Advertisement

மொழி- 12
     வீட்டிற்கு வருமுன் பலமுறை அவள் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக அவளுக்கும் கோபம் வந்தது.
     ‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம்?! இவங்க அந்தஸ்து வேற எங்க அந்தஸ்து வேற! அப்படி இருகிறப்போ எல்லோருக்கும் சகஜமா வர்ற சந்தேகம் தானே! அதை சொன்னதுக்குப் போய் இவ்ளோ கோபப்பட்ட?!’ என்று எண்ணியவள்,
     “பேசாட்டி போங்க!” என்று விட்டு, வீடு திரும்பிய பின் அவர்கள் அறைக்குச் செல்லாமல், தன் மாமியாருடன் சேர்ந்து இரவு உணவைத் தயாரிக்க சமையலறையில் புகுந்து கொண்டாள்.
     வேலை முடிந்ததும், “அவனை சாப்பிடக் கூப்பிடும்மா” என்று குமுதா சொல்ல,
    “சரிங்க அத்தை!” என்றவள், அவனைச் சாப்பிட அழைக்க தங்கள் அறைக்குச் செல்ல, அவன் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
     “சாப்பிட வாங்க!” என்றாள்.
     அப்போதும் அவனிடம் இருந்த எந்த பதிலும் இல்லை!
     “எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க!” என்றாள் மீண்டும்.
     அப்போதும் அங்கே அமைதி மட்டுமே!
     “ம்! ரொம்பதான் பண்றார்!” என்று காலை உதைத்துக் கொண்டு திரும்பிச் செல்லப் பார்த்தவள், மீண்டும் மனம் கேட்காமல்,
     “இப்போ என்ன சொல்லிட்டேன்னு ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?!” என்று கத்தினாள் பொறுமை பறந்து. கதவு திறந்திருக்கிறது! கத்தாதே! என்ற ரீதியில் அவன் முறைக்க,
     “நான் அப்படிதான் கத்துவேன்! நீங்க சாப்பிட எழுந்து வரலைன்னா!” என்றாள் பிடிவாதமாய்.
     “எனக்கு வேணாம். நீ போய் சாப்பிடு!” என்றுவிட்டு அவன் மீண்டும் புத்தகத்தில் மூழ்க, விறுவிறுவென கதவைச் சாத்திவிட்டு அவன் அருகே சென்றவள்,
     “சரி மன்னிச்சிடுங்க. நான் அப்படிப் பேசினது தப்புதான்! வேணும்னா பைன் போட்டுகோங்க!” என்றுவிட்டு, அவன் எதிர்பாரா வண்ணம் அவன் முகத்தை இழுத்து முத்தங்கள் வைக்கத் துவங்க, அவனின் கோபம் தணிந்து போனாலும், அவள் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவ்வளவுதானா என்று நினைக்கையில், மனம் கசந்தது.
     ஆனால், ‘அவள் நம்பிக்கையை நீ எல்லா விதத்திலும் காப்பாற்றுகிறாயா?! எத்தனை பெரிய துரோகம் செய்கிறாய் அவளுக்கு! அதுவே தவறுதானே!’ என்று அவன் மனம் அவனையே திருப்பிக் குற்றம் சுமத்த, அந்த நாள் அவனுக்குள் எப்போதும் இருக்கும் குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டிருந்தது பன்மடங்காய்.
     “போதுமா ஆபிசரே! இப்போ கோவம் போயிடுச்சா?!” என்று அவள் கள்ளமின்றிச் சிரிக்க,
     “உண்மை தெரியும் போது நீ என்ன பண்ணுவ தேனம்மா?!” என்றான் சம்மந்தமே இல்லாமல்.
     “ஹான்! என்ன உண்மை தெரியும் போது?!” என்று அவள் புரியாது கேட்க,
     “அ ஒண்ணுமில்லை!” என்றவன்,
     “யார் என்ன சொன்னாலும் நானா உன்னை என்னைக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நீ நம்பணும் தேனம்மா. இனி எப்பவும் அப்படிப் பேசாத” என்றான்.
     “ம்ஹும்! பேச மாட்டேன்” என்றவள்,
     “வாங்க” என்று அவன் கைபிடித்து அழைக்க, மென் சிரிப்புடன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான்.
     நாட்கள் வேகமாக நகர்ந்தது.
     இதோ திருமணமாகி மூன்றாம் மாதம் வந்துவிட, அன்று அவளுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவம்.
