Advertisement

மொழி-10
     அவனது அத்தை என்ற விளிப்பில், மீனா மெல்லச் சிரிக்க, ‘ரொம்பத்தான் கொழுப்பு இந்த ஆபீசருக்கு!’ என்று தேனு முறைத்தாள்.
     செல்லம்மாவும் அவனது அத்தை என்ற அழைப்பில் எரிச்சலடைந்தாலும், இதற்குமேல் பேசினால் ஏதேனும் வம்பு வளரும், வேண்டாம், என்று அமைதியாய் இருந்துவிட்டார்.
     ஆனால் அவரது அந்த மௌனத்தையே சாதகமாய் எடுத்துக் கொண்ட, பேரழகன், வீட்டிற்குப் போனதும்,
     “அம்மா கல்யாண வேலைகளை ஆரம்பிங்க” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான் நல்ல பிள்ளையைப் போல்.
     “என்ன மீனா இவன்?!” என்று ரகுபதி கேட்க,
     “இவன் நம்ம பேரழகன் தானா?!” என்று அதிசயத்து நின்றார் குமுதாவும்.
     “காதல்ன்னா சும்மவாங்க!” என்று சிரித்த மீனா,
     “எப்படியோ இந்த பொண்ணு மூலமாவது தம்பி வாழ்கையில சந்தோஷம் வந்தா போதும்” என,
     “ஆமாம் மீனா! அங்க போகும் போது கூட நெருடலோடுதான் போனேன். ஆனா அவங்க அம்மா, அந்த பொண்ணு அவ தம்பி எல்லோருமே நல்ல குணமாதான் இருக்காங்க! பொண்ணும் லட்சணமா இருக்கா! வசதி மட்டும்தான் குறைவு” என்ற குமுதா,
     “ஆனா அந்தப் பொண்ணோட அப்பா?! அவரை வீட்ல காணவே இல்லையே?!” என்று முடித்தார் சந்தேகமாய்.
     “அவரைப்பத்தி தான் விசாரிக்க சொன்ன தரகர் சொல்லி இருந்தாரே ம்மா!” என்று ரகுபதி சொல்ல,
     “ஓ! ஒவ்வொரு வீட்லயும் ஏதாவது ஒரு குறைய வச்சிடறான் அந்த ஆண்டவன்” என்று சலித்துக் கொண்டவர்,
     “ஆனாலும் நம்ம சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்வாங்களோன்னு கலக்கமா இருக்குடா!” என்றார் சராசரி மனுஷியாய்.
     “குறை சொல்றவங்க எப்போவும் சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க ம்மா. அவங்களுக்காக பார்த்து பார்த்து வாழ்ந்தா நம்ம நிம்மதிதான் தொலைஞ்சு போகும்! இத்தனை நாள் கல்யாணப் பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுந்தவன் மனசுல, அந்தப் பொண்ணு வந்ததே பெரிய அதிசயம்.” என்றார் ரகுபதி.
     “ஆனா அந்தப் பொண்ணோட அம்மா சம்மதிக்கலையே?! அப்புறம் எப்படி நம்ம கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறது?!” என்று குமுதா தயங்க,,
     “அதெல்லாம் தம்பி பார்த்துக்கும்! நாம மத்த வேலைகளை ஆரம்பிப்போம் அத்தை” என்று நம்பிக்கை கொடுத்த மீனா, தன் மகனைப் போல நினைத்திருந்தவனுக்கு இத்தனை நாள் கழித்தாவது அவனுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்வு அமையப் போகிறதே என்ற நிம்மதி. ஆனால்?!
     அவன் வீட்டில் மளமளவென கல்யாண வேலைகள் துவங்க, அங்கு செல்லம்மாவோ, மும்முரமாய் தேனுவிற்குப் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ஒரு வரனை தேர்ந்தெடுத்து, பெண் பார்க்க வரவும் சொல்லிவிட்டார்.
