Advertisement

                                                              
     “இ இங்க பாருங்க! இந்த சினிமா படத்துல பேசுற மாதிரி எல்லாம் பேசி என்னை ஏமாத்தப் பார்க்காதீங்க ஆபிசரே!” என்றவள்,
     “நீங்களும், நானும் இப்படி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்து யாராச்சும் அம்மாகிட்ட சொன்னா அது என்னைக் கொன்னே போட்டுடும்” என்றாள் முகம்வெளிற.
     “அப்போ உள்ள கூப்பிடு” என்று அவன் பிடிவாதமாய் அங்கிருந்து நகர்வதாய் இல்லை என்பது போல் நிற்க,
     “ப்ச்! என்ன இது ரோதனையா போச்சு இந்த ஆபீசரோட?!” என்று முணுமுணுத்தவள்,
     “அப்படி என்ன முக்கியமான விஷயம்?!” என்றாள் அப்போதும் உள்ளே அழைக்காமல்.
     “உள்ள போய் பேசலாம்” என்றவன், இதற்கு மேல் அவள் அனுமதி எதிர்பார்க்காமல் கதவை நன்றாய்த் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அவள் தடுக்க முடியாமல் நின்றாள்.
     உள்ளே சென்றவன், அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டு, தன் கைப்பேசியை எடுத்து, கேலரிக்குள் சென்று அதிலிருந்த திருமணப் பத்திரிக்கை மாதிரிகளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
     ‘என்ன இது?!’ என்பது போல் அவள் பார்க்க,
     “எது பிடிச்சிருக்கோ செலக்ட் பண்ணு!” என்றான்.
     அதைப் பார்த்ததுமே, கல்யாணம் பத்திரிக்கை என்று அவளுக்குப் புரிந்துவிட, “என்ன சார் இது? காலையிலேயே வம்பு பண்றீங்க?! எனக்கு வேலைக்கு நேரமாச்சு! நான் கிளம்பணும்” என்று படத்தத்துடன் சொல்ல,
     “சீக்கிரம் செலக்ட் பண்ணு தேனம்மா! நானும் ஆபீசுக்கு கிளம்பணும்” என்றான் அவனும்.
     “அய்யோ! ஏன் இப்படி படுத்துறீங்க?! நான் எதுக்கு செலக்ட் பண்ணனும் கல்யாணப் பத்திரிக்கையை?!” என்று அவள் புரியாது கேட்க,
     “நம்ம கல்யாணப் பத்திரிக்கையை நாமதானே செலக்ட் பண்ணனும்” என்றவன்,
     “சீக்கிரம் பார்த்து சொல்லு” என்றான்.
     ‘அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்னைப் பற்றி’ என்று எண்ணியவளுக்கு சுள்ளெனக் கோபம் எழ,
     “இதோ பாருங்க ஆபிசரே! நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணெல்லாம் நான் இல்லை! என் அம்மா சொன்னா சொன்னதுதான்! அவங்க என்ன சொல்றாங்களோ அதான் எனக்கும்” என்றவள் கூடுதல் தகவலாய்,
     “தேவையில்லாம நீங்க வந்து பொண்ணு கேட்டதுனாலதான், இன்னிக்கு என் அம்மா என் கல்யாணம் வரைக்கும் போயிடுச்சு! உங்களாலதான் இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து என்னை பார்க்க வராங்க!” என்றாள் எரிச்சலுடன்.
     “ஓ! என்னைவிட வேகமா இருக்காங்க உங்க அம்மா!” என்றவன்,
     “சரி சரி சீக்கிரம் பார்த்து சொல்லு!” என்றான் மீண்டும் பத்திரிக்கையின் மாதிரிகளைக் காண்பித்து.
    “இங்க பாருங்க ஆபிசரே! உங்க தகுதிக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்! காலேஜு படிக்குற பசங்க மாதிரி கலாட்டா பண்றீங்க?! ஒழுங்கா ஆபீசரா லட்சணமா நடந்துக்கோங்க” என்று அவனுக்கு இலவசமாய் அறிவுரை வழங்க,
     சட்டென எழுந்தவன், அவள் இடை வளைத்து, தன்னோடு இழுத்து, ஈரத்தில் சுருண்டு விழுந்திருந்த அவளது நெற்றியின் முடிக்கற்றையில் கோலமிட, புதிதான தீண்டலாய் இருந்த ஓர் ஆண்மகனின் ஸ்பரிசத்தில், அதிலும் அவளுக்குப் பிடித்தவனின் ஸ்பரிசத்தில் அவளது உடல் முழுதும் சில்லென்று ஆனது!
     “காலேஜ் பசங்க மாதிரி தினமும் உன் பின்னாடி சுத்தி சுத்தி உன்னை இப்படியெல்லாம் லவ் பண்ணி தொந்தரவு பண்ணலையே தேனம்மா! கல்யாணம்தானே பண்ணிக்கலாம்னு சொல்றேன்” என, அவள் நெஞ்சக் கூடு ஏகத்திற்கும் எகிறியது!
