அவனுக்காகவும் சேர்த்துதான் இப்படி செய்தேங்கிறதைப் புரிஞ்சுக்காம என்னை எல்லோர் முன்னாடியும் காட்டிக் கொடுத்திட்டான்! இது எல்லாத்துக்கும், அவன்தான், அந்த ஆர்டிஓ தான் காரணம்!” என்ற ருத்ரமூர்த்தியின் முகத்தில் பழி உணர்ச்சி மின்ன,
      “எந்த ஆர்டிஓ மாமா?!” என்றான் சங்கர் சந்தேகமாய்.
      “அவன்தான் உன்னை லஞ்சக் கேஸ்ல சிக்க வச்சானே! அவனேதான். நேத்து கமிஷனரே கேசை விபத்துன்னு முடிக்க சொல்லி இன்ஸ்பெக்டருக்கு சொல்ல, அவங்களும் கேசை முடிச்சிட்டாங்க! ஆனா அவன் நேத்து ஒரே நாள்ல ராத்திரியோட ராத்திரியா, அந்த ட்ரைவருங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, எல்லா வேலையும் பார்த்திருக்கான்! இத்தனை நாள், நீ நேரம் பார்த்து காத்திருந்தது போதும், இந்த நாள் முடியறதுக்குள்ள அவன் இந்த வேலையில இருந்து அசிங்கப் பட்டு நிக்கணும்!” என்றார் கட்டளையாய்.
      “பண்றேன் மாமா! எப்போ உங்களையே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டானோ இனி அவன விடமாட்டேன்” என்றவன்,
      “ஆனா மாமா உங்களை ஜாமீன்ல கூட விட முடியாதுன்னு சொல்றாங்க மாமா!” என்றான் கலங்கும் குரலில்.
      “எல்லாம் போச்சு சங்கர்! எப்போ போலீஸ் என்னைக் கைது பண்ண என் வீட்டுப் படி ஏறுச்சோ அப்போவே என் மானம் மரியாதை எல்லாம் போச்சு! எந்தக் காலேஜோட பேருக்காக இதெல்லாம் செய்தனோ, இப்போ அதுவே எனக்கு பெரும் கெட்ட பெயரைக் கொடுத்துடுச்சு! எல்லாத்துக்கும் அவன்தான் காரணம்! அவனை, அவனை மட்டும் விட்டுடாத!” என்றார் வெறுப்புடன்.
     “நான் நான் பண்றேன் மாமா! ஏற்கனவே அவனை ஒருவழி பண்ணனும்னுதான் இருந்தேன்! கொஞ்ச நாள் போகட்டுமேன்னு நினைச்சேன்! ஆனா எப்போ உங்களைக் கொலைக் கேஸ்லயே மாட்ட வச்சிட்டானோ? அவனை சும்மா விடக் கூடாது! பேசாம ஆளையே தூக்கிடட்டுமா மாமா?!” என்று காழ்ப்புணர்ச்சியில் கேட்க,
     “இல்ல, இல்ல சங்கர்! உயிர் போறது சில நிமிஷ வேதனைதான்! அவன் காலம் முழுக்க வேதனைப்படணும். வேலையை விட்டு மட்டும் தூக்கு! எந்த விஷயத்துல அவன் கெத்தா சுத்திகிட்டு இருக்கானோ, அந்த விஷயத்தை அவன்கிட்ட இல்லாம பண்ணு!” என்று ருத்ரமூர்த்தி உத்தரவிட,
     “ம் மாமா!” என்று அவன் சொல்ல,
     “சார் டைம் ஆகுது!” என்று அவனிடம் வந்து நினைவு படுத்தினார் அந்தக் காவலர்.
     “எல்லாம் எங்களுக்குத் தெரியும். போயா..” என்று காவலரையும், அவமதித்த சங்கர் நேரே அவனது ஆர்டிஓ அலுவலகத்திற்குக் கிளம்பினான்…
     ருத்ரமூர்த்திக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த சின்ன திருப்தியுடன் அவன் தன் அலுவலகத்திற்குக் கிளம்பியிருக்க, அவனின் கைபேசி அலறியது.
     அதில் மின்னிய மனைவியின் எண்ணைப் பார்த்து, “தேனம்மா!” என்றவன்,
     “சொல்லுடா” என்றான் அழைப்பை ஏற்று!
     “ஹப்பா! எவ்ளோ நாள் ஆச்சுங்க ஆபிசரே! நீங்க இப்படி என்னைக் கூப்பிட்டு!” என்று அவள் சந்தோஷத்தில் பூரிப்புடன் சொல்ல, அவன் அழகாய் புன்னகைத்தான்.
     “சாப்டியா?!” என்று அவன் கேட்க,
     “இன்னும் இல்ல! இனிமேதான்! நீங்க மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்களேன்!” என்றவள்,
     “ப்ச்! நான் எதுக்கு ஃபோன் பண்ணேனோ அதை மறந்துட்டு பேசிட்டு இருக்கேன். கங்க்ராட்ஸ் ஆபீசர் சார்! ஒரே நாள்ல கேசை ஜெயிச்சி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கீங்களே! எல்லா நியூஸ்லயும் உங்க பேச்சுதான்!” என்றாள் பெருமையாய்.
     “ம்! ஆனா என்னால சந்தோசப் பட முடியல தேனம்மா! என்ன தண்டனை வாங்கிக் கொடுத்தாலும் போன பிள்ளைங்களோட உயிர் திரும்ப வருமா?! என்றான் ஆதங்கத்துடன்.
     சில நொடி அமைதி காத்தவள், “ஆனா அவங்க இறப்புக்கு நீங்க நியாயம் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க! அதுவே பெரிய விஷயம்தாங்க” என்று சமாதானம் சொன்னவள்,
     “இதையே நினைச்சுக்கிட்டு வருத்தபடாதீங்க! அந்தப் பசங்களைப் பெத்தவங்களுக்கு ஆறுதல் கிடைக்குற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க ஆபிசரே” என,
     “எப்படி தேனம்மா என்ன மாதிரியே யோசிக்கிற?” என்றான்.
     “ஆபீசர் பொண்டாட்டியாச்சே!” என்று கெத்தாய் சொன்னவள்,
     “வீட்டுக்கு வரீங்களா சாப்பாட்டுக்கு. காலையில கூட எதுவும் சாப்பிடாம போயிட்டீங்களே!” என்றாள் அவன் பசியின் மீது அக்கறை கொண்டவளாய்.
     “இல்ல தேனம்மா. காலையில இருந்து ஆபீஸ் போகல! நிறைய வேலை இருக்கு!” என,
     “ப்ச்! சரி! அப்போ உங்க ட்ரைவரையாச்சும் அனுப்பி வையுங்க. சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்பறேன்” என்றவள்,
     “கவனமா இருங்க” என்றாள் கைபேசியை வைக்கப் போகுமுன்.
     “எதுக்கு?!” என்று அவன் புரியாமல் கேட்க,
     “ம்! தெரியலை ஆபிசரே! ஏதோ தோணுச்சு” என்றவள், மனதில் திடீரென்று ஏதோ சஞ்சலம் உருவாக மனம் அமைதியைத் தொலைத்தது…
                                        -மௌனங்கள் மொழி பேசுமா?!
    
    
          
         

Advertisement