Advertisement

                          மொழி-4
     “கனவெல்லாம் இல்ல ஆபிசரே! நெசந்தான்!” என்று உரக்கக் குரல் கொடுத்துவிட்டு அவள் குளியலறைக் கதவைச் சாற்றிக் கொள்ள,
     “இவள?!” என்று கோபத்துடன் எழுந்து அமர்ந்தவனுக்கு, அவளை என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை!
     “குளிச்சிட்டு வெளிய வரட்டும்!” என்று காத்திருந்தவனுக்கு, அவள் வெளியே வந்ததும் வராததுமாய்,
     “தேனு… குளிச்சிட்டியாம்மா வெளில வா. அத்தை சத்துமாவு கஞ்சி காய்ச்சி வச்சிருக்கேன். வந்து குடி.” என்று குமுதா குரல் கொடுக்க, அவன் மேலும் கடுப்பாகிப் போனான்.
     அதிலும் அவள், “இதோ ஒரே நிமிஷம் அத்தை. வந்துட்டேன்.” என்று சொல்லி, டிரேசிங் டேபிளின் முன் சென்று நின்று, அங்கிருந்த குங்குமச் சிமிழை எடுத்து, அதிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும், வகிட்டிலும் சூடிக் கொண்டு வெளியேறப் பார்க்க,
     “ஏய்! நில்றீ!” என்றான் ஆணையிடுவது போல்.
     அவன் வார்த்தைக்கு, “ஹான்!” என்று நல்ல பிள்ளையாய் கட்டுப்பட்டு நிற்பது போல் சட்டென்று திரும்பி நின்ற அவன் மனைவி,
     “அட! அத்தை கூப்பிடுறாங்க இல்ல ஆபிசரே! நம்ம பிள்ளை நல்லா கொழு கொழுன்னு, தெம்பா, அழகா, பேரழகனா அவங்க அப்பா மாதிரியே பொறக்கணும்னா… இந்த சத்துமாவுக் கஞ்சி எல்லாம் தினமும் குடிக்கணுமாம். எங்க அம்மா மாவு அரைச்சு குடுத்து அனுப்பிச்சு! அதான் அத்தை செய்து வச்சிட்டு கூப்பிடுறாங்க! முதல்ல நான் போய் குடிச்சிட்டு வந்துடறேன். அப்புறம் ஆறா அமர பேசலாம்!” என்று சொல்லிக் கொஞ்சமும் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவனுக்கு பெப்பே காட்டிவிட்டு அவள் வெளியேறிவிட, அவன் கோபத்தின் எல்லைக்கே சென்றான்.
     ஆனாலும் அவனால் இப்போது அனைவர் முன்னிலையிலும் தன் கோபத்தை வெளிபடுத்தவும் முடியாது! அவளிடம் சுலபமாய் அவன் முடிவைச் சொன்னது போல் எல்லோரிடமும் சொல்லவும் முடியாது…
                                   ******
     சிறிது நேரம் அவள் தங்கள் அறைக்கு வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவன், அவள் வருவதாய் இல்லாமல் போக, அலுவலகத்திற்குப் புறப்பட நேரம் ஆகிறதைக் கருதி, கோபத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு எழுந்து காலைக் கடன் முடிக்க குளியலறை நோக்கி நகர்ந்தான்.
     அங்கோ, குமுதா கூப்பிட்டவுடன் வெளியேறியவள்தான். அதன்பின் தெரியாமல் கூட அவன் அறைப்பக்கம் வந்துவிடவில்லை அவனின் தர்மபத்தினி.
     அடுத்த அரைமணி நேரத்தில் அவன் தயாராகி வெளியே வர, அவள் மீண்டும் நல்ல பிள்ளை போல் சமயலறையில் புகுந்து கொண்டு,
     “மீதி இருக்க மாவுல நான் சூடா பூரி போட்டு எடுத்து வரேன் அத்தை. நீங்க இதுவரைக்கும் செய்திருக்குறதை எல்லோருக்கும் பறிமாருங்க.” என்றாள் மாமியார் மெச்சும் மருமகளாய்.
     “சரிம்மா” என்றவர், சின்ன மகனுக்கு தட்டை எடுத்து வைத்து பூரியைப் பரிமாற, ரகுபதியும், மீனாவும் உணவருந்த தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தனர் ஜோடியாய்.
