Advertisement

                                 மொழி-23
     இருவரின் அணைப்பும் தங்களுக்குள் மறைத்து வைத்திருந்த வேதனைகளை மற்றொருவருக்குக் கிடத்த, இருவருமே ஒரு புரிதலோடு, தத்தம் தவறுகளை உணர்ந்து கொண்டிருந்தனர்.
     “நான் அப்படிப் பேசினதும் தப்புதாங்க! எனக்குத் தெரியும் நீங்க ஒருநாளும் அப்படி நினைச்சிருக்க மாட்டீங்கன்னு! கோபம் குழந்தை வேணாம்னு சொன்னதும் வந்த கோபம்! அதான் அப்படிப் பேசிட்டேன்! மன்னிச்சிடுங்க!” என்றவளை,
     “ம்ஹும்! மன்னிக்கவே மாட்டேன்!” என்றான்.
     அவள் ஏனென்று அவன் அணைப்பில் இருந்து விலகாமலேயே நிமர்ந்து பார்க்க,
     “அதெப்படி நீ சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுப் போகலாம்!” என்று அவளை முறைக்க,
     “அப்போ சொல்லிட்டு போகலாமா?!” என அவள் குதர்க்கமாய் கேட்க,
     “கொன்னுடுவேன்!” என்று செல்லமாய் மிரட்டியவன்,
     “நீ சண்டை போட்டது கூட எனக்குக் கோபம் வரலைடி! ஆனா வீட்டை விட்டு போனது, என்னால தாங்கவே முடியலை! அதுவும் அன்னிக்கு இருந்த மனநிலையில, இவ கூட என்னைப் புரிஞ்சிக்கலையேன்னு வெறுத்துப் போயிட்டேன்!”
     “உன் பிள்ளைய வேணாம்னு சொன்னா, நீ என்னையே விட்டுட்டுப் போயிடுவியா?!” என்று அவன் மீண்டும் பழக்க தோஷத்தில் உன் பிள்ளை என,
     “இன்னொரு முறை உன் பிள்ளைன்னு சொன்னீங்க! கடிச்சிடுவேன்!” என்று அவன் கன்னத்தை நீண்ட நெடுநாளைக்குப் பின் ஆசையையும் அழுத்தமாயும் கடித்து வைத்தாள்.
     “அடி ராட்சசி! எத்தனை நாள் காத்திருந்த இதுக்காக?!” என்று அவன் பொய் கோபத்துடன் கேட்க,
     “ம்! ஆறு மாசமா!” என்றவள், மீண்டும் ஒரு கடி வைக்கப் போக அவள் இதழ்கள் அவன் அதரங்களில் சிக்கிக் கொண்டது.
     “ம்! ம்!” என்று அவள் மெல்ல வலியில் திணற,
     அவள் வலி புரிந்து அவன் விலக நினைக்க, அவளோ அவனை மேலும் நெருக்கமாய் இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டு அவனது இதழ்களை கொய்யத் துவங்கினாள் இத்தனை நாள் இருந்த கோபம் ஆசை எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ளும் விதமாய்…
     “போதும் போதும்! மூச்சு முட்டுது தேனம்மா உனக்கு!” என்று அவனே அவளைப் பிரித்தெடுக்கும் வரை அவனை முத்தங்களில் வாட்டியவள், திடீரென கண்கள் மின்ன புன்னகைக்க,
     “என்ன தேனம்மா?!” என்றான்.
     “உங்க பசங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறாங்க! உங்களை மாதிரியே!” என்று அவள் தன் வயிற்றில் கைவைத்துப் புகார் வாசிக்க,
     “ச்சே ச்சே! என் பசங்க உன்னை மாதிரி இல்லை! ரொம்ப சமத்து! விளையாடிட்டு இருப்பாங்க!” என்றவனை,
     “என்ன திடீர் பாசம்!” என்று அவள் சந்தேகமாய் கேட்க,
     “அப்பாவுக்குப் பிள்ளைங்க மேல பாசம் இருக்காதா என்ன?!” என்று ஒரேயடியாக மாறி பல்டி அடித்தவனை,
     “இதோடா!” என்று அவள் முறைக்க, அவன் அதைப் பொருட்படுத்தாமல், இத்தனை மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாய், அவள் அறியும்படி அவள் உறங்காத நேரம், அவள் வயிற்றில் அழுத்தமாய் முகம் புதைத்து பிள்ளைகளின் அசைவுகளை உணர, அவன் உடல் சிலிர்த்துப் போனது.
