Advertisement

                                                                           
     “ம்! போங்க! காலையிலேயே!” என்று அவள் முன்னெச்சரிக்கையாய் தவிர்க்க நினைக்க,
     “என்னடி! சும்மா இருந்தவனை கிளப்பி விட்டுட்டு, நழுவப் பார்க்குற?!” என்று அவன் பிடி இறுக,
     “ப்ச் வெளியே எல்லோரும் எழுந்துட்டாங்க போல! விடுங்க!” என்று சொல்லி அவனிடமிருந்து ஒரே முச்சாய் விலகி எழுந்து ஓடிவிட்டாள்.
     அவனும் எல்லோரும் எழுந்துவிட்டதின் அரவம் உணர்ந்து அவளை மேலும் சோதனைக்குள்ளாக்காமல் விடுதலை அளிக்க, குளிக்க மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு சென்றவள், மீண்டும் அவனருகே வந்து அவன் கன்னத்தில் கடித்து விட்டு ஓட,
     “அடி ராட்சஸி!” என்று துள்ளி எழுந்தவனின் கைக்கு சிக்காமல் மீண்டும் நழுவிவிட்டாள் மீன் போல்!
     குளித்து தயாராகி அவள் வெளிக் கூடத்திற்கு வர, அங்கு மீனா, ரகுபதி, குமுதா, மூவரும் மீனா வீட்டு உறவினர் திருமணத்திற்காய் அதிகாலையே திருநெல்வேலி கிளம்பிக் கொண்டிருக்க,
     “என்ன அத்தை எல்லோரும் வெளியில கிளம்புறீங்களா?!” என்றாள் தேனு ஆச்சர்யமாய்.
     “ஆமாம் டா அன்னிக்கு பத்திரிக்கை வச்சுட்டு போனாங்களே! மீனா சொந்தக்காரங்க. அவங்க கல்யாணத்துக்கு தான். திருநெல்வேலி வரைக்கும். மூணு நாள்ல திரும்ப வந்துடுவோம்!” என,
     “ஏன் அத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லலை! சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம்ல?!” என்றாள் தேனு.
     அவரால் என்ன சொல்ல முடியும்? அவள் கணவன் அங்கே வந்தால் அங்கு திருமணம் அல்ல களேபரம் தான் நடக்கும் என்றா!
     சில நொடிகள் புரியாது யோசித்தவர், சட்டென்று சமாளிக்கும் விதமாய், “இல்லைம்மா அவன் இதுக்காகவெல்லாம் லீவ் எடுக்க மாட்டான்! அவன் வராம நீயும் வர மாட்ட அதுதான்” என்றவர்,
     “பத்திரமா இருந்துக்கோங்க! மூணே நாள்ல திரும்ப வந்துடுவோம்!” என்று சொல்ல,
     “ம்! அதுவும் சரிதான் அத்தை! உங்க பிள்ளைதான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசராச்சே!” என்றுவிட்டு அவர்கள் ஊருக்குச் செல்லத் தேவையானவவற்றை எடுத்து வைக்க அவருக்கு உதவினாள்.
     ஒரு மணி நேரத்தில் அனைவரும் ஊருக்குக் கிளம்ப, அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் அவனும் வேலைக்குக் கிளம்பி விட்டான்.
     எப்போதடா அவன் கிளம்புவான் என்று காத்திருந்தவள், அருகே இருந்த பெண்மருத்துவர் ஒருவரிடம் செல்ல, அவள் எதிர்பார்ப்பு வீணாகாமல் அங்கு ப்ரெக்னென்சி டெஸ்ட் மூலம் அவள் கர்ப்பம் உறுதி ஆனது. சந்தோஷ மிகுதியில் அவள் அவனுக்கு விஷயம் சொல்ல தன் கைபேசியை எடுக்க,
     “இந்தாங்கம்மா மீதி காசு.” என்று அவள் கொடுத்த பணத்திற்கான சில்லறையை அங்கு வேலை பார்க்கும் பெண்மணி அவளிடம் திரும்பக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள்,
    ‘ப்ச்! இப்போ வேணாம்! நேர்ல சொன்னாதான் ரொம்ப சந்தோஷமா இருக்கும்!’ என்று நினைத்தவள், அவன் குழந்தை வேண்டாம் என்று மறுத்ததை எல்லாம் ஏதோ கனவு போல் நினைத்து மறந்திருந்தாள் ஏற்படப் போகும் விளைவுகள் அறியாமல்.
     அந்நொடி முதல் அவன் வருகைக்காய் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் அவன் அழைத்தபோதும் கைபேசியை எடுக்காமல் சோதித்தாள் எங்கே போனை எடுத்தால் இப்போதே சொல்லி விடுவோமோ என்று!
