Advertisement

                               
    “எப்படி விசாரிச்சாலும், எல்லோரும் அந்த அண்ணாவை நல்லவர்ன்னு தான் சொல்லுவாங்க” என்று அவனுக்கு செர்டிபிகேட் கொடுத்துவிட்டு ஜெயா கிளம்பிவிட, அதன் பின் நடந்தது எல்லாம் நன்மையாகவே இருந்தது. ஆனாலும் சின்னதாய் ஒரு பயம். இன்று இத்தனை பிடிவாதமாய் தன் பெண் வேண்டும் என்று நினைப்பவருக்கு, நாளை எல்லாவற்றிலும் பிடிவாதம்தானே இருக்கும் என!
     எனினும் ஏன் நடப்பதற்கு முன்பே எல்லாவற்றையும் தவறான பார்வையில் நினைக்க வேண்டும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்று முடிவெடுத்தவர், எப்படி அவர்கள் வீட்டாரிடம் சென்று பேசுவது என்று இருநாட்களாய் தவித்துக் கொண்டிருக்கும் போதே, மீனாவும் ரகுபதியும், மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.
     “வாங்க வாங்க” என்று இம்முறை ஆவலுடன் அவர்களை வரவேற்று அமரச் சொன்னார் செல்லம்மா.
     “தப்பா எடுத்துக்காதீங்க! நாங்க இப்படி செய்திருக்கக் கூடாது! நீங்க வேண்டாம்னு சொன்ன பிறகும், தம்பி பிடிவாதமா இருந்ததுனால, நாங்க கல்யாண ஏற்பாட்டைப் ஆரம்பிச்சிட்டோம்! பொண்ணுக்கு முகுர்த்தப் புடவை எடுக்கணும்! அதான் உங்களை நேர்ல பார்த்து பேசி அழைக்கலாம்னு வந்தோம்!” என்று தயக்கத்துடன் சொல்ல,    
     சில நொடிகள் அமைதி காத்த செல்லம்மா, “நானே உங்க வீட்ல பேச நினைச்சேன்! ஆனா அன்னிக்கு முகத்தில் அடித்த மாதிரி வேண்டாம்னு சொல்லிட்டு எப்படி பேசன்னு தயங்கிட்டு இருந்தேன்! ரெண்டு நாளைக்கு முன்னாடி தம்பி மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு போன பிறகு, எங்க பொண்ணுகிட்டையும் பேசினேன்! அவளுக்கும் விருப்பம் தான் போல! அதான் நானும்,” என்று தயங்கியவர்,
     “வாழப்போறது அவங்கதானே! ரெண்டு பேருமே விருப்பப் படும்போது நான் எப்படித் தடுக்கிறது?!” என்றார்.
     “உங்க பயம் எனக்குப் புரியுதும்மா! நீங்க நினைக்குற மாதிரி நாங்க இல்லைம்மா! நாங்க உங்க பொண்ணை நல்லா பார்த்துப்போம்! எங்களை விட, உங்க மாப்பிள்ளை அவளை நல்லா பார்த்துப்பார்” என்று மீனா சொல்ல, அகமகிழ்ந்தவர், மனதார சம்மதம் தெரிவிக்க, இதோ எல்லாம் நல்லபடியாய் நடந்தேறி அவர் மகளின் மணவாழ்க்கையும் இனிதே ஆரம்பித்துவிட்டது! ஆனாலும் அவ்வப்போது அவருள் சிறுகலக்கம்! அதே கலக்கம்தான் இன்றும் அவரைத் தூங்க விடாமல் செய்தது.
     திருமணம் முடிந்து ஒருவாரம் கடந்துவிட்டது. அவனின் ஆளுமையும் நெருக்கமும், அன்பும், அவளை ஓர் இனிமையான உலகத்தில் தள்ளி இருக்க, அவள் ரெக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தாள் அப்புதிய உலகில்.
     ஆனால் அவளிடம் தினமும் அவ்விஷயத்தைப் பற்றிப் பேசி விட வேண்டும் என்று நினைத்தவன், தள்ளிப் போட்டுக் கொண்டே சென்று திருமணம் முடிந்த ஒருவாரத்திற்குப் பின் அப்பேச்சை ஆரம்பித்தான் மெதுவாய்.