     “அட, என்ன அதிசயம்டா ரகு?! நீ இவ்ளோ சீக்கிரம் ரெடியாகி வந்துட்ட?! வா, வா. வந்து உட்காரு. எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு?!” என்று குமுதா ஆசையோடு அழைத்தார்.
     “அத்தை நீங்களும் உட்காருங்க. நான் எல்லோருக்கும் எடுத்து வைக்கிறேன்” என்ற மீனா,
     “தேனு… நீயும் வந்து சாப்பிடு! நான் பார்த்துக்கறேன்.” என்று அவளையும் அழைக்க,
     “இல்ல அக்கா. எல்லோரும் சாப்பிடட்டும். நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்றாள் உள்ளிருந்தபடியே.
     “அது சரி வயத்துல பிள்ளைய சுமந்துகிட்டு இருக்க உன்னை பார்க்க வச்சிட்டு நாங்க சாப்பிடுறதா? முதல்ல வா வெளிய” என்று இப்போது மீனா கட்டளையாய் அழைக்க, வேறு வழியின்றி தேனு வெளியே வந்தாள் இதுவரை சுட்டு முடித்திருந்த பூரியைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு.
     “போ போய் உன் வீட்டுக்காரன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு!” என்று மீனா வேண்டுமென்றே அவனை சீண்டுவது போல் சொல்ல, தேனுவும் அவனைத் தன் பங்கிற்கு வெறுபேற்றும் விதமாய், ஒரு வெட்கப் புன்னகையோடு, அவன் அருகே வந்து அமர்ந்தாள்.
     அவன் நிமிர்ந்து அவளை முறைக்க, “சாப்பிடுங்க சாப்பிடுங்க அத்தா…ன்! ஆபீசுக்கு டைம் ஆகுது பாருங்க” என்றாள் புதியதாய் அத்தான் என்ற அழைப்போடு.
     அவளது அத்தான் என்ற அழைப்பில் அவனுக்கு புரை ஏற, அங்கிருந்த மற்றவர்களுக்கோ, குறுநகை எழுந்தது.
     மீனா தேனுவைப் பார்த்துக் கட்டை விரல் உயர்த்திச் சிரிக்க, தேனுவும், அவன் அறியாத வண்ணம், தன் கண்சிமிட்டிச் சிரித்தாள்.
     ‘அட பலே கில்லாடிதான் இந்தப் பொண்ணு! ஒரே நாள்ல கற்பூரம் மாதிரி சொன்னதைப் புரிஞ்சுகிட்டாளே!’ என்று மீனா மனதுள் மெச்சிக் கொள்ள,
     “எவ்ளோ நாளைக்கு அப்புறம் இன்னிக்குதான் வீடே கலகலன்னு இருக்கு. எல்லாம் என் பேரப் பிள்ளை வந்த நேரம்தான்.” என்று குமுதா சொல்ல, அவன் சட்டென நிமிர்ந்து தன் அண்ணியைப் பார்த்தான்.
     மீனா சாதாரணமாய் தான் நின்றிருந்தார். ஆனால் அவனுக்கு மட்டும் ஏதோ வித்தியாசமாய்ப் பட்டது.
     “அம்மா கொஞ்ச நேரம் பேசாம இரேன்” என்றான் சுள்ளென்று.
     “நீ என்னடா இப்படி சொல்லிட்ட?! எவ்ளோ வருஷம் கழிச்சு நம்ம வீட்ல பேரப்பிள்ளை வரப் போகுது?! அப்பா உனக்கு எவ்ளோ சந்தோஷம் இருக்கணும்! நீ என்னன்னா..” என்று அவர் முடிப்பதற்குள் அவன் பாதிச் சாப்பாட்டில் எழுந்தே விட, அவர் முகம் வாடிப் போனது.
     “இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு பாதிச் சாப்பாட்டில் எழுந்துக்குறடா?! சரி நான் எதுவும் பேசலை! நீ உட்கார்ந்து சாப்பிடு” என்றார் வருத்ததுடன்.  
     “உட்கார்ந்து சாப்பிடு தம்பி” என்று மீனாவும் சொல்ல, அவன் அமைதியாய் அமர்ந்தான்.