     தேனு இப்போது திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், செல்லம்மா கேட்பதாயில்லை!
     ‘எல்லாம் இந்த ஆபீசராலதான் வந்தது!’ என்று அவள் புலம்ப ஆரம்பித்திருந்தாள் தினமும்!
     அன்று காலை கடைக்குக் கிளம்பும் முன்பு, “இதோ பாருடி! இன்னிக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து பார்க்க வராங்க! சாயந்திரம் நாலு மணிக்கே வீட்டுக்கு வந்துடு!” என்று அவளை எழுப்பிய கையோடு செல்லம்மா ஆரம்பிக்க,
     “யம்மா எழுந்துக்கும் போதேவா?! நேத்துல இருந்து இதோட பத்துமுறைக்கு மேல சொல்லிட்ட நீ!” என்று சலித்துக் கொண்டாள் தேனு.
     “நீதான் கல்யாணம் வேணாம்னு முரண்டு பண்ணுறியே! அப்புறம் லெட்ட கீட்டா வந்தா, கைய காலை உடைச்சிப்புடுவேன் ஜாக்கிரதை!” என்றுவிட்டு செல்லம்மா கிளம்ப,
     “ம்க்கும்! கைய காலை உடச்சி வச்சிட்டா நீ பார்த்து வைக்கிற மாப்பிள்ளை கட்டிக்குவானாக்கும்?!” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்த தேனு,
     அன்றும், “எல்லாம் இந்த ஆபீசராலதான் வந்தது!” என்று வாய்விட்டுப் புலம்ப,
     “ஆமாம் அக்கா! எல்லாம் அந்த ஆபீசரலதான் வந்தது! இந்த அம்மா பேசாம அந்த ஆபீசரையே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்! இப்போ பார்த்திருக்கு பாரு ஒட்டடைக் குச்சி மாப்பிள்ளை! அதுக்கு அவர் எவ்ளவோ பரவால்ல!” என்றான் ரவி.
    “சி சீ என்னடா நீயி?! இந்த மாப்பிள்ளை கூடல்லாம் ஆபிசரை சேர்த்து வச்சிப் பேசாத! அவர் அழகென்ன?! கம்பீரமென்ன?! சிரிப்பென்ன?!” என்று அவள் ஆரம்பிக்க,
    “காரென்ன? கலரென்ன?! ஸ்டைலென்ன?!” என்று ரவி நீட்டிக்க,
     “அடி அவரையே கலாய்க்குரியா?!” என்று அவனை அடிக்க ஓடினாள் தேனு.
     செல்லம்மா கடைக்குக் கிளம்பி விட்டிருந்தாலும், குளியலறையில் இருந்த வேணுகோபாலனிற்கு இவர்கள் பேசியது அனைத்தும் நன்றாய் காதில் விழ,
    ‘ஒருவேளை நம்ம பிள்ளையும் அவர் மேல இஷ்டப் படுதோ?!’ என்ற எண்ணம் எழுந்தது.
     அன்று அவர்கள் வரும் சமயம் நன்றாய் தண்ணி அடித்துவிட்டு, மொட்டை மாடியில் படுத்திருந்தார் அவர். அதனால், பேரழகன் வீட்டில் வந்து போனது அடுத்த நாள் காலை போதை தெளிந்த பின்பு செல்லம்மா சொல்லிய போதே அவருக்குத் தெரிந்தது.
     “நல்ல மனுஷங்களா இருந்தா கொடுத்துடலாமே செல்லம்மா” என்று இவர் சொல்ல,
    “பார்த்தா நல்ல மனுஷங்களாதான் தெரியுது! இருந்தாலும் நம்ம தகுதிக்கு மீறி கட்டிக் கொடுத்துட்டு அவஸ்தைப் படக் கூடாதுங்க! வேணாம்” என்று முடித்துவிட்டார் செல்லம்மா.