      “அப்படியே ஒரு உதைவிடுங்க பசங்களா உங்க அப்பாவ!” என்று அவள் எடுத்துக் கொடுக்க, அதுவரை உதைத்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், இப்போது அமைதியாகிவிட,
     “பாருடா! அப்பாவுக்குப் பிள்ளைங்க தப்பாம இருக்கு, என் பேச்சை மதிக்காததுல!” என்றாள் செல்லக் கோபத்தோடு.
     இரவு முழுக்க உறங்காமல் மனைவியைக் கொஞ்சினானோ இல்லையோ, தன் மகனையும் மகளையும் மாற்றி மாற்றிக் கொஞ்சிக் கொண்டிருக்க,
     “போதும் போதுமய்யா உங்க கொஞ்சல்! இத்தனை மாசத்துக்கும் சேர்த்து வச்சு ஒரே நாள்ல கொஞ்சுறது என்ன?! எனக்கு தூக்கம் வருது! நான் தூங்குறேன்” என்று அவள் கொட்டாவி விட,
     “நீ தூங்குடி! உன்னை நாங்களா முழிச்சிட்டு இருக்க சொன்னோம்?!” என்று அவன் தன் பிள்ளைகளையும் சேர்த்து சொல்ல,
     “ரொம்ப ஓவராதான் போகுது!” என்றவள், அவன் முழுதாய் தயக்கமின்றி மனம் மாறி தங்கள் செல்வங்களை ஏற்றுக் கொண்ட நிம்மதியில் கண்மூடிப் படுத்துவிட, அப்பன்காரன் இத்தனை நாட்களாய் தேக்கி வைத்திருந்த ஆசைகளையெல்லாம் தன் பிள்ளைகளிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் பேரன்போடு…
     காலை அவள் கண்விழித்தபோது, அவளின் மேடிட்ட வயிற்றை அணைத்தபடி முகத்தில் சிறு புன்னகையோடு அவன் உறங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் அவன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதியான புன்னகையைப் பார்த்ததில் சொல்லொணா சந்தோஷம்!
    ‘இவ்ளோ ஆசைய மனசுக்குள்ள வைச்சுகிட்டு எப்படி நடிச்சிருக்கீங்க மிஸ்டர் ஆபீசர்!’ என்று ஆசையோடு அவன் கன்னத்தில் கடி வைக்கப் போனவள், சட்டென்று விலகிக் கொண்டாள் அவன் தூக்கம் தொலைந்து விடுமே என்று.
     ஏனெனில் அவன் நீண்ட நேரம் சென்றே உறங்கி இருப்பான் என்று அவளுக்குத் தெரியும்.
     பிள்ளை வேண்டாம் என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அவள் தூங்கும் வரைக் காத்திருந்து தினமும் வயிற்றில் இருக்கும் தன் பிள்ளைகளை அவள் உறக்கம் கலைந்து விடா வண்ணம் மெல்ல வருடி, நெடு நேரம் கொஞ்சிவிட்டே படுக்கச் செல்பவன் ஆயிற்றே! இன்று அவள் அறிய அவன் எந்தத் தயக்கமும் இன்றிக் கொஞ்சும் போது நிச்சயம் நெடு நேரம் பிள்ளைகளோடு கொஞ்சிக் கொண்டிருந்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாதா?!
     ‘அவர் எழுந்துகறதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடலாம்!’ என்று எண்ணியபடி, குளிப்பதற்குச் செல்லும் முன் மாற்று உடை எடுக்கப் போனவள், வெளி செல்ஃபில் இருக்கும் தினசரி அணியும் பழைய உடைகளைத் தவிர்த்து, அவன் திருமணமான புதிதில், அவளுக்காய் வாங்கிக் கொடுத்திருந்த அந்த கருநீல வண்ணத்தில், ரோஜா வண்ணக் கரையை உடைய, மைசூர் சில்க் புடவையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
     இத்தனை நாட்களாய் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச பாரமும் அவளுள் முழுதாய் நீங்கி இருக்க, மனம் உறக்சாகத்தில் மிதந்தது.