     ஆனால் தேனுவுக்குதான் இப்போது மீண்டும் மனம் சோர்வைத் தத்தெடுத்துக் கொண்டது.
     தட்டில் இருந்த உணவு உள்ளே செல்ல மறுத்தது.
     ‘நான் திரும்ப வந்தது உங்களுக்குப் பிடிக்கலையா ஆபிசரே?! அப்படி என்ன  நான் தப்பு செஞ்சிட்டேன்!’ என்றாள் மானசீகமாய்.
     அவள் உணர்வுகளை கிரகிக்க முடிந்த மீனா, சட்டென்று சூழ்நிலையை இலகுவாக்க,
     “தேனு ஏய் தேனு… என்ன சாப்பிடாம அப்படியே உன் புருஷன பார்த்துட்டு இருக்க?! சாயந்திரம் அவன் வீட்டுக்கு வந்ததும், பொறுமையா உட்கார்ந்து பார்த்துக்கோ. இப்போ அவன் வேலைக்குக் கிளம்பணும்” என்றார் சின்ன சிரிப்புடன்.
     அவர் வார்த்தைகளில் மீண்டும் புத்துணர்வு பெற்றவள், “போங்க அக்கா! அத்தான் முன்னாடியே இப்படி கேலி பண்ணாதீங்க” என்றாள் மீண்டும் அவனைச் சீண்டி.
     நடப்பதெல்லாம் அவன் பிபியை ஏகத்திற்கும் ஏற்றும் விதமாய் இருக்க, பொறுமையைக் கடைபிடிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாய் இருந்தது.
    நாளே விழுங்கில் தட்டில் இருந்த பூரிகளை விழுங்கியவன், “நைட் இருக்குடி உனக்கு!” என்றுக் கருவியவாறு அங்கிருந்து வேகமாய் எழுந்து சென்றான்.
     சில நொடிகளில் கைகளை கழுவிட்டு, எல்லோருக்கும் பொதுவாய், “நான் கிளம்பறேன்” என்று சொல்லி அவன் கிளம்ப,
     “நான் போய் அவரை வழியனுப்பிட்டு வரேன் அத்தை” என்று தேனுவும் எழுந்தாள்.
    அவள் பின்னே வருவதை உணர்ந்தும் அவன் திருப்பிப் பார்க்காமல் செல்ல, ‘ஆபீசர் எப்பவும் ஸ்ட்ரிக்ட்டுதான்! ஆனா உங்க கண்டிஷன், ரூல்ஸ் எல்லாம் உங்க பொண்டாட்டிக்கிட்ட எடுபடாது ஆபிசரே!’ என்று மனதுள் சொல்லிக் கொண்டவள்,
    “பார்த்து, பத்திரமா போயிட்டு வாங்க அத்தான்” என்றாள் முகம் கொள்ளாச் சிரிப்புடன்.
    அவள் சிரிப்பு அவனுக்கு ஏகத்திற்கும் எரிச்சல் மூட்ட, அவளை எரிப்பதைப் போல் முறைத்துவிட்டு, அவன் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வடியில் ஏற, அவனது ஓட்டுனர் இளங்கோவோ, அவன் எண்ணத்திற்கு நேர்மாறாய்,
     “மேடம் வந்துட்டாங்களா சார்! அதான் உங்க முகத்துல இவ்ளோ சந்தோஷமா?!” என்றான் அவன் முகமாற்றத்தைக் கண்டு கொண்டவனாய்.
    ஆம்! அவள் திரும்ப வந்ததில் அவனுக்கு பேரானந்தம்தான்! ஆனாலும்…
    “உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு இளங்கோ!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
     ‘அன்னிக்கு அவ்ளோ வீராப்பா பேசிட்டுப் போனவ இப்போ எப்படி திடீர்னு திரும்பி வந்தா?! அதிலும் அவ புதுசா கூப்பிடுற அந்த அத்தான் இருக்கே?!’ என்று எண்ணியவன், கைகள் இறுக,
     ‘நைட் வச்சுக்கிறேன்டி உனக்கு கச்சேரியை!’ என்றான் மீண்டும்.