     செல்லம்மா அவள் வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அவளிடம் ஆசையாய் கேட்டது, “தேனு ஏதாவது விஷேசம் இருக்காடி?!” என்பதுதான்.
     “ம்! அதெல்லாம் இல்லை ம்மா” என்று அவள் சொல்ல,
     “சீக்கிரம் குழந்தை பெத்துக்கோடி! அப்போதான் உன் மாமியார் வீட்ல எல்லோருக்கும் உன்மேல அன்பு கூடும். உன் புருஷனுக்கும்தான்” என,
     “இல்லம்மா அவர் கொஞ்ச நாளைக்கு குழந்தை வேணாம்னு நினைக்கிறார் ம்மா” என்றாள்.
     “என்ன?! எதுக்காம்?!” என்றவர்,
     “அதெல்லாம் முதல்ல ஆம்பிள்ளைங்க அப்படித்தான் சொல்வாங்க! அப்புறம் குழந்தை வந்ததும் பொண்டாட்டியைக் கூட மறந்துட்டு புள்ளையதான் கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க! தள்ளிப் போடாம சீக்கிரம் குழந்தை பெத்துக்குற வழிய பாரு” என்று அவர் மிரட்டி விட்டுச் செல்ல, ஜெயாவும், வசந்தியும் கூட குழந்தையைப் பற்றிக் கேட்டுவிட்டுத்தான் சென்றனர்.
     குமுதா அவளிடம் நேரடியாக கேட்காவிட்டாலும், அவருக்கும் எப்போதடா விசேஷ செய்தி கேட்போம் என்றிருந்தது. எத்தனை வருட தவிப்பு! மீனாவிற்கும் தான். தனக்குத்தான் இல்லாது போய்விட்டது! இவர்கள் மூலமாவது இவ்வீட்டிற்கு ஒரு வாரிசு வந்துவிடாதா என்று ஆசை கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கூட ஜாடைமாடையாய் அவளிடம் குழந்தை பற்றி விசாரிக்க, அவளுக்கு ஏதோ போல் ஆனது!
     ஆனால் மாதங்கள் உருண்டோடியதே தவிர தேனு உண்டாகவே இல்லை! காரணம்!
     இப்போது அவளுக்குமே குழந்தை இல்லாத ஏக்கம் பிறந்திருந்தது.
     அன்று மாலை அவ்வப்போது அவர்கள் செல்லும் அண்ணாநகர் டவர் பூங்காவிற்குச் சென்றிருக்க, எப்போதும் சிரித்து கலகலப்பாய் பேசுபவள், அங்கு பெற்றோர்களுடன் வந்திருந்த சிறுபிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்த்து, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
     சுடச் சுட ஆல்வெளி சிப்ஸ் வாங்கிக் கொண்டு வந்தவன், அவளிடம் ஒன்றை நீட்ட, அவள் வாங்காமல் ஏதோ கவனத்தில் இருக்க, “ஏய் தேனம்மா! அப்படி என்ன யோசனை?!” என்றபடி அவளருகே அமர்ந்தான். 
     “ப்ச் ஒண்ணுமில்லை ஆபிசரே!” என்றாள் மனதை வெளிக்காட்டாது!
     “ப்ச் இல்லை! ஏதோ இருக்கு! நானும் கொஞ்ச நாளா கவனிச்சிட்டுதான் இருக்கேன்! அப்பப்போ ஏதோ யோசனைக்குப் போய்டுற?! என்ன பிரச்சனை உனக்கு?! உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா?! ரவி ஏதாவது சொன்னானா?!” என்றான் ரவி தான் பரிட்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை இவளிடம் சொல்லி விட்டானோ என்றெண்ணி!
     ‘நான்தான் நாளை கட்டுகிறேன் என்று சொல்லி இருந்தேனே?! இவன் ஏன் அதுக்குள்ள அவன் அக்காகிட்ட சொல்லணும்?!’ என்று அவன் நினைக்க,
     “ஏன்?! ரவி என்ன சொல்லப் போறான்!” என்றாள்.
     ‘ரவி எதுவும் சொல்லலை போல’ என்று எண்ணி திருப்தி அடைந்தவன்,
     “ப்ச்! எதையோ மறைக்குற தேனம்மா நீ என்கிட்டே இருந்து?!” என்றான் அவள் முகம் சரியில்லாதது உணர்ந்து.
     “ப்ச் நான் எதையும் மறைக்கலை ஆபிசரே! நீங்கதான் எதையோ மறைக்குறீங்க?!” என்று அவள், அவன் மீதே திரும்ப அவனுக்கு திக்கென்றது.
