Advertisement

                                    மொழி-21
     “டேய் என்ன வயசாகுது உனக்கு லவ் கேட்குது?! முழுசா காலேஜ் படிப்பைக் கூட முடிக்கலை! இதுல புள்ளைய பத்தி பேசுற?! நானே கொன்னு போட்டுடுவேன் உன்னை!” என்று தேனு தம்பியை நோக்கிக் அடிக்கக் கையோங்க,
     “ஏய்! என்னடி வந்ததும் வராததுமா அவனை அடிக்கப் போற?! அவனே இப்போதான் செத்து பிழைச்சு வந்திருக்கான்! என்ன ஏதுன்னு பொறுமையா விசாரி” என்றாள் ஜெயா.
     “என்னத்தடி விசாரிக்கிறது! அந்தப் பொண்ணு மாடியில நின்னு இவனைப் பார்த்து அழுதுட்டு இருந்த போது கூட நான் முழுசா நம்பலை! அதான் அய்யாவே வாயைத் தொறந்து சொல்லிட்டாரே! சுஜிதான் பெத்துக்க முடியும்னு! அதுல இருந்தே புரியலை உனக்கு?!” என்று தேனு எகிற,
     “சுஜியா?! யாரு நம்ம பக்கத்து ப்ளாக்ல இருக்கே அந்தப் பொண்ணா?!” என்று வாய்பிளந்தாள் ஜெயா.
     “டேய் என்ன வயசாகுது உனக்கு? அதுக்குள்ள லவ்வு?!” என்று ஜெயாவும் சீற,
     “அட என்ன? ரெண்டு பேரும் வயசு வயசுன்னு கிட்டு! என்னிக்கு சினிமா டிவின்னு வந்துதோ அதுல இருந்தே எல்லாம் வயசு மீறிதான் நடக்குதுங்க! என்னமோ இப்போதான் புதுசா நடக்குற மாதிரி ஏன் வீணா டென்ஷன் ஆகுறீங்க?!” என்று பெண்கள் இருவரையும் சமதானப் படுத்த முயன்ற ஜெயாவின் கணவன்,
     “இருந்தாலும் நீ செய்யிறது ரொம்ப தப்புடா! அதுவும் உங்க அம்மாவுக்கும் அந்தப் பொண்ணோட அம்மாவுக்கும் ஏக பொருத்தம்! இதுல படிப்பும் சரியில்லை! ஆனா லவ் மட்டும் பண்ணி இருக்க! ஒன் சைடா இல்லை?” என்று அவர் இழுக்க,
     “இல்லை இல்லை அவளும் லவ் பண்றா! ஆனா இன்னும் என்கிட்டே சொல்லலை!” என்றான் சட்டென.
     “ஓ! ஒருவேளை அதுக்காகத்தான் அன்னிக்கு குதிச்சியோ?!” என்று ஜெயா சந்தேகமாய் கேட்க,
     “ஐயோ இல்ல இல்லைக்கா! அம்மா திட்டுனதுனாலதான் அப்படி செஞ்சேன்” என்று அவன் மறுக்க,
     “விஷயம் தெரியட்டும் நீ என்ன சாவ முயற்சி பண்ணது? அம்மாவே உன்னைக் கொன்னு போட்டுடும்!” என்று தேனு மேலும் அவன் பயத்தை அதிகரிக்கச் செய்ய,
     “ஏய்! என்ன பேசுற தேனு நீ!” என்று அண்ணன் ஸ்தானத்தில் இருந்து ஜெயாவின் கணவர் அவளை அதட்ட,
     “வேற என்ன அண்ணா? வீடு இருக்க நிலையில, இவனுக்கு லவ் ஒன்னுதான் குறைச்சலாக்கும்!” என்றாள் தேனு கவலையுடன்,
     “இந்த வயசுல படிப்பு தான முக்கியம்! இதுல எல்லாம் கவனம் போனதுலதான் படிப்பு ஏறலை போல!” என்றாள் ரவியை முறைத்தபடி.
