Advertisement

     அதன்பின் கொஞ்சமும் தாமதிக்காமல், இருவரும் உடனடியாக மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஏதேச்சையாய் விபத்து நடந்த பகுதியின் அருகே இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒருவன், தன் கைபேசியில் விபத்தைப் பதிவு செய்திருக்க, அதில் டிரைவரின் முகம் தெரியவில்லை என்றாலும், விபத்து நடந்த பின் யாரோ ஒருவன் லாரிக்குள் ஏறுவதும் அதன் பின்னேயே வண்டி ரிவர்ஸ் எடுத்துக் கிளம்பியதும் தெரிய, அதைப் பார்த்த காவலர்,
     “சார்! இவன் பழைய அக்யுஸ்ட் தான்! இவன் எந்த ஏரியான்னு எனக்குத் தெரியும்!” என்றார் அடையாளம் கண்டு.
     “ஓ! சரி உடனே கிளம்புவோம்! தாமதிக்க வேண்டாம்” என, இருவரும் சில மணி நேரங்களில் அவன் இருந்த இடத்தை அடைந்துவிட்டார்கள்.
     இடத்தை வெகு சீக்கிரமாய் அடைந்து விட்டாலும், ஒருவழியாய் அந்த ஆசாமியை மிரட்டி வழிக்கு கொண்டு வந்து பதிலை வாங்குவதற்குள் நேரம் வெகுவாய் ஓடிவிட்டது.
     விசாரணையின் இறுதியில், விபத்து நடந்த இரு கல்லூரிப் பேருந்துகளில் ஒரு கல்லூரியின் இயக்குனரேதான் இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார் என்பது தெரியவர, இருவருக்குமே பேரதிர்ச்சி.
     “பின்னாடி வந்த அவங்க கல்லூரிப் பேருந்தும் அடிவாங்கினாதான்  அவர்மேல எந்த சந்தேகமும் வராதுன்னு இப்படி பண்ணச் சொன்னார்!” என்று அவன் சொல்ல இருவருக்கும் அத்தனைக் கோபம் வந்தது அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று. ஆனால் காவல்துறை மேலதிகாரிகள் கேசை அக்ஷிடேன்ட் என முடித்துவிடச் சொல்லி இருக்க, அவன் நீதிமன்றம் மூலம் இந்த கேசை பதிவு செய்ய நாளை வரை அவகாசம் தேவைப்பட்டது.
     தற்போது எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கையில் அவனுள் கடும் கோபம் சூழ்ந்து கொள்ள,
     “சார்! இவனுங்களை நம்பி வெளில விட முடியாது. நாளைக்கு வரைக்கும் இவனுங்களை உங்க தனிப்பட்ட கஸ்ட்டடில வச்சுப் பார்த்துக்க முடியுமா?!” என்றான் அந்தக் காவலரிடம்.
     சில நொடிகள் யோசித்தவர், “சரிங்க சார்! என்னோட மச்சானோட மனைவி டெலிவரிக்காக அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க! அவங்க வீட்ல வச்சுக்கிறோம்!” என்றவர்,
    “கிளம்புங்கடா!” என்று தன்னிடம் இருந்த கைவிலங்குகளை எடுத்து அவர்கள் கையில் பூட்ட, அவர்கள் கலக்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
     “எங்களுக்கு விஷயம் தெரிஞ்சுது, உங்களை ஏற்பாடு செஞ்சவனுக்குத் தெரியக் கூடாது! அப்படித் தெரிஞ்சாலோ, இல்லை நீங்க எஸ்கேப் ஆக நினைச்சாலோ, நஷ்டம் உங்களுக்குத்தான். ஜெயிலுக்குப் போனா கூட தண்டனை கம்மியாதான் கிடைக்கும். ஆனா தப்பிக்க நினைச்சா,” என்று நிறுத்தியவன்,
     “எனக்கும் லாரி ஓட்டத் தெரியும்!” என்று பூடகமாய் சொல்ல,
     “இவர் என்ன சொல்றார்?!” என்று சில நொடிகள் புரிபடாமல் யோசித்தவர்களுக்கு, அவன் சொன்னது புரிந்ததும்,
     “இதென்னடா வம்பா போச்சு!” என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
                                     ******
     இரவு நெடு நேரம் கழித்தே அவன் வீடு திரும்ப, அவனுக்காய் உறக்கத்தை இழுத்துப் பிடித்துத் தூங்காமல் காத்திருந்தவள், அவன் தன்னிடம் உள்ள சாவியைத் திறந்து கொண்டு உள்ளே வரும் அரவம் கேட்டதும் தங்கள் அறையில் இருந்து வெளியே சென்றாள்.
     அவனது சோர்ந்த முகத்தைக் கண்டு, “என்ன ஆச்சு?! ஏன் இவ்ளோ லேட்?!” என,
     “ஒரு விபத்து” என்றான்.