     ‘என்ன சொல்ற?!’ என்பது போல் அவன் பார்க்க, “எதுக்காக நமக்கு இப்போதைக்கு குழந்தை வேணாம்னு சொன்னீங்க?!” என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.
     அவள் அப்படி கேட்டதும் அவன் முகம் சட்டென மாறிவிட, “பாருங்க! இப்போகூட குழந்தைன்னதும் உங்க முகம் எப்படி மாறுதுன்னு?!” என்றாள்.
     “அதான் ஏற்கனவே சொல்லி இருந்தேனே!”
     “அதான் ஏன்னு கேட்குறேன்”
     “இப்போதைக்கு வேணாம்!”
     “கல்யாணம் ஆன புதுசுல சொன்னீங்க சரி! இப்போ நமக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகிடுச்சு!”
     “அதுக்கு?!”
     “வீட்ல எல்லோரும் எப்போ நல்ல செய்தி வரும்னு ரொம்ப எதிர்பார்க்குறாங்க!”
     “மத்தவங்களுக்காக எல்லாம் நம்ம முடிவை மாத்திக்க முடியாது!”
     “மத்தவங்களுக்காக இல்லை! எனக்கும் குழந்தை வேணும்” என்றாள். அதில் எதிர்ப்பு இல்லை என்றாலும் பிடிவாதம் இருந்தது அவனுக்கு நன்றாய்ப் புரிந்தது.
     “இல்லை தேனம்மா!” என்று அவன் ஏதோ சமாதானம் சொல்லப் பார்க்க,
     “இல்லை ஆபிசரே! எனக்கு குழந்தை வேணும். ஆசையா இருக்கு!” என்றவளை அமைதியாய் பார்த்தவன்,
     “அப்போ நான் முக்கியமில்லையா உனக்கு?!” என்றான்.
    “என்ன பேசுறீங்க நீங்க?! குழந்தை வேணும்னா நீங்க முக்கியம் இல்லையான்னு கேட்குறீங்க? உலகத்துல குழந்தை பெத்துக்க ஆசைபடுற எல்லா மனைவியையும் அவங்க புருஷன் இப்படித்தான் கேட்பாங்களா?!” என்றாள் முதன்முதலில் அவன் மீது கோபம் கொண்டவளாய்.
     அவள் கேள்வி தலையில் கொட்டியது போல் இருந்தாலும், அவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
     “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தேனம்மா!” என்றான் இப்போதும் காரணம் சொல்லாமல்.
     “ப்ச்!” என்று உச்சுக் கொட்டியவளிடம்,
     “இந்தா பிடி! சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிடு!” என்று வாங்கி வந்த ஆல்வெளி சிப்ஸை அவளிடம் நீட்ட,
     “ம்க்கும்! இது ஒண்ணுதான் குறைச்சலாக்கும்!” என்று முணுமுணுத்தபடி, உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு கையில் வாங்கியவளுக்கு சாப்பிட மட்டும் மனம் வரவில்லை!
     அவள் அப்படிக் கேட்டதிலிருந்து அவனுக்கும்தான் எதுவும் ஓடவில்லை! அவன் எப்படிச் சொல்வான் அவளிடம்?! தங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று!
     அவள் அங்கே சத்தம் போட்டபடி அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை ஏக்கமாய் பார்த்திருக்க, அவனும் அவர்களைத்தான் பார்த்திருந்தான் ஆனால் சொல்லொணா வேதனையுடன்.
     இந்த பேச்சுவார்த்தை நடந்து மேலும் ஒரு மாதம் கடந்திருக்க, மாலை நேரங்களில் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து செல்லும் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி, ஒருவர்,
     “என்ன ரகு அம்மா?! உங்க சின்ன மருமகளும் ஒன்னும் நல்ல செய்தி கொண்டு வரலை போல! ஒருவேளை உங்க குடும்பத்துக்கே இது சாபமோ?!” என்றார் குமுதாவின் மனம் வருந்துமாறு.
     அது அறைக்குள் இருந்த தேனுவிற்கு நன்றாய் கேட்க, “கிழவி! நானே பயங்கர கடுப்புல இருக்கேன்! இதுல இது வேற! இதையெல்லாம் ஏன் அத்தை வீட்டுக்குள்ள விடுறாங்க?!” என்று வாய்விட்டுத் திட்டியவள்,
     “இவங்களை எல்லாம் சொல்லி என்ன புண்ணியம்?! எனக்குன்னு வந்து வாச்சிருக்காரே அவரை சொல்லணும்?!” என்று சொல்லிக் கொண்டு கதவைப் பட்டென சாத்தினாள் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டியின் முகத்தில் அறைவதைப் போல்!