     ஆனால் இப்போது மகள் அவரைப் பற்றி பேசுவதைப் பார்த்தால் இவளுக்கும் அவரைப் பிடிக்கும் போல் இருக்கிறதே?! என்று தோன்ற, குளித்துவிட்டு வெளியே வந்ததும்,
     “தேனு! உனக்கும் அந்த ஆபீசர் மேல இஷ்டமா?!” என்றார் வெளிப்படையாய்.
     ‘ஐயோ! அப்பா நம்ம பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டுடுச்சு போல!’ என்று தனக்குத் தானே சொல்லி கொண்டவள்,
     “புடிக்கும்னுலாம் இல்ல ப்பா! எனக்குத் தெரிஞ்சு ரொம்ப நல்ல மனுஷன்! என்ன கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டு ஆபீசர்!” என்றுவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள் வேறெதுவும் நினையாமல்.
     ஆனால் வேணுகோபாலனுக்கு மட்டும் ஏதோ உறுத்தியது! எப்போதும் தன் மனைவி செல்லம்மா எடுக்கும் முடிவுகள் சரியாய் இருக்கும் என்று நினைப்பவருக்கு, இப்போது தவறு செய்கிறாளோ என்று தோன்றியது.
     ‘சரி பார்ப்போம்! என்ன நடக்கனும்னு இருக்கோ அதுதான் நடக்கும்’ என்று அவரும் வேலைக்குக் கிளம்பி விட்டார் செல்லம்மா கட்டி வைத்திருந்த சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு.
    வேணுகோபாலன், நல்ல மனிதர்தான் அந்தப் பாழாய்ப் போன குடிப்பழக்கம் மட்டும் இல்லை என்றால்! கொத்தனாராக இருக்கிறார். சிறுவயது முதலே மாடாய் உழைத்தவர் தான். ஆனாலும் முன்னேறவில்லை! பாதிச் சம்பளம் மட்டுமே குடும்பத்திற்கு, மீதி பாழாய்ப் போன குடிக்கு! அவர் சம்பளத்தில் நான்கு பேர் வாழ்க்கை நடத்த இழுபறியாய் இருக்க, அதன் பொருட்டே செல்லம்மா, ரவி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தெருவோர வண்டிக்கடை போட்டு சிற்றுண்டி வியாபாரம் ஆரம்பித்தது.
     இன்றும் வேணுகோபாலன் அவரிடம் வேலை கற்றுக் கொண்டவர்களிடமே கூலி வேலைக்குத்தான் செல்கிறார்! காரணம், தட்டிக் கொடுத்தும், அதட்டியும் வேலை வாங்கத் தெரியாது! மேஸ்திரிகளுக்கே உரிய பேச்சு ஜாலமும், தில்லுமுல்லும் அறவே வராது! இக்காலத்தில் ஏமாற்றத் தெரிந்தவன்தானே பிழைக்கத் தெரிந்தவன்! அவருக்கு ஏமாறத் தெரியுமே தவிர ஏமாற்றத் தெரியாது! மனைவி மக்கள் மீது மிகுந்தபாசம் கொண்டவர்தான். ஆனாலும் யாருக்காகவும் ஆதி முதல் இருந்த குடிப்பழக்கத்தை மட்டும் அவரால் விடமுடியவில்லை! ம்! நம் நாட்டில் பாதிக் குடும்பங்கள் இதனால்தானே அழிகிறது!
                             *******
     இங்கு காலையே இவள் வீட்டில் இவ்வளவு பரபரப்பாய் இருக்க, அதே நேரம் அங்கு அவனும் அவள் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் திருமணப் பத்திரிகையின் மாதிரியை அவளிடம் காட்டித் தேர்ந்தெடுக்க.