     “அப்படி எல்லாம் இல்லைக்கா! நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன்! ஆனா எனக்குப் படிப்பு மட்டும் ஏற மாட்டேங்குது!” என்றான் ரவி பாவமாய்.
     அவன் சொல்வது பொய்யில்லையோ என்று தோன்றினாலும், அவனால் தம்பியின் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
     “சரி போனது போகட்டும். இனி லவ்வு கிவ்வுன்னு சுத்துறதை விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு! தேவையில்லாம மறுபடியும் வீட்ல ஒரு பிரச்சனையை உருவாக்காத! ஏதோ கெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி, அப்பா இப்போதான் குடியை நிறுத்திருக்கு! இது இப்படியே நிலைக்கணும்! உன்னை ரொம்ப நம்பி இருந்தேன்டா. நீ படிச்சு வேலைக்குப் போயி அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்துவேன்னு. ஆனா அவங்க தலையெழுத்து கடைசி வரைக்கும் அவங்களே உழைச்சு சாப்பிடனும்னு எழுதி இருக்கு போல!” என்று வருத்தத்துடன் தேனு முடிக்க,
     “அப்படி எல்லாம் சொல்லாத அக்கா! நான் அம்மாவையும் அப்பாவையும், நல்லா பாத்துப்பேன்” என்றவன், காதலை விட்டுக் கொடுப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை இறுதிவரை!
    சிறிது நேரத்திற்குப் பின் அக்கா, தம்பி, இருவரும் ஜெயா வீட்டிலிருந்து தங்கள் வீட்டிற்குத் திரும்பி இருக்க, அவளுடைய கைப்பேசி ஒலிக்கும் சபதம் கேட்டு அதற்கு செவிமடுத்தாள்.
     “ஹலோ பர்வீன் அக்கா! நானே வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணணும்னு இருந்தேன்! கொஞ்சம் வேலையா இருக்கவும் மறந்துட்டேன்” என்று சமாளித்தாள் தம்பியின் காதல் பிரச்சனையில் எல்லாம் மறந்து போனதை மறைத்து.
      “பரவாயில்லைடா!” என்றவர்,
      “அழகன் தம்பி ஏன் மறுபடியும் ஹாஸ்பத்திரிக்கு வந்திட்டுப் போகுது?! எதுவும் பிரச்சனையா?!” என்றார் புரியாமல்.
     “ஹாஸ்பத்திரிக்கா?! தெரியலையே க்கா! என்கிட்ட எதுவும் சொல்லலையே!” என்று விழித்தவள்,
     “அவர் வந்ததும் கேட்கறேன் க்கா!” என்றுவிட்டு மேலும் சில நொடிகள் அவரிடம் பேசிவிட்டு யோசனையுடன் போனை அணைத்தாள்.
     ‘எதுக்கு மறுபடியும் அங்க போனாரு?!’ என்று சில நிமிடம் யோசிக்கவும்,
     ‘ஒருவேளை ரவி டிஸ்சார்ஜ் ஆனதும் அங்க காசு பிடுங்குற அந்த வார்டுபாய்களுக்கு ஒரு முடிவு கட்டுறேன்னு சொல்லி இருந்தாரே, அதுக்குப் போயிருப்பாரா?!’ என்ற எண்ணம் தோன்ற,
     ‘கட்டட்டும் கட்டட்டும்! இவனுங்களுக்கெல்லாம் ஏதாவது செய்தாதான் அடங்குவாங்க!’ என்று சொல்லிக் கொண்டாள் கணவனுக்கேற்ற மனைவியாய்.
     மருத்துவமனை விவகாரம் முடிந்தும், மேலும் சில வெளி வேலைகளை முடித்துவிட்டு பேரழகன், தேனுவை அழைத்துப் போக மாமியார் வீடு வர இரவு மணி எட்டை ஆகிவிட்டது.