     ‘பிள்ளைங்க மேல இவ்ளோ ஆசையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு வெளில என்னமா சீனப் போட்டீங்க ஆபீசர்! இப்போ உங்க குட்டு வெளியாகிடுச்சுல்ல!’ என்று ஏதேதோ எண்ணி மகிழ்ந்தபடி குளித்துத் தயாரானவள்,
     “எழுந்திருங்க மிஸ்டர் ஆபீசர்! பிள்ளைங்களைக் கொஞ்சினதுல ஆபீஸ் போகனுங்கிறது மறந்துடுச்சா?!” என்று குரல் கொடுக்க,
     ‘ரொம்ப நேரமாகிடுச்சா?!’ என சட்டென்று உறக்கம் களைந்து அவன் எழ,
     “ஏன் ஏன் எதுக்கு இவ்ளோ பதட்டம்?! மணி ஏழரைதான் ஆகுது! போய் குளிச்சிட்டு வாங்க. சரியா இருக்கும்” என்றாள்.
     “ம்!” என்றவனுக்கு, எழும் போதே அந்த கல்லூரி பேருந்து விபத்து பற்றிய விசாரணை நினைவுக்கு வந்துவிட, மனம் அதில் சென்றுவிட, மனைவி தனக்காய் பார்த்து பார்த்து தயாரானதை அவன் கவனிக்கவில்லை!
     அவன் குளிக்க்கச் சென்றதும், அவனுக்காய் இஞ்சி, எலுமிச்சை கலந்து டீ போட்டு எடுத்து வரச் சென்றவள் அவள் திரும்ப வருவதற்குள் அவன் தயாராகி நிற்பது கண்டு,
     “என்னங்க இவ்ளோ அவசரம்?! கோவிலுக்கு போய்ட்டு வரலாம்னு நினைச்சேன்!” என்றாள்.
     “ஒரு முக்கியமான கேஸ் இருக்கு. இன்னொரு நாள் போய்க்கலாம்!” என்றவன்,
     அவள் கொடுத்த டீயை நான்கே மடக்கில் குடித்துவிட்டுக் கிளம்பிவிட,
     “என்ன கேஸ்? நேத்து ஏதோ ஆக்சிடென்ட்னு சொன்னீங்களே அதுவா?!” எனக் கேட்க,
     “ம்!” என்றவன்,
     “கிளம்பறேன்!” என்று சொல்லி தன் ஓட்டுனர் இளங்கோவிற்குக் கூடக் காத்திராமல் தனது காரிலியே சென்றுவிட்டான்.
     அவன் கிளம்பும் போதே காவலருக்குப் ஃபோன் செய்து இருக்க, அவரும், தயாராக இருந்தார்.
      இருவரும் அந்த லாரி ஓட்டுனர்களை, காவலர் முன்பே பேசி வைத்திருந்த அந்த வக்கீலிடம் அழைத்துச் செல்ல, அந்த வக்கீலோ, அங்கு வந்திருக்கவில்லை!
     “என்ன சார்?! லாயரை இன்னும் காணோம்! கேசை எடுப்பார்தானே?! இல்ல?!” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
     “கேசை எடுக்குறது என்ன? முடிச்சாச்சு!” என்றபடியே வந்தான் நம் ரவுடி வக்கீல். [யாருன்னு கேஸ் பண்ண முடியுதா மக்காஸ்?!}
     “வாங்க குரு சார்!” என்று வரவேற்ற அந்தக் காவலர்,
     “திஸ் இஸ். மிஸ்டர். பேரழகன். ஆர்டிஓ!” என்று குருவிற்கு இன்ட்ரோ கொடுக்க,
     “குரு?!” என்று சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றவன், முகத்தில் ஆச்சரியமும், புன்னகையும், நம்பிக்கையும் ஒருசேர,
     “இவர் அந்தக் குழந்தைங்க கடத்தல் கேஸ், அப்புறம் சூர்யான்னு ஒரு  பெண்ணோட கேஸ்ல தமிழ்நாட்டையே கலக்கினர்வதானே?!” என்றான் வியப்புடனும் மரியாதையுடனும்.
     குரு மெலிதாய் புன்னகைக்க, “அவரேதான்!” என்றார் காவலர்.