     “உன் மருமகளுக்கு நான் பேசுனது கேட்டுடுச்சி போல!” என்றவர்,
     “சரிடியம்மா நான் கிளம்பறேன்! எனக்கு எதுக்கு ஊர் பிரச்சனை?!” என்றபடி குடித்து முடித்த காபிக் கோப்பையை குமுதாவிடம் கொடுத்துவிட்டுக் கிளம்ப, குமுதாவிற்கும் ஏதோ போல் ஆனது.
     இதற்குள் வேலையில் இருந்து வந்ததும் குளிக்கச் சென்றிருந்தவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
     அவள் இன்னமும் கிளம்பாமல், இருப்பதைக் கண்டு, “இன்னும் ரெடியாகலையா தேனம்மா? படம் ஆரம்பிச்சிடும்!” என,
     “நான் வரலை!” என்றாள் பட்டென்று.
     “ஏன்?!” என அவன் கேள்வியாய் பார்க்க,
     “தலை வலிக்குது!” என்றாள்.
     “ஏன் என்னாச்சு?! காய்ச்சல் ஏதும் இருக்க?!” என அவன் அக்கறையாய் அவள் அருகே வந்து நெற்றியில் கைவைத்துப் பார்க்க,
     “அதெல்லாம் ஒண்ணுமில்ல! தலைவலி மட்டும்தான்” என்றாள்.
     “ஓ! சரி நீ படுத்து ரெஸ்ட் எடு!” என்றவன், அவளுக்கு தைலம் எடுத்து வந்து தேய்த்துவிட, கண்மூடிப் படுத்திருந்தவளுக்கு கண்ணைக் கரித்தது.
     “எல்லா விஷயத்திலயும் எனக்கு எந்த குறையுமே வைக்காத நீங்க ஏன் குழந்தை மட்டும் வேணாம்கிறீங்க?!” என்று மனதோடு பேசிக் கொண்டவள், நாட்கள் செல்ல செல்ல, மனச் சங்கடம் அதிகரிக்க அதிகரிக்க, அம்முடிவை எடுத்தாள் அவன் அறியாமல்.
     அவள் அம்முடிவெடுத்ததின் விளைவு, அவளுக்கு இரண்டே மாதத்தில் நாள் தள்ளிப் போக, அவனுக்கு சற்றே சந்தேகம் எழுந்தது.
     “தேனம்மா நீ இந்த மாதம் தள்ளிபோகவே இல்லையே?!” என்றான் கேள்வியாய்.
     “அட ஆமாம்!” என்றவளுக்கு ஒரே உற்சாகம் மனதிற்குள்.
     ஆனால் எப்படி வெளியே காட்டிக் கொள்வது! “தெரியலைங்க! இன்னும் வரலை!” என்று அப்போதைக்கு சமாளித்தவள், நாள் கணக்கு போட்டுப் பார்க்க, அவள் தலைகுளித்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்களைக் கடந்து விட்டிருந்தது.
     ‘நாளைக்கு அவர் வேலைக்குப் போன பிறகு, ஹாஸ்பிட்டல் போய் பார்க்கணும்!’ என்று நினைத்துக் கொண்டவள், எதிர்பார்ப்புடனும் சந்தோஷத்துடனும் உறக்கத்தைத் தழுவினாள் நல்ல செய்தியை எதிர்பார்த்து.
     மறுநாள் காலை எழுந்தவள், அன்றைய நாள் மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரப் போகிறது என்ற குஷியில், எப்போதும் அவன் கன்னத்தில் வைக்கும் கடியை அழுத்தமாய் வைத்துவிட,
     “ஹா!” என்று அலறித் துடித்தவன்,
     “ராட்சசி! காலையிலேயே என்னடி அவ்ளோ வேகம் உனக்கு!” என்று அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டவன், அவள் கன்னத்தில் வைத்த கடிக்கு ஈடாய் அவள் உதடுகளை அழுந்தக் கடிக்க, அவள் பதிலுக்கு கடிக்க, என்று காலையே இருவருக்குள்ளும் கட்டில் யுத்தம் துவங்க, அவன் கைகள் எங்கெங்கோ படரத் துவங்க, அவள் சட்டென அவனிடமிருந்து விலகினாள்.

Advertisement