Advertisement

                                                                               மொழி-20
     சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை. ஆர்எம்ஓ அலுவலகம். அவன் ஆர்எம்ஓ [மனைவாழ் மருத்துவ அலுவலர் அல்லது உள்தங்கு மருத்துவர்} எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அவன் கொடுத்த புகாரையும், அதற்கென சமர்பித்திருந்த சாட்சிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
     “இங்க நடக்குற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க! ஒவ்வொரு தளத்திலும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டபடி குற்றம்னும், மீறி வாங்கினா, உங்க அலுவலகத்துக்கு தெரியப்படுத்தும்படியும், உங்க அலுவலக கைபேசி எஎண்ணோடு குறிப்பிட்டு இருக்காங்க மருத்துவமனை முழுக்க. ஆனாலும் எல்லோருமே இவ்ளோ தைரியமா லஞ்சம் வாங்குறாங்கன்னா என்ன அர்த்தம் சார்?!” என்றான்.
     அவன் கேள்வியில் உண்மை இருந்ததால், அவர் அமைதியாய் அவனைப் பார்க்க, அவன் மேலும்,
     “இங்க வர பல நோயாளிகள் ரொம்பவே வசதி இல்லாதவங்கதான்னு உங்களுக்குத் தெரியாதா?! ஏற்கனவே ஸ்கேன் எடுக்கப்படும் நோயாளிகளுக்கு ஸ்கேன் கருவிகளுக்கு உண்டான பணம், எக்ஸ்ட்ரா ப்ளட் டெஸ்ட்ஸ், அது இதுன்னு இப்போ நிறைய பரிசோதனைக்கு பணம் கட்ட சொல்றாங்க அரசு மருத்துவமனையா இருந்தாலும்”
     “இதுல இந்த லஞ்சப் பணம் வேற! இதெல்லாம் இன்னிக்கு நேத்து நடக்கிறது இல்லைன்னு எனக்கும் தெரியும்! ஆனா இப்போ ரொம்பவே அதிகமா சுரண்டுறாங்க! ஒருத்தர் ஆபேரஷன் தியேட்டர்ல இருந்து வார்டுக்கு ஸ்ட்ரெச்சர்ல அழைச்சிட்டு வரதுக்கு, ஆயிரம் ரூபாய் வாங்குவேன்னு சொல்றார் பெருமையா?!”
     “இதுல வெளியூர்ல இருந்து வந்து தங்கியிருக்குற இருக்கிற பலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம சிரமப்படுறாங்க! ஆனா அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காம, இவங்களை மாதிரி ஆட்கள் கேட்குற லஞ்சப் பணத்தை கொடுத்துதான் ஆகணும்னு என்னமோ வியாபாரம் மாதிரி பேசுறாங்க! அவங்க லஞ்சம் வாங்குறாங்கன்னு இங்க இருக்க ஸ்டாப் நர்சஸ், டாக்டர்ஸ்ன்னு எல்லாருக்குமே தெரிஞ்சுதான் இருக்கு! ஆனாலும் யாரும் கண்டுக்கிறது இல்லை! அது போலதான் நீங்களும் இதை கண்டுக்காம விட்டு இருக்கீங்க?! அப்படிதானே?!” என்றான்.
     “அப்படி இல்லை சார்! இத்தனை நாள் உங்களை மாதிரி துணிஞ்சு யாரும் புகார் கொடுக்கலை! அதனால எங்களால எந்த நடவடிக்கையும் எடுக்க முடியலை!” என்று அவர் தயக்கத்துடன் சொல்ல,
     “என்ன சார் நீங்க?! உங்க அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிற இடத்தில், ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சாலும், யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்தாதான் உங்களால நடவடிக்கை எடுக்கணுமா?” என்றான் அவன் ஆச்சர்யமும் கோபமும் கொண்டவனாய்.