     கச்சேரி யார் யாருக்கு வைக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
                                *****
     “தேனே நல்லா இருக்கியா? மாப்பிள்ளை எதுவும் சத்தம் போடலையே உன்கிட்ட?!” என்று செல்லம்மா கவலையுடன் மகளிடம் போனில் வினவிக் கொண்டிருக்க,
     “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா! நீ ஒன்னும் கவலைப்படாத! அப்பாக்கு இப்போ உடம்பு எப்டி இருக்கு?” என்றாள்.
     “எங்க அது எப்பவும் போலதான் கிடக்கு! இந்தப் பைய படிப்பு முடிய இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கு. அது வரை எப்படியே ஓட்டிட்டோம்னா போதும்! உன் அப்பாவையும் வேலைக்கு அனுப்பாம நிப்பட்டிடலாம்.” என்றார் செல்லம்மா.
     “ம் ம்மா! அவன் ஒழுங்கா படிக்கிறனா? இல்லை இப்பவும் கடையிலேயே தான் உட்கார்ந்துகிட்டு இருக்கானா? என்றாள் தேனுவும் அவன் படித்து வேலைக்குப் போவான் என்ற நம்பிக்கையில்.
     “அட எங்கம்மா அந்தப் பையன் கடையை விட்டு நகர மாட்டேங்குது! கேட்டா உனக்கு என்ன பாசாவனும் அவ்ளோதானேன்னு என்னையே எதிர்கேள்வி கேட்குது.  நீ கல்யாணம் கட்டி போறவரைக்கும் பேருக்காவது புஸ்தகத்தை வைச்சு பார்த்துட்டு இருப்பான். இப்போ அதுவும் இல்லை!” என்றார் செல்லம்மா கவலையாய்.
     “படிப்பான் படிப்பான் ம்மா நான் அவன்கிட்ட பேசுறேன்!” என்று அச்சமயம் தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டாலும்,
     ‘இந்தப் பையன் ஏன்தான் இப்படி இருக்கான். ஆரம்பத்துல இருந்தே படிப்புல ஆர்வம் இல்ல! நான்தான் தொல்லை பண்ணி காலேஜு சேர்த்துவிட்டேன். அலமு அக்கா சொன்ன மாறி இவன் படிப்புக்கு நாம கடன் வாங்கி செலவு பண்ணது எல்லாம் வீண்தானோ?!’ என்ற எண்ணம் தோன்ற,
     ‘இந்த வாட்டி வர பரிட்சையில பாசாவாம கண்டி போவட்டும்! கை, காலை ஒடச்சிப் புடுறேன் ஒடச்சி!’ என்றாள் தீர்க்கமாய்.
                                   *******
     மாலை அவளிடம் பேசவேண்டும் என்று விரைவிலேயே வீடு திரும்பியவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வீட்டில் அவன் அம்மா மட்டுமே இருக்க,
     “வாடா நல்லவேளை சீக்கிரம் வந்துட்ட! அண்ணியும், தேனுவும் கோயிலுக்குப் போயிருக்காங்க டா! இன்னிக்கு மஹாசிவராத்திரி! அதனால கோவில்ல நைட் தங்குவோம். நீ முகம் கழுவிட்டு வா. உனக்கு சாப்பாடு போட்டுட்டுப் நானும் கிளம்பணும். நேத்து நைட்டே பட்டினியா படுத்திருக்க! எடுத்த வைச்சிட்டு போன சாப்பாட்டைக் கூட போட்டு சாப்பிட முடியலை உன்னால!” என்று அவர் போக்கிற்கு சொல்லியபடியே அவனுக்கு வேண்டிய உணவை எடுத்து வந்து வைக்க சமையலறை சென்றார்.
    ஆனால் அவள் இன்று இரவும் தன்னிடம் சிக்க மாட்டாள் என்று உணர்ந்தவனுக்கோ, முற்றிலும் எரிச்சல் மண்ட, ‘நானும் பார்க்கிறேன்டி! எத்தனை நாளைக்குதான் நீ இப்படித் தப்பிக்க முடியும்னு!’ என்று மனதுள் கறுவிக் கொண்டு முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தான்.
     அவன் உண்டு முடித்ததும், “டேய், அம்மாவைக் கோவில் வரைக்கும் கொஞ்சம் கொண்டு போய் விட்டுடுடா!” என்றார் குமுதா.