     “இ இருந்தாலும் நீங்க எங்க? நாங்க எங்க?!” என்று அவள் திணற,
     “நானும் இங்கதான் இருக்கேன்! நீயும் இங்கதான் இருக்க” என்று மொக்கையான டயலாக் ஒன்றை அவன் உதிர்க்க,
     “ஐயோ சகிக்கலை ஆபிசரே! இந்த லவ் டயலாக் எல்லாம் உங்களுக்கு சரியா பேச வரலை!” என்றவள் மனதிற்குள் சொல்வதாய் நினைத்து வாய்விட்டுச் சொல்லிவிட,
    “லவ் டயலாக்ஸ் வரலைனாலும், லவ் பண்ண வரும் தேனம்மா” என்று அவன் கண்சிமிட்ட, யாரோ வெளிப்படிகளில் ஏறிவரும் சப்தம் கேட்டு, சட்டென அவளை விடுவித்தான். அதுவரை தன்வசம் இழந்து அவனுள் ஒட்டிக் கொண்டிருந்தவள், அவன் விடுவித்ததும், சுயம் தெளிந்து,
     “இ இங்க பாருங்க ஆபிசரே! கிளம்புங்க கிளம்புங்க முதல்ல!” என்றாள் பழைய தேனுவாய்.
     “அப்போ கட்டிப் பிடிச்சிட்டே இருந்தாதான் விரட்டாம பதில் சொல்லுவ?!” என்று அவன் மீண்டும் அவளை நெருங்க,
     “ஐயோ இல்ல இல்ல! இப்ப என்ன பத்திரிகை டிசையின் தானே சொல்லணும்! குடுங்க” என்று அவனிடம் இருந்து போனைப் பிடுங்கியவள், அதிலிருந்த மாதிரியில் ஏதோ ஒன்றைப் பார்த்து சரியென,
     அவள் ஏதோ ஒன்றெனச் சொன்னதே அவன் தேர்ந்தெடுத்து வைத்ததாகவும் இருக்க, அகமகிழ்ந்தவன்,
     “பத்திரிகையில கூட நான் செலக்ட் பண்ணதைதான் தேனம்மா செலெக்ட் பண்ணி இருக்க! அப்புறம் எதுக்கு இந்த வீண் ஜம்பம்?!” என்றவன்,
     “அடுத்த வாரம் முகுர்த்த புடவை எடுக்கணும் அத்தை, மாமாகிட்ட சொல்லிடு” என்று சொல்லிக் கிளம்பியே விட்டான். ஆனால் அவள்தான்,
     “என்னடா நடக்குது இங்க?!” என்ற பீலிங்கில் நின்றிருந்தாள்.
     அதற்குள் யாரோ ஒருவர் அவன் அங்கு வந்து சென்றதைப் பார்த்துவிட்டு செல்லம்மாவிடம் வத்தி வைத்திருக்க, தெரிந்த பெண்மணி ஒருவரிடம் சற்று நேரம் கடையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொலிவிட்டு வீட்டிற்கு விரைந்திருந்தார் செல்லம்மா.
     அவன் படிகளில் இறங்கும் சமயம் செல்லம்மா படியேறிக் கொண்டிருக்க, வழியில் அவனைச் சந்தித்தவர்,
     “இதோ பாருங்க. ஏதோ பெரிய மனுஷங்களாச்சேன்னு அன்னைக்கு நீங்க அப்படிக் கூப்பிட்ட போதுகூட பேசாம அனுப்பினேன். தேவையில்லாம எங்க பொண்ணு வாழ்க்கையில தலையிடாதீங்க! நாங்க இல்லாதவங்க! எங்ககிட்ட இருக்கிறது மானம் மட்டும்தான்! அதையும் இப்படி அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து போய் இல்லாம பண்ணிடாதீங்க?!” என்று அவர் கையெழுத்துக் கும்பிட, அவனுக்கு கோபமும், இரக்கமும் ஒருசேர எழுந்தது. அவர்களின் பயம் புரிந்தாலும், அவனுக்கு என்ன குறைச்சல்?
     ‘ஏன் எனக்கு அவங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்கக் கூடாதா?!” என்று தோன்ற,
     “நீங்க நினைக்குற மாதிரி ஆள் எல்லாம் நான் இல்லை! உங்க பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு! அவளைக் கல்யாணம் பண்ணி நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்! எங்க கல்யாணம் நிச்சயம் நடக்கும்! ஆனா, இனி ஒருதடவை உங்க வீட்டு வாசற்படி ஏற மாட்டேன்! உங்க பொண்ணு வாழ்க்கை உங்களுக்கு முக்கியம்னு படும்போது, அவ மனசு புரியும் போது நீங்களே என்னைத் தேடி வருவீங்க!” என்று சொல்லிவிட்டு அவன் விடுவிடுவென மாடிப்படிகளில் இறங்கிவிட, செல்லம்மா விதிர்விதிர்த்து நின்றுவிட்டார்.
     அன்று அவன் பெரிதாய் எதுவும் பேசவில்லை! அவன் அம்மாவும், அண்ணா, அண்ணியும்தான் பேசினார்கள்! ‘வரேன் அத்தை’ என்று கிளம்பும் போது அவன் சொன்ன வார்த்தைகளோடு சரி! ஆனால் இன்று அவனது ஆழமான வார்த்தைகள் அவரது மனதை எதுவோ செய்ய,
    ‘தவறு செய்கிறோமோ?!’ என்று தோன்றியது.