     “என்ன?! எப்படி?!” என்று பதறியவள், அவன் அருகே வந்து ஆராய,
     “எனக்கு இல்லடி” என்றவன், குளியலறைக்குப் போக, அவனுக்கு ஏதுமில்லை என்று நிம்மதி கொண்டவள், அவன் பின்னேயே சென்று மாற்று உடை எடுத்து வைத்துவிட்டு அவனுக்காய் ஹாட்பேக்கில் எடுத்து வைத்திருந்த சப்பாத்தியையும் சென்னாவையும் தட்டில் வைத்து எடுத்து வந்தாள்.
     அவன் குளித்து முடித்து வர, இவள் உணவை வைத்துக் கொண்டு காத்திருப்பதைக் கண்டதும்,
     “நீ எதுக்கு இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்க?! எனக்கு போட்டு சாப்பிட்டுக்கத் தெரியாதா?!” என, அவனை முறைத்தவள், தட்டை வைத்துவிட்டுப் போய்ப் படுத்துவிட்டாள்.
     அன்று முழுவதும் அலைந்த அலைச்சலில் அவனுக்கு பயங்கரப் பசி இருந்தும் அத்தனை உயிர்கள் சின்னாபின்னமாகிக் கிடந்ததைப் பார்த்ததிலிருந்து அதுவே கண்முன் நிற்க, கூடவே லல்லியும் நினைவில் வந்து ஓட்டிக் கொண்டாள். அதனாலேயே மதியம் முதல் எதுவும்  சாப்பிடும் எண்ணம் இல்லாது போனது.
     அப்போதும் சாப்பிட மனமின்றி, அவள் எடுத்து வந்த உணவையும் அப்படியே திரும்ப சமயலறைக்கு எடுத்துச் செல்லப் பார்க்க, அவன் செய்கையைப் பார்த்திருந்தவள்,
     “சாப்பிடத் தெரியும்னு சொன்னீங்க இல்ல! ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் படுங்க!” என்றாள் குரல் உயர்த்தி.
     “பிடிக்கலடி!” என்றவன் குரலில் ஏதோ உணர்ந்தவள்,
     “என்ன ஆச்சு?! யாருக்காவது ஏதாச்சும்?!” என்று தயக்கத்துடன் கேட்க, அவள் கர்ப்பமாய் இருப்பதால் அவளிடம் இதையெல்லாம் சொல்லி அவளையும் வருத்தப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவன்,
     “ஒண்ணுமில்லை!” என்றுவிட்டு, அவளுக்காய் உண்ணத் துவங்கினான், உண்ணாவிட்டால் மீண்டும் துருவித் துருவிக் கேள்வி கேட்பாள் என்பதால்.
     ஆனால் பேருக்காய் சில வாய்கள் மட்டும் உண்டுவிட்டு அவன் எழப் போக,
     “எதுவா இருந்தாலும் சாப்பிடாம இருந்தா சரியாகிடுமா? சாப்பிடுங்க ஆபிசரே!” என்று அவள் ஏதோ பெரிய விபத்து போல என்று புரிந்து கொண்டு ஆறுதலாய் மொழிய,
     “அவனோ இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல இல்லை?!” என்றான் ஏதோபோல்.
     அவள் புரியாது பார்க்க, அவன் தொடர்ந்து, “ம்! பிறக்குற எல்லாருக்குமே என்னென்னமோ ஆசைங்க இருக்கும், ஆனா பலர் தங்களோட ஆசைகள் நிறைவேறாமையே தான் செத்துப் போறாங்க இல்லை?!” என்றான், இன்று இறந்து போன அந்த மாணவர்களும், தங்கள் லல்லியும் எண்ணங்களில் அலைமோத.
     ஏதோ பெரிதாய் நடந்திருக்கிறது என்று யூகித்தவள், மீண்டும் மீண்டும் என்ன நடந்தது என்பதைக் கேட்டு அவன் மனத்தைக் கிளற விரும்பாமல், எழுந்து வந்து தானே தட்டைக் கையில் எடுத்து உணவை எடுத்து ஊட்ட, அவனும் அப்போது இருந்த மனநிலையில் அவளிடம் இத்தனை நாட்களாய் காண்பித்துக் கொண்டிருந்த முறுக்கை எல்லாம் மறந்து, அவள் கையால் ஊட்டிய உணவை வாங்கி உண்ணத் துவங்கினான்.
    தானே எடுத்துச் சாப்பிடும் போது இறங்காத உணவு அவளின் கையால் உண்ணும் போது விரைவில் காலியாகி இருக்க,
     ‘நல்ல பசி போல! மதியமும் சாப்பிட்டிருக்க மாட்டார்!’ என்று எண்ணியபடி,
     “இன்னும் ரெண்டு சப்பாத்தி எடுத்து வரேன். இருங்க” என்று எழுந்தாள்.