     மகள் பல நாட்களுக்கப் பிறகு வந்திருந்ததாலும், மருமகனும் இரவு அவளை அழைத்துப் போக வரும் போது சாப்பிட்டுவிட்டுச் செல்ல சொல்ல வேண்டும் என்றும் எண்ணி, வேணுகோபாலன், கடைத்தெருவுக்குச் சென்று மீன், இறால், நாட்டுக் கோழி என்று வாங்கி வந்திருக்க, செல்லம்மாவின் கைப்பக்குவத்தில் வீடே கமகமத்தது.
     அவன் வீட்டினுள் நுழையும் போது, உணவு வகைகள் சுடச்சுட கூடத்தில் இடம்பெற்றிருக்க, அவன் வருகையைக் கண்டதும், மாமனார்,
     “வாங்க வாங்க மாப்ளை! முகம்கைகால் கழுவிட்டு வாங்க! சாப்டலாம்” என்றார் ஆசையாய்.
     “இல்ல!” என்று அவன் எதுவும் பேசிவிடும் முன்பே,
     “அப்பா ஆசை ஆசையா உங்களுக்காக போய் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தாரு! அம்மா கைப்பக்குவம் அருமையா இருக்கும்! சாப்பிடுங்க” என்று மனைவி, கோரிக்கையாய் அல்லாமல், கட்டளையாய் முடித்துவிட, அவளை முறைத்தபடியே,
     “ரவி நீ சாப்டியாடா?” என்றான் அவளிடம் எல்லோர் முன்னும் மறுத்துப் பேச முடியாது, பேச்சை மாற்றும் விதமாய்..
     “அடப் போங்க மாமா! இந்த அம்மா நீங்க சாப்ட பிறகுதான் நாங்க சாப்பிடனும்னு சொல்லி ஓவரா பண்றாங்க. பசி உசிரு போகுது. சீக்கிரம் சாப்பிட உட்காருங்க மாமா!” என்று அவன் தவிக்க,
     செல்லம்மா அவன் அப்போதும் தயங்குவது கண்டு, “அன்னிக்கு நான் அப்படிச் சொன்னது தப்புதான். மன்னிச்சிடுங்க தம்பி” என்று சட்டென செல்லம்மா அவனிடம் மன்னிப்புக் கோர,
     எல்லோரும் என்னவென்று பார்க்க, அவனோ, “ச்சே ச்சே! அதையெல்லாம் நான் நினைக்கவே இல்லை! அப்படி நினைச்சிருந்தா எப்படி இந்த வீட்டுக்கு வந்திருப்பேன். அது மட்டும் இல்லாம அன்னிக்கு இருந்த சூழல்ல நீங்க பேசினதும் தப்பில்லை! கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அடிக்கடி உங்க வீட்டுக்கு தனியா நான் வந்துட்டுப் போனதும் தப்புதானே” என்று தன் தவறையும் ஒப்புக் கொண்டவன், முகம் கை, கால் கழுவிவிட்டு வந்து அமர, செல்லம்மா அன்போடு மகளுக்கும் மருமகனுக்கும் பரிமாற, ரவி, செல்லம்மாவை முறைக்க,
     “அம்மா… அந்தப் பயலுக்கும் கொஞ்சம் வையிம்மா! சும்மா சும்மா என் புருஷனுக்கு வைக்கிறதையே பார்த்துகிட்டு இருக்கான். கண்ணு பட்டுடப் போகுது!” என்றாள் தேனு.
     “ஆமாம்மா நானும் ஒருத்தன் இங்க காலி தட்டை ரொம்ப நேரமா நீட்டிட்டு இருக்கேன் நாட்டுக் கோழிக்காக” என்றான் ரவியும்.
     “அதெல்லாம் அக்கா, மாமாக்கு மட்டும்தான்! நீ வேணா மீன் குழம்பு ஊத்திக்கோ” என்று செல்லம்மா வேண்டுமென்றே மகனை வெறுபேற்றும் விதமாய் மீன் குழம்பை ஊற்றினார் அவன் முறைப்பதைப் பொருட்படுத்தாமல்.
     தம்பியின் முகத்தைப் பார்த்த, அக்காவிற்கு சிரிப்பு எழ, தன் இலையில் இருந்த கோழித் தொக்கை எடுத்து, அவன் இலையில் வைத்தாள், “சாப்பிடு” என்று.