     “அப்படி இல்லைங்க சார்! இதுல பல சிக்கல்கள் இருக்கு! இங்க மருத்துவர், செவிலியர்னு நிறைய பணியாளர்கள் இருந்தாலும், துப்புரவுப் பணியாளர்களும், உதவிப் பணியாளர்களும் முக்கிய பங்கு வகிக்கிறாங்க! நூத்துல தொண்ணுத்தி ஒன்பது சதவீத பணியாளர்கள் இப்படி லஞ்சம் வாங்கத்தான் செய்யுறாங்க! அதிலும் தற்காலிக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யிறவங்களுக்கு, அடிப்படை ஊதியம் ரொம்ப கம்மி. அதனால் அவங்களை எங்களால தடுக்க முடியலை! தற்காலிக ஊழியரே வாங்கும் போது நிரந்தர அரசு பணியாளர்கள் நாங்க வாங்கக் கூடாதான்னு போட்டி போட்டுக்கிட்டு அவங்களும் வாங்குறாங்க! எங்களுக்கும் நடவடிக்கை எடுக்கணும்னுதான் இருக்கும். ஆனா நாங்க அக்ஷேன் எடுக்க போய், அவங்க போராட்டம்னு ஆரம்பிச்சு, ஸ்ட்ரைக் பண்ணா நிறைய சங்கடங்களை சந்திக்க நேரும். அதனாலதான் சார் இதுவரை கண்டும் காணாம இருக்கோம்” என்று அவர் யோசனையுடன் சொல்ல, பேரழகனுக்கும் அவர் மனநிலை புரிந்தது.
     “உங்க எண்ணம் புரியுது சார்! வசதி வாய்ப்பு இருக்கிறவங்க விரும்பி கொடுக்கிறது வேற! ஆனா இல்லாதவங்ககிட்ட அதட்டி வாங்குறது வேற! மேலோட்டமா பார்த்தா இது வெறும் நூறும், இருநூறும்னு சாதாரண விஷயமாத்தான் தெரியும்! ஆனா அதனால நிறைய பேர் அதிகமா பாதிக்கப் படுறாங்க!” என்றவன், மேலும் சில சாட்சிகளாய் ரவி மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே எடுத்த சில காணொளிகளை அவருக்குக் காண்பித்தான்.
     அதில் அந்த வாரர்டில் பணிபுரியும் அத்தனைப் பணியாளர்களும்,  அவ்வப்போது லஞ்சம் வாங்குவதும், கையிருப்பின்றி மனம்நொந்தபடி அதைக் கொடுத்த ஒரு சில நோயாளிகளின் உடன் இருப்போர், போதிய உணவு வாங்கப் பணமின்றி, மருதத்துவமனையில் கொடுத்திருக்கும் ரொட்டித் துண்டை எடுத்துச் சாப்பிடப் போக, அதில் சில கரப்பான் பூச்சிகள் ஊர்வதைப் பார்த்து அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு தண்ணீரைக் குடித்து விட்டு பசியோடு படுத்துக் கொள்ளும் காட்சியும் பதிவாகி இருந்தது.
     “அரசாங்கம் இலவசமா உணவு, பால், பழம்னு எல்லாமே கொடுக்குது நோயாளிகளுக்கு! ஆனா அதெல்லாம் நல்ல முறையில அவங்களுக்குப் போய் சேருதான்னு கவனிச்சிருக்கீங்களா இதுவரைக்கும்!  அந்தப் பால் முட்டையில் கூட திருடு நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாதா?!” என்று அவன் நிறுத்த, அவர் வருத்ததுடன் தலைகுனிந்தார். இதுக்கு மேலயும் நீங்க நடவடிக்கை எடுக்கத் தவறினா,” என்று நிறுத்தியவன், சற்று இடைவெளி விட்டு,
     “நீங்களே ஆக்ஷன் எடுத்தா உங்களுக்கும் டீனுக்கும் நல்லது சார்! இல்லைன்னா சுகாதரார இயக்குநரகம் வரைக்கும் கொண்டு போகவேண்டி இருக்கும்” என்றான் பொறுமையாய்.