     “ம் சரிம்மா” என்று தலையாட்டியவன், அவர் சில நிமிடங்களில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அவனை அழைக்கவும், தாயை கோவிலில் விட்டுவிட்டு வருவதற்காய் அங்கு சென்றான்.
     ஆனால் அங்கோ அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாய், தேனுவும் மீனாவும் கோவிலின் வெளியே இருந்த மரத்தடியில் அமர்ந்திருக்க, மீனா அவனைப் பார்த்ததும், எழுந்து அவன் அருகே வந்தார்.
     “நல்ல நேரம் பார்த்து வந்த தம்பி. தேனுவுக்கு கோவில்ல சாப்பிட்ட சர்க்கரைப் பொங்கல் சேரலை! ரொம்ப நெய் அதிகமா விட்டிருந்தாங்க! அதனால் வாமிட் பண்ணிட்டா! ரொம்ப டையார்டா தெரியுறா. அவளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்டுடா. ரெஸ்ட் எடுத்தாதான் அவளுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்” என,
    அவளை ஏற இறங்கப் பார்த்தவன், ‘இப்போ மாட்டின இல்லடி!’ என்றான் பார்வையாலேயே.
     அவன் பார்வையைக் கண்டும் காணாதது போல் இருந்தவளோ, ‘அட போ ஆபிசரே! யார் யாருகிட்டு மாட்டிட்டு முழிக்கப் போறதுன்னு வீட்டுக்குப் போன பிறகு பார்ப்போம்!’ என்றுவிட்டு ஒய்யாரமாய் அவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டவள், வேண்டுமென்றே சப்போர்ட்டிற்காய் அவன் தோளை இறுகப் பற்றியபடி அமர்ந்து கொண்டாள்.
     அவன் கண்ணாடி வழியே அவளை முறைக்க, அதைக் கண்டும் காணாதது போல், “கிளம்பறோம் அத்தை! கிளம்பறோம் க்கா!” என்று இருவரிடமும் விடைபெற்று,
     ‘போதும் முறைக்கறதை விட்டுட்டு, வண்டியை எடு ஆபிசரே!’, என்ற ரீதியில் அவனைப் பார்த்துவைத்து, அவனை வண்டி எடுக்கும் படி சொல்லாமல் சொன்னாள்.
     “சரி நீங்க கிளம்புங்க. நாங்க கோவில் உள்ள போறோம்!” என்று குமுதா, மீனா இருவரும் உள்ளே செல்ல,
     “கிளம்புங்க ஆபிசரே! எவ்ளோ நேரம்தான் இங்கயே நிப்பீங்க. எப்டி இருந்தாலும் நீங்கதான் கூட்டிட்டுப் போகணும்” என்றாள் சிரித்த முகமாய்.
     அவள் பேச்சில் எழுந்த கோபத்தில், பைக்கை சீற்றமாய் அவன் கிளப்ப, அதன் வேகத்தில் ஒரு கையால் அவன் தோளை மட்டும் பற்றி அமர்ந்திருந்தவள், தன் இடக்கையால் அவன் இடுப்பையும் சுற்றி வளைத்தாள் பாதுகாப்பிற்காய்.
    அவள் செயலில் மேலும் கடுப்பானவன், “ஏய் என்னடி பண்ற?!” என்றான் சட்டென வேகத்தைக் குறைத்தபடி முகம் சிடுத்து.
    “ஹான் ரோட்ல வச்சு ரொமான்சா பண்ண முடியும் ஆபிசரே! ஒரு சாப்போர்ட்டுக்கு வண்டி கிளம்பின வேகத்துல உங்களைப் கெட்டியமா புடிச்சுக்கிட்டேன்.” என்றவள், மேலும் தொடர்ந்து,
     “உங்க பொண்டாட்டியையும், உங்க புள்ளையையும் பத்திரமா வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு. ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் தன் நிலையை நினைவு படுத்துபவளாய்.
     அவள் பதிலில் சட்டென ஜெர்க் ஆனவன், யாருக்காய் அவளை ஒதுக்க நினைத்தானோ அவருக்காகவே அவளை பத்திரமாய் அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலானான் தன் கோபத்தையும் மீறி தன் மகவுக்குத் தகப்பனாய்…
                           -மௌனங்கள் மொழி பேசுமா?!
 
    
       
    
    
    
 
   
    
         
     

Advertisement