     “க்ளாட் டு மீட் யூ குரு சார்!” என்று பேரழகன் கைகொடுக்க,
     திரும்ப கை கொடுக்கலாமா, வேண்டாமா என்று யோசித்த குருவிற்கு, ‘முதல்ல மரியாதை கொடுக்க கத்துக்கோங்க ரவுடி வக்கீல்!’ என்று பொண்டாட்டி சமுத்திராவின் குரல் மனதில் அலாரம் அடிக்க,
     “ம்!” என்று பதிலுக்குக் கை கொடுத்தான் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல்.      
     குரு சில நொடிகள் தயங்கி, பின் கைகொடுத்ததில் பேரழகன் முகம் மாறிவிட,
     ‘சாரி சார்! அவர் எப்பவும் அப்படித்தான்! உங்களுக்காச்சும் திரும்பக் கை கொடுத்தாரே! பல பேரை மதிக்கக் கூட மாட்டார்!’ என்று அந்தக் காவலர் மெல்ல அவன் அருகே வந்து சொல்ல,
     “ம்!” என்றவன்,
     “கேஸ் டீட்டைல்ஸ்…” என்று குருவிடம் சொல்லப் போக,
     “இன்ஸ்பெக்டர் கிட்ட ஃபுல் டீட்டைல்சும் கேட்டுட்டுத்தான் கேசே எடுத்தேன் மிஸ்டர் பேரழகன்.” என்று ஒரே வரியில் முடித்துவிட்டான் குரு.
     “ம்!” என்றவனுக்கு, குருவின் செய்கையில் கொஞ்சம் கோபம் ஏற,
     “சரி நான் வெளிய நிக்கிறேன்” என்று வெளியேறிவிட்டான்.
     “ஆர்டிஓ ஆபீசருக்குக் கோவம் வந்துடுச்சு போல!” என்று குரு காவலரிடம் நக்கலாய் சொல்ல,
     “அப்படி எல்லாம் இல்ல சார்!” என்று குருவை சமதானப்படுத்தும் விதமாய் சொன்ன காவலர்,
     “ரொம்ப நல்ல மனிதர் சார் உங்களை மாதிரியே!” என்றார்.
     அதைக் கேட்டு முதன் முதலாய் மற்றவர் முன்பு வாய்விட்டுச் சிரித்தவன், “என்ன நல்லவன்னு என்கிட்டயே ஒருத்தர் சொல்லி இப்போதான் கேட்குறேன்!” என்று நக்கலடித்துவிட்டு,
     “என்ன தம்பிங்களா என்னைப் பார்த்தா நல்லவன் மாதிரியா தெரியுது?!” என்று அந்த ஓட்டுனர்களிடம் குதர்க்கமாய் கேட்க, அவர்கள் இருவரும் கலக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
     “எதுக்கு ஆக்சிடென்ட் பண்ணீங்க?!” என்றான்.
     “ம்?!” என்று அவர்கள் விழிக்க,
     “எதுக்கு ஆக்சிடென்ட் பண்ணீங்கன்னு கேட்டேன்?” என்று அவன் மீண்டும் கேட்க,
     “அந்த சார் சொன்னாருன்னு செஞ்சுட்டோம் சார்!” என்றனர் இருவரும் கோரசாய்.
     “ஓ! எந்த சார்?!” என்று அவன் தெரியாதது போல் கேட்க,
     ‘என்னடா இவன்? நேத்துதான் ஆர்டிஓ காரன் துருவி துருவி கேள்வி கேட்டான்?!’ இப்போ இவன்?!’ என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
     “எந்த சார்ன்னு கேட்டேன்?” என்று குரு மிரட்ட,
     “அதான் சார் அந்தக் காலேஜ் ஓனர், ருத்ர மூர்த்தி!” என்று ஒருவன் சொல்ல,
     “எதுக்கு அப்படி செய்ய சொன்னான்?!” என்றான்.
     “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க!” என்றனர் ஒருவருமே ஒன்றாய்.
     இதெல்லாம் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பேரழகனுக்கும் நன்றாய் காதில் விழ,
     விடுவிடுவென உள்ளே வந்து, “இவனுங்களை எதுக்கு கேள்வி கேட்டுகிட்டு?! நேத்துல இருந்து தேஞ்சு போன ரெகார்ட் மாதிரி இதையேதான் சொல்லிட்டு இருக்கானுங்க!” என்று அவர்களை முறைத்தவன்,
      “நீங்க கோர்ட்ல கேஸ் பைல் பண்ணுங்க மிஸ்டர். குரு! இவனுங்க ஜட்ஜ் முன்னாடி வாக்குமூலம் கொடுத்ததும், இவனுங்களை கோர்ட்ல ஒப்படைச்சிட்டு நாம நேர்ல போய் அந்த ஆளை இழுத்துட்டு வந்து விசாரிக்கலாம்” என்றான் சீற்றமாய்.
