Advertisement

மொழி-14
     “எ என்ன சொல்றீங்க?!” என்று அவள் குரல் நடுங்கக் கேட்க,
     “நீங்க எல்லோரும் நினைக்குற மாதிரி என் அண்ணிக்கு குழந்தை பிறக்காம எல்லாம் இல்லை! அவங்களுக்கு அழகான குட்டி தேவதை ஒருத்தி இருந்தா! கல்யாணமாகி மூணு வருஷம் குழந்தை இல்லாம இருந்து, ஹாஸ்பிட்டலுக்குப் போய் ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு அண்ணன், அண்ணிக்கு எங்க லல்லி பிறந்தா! எங்க வீட்டோட குட்டி இளவரசி பிறந்தா!” என்றவன் கண்களில் அவளைப் பற்றிய எண்ணத்தின் மகிழ்வும், அதோடு பெரும் வேதனையும் ஒருசேர நெஞ்சில் எழுந்தது.
      “நான் அப்போ காலேஜ்தான் படிச்சிட்டு இருந்தேன். எனக்கும் அண்ணாக்கும் நிறைய வயசு வித்தியாசம்! நானும் அக்காவும், அண்ணன் பிறந்து ரொம்ப வருஷம் கழிச்சுதான் பிறந்தோம்! அண்ணி எங்களுக்கு இன்னொரு அம்மா மாதிரி! எங்க மேல அவ்ளோ பிரியமா இருப்பாங்க!”
     “அன்னிக்கு லல்லியோட நாலாவது பிறந்தநாள்! வீட்டுல எல்லோரும் சாயந்திரம் கொண்டாடப் போற பிறந்தநாள் விழாவுக்காக ரொம்ப மும்முரமா ஓடி ஆடி வேலை செய்துட்டு இருந்தாங்க! அப்போதான் என் அப்பா, அவரோட ட்ராவல்ஸ்ல இருந்த ஒரு காரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாரு!
      “எனக்கு அப்போல்லாம் கார்மேல அப்படி ஒரு கிரேஸ்! யார் வீட்டுக்கு கார் கொண்டு வந்தாலும் ஓட்ட எடுத்துட்டு போய்டுவேன்! அன்னிக்கும் அப்படித்தான். அப்பா எடுத்துட்டு வந்த கார்ல நிறைய பிரச்சனை இருக்குன்னு தெரியாம வண்டியை எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்படியே வரும் போது லல்லிக்கு பிறந்தநாள் பரிசும் வாங்கிட்டு வரலாம்னு! ஆனா வண்டி ரன்னிங்ல இருக்கும் போது தான் தெரிஞ்சுது! அது கண்ட்ரோல் இல்லாம போறதும், சட்டுன்னு பிரேக்கும் அடிக்க  கூட முடியாத அளவுக்கு வொர்ஸ்ட் கண்டிஷன்ல இருக்கிறதும்! என்ன ட்ராவல்ஸ் வண்டி இந்த கண்டிஷன்ல இருக்கு?! முதல்ல அப்பாகிட்ட இதையெல்லாம் சரி பண்ண சொல்லணும்னு நினைச்சுகிட்டேன். ஆனா அவர் தெரிஞ்சேதான் நிறைய வண்டியை மோசமான கண்டிஷன்ல  வச்சிருக்காருன்னு எனக்கு அப்போ தெரியாது! அவருக்கு பணம் சம்பாதிக்குறதுல இருக்க ஆசை அதை செலவழிக்குறதுல கிடையாது! அவர் செஞ்ச தப்புக்கு எத்தனை உயிர் போச்சோன்னு தெரியலை! எல்லா சாபமும் சேர்ந்து அன்னிக்கு எங்க வீட்டோட வாரிசை என் கையாலயே பறிச்சுடுச்சு!” என்றவனுக்கு அந்த நாட்களின் நினைவில் கண்களில் நீர் கோர்த்து நின்றது. 
                                  *******
     “அத்தை! சாயந்திரம் எல்லோருக்கும் வீட்டுலயே சமைக்குறதுனால இப்போவே காய் நறுக்க ஆரம்பிச்சாதான் முடியும்!” என்றார் மீனா.