    ‘நல்ல குடும்பம்! நல்ல மனிதர்கள்! இவரும் நல்லவராய்தான் தெரிகிறார்! ஆனால் இந்த அந்தஸ்து! இது மட்டும் இடிக்கிறதே?!’ என்று எண்ணியவர் கால்களில் இத்தனை நேரம் இருந்த வேகம் போய் தடுமாற்றம் குடிகொண்டது. அவர் மெல்ல படியேறிக் கொண்டிருக்க,
     எதிரே வந்த ஜெயா, “அம்மா என்ன அம்மா?! அந்த ஆபீசர் அண்ணாதானே இங்க வந்துட்டுப் போறார்! ஐயோ முதல்லயே பார்க்காம போயிட்டேனே?! ஒரு வாய் காபியாவது போட்டுக் கொடுத்திருப்பேன்! அன்னிக்கு அவங்க தேனுவைப் பொண்ணு பார்க்க வரும்போதும் நாங்க வெளில போயிட்டு இருந்தோம். அன்னிக்குத்தான் பார்க்க முடியலை. இன்னிக்காச்சும்  கூப்பிட்டு இருப்பேன் எங்க வீட்டுக்கு. இப்பவும் கிளம்பிட்டார்! ரொம்ப நல்ல அண்ணன்!” என்றவள்,      
     “இருந்தாலும் நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா!  நீ புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்குற?! இப்படி பட்ட  மனுஷனைப் போய் தேனுக்கு வேணாம்னு சொல்லிட்டு அந்த ஒட்டடை குச்சியைப் போய் தேனுக்கு செலக்ட் பண்ணி இருக்கியே?! சும்மா பணம் அந்தஸ்துன்னு சொல்லிக்கிட்டு!
    நான் மட்டும் என்ன?! பணம்னு பார்த்திருந்தா இந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பேனா?! அவர் என்ன நல்லா பார்த்துக்காம போயிட்டாரா? இல்ல நான்தான் பணக்கார வீட்ல பொறந்துட்டேன்னு அவரை மதிக்காம, நல்லா பார்த்துக்காம இருக்கேனா?! எவ்ளோ சந்தோஷமா வாழுறோம்னு உன் கண்ணால பார்த்துட்டு தானே இருக்க! மனசுக்கு பிடிச்சிப் போச்சுன்னா பணம் காசெல்லாம் என்னம்மா?! உன் புடிவாத்தை தூக்கிப் போட்டுட்டு அண்ணனைத் தேனுவுக்குப் பேசி முடிக்கிற வழியப் பாரு!” என்று இத்தனை நாள் செல்லம்மாவிடம் பேச பயந்து கொண்டிருந்த ஜெயா மனம் திறந்து கொட்டிவிட்டுச் செல்ல, செல்லம்மா யோசனையுடன் படி ஏறினார்.
     செல்லம்மா வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் விஷயம் கேள்விப் பட்டுதான் வந்திருப்பார் என்று புரிந்து கொண்ட தேனு, “அம்மா எனக்கு எதுவும் தெரியாதும்மா?! அவர் திடீர்னு வந்து பத்திரிக்கை டிசைன் பாருன்னு சொல்றார்” என்று தேனு உளறிவிட,
     ‘என்ன?!’ என்று புருவம் உயர்த்தியவர், “உனக்கும் அவரைப் புடிச்சிருக்கா?!” என்றார் நேரடியாய்.
     அவள் தலை குனிய, “புடிச்சிருக்கான்னு கேட்டேன்” என்றார் அதட்டலாய்.
     “அம்மா” என்று அவரருகே வந்து கட்டிக் கொண்ட தேனுவை,
     “நாளைக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிப்பியா?! எப்போவும் நீ ஏத்துக்குற இந்த வாழ்க்கையை விட்டுக் கொடுக்க மாட்டியே?!” என,
     “ம்!” என அவள் தலை அசைந்தது.
     எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்தது! திருமணம் மிக விமரிசையாகவே நடைபெற்றது அவன் அண்ணன் ரகுபதியின் ஏற்பாட்டில்! வந்திருந்த உறவினர்கள் வாய்தான் சும்மா இருக்கவில்லை! ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச வசந்தியைத் தவிர அங்கு மற்ற யாரும் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை! அவளுக்கு மட்டும்தான் அவர்கள் வீட்டில் அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை! யாருக்கு விருப்பம் இல்லை என்றால் என்ன வாழப் போவது அவர்கள்தானே!
     எல்லாம் இனிதே நடைபெற, அன்று அவர்களது முதல் இரவுக்கான மலர் அலங்காரங்களும், அவன் மனம் கொண்ட மங்கையின் அலங்காரங்களும் அவன் அறையில் வெகு அழகாய் நடந்து கொண்டிருந்தன.  
                        -மௌனங்கள் மொழி பேசுமா?!
 
    
           

Advertisement