     அவனை ஆழ்ந்து பார்த்த குரு, “கூல் டவுன் மிஸ்டர்!” என்று அவனை சமாதானப் படுத்திவிட்டு,
     “அப்போ நிஜமா உங்களுக்கு காரணம் தெரியாது?!” என,
     “சத்தியமா தெரியாது சார்!” என்று இருவரும் மறுக்க, இருவரில் ஒருவனின் மகளும், மனைவியும், அவர்கள் முன்பு வந்து நின்றனர் குருவின் திட்டத்தால்.
     “சரசு நீ எப்படி இங்க?!” என்று அவன் திகைக்க,
     “உண்மைய சொல்லுயா?!” என்றார் அவர் கண்ணீரோடும் கோபத்தோடும்.
     “நிஜமாலுமே எனக்குத் தெரியாது சரசு!” என்றவன், அவன் மனைவி நம்பாது பார்க்கவும்,
     “நம்ம பொண்ணு மேல சத்தியமா எங்களுக்கு தெரியாது! அந்த ஆள் காரணம் எதுவும் சொல்லல! காசைக் கொடுத்து பஸ்ஸை அடிக்கனும்னு மட்டும்தான் சொன்னான்! நாங்களும் காரணம் எதுவும் கேட்கலை! கேட்டாலும் இந்த மாதிரி விஷயத்துல யாரும் சொல்ல மாட்டாங்க!” என்றான் தொழில் ரகசியம் போல்.
     குரு சிறிது யோசனைக்குப் பின், “கோர்ட்ல வந்து ஏதாவது மாத்திப் பேச நினைச்சீங்க, உன் பொண்ணும், பொண்டாட்டியும் எங்க கஸ்ட்டில தான் இருப்பாங்க! நினைவிருக்கட்டும்!” என்றுவிட்டு இன்ஸ்பெக்டரிடமும், பேரழகனிடமும்,
     “சில பார்மாலிடீஸ் முடிச்சிட்டு கூப்பிடறேன்! அதுவரைக்கும் என் ரூம்லேயே வெய்ட் பண்ணுங்க” என்றுவிட்டு வெளியேறினான்.
                                **********
     “டேய் சண்முகம். இந்த ஆர்டிஓக்காரன் தொல்லைப் பெருந்தொல்லையா போச்சுடா! இவனை எப்படியாச்சும் வேலையில இருந்து தூக்கணும்! மொதல்ல கோயம்பத்துர்ல ட்ரெயினிங் கொடுக்க போன இடத்துல என் மச்சானுக்கு குடைச்சல் குடுத்து அவனை வேலையிலிருந்து சஸ்பென்ட் பண்ண வச்சான்! இப்போ என்னன்னா என்னையே தூக்கி உள்ள வைக்கப் பார்க்குறான்” என்றார் ருத்ரமூர்த்தி மனம் முழுதும் அவனை வீழ்த்தும் எண்ணம் சுமந்தபடி.
     “உன் மச்சான் பண்ணது தப்புதானே?!” என்று சண்முகம் சொல்ல,
     “போடா ஊர்ல உலகத்துல யாரும் செய்யாத தப்பா என்ன? எவன் இந்த காலத்துல லஞ்சம் வாங்காம இருக்கான்?!” என்ற ருத்ர மூர்த்தி,
     “உனக்கு ஒன்னு தெரியுமா?! ஸ்ட்ஷன்ல கேசே பைல் பண்ண முடியாதபடி பண்ணிட்டேன்! ஆனாலும்  அந்த ஆர்டிஓ காரன், நீ பண்ண தப்புக்கு உனக்கு இருக்குடான்னு எனக்கே நேத்து போன் போட்டு மிரட்டுறான்டா”  என்றான் கேலியாய் அவனால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில்.
     ‘வர வர இந்த ருத்ராவோட அட்டுழியம் ரொம்ப அதிகமாகிடுச்சு! சீக்கிரம் இவன்கிட்ட இருந்து விலகிக்கணும்!’ என்று மனதில் நினைத்துக் கொண்ட சண்முகம்,
     “இருந்தாலும் நீ செய்தது ரொம்ப பெரிய தப்புடா!” என்றார்.