     ஆனால், அவன் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம், செல்லம்மா கடைக்குக் கிளம்பி இருக்க, வேணுகோபாலன் கட்டிட வேலைக்குச் சென்றிருக்க, ரவியும் கல்லூரி கிளம்பி விட்டிருந்தான். அன்று போல் காரில் வராது, இன்று இவன் பைக்கில் வந்திருந்ததால், மற்றவர்களின் கவனத்தை அது பெரிதாய் ஈர்க்காது போக, அவன் வீடிருந்த ப்ளாக்கை அடைந்து தாளிடாமல் வெறுமென சாற்றி இருந்த கதவைத் தட்டினான்.
     உள்ளே குளித்துக் கொண்டிருந்தவள், “யாரு அலமு அக்காவா?!” என்று உள்ளிருந்தே குரல் கொடுக்க அவன் அமைதியாய் நின்றான்.
     ‘என்ன சத்தமே காணோம்?!’ என்று நினைத்தவள்,
     “ஜெயவா?!” என்றாள் மீண்டும் உள்ளிருந்த படியே.
     அவன் மீண்டும் கதவைத் தட்ட, “ப்ச் யாரது! வெறுமென சாத்தியிருக்க கதவை சும்மா லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டு?! குரல் கொடுத்துட்டு உள்ள வரவேண்டியதுதானே?!” என்று பேசியபடியே வெளியே வந்தவள், அவனை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை!
     குளித்து முடித்து சுடியின் மேல் டாப்பை மட்டும் அணிந்த கையோடு, வெளியே வந்து கதவைத் திறந்தவள், அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்காததால், பேயறைந்ததைப் போல் நின்றாள்.
     ஈரம் சொட்ட வந்திருந்தவளின முகம் தேய்த்து வைத்த குத்துவிளக்காய் பளிச்சிட, தலைக்கு குளிக்கவில்லை என்றாலும் அவள் முன் நெற்றியில் விழுந்திருந்த முடிகற்றையில் சொட்டிய நீர்த்துளிகளும், முகத்தில் ஒட்டி இருந்த நீர்துளிகளும், தாமரை இலைமேல் மிதக்கும் நீர் போல் பார்க்க ரம்மியமாய் இருந்தது.
     பயத்தில் படபடத்த அவள் விழிகள் அவனை எதுவோ செய்ய, அவள் இருந்த நிலை புரிபட்டது. “சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு வா” என்றான்.
    அவன் அப்படிச் சொன்ன பின்பே தன்நிலை தெளிந்தவள், சட்டெனத் தான் இருக்கும் நிலை உணர்ந்து, வீட்டின் உள்புறக் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்து போட்டுக் கொண்டபடி, சட்டென கதவைச் சாற்றினாள். நொடிகளில் பதட்டத்துடன் சுடிதாரின் கால்சட்டையைத் எடுத்து அணிந்தவள்,
     ‘இவ்ளோ காலையில எதுக்கு இவர் இங்க வந்திருக்கார்?! அம்மா பார்த்துச்சுன்னா பேயாட்டம் ஆடுமே?!” என்று புலம்பியபடி, ஒரு கதவை மட்டும் கொஞ்சமாய்த் திறந்து, தலையை வெளியே நீட்டி,
     “வி வீட்ல யாரும் இல்லை!” என்றாள் திக்கித் திணறி.
     “ஓ!” என்றவன்,
     “ஒரு முக்கியமான விஷயம். வெளியே இருந்தே பேச முடியாது” என்றான்.
     “எ என்ன முக்கியமான விஷயம்?!” என்றவள்,
     “அதான் அன்னிக்கே அம்மா சொல்லிட்டாங்களே!” என,
     “அம்மாதானே சொன்னாங்க. நீ சொல்லலையே?!” என்றவன்,
     “எனக்குத் தெரியும் தேனம்மா. உனக்கும் என்னைப் பிடிக்கும்னு?!” என்றான் அவள் மனதை அறிந்தவன் போல்.
     “எ என்ன? யார் யார் சொன்ன?!” என்று அவள் மீண்டும் திணற,
     “உன் கண்ணுதான்!” என்றான் அவள் கண்களை ஆழ உடுருவி.

Advertisement