      “ஆமாம்! அதுவும் சரிதான் மீனா நீ போய் எடுத்துட்டு வந்து கொடு. நானும், அம்மாவும், சேர்ந்து காயெல்லாம் வெட்டி வச்சுடறோம்” என்றவர்கள் மாலை சமையலுக்கான வேலையில் இறங்கி விட, லல்லி வெளியே இருந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள் தன் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களின் குழந்தையுடன்.     
     திருநெல்வேலியில் இருந்த அவர்கள் வீடு மிகவும் பழங்காலத்து வீடு! பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த வீடு என்பதாலும் அழகான சூழலைக் கொண்ட இடம் என்பதாலும், இடித்துக் கட்ட மனமில்லாமல் அங்கேயே குடியிருந்தனர் அவர்கள். ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க, வீடு அவர்கள் நிலத்தின் எல்லையிருந்து சற்றே உள்தள்ளி கட்டப்பட்டிருந்தது. எல்லையிருந்து வீட்டை அடைய நடந்து சென்றால் ஐந்து நிமிடம் ஆகும்! மண்பாதைதான்.
     அவன் லல்லிக்கு பிடித்த பொம்மையுடன் வீட்டை அடைய, அங்கு சிறுவர்கள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தபடியே அவன் மண்பாதையில் வண்டியைச் செலுத்தினான் மெதுவாய். பாதையின் ஒருபுறம் தோட்டம் போடப்பட்டு, செடிகள் நிறைய வைக்கப் பட்டிருக்க, ஒருபுறம் காலி மைதானம் இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் திடிரென வண்டியின் பாதையில் ஓடிவர, அவன் சட்டென்று அவ்வண்டியில் ப்ரேக் போட முடியாததால் வண்டியை மேலும் ஸ்லோ செய்தபடி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்திற்கு எதிர்புறமிருந்த மல்லித் தோட்டத்தில் ஒடித்துத் திருப்ப, அங்கிருந்த சில மல்லிகைச் செடிகளை மோதி அதை முற்றிலும் சிதைத்துச் சற்று தூரம் சென்ற பிறகே நின்றது அந்தக் கார்!
    இடித்தது செடியைத்தான் என்றாலும் அவனுக்குள் ஏதோ நெருடல்! வண்டிச் செடியை இடிக்கும் போது, ஏதோ கலுக்கென்று சப்தம் கேட்க, அது அவனுக்கு வித்தியாசமாய்ப் பட கார் நின்றதுமே அதிலிருந்து இறங்கி பதட்டத்துடன் ஓடி வந்தவன், கண்டது, ரத்த வெள்ளத்தில் நசுங்கி இருந்த அவர்களது உயிருக்குயிரான லல்லியை!
     “லல்லி….???!!!” என்று அவன் கதறிய கதறல் ஓலமாய் அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் நாராசமாய் ஒலிக்க, அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.
     அவன் நசுங்கியிருந்த லல்லியை கையில் எடுத்து வாரியணைக்கக் கூட முடியாமல், அவன் எடுக்க எடுக்க குழைந்து கிடந்த அவள் உடல் நழுவ, “ஐயோ! லல்லிமா!! லல்லிமா!!” என்ற  அவனின் அழுகை பெரும் கேவலாய் வெடித்தது.
     வெளியே ஓடி வந்த மீனா, லல்லியைக் கண்ட கோலத்தில், “லல்லி!” என்ற ஒரே குரலில் கதறி மயங்கிவிட, ரகுபதி தன் குழந்தையும் மனைவியும் ஒரே நேரத்தில் இப்படி ஆனதில் ஸ்தம்பித்துப் போனார்! அவருக்கு சில நிமிடங்கள் என்ன செய்வதென்றே தெரியாது போக, அதற்குள் லல்லியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த மீனாவின் அண்ணனும், தம்பியும், போலீசில் விஷயம் தெரிவித்து,
     ‘அவன்தான் வண்டி ஏற்றிக் கொன்றான். கைது செய்யுங்கள்’ என்று பேரழகனைக் கைகாட்டி இருந்தனர்.
     “வண்டி சரியில்லைன்னு மட்டும் சொல்லிடாதடா நம்ம ட்ராவல்ஸயே இழுத்து முடிடுவாங்கடா! அப்புறம் குடும்பமே கஷ்டப் படணும்டா!” என்று மெல்ல அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிக் கெஞ்சி நின்றார் அவனின் தந்தை மனோகரன்.
     அவனுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை! என்னதான் வண்டி சரியில்லை என்றாலும், தனது கவனக் குறைவால்தானே இப்படி நேர்ந்தது. மல்லித் தோட்டத்திலும் பிள்ளைகள் இருக்கக் கூடும் என்று நினைக்காது போனது என் தவறுதானே! தெரியாமல் செய்தாலும், ஒரு உயிர் போய்விட்டதே! அதிலும் அவர்கள் அனைவரும் ஆசை ஆசையாய் தூக்கி வளர்த்த தேவதை!
     “சித்துப்பா சித்துப்பா!” என்று கொஞ்சிக் கொஞ்சி அவன் தாடையைப் பிடித்து முத்தம் வைக்கும் அவன் லல்லியின் பிம்பம் மட்டுமே அவன் நெஞ்சை நிறைக்க, எதுவுமே பேசத் தோன்றது சிலையாய் நின்றான் என்ன வேணா செய்துக்கோங்க என்ற ரீதியில்!
     போலீஸ் அவனை அழைத்துச் செல்ல, அவன் கையைப் பிடிக்க, அப்போதே மயக்கம் தெளிவித்து உட்கார வைக்கப் பட்டிருந்த மீனா,
     “நில்லுங்க சார்!” என்றார்.
     “குழந்தையோட அம்மா, அப்பா நாங்க கம்ப்ளைன்ட் கொடுத்தாதானே நீங்க கேஸ் எடுக்கணும்! தெரியாம நடந்த விபத்துக்கு அவனை எப்படி நீங்க அரெஸ்ட் பண்ண முடியும்?! அவனும் எங்க பையன்தான்! எங்க லல்லி மேல அவன் எவ்ளோ உயிரை வச்சிருக்கான்னு எங்களுக்குத் தெரியும்! ஏற்கனவே ஒரு பிள்ளைய இழந்து தவிச்சிக்கிட்டு இருக்கோம்! இன்னொரு பிள்ளையையும் எங்ககிட்ட இருந்து பறிச்சுடாதீங்க!” என்று அவர் கெஞ்சலாய் கேட்க,
     “மீனா என்ன பேசுற நீ?! நம்ம லல்லியை அவன்தான் கார் ஏத்திக் கொன்னான்! பசங்கதான் பார்த்திருக்காங்களே” என்று மீனாவின் அண்ணன் கோபம் கொள்ள,
     “அண்ணா நீ பேசாம இரு. இது எங்க குடும்ப விஷயம்” என்று ஒரே வார்த்தையில் அவரை அடக்கி விட்டார் மீனா. ரகுபதியும் மீனாவை மறுத்து எதுவும் பேசவில்லை! ஆனாலும் உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது தம்பியின் மேல்!
     அவன் நன்றிப் பேருக்கும், குற்றஉணர்ச்சியும் மேலிட தன் அண்ணியைப் பார்க்க, காவலர் மற்ற கடமைகளை மட்டும் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
     என்னதான் போலீஸ் அவனை அரெஸ்ட் செய்யவில்லை என்றாலும், லல்லியின் இறப்பிற்கு வந்திருந்த அத்தனை பேரும் அவன் என்னவோ வேண்டுமென்றே கொன்றான் என்ற ரீதியில் பேசிவிட்டுச் செல்ல, மீனா இரண்டு நாட்கள் ஆகியும், ஆகாரம் எதுவும் எடுக்காததால், தன் அண்ணியின் முகத்தில் விழிக்கவே பயந்து ஒதுங்கி ஒதுங்கி இருந்தவன். அன்று மனம் கேளாமல், தானே அவருக்கு தட்டில் உணவை வைத்து எடுத்துக் கொண்டு அவர் அறைக்குச் சென்றான்.
     கட்டிலில் படுத்திருந்தவர் அருகே சென்று நின்றவன், “அண்ணி!” என்று அழைக்க, அவர் கண்கள் மட்டும் அசைந்தன.
     “கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க அண்ணி!” என்றான் கெஞ்சலாய்.
     அவர் தலை வேண்டாம் என்பது போல் அசைய, “ப்ளீஸ் அண்ணி!” என்றவனுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
     அப்போதும் அவர் வேண்டமென்று தலையசைக்க, அப்படியே மடிந்து அமர்ந்தவன், கண்களில் நீர் பெருக, “ப்ளீஸ் அண்ணி! சாப்பிடுங்க! எனக்காக” என்றான் கண்களில் நீர் வழிய.

Advertisement