     “போதும்!” என்றவன் எழப்போக, அவன் கைபிடித்து அமர்த்தியவள்,
     “எவ்ளோ பசில இருந்து இருக்கீங்க! சாப்பாடே வேணாம்னு சொன்னீங்க! இன்னும் ரெண்டு சாப்பிடலாம். இருங்க” என்றவள் அவன் மறுப்பைப் பொருட்படுத்தாமல், மீண்டும் சமயலறைக்குச் சென்று சில சப்பாத்திகளை எடுத்து வந்து தானே ஊட்டியும் விட, வயறு நிரம்ப உண்டவன்,
     “தாங்க்ஸ்” என்றான்.
     பதிலாய் அவனை முறைத்தவள், “எதுக்கு ஊட்டி விட்டதுக்கா?!” என,
     “ம்!” என அவன் தலை அசைக்க,
     “பட்டினியா படுங்கன்னு விட்டிருக்கணும்!” என்றுவிட்டு வெளியேறியவள், பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு கைகழுவி வந்து  படுத்துவிட,
     தானும் எழுந்து அவள் அருகே வந்தவன், எப்போதும் போல் அவள் பாதங்களை கவனித்தான்.
     அவன் திட்டித் திட்டி இப்போதெல்லாம் அவள் அதிகம் கால் தொங்கப் போட்டு உட்காராததால், பாதம் வீக்கம் அதிகமில்லாது இருக்க, அவள் பாதங்களை நீவியபடி,
     “இப்போ எல்லாம் பரவாயில்லை இல்ல வீக்கம்” என்றான்.
     “ம்!” என்றாள் ஒற்றை வார்த்தையாய்.
     ஆனால் அவனோ மேலும் ஏதோ எண்ணியபடி, “நான் உன்னை அப்படி எல்லாம் நினைச்சுக் கல்யாணம் பண்ணலை தேனம்மா!” என்றான் சம்மந்தமில்லாமல்.
     “என்ன சொல்றார் இவர்?!” என்று அவள் புரியாது பார்க்க,
     “நீ அன்னிக்கு சொன்னியே, நான் இல்லாதவதானே?! என்ன சொன்னாலும் கேப்பான்னு நினைச்சுதானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்கன்னு! நான் ஒருநாளும் அப்படி நினைச்சது இல்லைடி!” என வேதனையாய் மொழிய, அவளுக்குத் தெரியாதா என்ன? அவன் தன்னை எப்படி நடத்துகிறான் என்று!
     என்னதான் கோபம் இருந்தாலும், தான் அப்படிப் பேசியது தவறு என்று அவன் சொன்னதும்தான் மனதிற்குப் புரிய, அவள் மெல்ல தலை கவிழ்ந்தாள்.
     அவன் மேலும் தொடர்ந்து, “ஆனா அண்ணா அண்ணியோட சந்தோஷத்தைப் பறிச்சிட்டு, நான் மட்டும் சந்தோஷமா வாழ மனம் இடம் கொடுக்கலை! தப்புதான்! என்னோட சுயநலத்துக்காக உன்னோட ஆசைகளை கனவுகளைப் பத்தி யோசிக்கத் தவறிட்டேன்!” என, அவள் நிமிர்ந்து அவனை அமைதியாய் பார்த்திருந்தாள்.
     “இன்னிக்கு ஒருத்தன் தன்னோட சுயநலத்துக்காக நிறைய, நிறைய உயிர்களை பலி வாங்கிட்டான்! யாரோட ஆசைகளும் கனவுகளும் அவனுக்கு முக்கியமில்லை! அதனால எத்தனை எத்தனை உயிர் தெரியுமா?!” என்று தடுமாறியவன், அவளிடம் மேலும் நிகழ்ந்த விபரீதத்தைப் பற்றி விரிவாய்ச் சொல்ல விரும்பாது,
     “அவனைப் போலவே நானும் சுயநலவாதிதான் தேனம்மா! உன்னோட ஆசைகள் கனவுகள் எதைப் பத்தியும் நான் யோசிக்கவே இல்லை! லல்லியைக் கொன்னதுமில்லாம நம்ம, நம்மக் குழந்தையவே வேணாம்னு சொன்னேனே!” என்றவன் குரல் கமற, சட்டென்று எழுந்தமர்ந்து அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தன் கோபம் ஊடல் எல்லாம் எங்கோ தொலைந்து போக…
     அவளது இச்செய்கையில் அவன் மனதில் இத்தனை மாதங்களாக தேக்கி வைத்திருந்த வேதனை எல்லாம் வெளியற, அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன்,
     “என்னை என்னை மன்னிச்சிடுவியா தேனம்மா!” என்றான் உடைந்த குரலில்…
                        -மௌனங்கள் மொழி பேசினால்?
                                 -தொடரும்…
                                          
 

Advertisement