     “இல்ல இல்ல சார்! நானே அக்ஷன் எடுக்கறேன். கொஞ்சம் வையிட் பண்ணுங்க!” என்றவர், அவன் கண்முன்னேயே அங்கிருந்த பணியாளர்களின் யூனியன் தலைவருக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து அடுத்த அரை மணி நேரத்திற்குள் அனைத்து பணியாளர்களையும் எப்போதும் பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வர வேண்டும் என்று கட்டளை இட்டார்…
                                   *****
     “ஏய் தேனு! அண்ணா ரொம்ப மாறிட்டார்டி! என் புள்ளைய ஏறெடுத்துக் கூட பாக்காத இருந்தவரு, இன்னிக்கு எப்படிக் கொஞ்சுறாரு?!” என ஜெயா ஆச்சரியமும், மகிழ்வும் கலந்து சொல்ல,
     “கொஞ்சாம என்ன! ரெண்டு புள்ளைங்களை வளர்க்கணும்ல. இப்போவே ட்ரையினிங் எடுக்க வேணாம் உங்க அண்ணன்” என்று தேனு சொல்ல, அதுவரை இரட்டைப் பிள்ளைகள் என்று யாருக்கும் தெரியாது இருக்க அவள் சொன்னதில் எல்லோரும்,
     “அட ரெட்டைப் புள்ளையா?!” என்றனர் சந்தோஷமாய்.
     “ஹஹா எனக்கு ரெண்டு மருமகனுங்க!” என்று ரவி சிரிக்க,
    “ஆமாம்டா! சீக்கிரம் படிச்சு பாஸ் பண்ணி, வேலைக்குப் போய், கல்யாணம் பண்ணி, பொண்ணு பெத்துக் கொடு உன் அக்காக்கு!” என்று ஜெயா கேலி செய்ய,
     “அய்யே ஜெயா அக்கா! நான் போய் பொண்ணு பெத்துக்க முடியுமா? சுஜிதானே பெத்துக் கொடுக்க முடியும்!” என்று அவன் ஏதோ ஆர்வக் கோளாறில் உளறிவிட,
     “சுஜியா?! அது யாருடா?!” என்று ஜெயா வாய்பிளக்க,
     ‘அய்யய்யோ அம்மா காதுல விழுந்துடுச்சா?!’ என்று தேனு திரும்பிப் பார்க்க, நல்லவேளையாய் செல்லம்மா குளியலறைக் குழாயில் வாளியில் தண்ணீரைத் திறந்துவிட்டு அழுக்குத் துணிகளை ஊற வைத்துக் கொண்டிருந்ததால் அப்போதைக்கு அவன் தப்பித்தான்.
     ஆனால் அவன் சொன்னதில் தேனு நங்கென்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்து,
     “வா ஜெயா வீட்டுக்கு” என்று அவனைக் கைபிடித்து எழுப்ப,
     “என்னடி பிரச்சனை?!” என்றாள் ஜெயா.
     “ஷ்!” என்று இருவரையும் மெல்லிய சப்தத்தில் அடக்கியவள்,
     “ம்மா நாங்க கொஞ்ச நேரம் ஜெயா வீட்ல இருந்துட்டு வரோம். அப்பா மார்க்கெட்ல இருந்து வந்ததும் குரல் கொடு” என்று கிளம்பினாள்.