     “என் செல்ல அக்கா” என்று கொஞ்சிவிட்டு அவன் சாப்பிடத் துவங்க, பேரழகன் மனைவியின் இலையில் யாரும் பார்க்காத நேரம் பார்த்து தனது இலையில் இருந்த கறித்தொக்கை எடுத்து வைக்க,
     அவள், காதலுடன் அவனை நோக்கினாள். ஆனால் அவன் கண்களிலும், கவனிப்பிலும் இப்போதெல்லாம் காதல் இருப்பதாய் அவளுக்குத் தெரியவில்லை! அதற்கு மாறாய் அக்கறை மட்டுமே இருந்தது…
     அன்று அவர்கள் இருவரும் அவளது செக்கப்பிற்காக மருத்துவமனை சென்று வந்த நாள் முதல் அவளிடம் அவன் கோபப்படுவது இல்லை! அதே சமயம் அவனிடம் முன்பிருந்த காதலும் தென்படவில்லை! மாறாய் அவன் கவனிப்பில் அக்கறை மட்டுமே இருந்தது.
     அவளுக்காய் எல்லாம் பார்த்து பார்த்து செய்தான் தான். ஆனாலும் அவளுக்குத் தெரியாத என்ன? அவனது காதலுக்கும் அக்கறைக்கும் உள்ள வித்தியாசம்! அவன் காதலில் திகட்டத் திகட்டத் திளைத்தவளாயிற்றே!
     அவனுக்குத் தன் மீது இருக்கும் கோபம் இன்னமும் குறையவில்லை என்று அவளுக்கு நன்றாய்ப் புரிந்தது.
     ஆனாலும் மனம் அவனது காதலுக்காய் ஏங்கித் தவித்தது! அந்த ஏக்கம் அன்று இரவு, அவன் அன்று எப்போதும் போல் அவள் பாதங்களுக்கு வெந்நீர் ஒற்றடம் கொடுக்கும் போது தன்னை மீறி வெளிப்பட, அவள் மனம் விட்டுக் கேட்டே விட்டாள் மேலும் பொறுக்க இயலாமல்.
     “இன்னும் எத்தனை நாளுக்கு என்மேல இப்படிக் கோவமா இருக்கப் போறீங்க ஆபிசரே?!” என்று அவள் கேட்க, அவனிடம் எந்த பதிலும் இல்லை.
     “உங்களைதான கேட்குறேன்? பதில் சொல்லுங்க!” என்றாள் மீண்டும்.
     அவன் அப்போதும் அமைதியாய் வெந்நீர் ஒற்றடம் கொடுத்துக் கொண்டே இருக்க, சட்டெனத் தன் கால்களைப் பின்னுக்கு இழுத்தாள்,
    “ஒன்னும் தேவையில்லை! பாசமே இல்லாம நீங்க செய்யிற எதுவும் எனக்கு வேணாம்” என்றபடி.   
     அவன் வலுகட்டாயமாய் மீண்டும் அவள் கால்களை இழுத்து வைத்து ஒற்றடம் கொடுக்கத் துவங்க,
     “ரொம்பதான் அக்கறை!” என்று முணுமுணுத்தவள்,
     “போதும்! எனக்கு தூக்கம் வருது!” என்றாள்.
     “தூங்கு!” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
     “ஒற்றடம் கொடுத்தா தூக்கம் வரலை! போதும்” என்று அவள் ஏதோ ஒரு சாக்கு சொல்ல,
     “பேசாம தூங்குடி” என்றான் இப்போது சற்றே குரல் உயர்த்தி.
     “ஆமாம்! பேச மாட்டாராம்! கொஞ்ச மாட்டாராம்! ஆனா ரொம்ப அக்கறையா மட்டும் கவனிச்சுக்குவாராம்” என்று வாய்விட்டு சத்தமாய் புலம்பியவள்,
     “இருக்கட்டும் இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த வெட்டி ஜம்பம்னு நானும் பார்க்குறேன்!” என்று கண்ணை மூடிக் கொண்டாள் அவன் மீது கோபமும் காதலும் ஒருசேர நெஞ்சில் சுமந்தபடி.