     அவள் கைபேசி அழைப்பை ஏற்காததில் என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறியவன், வேலையிலிருந்து பாதியில் வரவும் முடியாமல், வீட்டிலும் யாரும் இல்லாததால் அவர்களுக்கு போன் செய்தும் விவரமும் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அங்கு.
     அதே கோபத்தில் அவன் வந்ததும், வராததுமாய், “ஏன்ன இதுக்குடி போன் வைச்சிருக்க?! எத்தனை வாட்டி கூப்பிட்டேன்! ஏன் எடுக்கலை?!” என்று கத்தினான் பொறுமை இழந்து.
     ஆனால் அவளோ, அதற்கு நேர்மாறாய் கள்ளச் சிரிப்புடன் அவனை நெருங்கிக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் முத்தம் பதிக்க, அவனுள் இத்தனை நேரம் இருந்த படபடப்பு போய் அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றிக் கொண்டது.
     “என்ன வீட்ல யாரும் இல்லைன்னதும், தேனம்மாக்கு ரொம்ப ஆசை வந்துடுச்சோ புருஷன் மேல?!” என்றபடி அவன் பதில் முத்தம் பதிக்க,
     “ப்ச் போங்க ஆபிசரே!” என்று சிணுங்கியவளிடம் இத்தனை நாட்களை விட அழகு பன்மடங்கு கூடியது போல் இருந்தது அவனுக்கு!
     “நான் ஒரு விஷயம் சொல்லட்டா?!” என்று அவள் பீடிகையுடன் ஆரம்பிக்க, சில நாட்களுக்கு முன்புவரை உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தவளிடம் காலையில் இருந்து இந்த திடீர் மாற்றம், அவனுக்கு எதையோ உணர்த்த, சடுதியில் அவளைத் தன்னிலிருந்து பிரித்தெடுத்தான் சந்தேகமாய்.
     அவள் என்னவாயிற்று என்பது போல் பார்க்க, “நீ நீ கர்ப்பமா இருக்கியா தேனம்மா?!” என்றான் எந்த உணர்வும் காட்டாமல்!
     அவன் கேள்வியில் வெட்கம் கொண்டவள், தலைகுனிந்து, “ம்! என்று தலையசைக்க,
     “எப்போல இருந்து மாத்திரை எடுக்குறதை நிறுத்தின?!” என்றான் கடினமாய்.
     அவள் ஏதேதோ கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, அவனிடமிருந்து இப்படி ஒரு பிரதிபலிப்பை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! என்ன தான் குழந்தை வேண்டாம் என்று சொன்னாலும், குழந்தை வந்தது தெரிந்த பிறகும் அவன் இப்படி நடந்து கொள்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை!
     “அது அது வந்துங்க?” என்று அவள் திணற,
     “இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம்” என்றான் முடிவெடுத்துவிட்டவனாய்.
     அவன் வார்த்தைகளில் அவள் பலமிழந்து நிற்க, அவனை அப்படி ஒரு தீப்பார்வை பார்த்தாள்.
     “நீ என்ன சொன்னாலும், நான் இதை ஏத்துக்க மாட்டேன்!” என்று அவன் சொல்ல,
     ஆச்சர்யத்தில் தன் கண்களை அகல விரித்தவள், அவன் மனைவியாய் அல்லாமல் அந்நொடி தாயாய் யோசித்தாள்.
     “நீங்க நம்ம குழந்தைக்கு அப்பாவா இந்த முடிவை எடுக்க முடியும்னா, நான் ஒரு அம்மாவ என் முடிவையும் எடுக்க முடியும்” என்றவள்,
     “எனக்கு நம்ம குழந்தை வேணும்” என்றாள் தீர்மானமாய்.
     “அப்போ நான் முக்கியமில்லை!” என்று அவன் கேட்க,
     “நான் அப்படி சொல்லலையே!” என்றாள்.
     “ச்சே இதுக்குத்தான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்! ஏன்தான் உன்னை பார்த்துத் தொலைச்சேனோ?!” என்று அவன் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று உணராமல் வாய்விட,
     “என்ன?!” என்று அவனைக் கூர்ந்து நோக்கியவள், அவன் சொன்னதை தப்பாக அர்த்தம் கொண்டு,
     “ஓ! இவ வெறும் ஆட்டோகாரிதானே?! இல்லாதவதானே?! என்ன சொன்னாலும் கேட்டுப்பான்னு நினைச்சு என்னைக் கட்டிகிட்டீங்களோ?! உங்க ஆசைக்கு மட்டும் தான் ஒரு பொண்ணு வேணும்னா, அதுக்கு நீங்க கல்யாணமே பண்ணி இருக்க வேண்டாமே! வேற” என்று அவளும் அப்போதிருந்த மனநிலையில் அவன் காதலையே கொச்சைப் படுத்திவிட,