     ரவி மாட்டிக் கொண்ட பீதியில் முகம் வெளிற தமக்கையைத் தொடர, ஜெயா எதுவும் புரியாத குழப்பத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
                              ********* 
     அனைத்துப் பணியாளர்களும் அரங்கத்தில் கூடிய பின், ஆர்எம்ஓ வீடியோவை ஆன் செய்ய அது அந்தப் பெரிய திரையில் அவர்கள் வாங்கிய லஞ்சங்களை அவர்களுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
     ஆனால் அதில் ஒருசிலர் பிடிபட்டது மட்டுமே இருக்க, மற்றவர்கள், ‘நல்லவேளை நாம வாங்கினது தெரியலை!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட,
     “உங்க எல்லோர் மேலயும் என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு எதிர்பார்க்கறீங்க?!” என்றார் ஆர்எம்ஓ.
     “சார்.. நாங்க வாங்கலையே! நாங்க வாங்கலையே!” என்று பலர் கூச்சலிட, அமைதி காக்கும் படி கை உயர்த்தியவர்,
     “இங்க இருக்கறவங்கள்ல ஒருத்தர் விடாம எல்லோருமே லஞ்சம் வாங்கி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா இதுவரை யாரும் உங்கமேல புகார் கொடுக்காததுனால என்னால நடவடிக்கை எடுக்க முடியலை!” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்,
     “சார்! இது அநியாயம்! அதுக்கு என்ன சாட்சி இருக்கு? எல்லார் மேலயும் நடவடிக்கை எடுத்தா நாங்க ஸ்ட்ரைக் பண்ணுவோம்” என்றார் யூனியன் தலைவர் எடுத்த எடுப்பிலேயே.
     அதைக் கேட்ட ஆர்எம்ஓ, ‘நான் சொல்லலை சார்’ என்ற ரீதியில் பேரழகனைப் பார்க்க,
     “நான் அவங்ககிட்ட பேசட்டுமா?” என்றான் பேரழகன்.
     “என்ன பேசப் போறீங்க?!” என்று யோசனையுடன் கேட்டவர்,
     “சரி கொஞ்சம் கவனமா பேசுங்க” என்று அனுமதி கொடுக்க,
     அவனும் அவர்களைப் போலவே எடுத்த எடுப்பிலேயே, “நீங்க செய்தது உங்களைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப சாதாரண விஷயமா இருக்கலாம்! ஆனா லஞ்சஒழிப்புத் துறையைப் பொறுத்தவரை, நூறுரூபாய் இல்லை ஒரு ரூபாய் நீங்க மத்தவங்க கிட்ட இருந்து உங்க உத்தியோகத்தை சலுகையாய் வைத்து வாங்கினாலும் அது லஞ்சம்தான். குற்றம்தான். அதுக்கான தண்டனை கடுமைதான்” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
     அவன் சொல்வது ஏற்கனவே அறிந்தவர்கள், “சார் நாங்க வாங்குற நூறு இருநூறுல என்ன சார் ஆகிடப் போகுது” என,
     தெரியாதவர்கள், ‘ஐயையோ ஒரு ரூபாய் வாங்கினா கூட லஞ்சமா?!’ என்று கலக்கத்துடன் பார்த்திருந்தனர்.
     “ம் நூறு ரூபாய்ல என்ன ஆகிடப் போகுதா?!” என்றவன், ஆர்எம்ஓ விடம் காண்பித்த மற்ற சில காணொளிகளை அவர்களுக்கு போட்டுக் காண்பிக்க, அதில் அவர்களுக்கு மனம் நொந்தபடி பணத்தைக் கொடுத்துவிட்டு, அவர்கள் சென்ற பின்,
     “படுபாவிங்க! சம்பளம்தான் வாங்குறாங்களே இல்லைன்னுதானே கவர்மென்ட் ஹாஸ்பத்திரிக்கு ஓடியார்றோம்! இங்கயும் இப்படி வயத்துல அடிக்கிறாங்களே! இதுங்க புள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்குமா?! இவங்களுக்கு எல்லாம் நோவே வராதா?” என்று திட்டிக் கொண்டே கிராமத்திலிருந்து வந்து மகனுடன் தங்கியிருந்த ஒரு மூதாட்டி, மருத்துவமனையில் கொடுத்திருந்த ரொட்டித் துண்டை மகனுக்குக் கொடுக்கப் போக, அதில் அத்தனைக் கரப்பான் பூச்சிகள்.