     “அட என்னடா நீ?! இவனுங்க கொழுப்பெடுத்து ரேஸ் போனா நான் என்ன செய்ய?!” என்று தன்னைப் பற்றி நன்கு அறிந்த சண்முகத்திடமே, ருத்ரமூர்த்தி மறைக்க,
     “டேய் என்கிட்டயேவா?!” என்ற சண்முகம்,
     “அவனுங்க ரேஸ் போனானுங்க சரி! ஆனா லாரியை விட்டுத் தூக்கச் சொன்னதும், பிரேக்கை செயலிழக்குற மாதிரியான தரத்துல மாத்தி வச்சதும் யாரு?!” என,
     “ஹஹா! தெரிஞ்சிக்கிட்டே கேள்வி கேட்குற பார்த்தியா?!” என்று சிரித்த ருத்ரமூர்த்தி,
     “அப்போ மத்த விஷயமும் உனக்குப் புரிஞ்சிருக்குமே!” என்றான்.
     “புரியாம என்ன?! இருந்தாலும் அந்தக் காலேஜ் டாப்பரான ஒருத்தனைத் தூக்குறதுக்கு இப்படி எல்லா உயிரையும் பணயம் வச்சது தப்புடா! அதுவும் நம்ம காலேஜ் பசங்களையும் சேர்த்து பலி கொடுத்திருக்க!” என்றார் சண்முகம்.
     சண்முகம் சொன்னதைக் கேட்டு, அவரைச் சந்தேகமாய்ப் பார்த்த ருத்ரமூர்த்தி,
     “என்னடா திடீர்னு நல்லவனா மாறின மாதிரி பேசுற?! செத்தவன் காலேஜ் டாப்பர் மட்டும் இல்லை! யுனிவர்சிட்டி டாப்பர்ன்னும் உனக்குத் தெரியாதா?! அவன் ஒருத்தன் இல்லைன்னா, அடுத்து, நம்ம விநோதான டாப்பரா வருவான்! பல வருஷமா என் கல்லூரியில படிக்குற பிள்ளைங்களே டாப்பரா வரும்போது, இந்த வருஷம் என் பிள்ளையே டாப்பரா வராம போனா எப்படி?! அப்போதானே நம்ம காலேஜோட பேரும் எப்பவும் போல இப்பவும் டாப் லிஸ்ட்ல முதல் இடத்துல இருக்கும்! அதனாலதான அவனைத் தனியா தூக்கினா சந்தேகம் வரும்னு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சேன்!” என்று நிறுத்த,
     “இருந்தாலும் இத்தனை உயிர் பலி ஆகிடுச்சே!” என்ற சண்முகத்தைப் பார்த்து,
     ‘என்ன இவன் சரியில்லையே?! திடீர்னு நல்லவன் மாதிரி பேசுறான்?! எதுக்கும் இனி இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!’ என்று நினைத்துக் கொண்டார் ருத்ரமூர்த்தி. 
     ருத்ரமூர்த்தி, தனது பெயரையும் புகழையும், தக்கவைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர். சென்னையின் டாப் டென் வரிசையில் முதல் இடம் பெற்றிருக்கும் தலைசிறந்த கல்லூரியின் இயக்குனர். அவர் நேரம் அவன் ஆர்டிஓ வாக இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு விபத்தை நிகழ்த்தி மாட்டிக் கொண்டுள்ளார்!
     கல்லூரி முதல் இடத்தில் இருப்பதாலேயே பணக்கார வர்க்கம் மட்டுமல்லாமல், மிடில் கிளாஸ் மக்களும், கடன் உடன் வாங்கி அவரது காலேஜில் சேர்க்க பெரும் பாடுபட்டனர்.
    ஆனால் இன்று அவர் செய்த இச்செயல், அவரால் இந்த வருடம் மட்டும் அல்ல, இனி எந்த வருடமும் தன்னால் இழந்த தங்கள் கல்லூரியின் அந்தஸ்த்தைத் திரும்பப் பெற வைக்கப் போவதில்லை…
                                         -மௌனங்கள் மொழி பேசுமா?
 
    
    
                 
      
    
   

Advertisement