     “சீ! என்னடி பேசுற?!” என்று அவள் மீது கை ஓங்கப் போனவன், சட்டென தன்னைக் கட்டுப்படுத்தி, கைகளைத் தாழ்த்தினான்.
     “அடிங்க! இதுக்கெல்லாம் மட்டும் உங்களுக்கு உரிமை இருக்குதானே! அதான் தாலி கட்டிட்டீங்களே?!” என்று அவள் நக்கலாய் சொல்ல,
     “சீ! இதுக்கு மேல உன்கூட பேசினா எனக்குதான்டி அசிங்கம்!” என்றவன் வந்த வேகத்தில் வீட்டிலிருந்து வெளியேறிவிட, அவனது,
     ‘ஏன்தான் உன்னை பார்த்துத் தொலைச்சேனோ?!’ என்ற வார்த்தைகளில் அவன் இதுநாள் வரை தன் மீது கொண்டிருந்த காதலையும் நேசத்தையும் அந்நொடியில் மறந்தவள்,
     “நான் இல்லாதவன்னு தானே என்ன சொன்னாலும் கேட்டுப்பேன்னு என்னைக் கட்டிக்கிட்டீங்க?!” என்று தவறாய் மனதில் உருபோட்டுக் போட்டுக் கொண்டு, அவனையும், அவன் காதலையும் பொய்யென்று தானே கற்பனை செய்து கொண்டு, அந்நொடி தான் அவனின் தாரம் என்பதை தூரம் வைத்து, தாயாய் மட்டுமே அம்முடிவை எடுத்தாள்…
     அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! விஷயம் கேள்விப்பட்டதும் இந்த குழந்தை வேண்டாம் என்று வார்த்தைகளால் சொல்லி விட்டான்தான்! ஆனால் அவன் உள்ளம் நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது! மறுபடியும் தெரிந்தே பெரிய தவறு செய்கிறேனோ?! என்று.
     ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகள், ‘ச்சே எப்படி அவளால அப்படிப் பேச முடிஞ்சுது! அப்போ அவ்ளோதான் அவ என்னோட வாழ்ந்த  வாழ்க்கைக்கு அர்த்தமா?! எவ்ளோ கேவலமான வார்த்தைகள்?!
     ‘ஆசைக்கு மட்டும்தான் வேணும்னா அதுக்குக் கல்யாணமே பண்ணி இருக்க வேண்டாமேன்னு எப்படி வாய்க் கூசாம சொல்லுறா?!’ என்று திரும்பத் திரும்ப அவள் சொன்ன வார்த்தைகளை எண்ணி எண்ணி மேலும் தன் மனக்காயத்தைப் பெரிது படுத்திக் கொண்டவன், ஏற்கனவே தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையோடு, இன்று தன் குழந்தையையே அழிக்கச் சொல்லும் துர்பாக்கியத்தோடு, கூட சேர்ந்து இவளும் அவனை வதைத்தது எண்ணி நொறுங்கிப் போனான்.
     வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், இலக்கின்றி மனம் போன போக்கில் வண்டியைச் செலுத்த, கவனம் பாதையில் இல்லாது போனது.
     அதே நிலையில் சென்று கொண்டிருந்தவன், ரோட்டில் தேங்கி இருந்த மழை நீரில் ஓடிக்கொண்டிருந்த குட்டி நாய்களில் ஒன்றைக் கவனிக்காமல், அதன்மேல் வண்டியை ஏற்றப்போக, குட்டியின் அம்மா அதைப் பார்த்து குரைக்க, அதில் நிலை தெளிந்தவன், நொடியில் தன் வண்டியை குட்டிநாய் மீது ஏறவிடாமல் தடுப்பதற்காய் திசை திருப்பினான்.
     திருப்பிய வேகத்தில், ஏற்கனவே மழை பெய்ததில் தண்ணீர் தேங்கி நின்ற ரோட்டில் அருகே இருந்த பள்ளம் நீரில் மறைந்திருக்க, பள்ளத்தில் வண்டி இறங்கியது. திடிரென்று ஏற்பட்ட விபத்தில் அவனால் வண்டியை பெலேன்ஸ் செய்ய முடியாது போக, வண்டி தடுமாறி கீழே விழ அவனும் வண்டியோடு சேர்ந்து விழுந்தான்.
      ரோட்டில் சென்று கொண்டிருந்த சிலர், அவன் நிலையைப் பார்த்துவிட்டு அவனைத் தூக்கிக் விட, அவன் காலில் இருந்து வழிந்த ரத்தம் கண்டு ஒருவர் வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி மருத்துவமனைக்கு வருமாறு அழைக்க, அவன் வேண்டாம் என்று மறுத்தும் பிடிவாதமாய் அவனை அழைத்துச் சென்றார்.
     ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றவனுள் இப்போதிருந்த ஒரே திருப்தி தான் அடிபட்டாலும் அந்தக் குட்டி நாய்க்கு எந்த ஆபத்தும் நேராமல் போனதே! ஆனால்?!
                                            -மௌனங்கள் மொழி பேசுமா?!
 
    
       
     
     
 

Advertisement