     “ஐயோ! என்னமா இது இதைச் சாப்பிட்டா வயத்தாலதான் போகும்” என்று மகன் புலம்ப,
     அந்த வயதானவர், “சரிடா கண்ணு, உனக்கு வேணா வெளிய போய் டிபன் வாங்கியாரட்டா?!” என்றார் கையில் இருந்த பணத்தில் ஒருவருக்கு மட்டுமே உணவு வாங்க முடியும் எனபதால்.
     “ஒன்னும் வேணாம் போ! கையில காசு இருக்க மாதிரியே பேசுறது! இருந்த காசசையும்தான் அந்த ஆள் பிடுங்கிட்டுப் போயிட்டானே!” என்ற அந்த மகன்,
     “நீயும் இதைச் சாப்பிட்டுத் தொலையாத! அப்புறம் ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப் போகுது! காலையிலதான் மாமா காசு கொண்டார்றேன்னு சொல்லி இருக்குல்ல?! அப்போ வாங்கி சாப்பிட்டுக்கலாம்!” என்றுவிட்டுக் படுத்துக் கொள்ள, அந்த வயதானவர்,
     “தண்ணியாச்சும் குடிச்சிட்டுப் படுகண்ணு!” என்று கண்கலங்கியபடியே மகனுக்குத் தண்ணீரைக் கொடுத்துவிட்டு, தானும் கொஞ்சமாய்க் குடித்தார் நாளைக் காலை அவர்கள் பணம் எடுத்து வரும்வரைத் தண்ணீர் இருக்க வேண்டுமே, இல்லையெனில் அதற்கும் காசு வேண்டுமே என்று.
     “பாவி மகனுங்க தண்ணியைக் கூட காசக்கிட்டானுங்க இந்தப் பட்டணத்துல! இந்த வார்டுபாயி இருந்த இருநூறு ரூபாயையும் பிடுங்கிட்டுப் போயிட்டான்! போவட்டும் அவனே வயிறார தின்னுட்டு தூங்கட்டும்” என்று சலிப்புடன் சொல்லிவிட்டுப் படுத்துவிட, அங்கிருந்த மனசாட்சி உள்ளோருக்கு அது வலித்தது.
     அந்தப் பாட்டியிடம் பணம் வாங்கிச் சென்ற அந்த வார்டு பாய் அன்று அந்தப் பணத்தில்தான் தங்கள் பிள்ளைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்தது நினைவு வர, வெட்கித் தலை குனிந்தான்.
     “இங்க இருக்கிறவங்கள்ல மனசாட்சின்னு ஒன்னு இருக்கிறவங்களா இருந்தா நீங்க செஞ்ச தப்பு இந்நேரம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அப்படிப் புரியாதவங்களுக்கு, உங்க சஸ்பென்ஷன் ஆர்டர் கையில் வரும் போது புரிஞ்சிடும்! அதையும் மீறி நீங்க லஞ்சம் வாங்கனும்னு நினைச்சா அடுத்து உங்க பணிரத்துக்கான உத்தரவு உங்க கையில கிடைக்கும் போது எல்லாமே உங்களுக்குப் புரிஞ்சிடும்” என்று அவன் மிரட்டலாகவும் அல்லாமல், பொறுமையாகவும் அல்லாமல் தீர்க்கமாய்ச் சொல்லிவிட, அங்கிருந்த பலருக்கு வயற்றில் பயப்பந்து உருண்டது.