     அவன் கோபமும், அவள் ஊடலும் நீடித்துக் கொண்டே இருக்க, அவள் கர்ப்பமாய் இருக்கும் நேரத்தில் கணவனும், மனைவியுமாய் சேர்ந்து குழந்தையைப் பற்றிய கனவுகளில் திளைக்கும் நிமிடங்களை இருவருமே இழந்து விட்டனர் அவனது வீண் பிடிவாதத்தால்.
     நாட்கள் படுவேகமாய் நகர்ந்தது…
     அவனது ஆர்டிஓ அலுவலகம். அன்று காலை மிகப்பெரிய தனியார் நிறுவனக் கல்லூரி ஒன்றின் பேருந்தும் அதன் அருகே வந்த மற்றொரு தனியார் கல்லூரியின் பேருந்தும், நீ முதலா நான் முதலா என்று போட்டி போட்டுக் கொண்டு சென்றதில் எதிரே வந்த லாரி உட்பட, மூன்று வாகனமும், மோதி பெரும்விபத்துக்கு உள்ளாகி இருக்க, உயிர்பலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. விபத்து நேர்ந்த இடத்துக்குச் சென்றதிலிருந்தே அவன் ஒரு நிலையில் இல்லை!
     ‘ச்சே இவனுங்க போட்டிக்கு பசங்க உயிர்தான் கிடைச்சுதா?! எதுல போட்டி வேணும்கிறது இல்லை! இவனுங்க பண்ண வேலைக்கு இவனுங்க உயிரோடு சேர்ந்து பசங்க உயிரும் போச்சு!’ என்று அவன் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.
     முன்னே சென்ற டிரைவர் படுவேகமாய் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, அவன் அவ்வப்போது அதிவேகத்திலிருந்து சட்டென்று ப்ரேக் அடித்து அடித்து வண்டியை ஓட்டியதில் ப்ரேக் பெயிலியர் ஆக, முன்னே வந்த லாரியில் கண்ட்ரோல் இன்றி முதல் பேருந்து மோதி பின்தள்ளப்பட, பின்னே வந்த பேருந்தில் மோதி நின்றது முன் சென்ற பேருந்து.
     மாணவர்களை விசாரணை செய்ததில், ஓட்டுனர்களின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பது புரிய வந்த போதும், மாணவர்களும் ஆரம்பத்தில் அவர்களது போட்டியை ஊக்குவித்துள்ளனர் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது.
     “நீங்க யாரும் டிரைவரைத் தடுக்கலையா வேகத்தைக் குறைக்கச் சொல்லி?!” என்ற அவன் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லாது போனதில் இருந்தே அவன் கண்டுபிடித்துவிட்டான்.
     “படிக்கிற பசங்கதானே?! படிப்புல உங்க காலேஜுக்கும் அந்தக் காலேஜுக்கும் போட்டி இருக்கலாம்! ஆனா இப்படியா உயிர்களோடு ஒரு  விளையாட்டு தேவையா?! இப்போ எத்தனை உயிரு போச்சு! உங்க அம்மா, அப்பாங்க மாதிரிதானே அந்தப் பசங்களோட அம்மா, அப்பாவும் பல கனவுகளோட அந்தப் பசங்களைக் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பி இருப்பாங்க! உங்களை மாதிரி அந்தப் பசங்களுக்கும் எவ்வளவு ஆசையும், கனவும் இருந்திருக்கும்?!” என்று சராமரியாய் கேள்விகளை வீசியவன்,
      “உங்க எல்லார் மேலயும் இந்த செயலுக்கு அக்ஷேன் எடுக்க முடியும் தெரியுமா?!” என்று அவன் நிறுத்த, அனைத்து மாணவர்களும் கண்ணில் நீர் வராத குறையாய் நின்றனர்…
                                           -மௌனம் மொழி பேசுமா?
 
     
      
    

Advertisement