    ஆனால் அப்போதும் ஒருவன், “அப்படி எல்லாம் நீங்க நினைச்சவுடனே கவர்மென்ட் செர்வென்ட்டைத் தூக்கிய முடியாது சார்.” என,
     “அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்துல தப்பு செய்தவர் டாக்டரா இருந்தாலும் அந்த நிமிஷமே தூக்கிடலாம். உங்களுக்குத் தெரியலைன்னா சொல்றேன் கேட்டுக்கோங்க! ஒரு மருத்துவர், டியூட்டி நேரத்துல வேலைல இல்லைன்னு கம்ப்ளைன்ட் பண்ணா அவங்களை ஆறு மாசம் சஸ்பென்ட் பண்ணுவாங்க! மறுபடியும் அதே தப்பு நடந்தா அவங்க எங்கயுமே மருத்துவரா வேலை செய்ய முடியாதபடி அவங்க அங்கீகாரத்தை ரத்து செய்து வீட்ல உட்கார வச்சுடுவாங்க! நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா உங்க உயரதிகாரியை வேணா கேட்டுப் பாருங்க” என்று அவரைப் பார்க்க,
     “ம்!” என்று தலையசைத்தார் அவர்.
     “சார் இதெல்லாம் அநியாயம்! எங்க எல்லோரையும் ஒட்டுமொத்தமா தூக்கினா இந்த ஹாஸ்பிட்டலே நாறிடும்” என்று அப்போதும் ஒருவன் திமிராய்ச் சொல்ல,
     “ஒரே நைட்ல ஆட்கள் சேர்ந்திடுவாங்க ஆன்லைன்ல விளம்பரம் செஞ்சா! இந்த உலகத்துல வேலையில்லாம ரொம்ப பேர் கஷ்டப் படுறாங்க. தெரியும்தானே?” என்றான் நக்கலாய்.
     கேள்வி கேட்டவன் தலை குனிய, மற்றவர்கள் கேள்வி கேட்டவனை முறைத்தார்கள்.
     “நீங்களா மனசு மாறி திருந்தினா உங்களுக்கு நல்லது! இல்லைனா தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்” என்றவன் தொடர்ந்து,
     “ஒரு உதவி மட்டும் உங்களுக்கு எங்களால செய்ய முடியும். அதாவது உங்கள்ல தறகாலிக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ வேலை செய்யிறவங்களுக்கு உங்களுக்கு உரிய அடிப்படை சம்பளம் உயர்த்திக் கொடுக்கும்படி முயற்சி பண்ணி வாங்கித் தர்றோம்! ஆனா ஏற்கனவே இருபதாயிரத்துக்கும் மேல சம்பளம் வாங்குற அரசு துப்புரவுப் பணியாளர்கள் இனி எக்காரணத்தைக் கொண்டும் லஞ்சம் வாங்கக் கூடாது!” என்று நிறுத்த அங்கிருந்தவர்களுக்கு வேறு வழியே இன்றிப் போனது.
     அவர்கள் மனநிலையை யூகித்தவன் அச்சந்தர்ப்பத்தை நழுவ விடாது, அக்கணமே, “நீங்க எல்லோரும் இனி லஞ்சம் வாங்குறது இல்லைன்னும் அப்படி மீறி வாங்கினா அரசாங்கம் எடுக்குற நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படுவோம்னும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு இங்க இருந்து கிளம்புங்க” என்று அவர்கள் கையெழுத்தைக் கொண்டே அவர்கள் லஞ்சம் வாங்கியதை அவர்களுக்கே தெரியாமல் சாட்சியாக்கி பத்திரப் படுத்திக் கொண்டான்.
     ஒருசிலர் மட்டுமே காணொளிகளைக் கண்டு மனதாரத் திருந்தி இருக்க, ஒரு சிலர் பயத்தில் திருந்தி இருக்க, சிலர் மட்டும், அப்போதும் திருந்தாது மனம் நோந்தபடி அங்கிருந்து நகர்ந்தனர்…
    லஞ்சம் என்று ஒழிகிறதோ அன்றே நம் நாட்டில் புதுமைப்புரட்சி மலரும்… 
                                      -மௌனங்கள் மொழி பேசுமா?!    
           
    
 

Advertisement