     கட்டிலில் தன்னருகே படுத்திருந்தவளை, “தேனம்மா!” என்று அவன் விளிக்க,
     “சொல்லுங்க அபீசரே!” என்றாள் சற்று முன் அவனுக்குத் தன்னைக் கொடுத்திருந்த கிறக்கத்தில் இருந்தவள்.
     “நான் ஒன்னு சொன்னா கோபப்பட மாட்டியே?!” என,
     “நான் ஏன் கோபப்படப் போறேன்?!” என்றாள்.
     “நமக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாமே!” என்று அவன் சொல்ல, அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள்,
     “ஏன் ஆபிசரே! பாப்பா வந்துட்டா, கொஞ்ச நாள் இப்படி எல்லாம் நடந்துக்க முடியாதேன்னா?!” என்று அவள் தாம்பத்தியம் பற்றிக் கேட்க,
     “ச்சே! ச்சே! அதுக்கெல்லாம் இல்ல!” என்றவன்,
     “இப்போதைக்கு வேண்டாமே!” எனக் கெஞ்சலாய் சொல்ல,
     “ம்! சரிங்க ஆபிசரே!” என்றாள் சிறிதும் அவன் மேல் சந்தேகம் இன்றி. 
    அப்போதைக்கு அவனின் காதலிலும், மோகத்திலும் தினம் தினம் பேரின்பத்தை அனுபவித்து கொண்டிருந்தவளுக்கு அவன் குழந்தை வேண்டாமே என்று சொன்னது பெரிய தவறாய் எல்லாம் படவில்லை! ஆனால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற கணக்கு முடிந்த பின்பும் அவளின் இந்த எண்ணம் நீடிக்குமா?!
     வாழ்வு பலாச் சுளையாய் இனித்தது இருவருக்கும்! ஆனால் அதிக இனிப்பும் ஒரு நாளில் திகட்டக் கூடும் அல்லவா?! திகட்டத் துவங்கும் நேரம் மற்ற ஏக்கங்கள் தானாகவே தலை தூக்கக் கூடும்!
     அப்படிதான் அவர்களிடையே அன்று முதல்முதலாய் சிறுபிரச்சினை தலை தூக்கத் துவங்கியது!
     திருமணம் முடிந்ததிலிருந்து தினமும், வேலை முடிந்து வந்ததும், அவளை எங்காவது அழைத்துச் செல்வது அவன் வழக்கமாகி இருக்க, கோவில், பீச், பார்க், சினிமா, மால் என்று தினமும் ஊர்சுற்றிக் கொண்டிருந்தாள் அவனோடு.
     அன்றும் அப்படித்தான் பீச்சிற்கு சென்றிருந்த போது கேட்டே விட்டாள் அவனிடம்! “உங்க சம்பளத்தை எல்லாம், இப்படி ஊர் சுற்றியே செலவழிக்கப் போறீங்களா ஆபிசரே?!”
     “அதனால என்ன? என் தேனம்மாக்காக தானே எல்லாமே.”
     “அது சரி! ஆனா ஆபிசரே! இந்த ஸ்ட்ரிக்ட்டு ஆபீசருக்குள்ள இப்படி ஒரு காதல் எல்லாம் இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சதில்லை” என்று அவள் கேலி செய்ய,
     “நான் கூடத்தான் நினைச்சதில்லை! அன்னிக்கு உன் ஆட்டோவுல சவாரி வர்ற வரைக்கும்?! அன்னிக்கு நீ ஆட்டோவ நிறுத்தாம போன போது காரணமே இல்லாம எனக்கு அவ்ளோ கோபம் வந்தது உன்மேல! என்னவோ நீ எனக்கே உரிமைங்கிற மாதிரி! மறுபடியும் நீ வந்து அழைச்சப்போ கூட வண்டியில ஏற மறுத்தேனே! நான் அப்படி எல்லாம் யார்கிட்டயும் நடந்துக்கிட்டது இல்லை! எனக்கே விசித்திரமா தான் இருந்தது என்னோட செய்கை!”  என்றான் அவன் வண்டி மக்கர் செய்து நடுரோட்டில் நின்ற நாளை நினைவு கூர்ந்து.
     “ஒ அப்போவே ஆபீசருக்கு லவ்சு!” என்று அவள் கண்ணடிக்க,
     “ஆனா, அதுக்கு முன்னாடியே நீ என்னை சைட் அடிச்சது எனக்கு தெரியும்!” என்று அவள் குட்டை அவன் உடைக்க,
     “அ! அப்படி எல்லாம் இல்லையே?!” என்றாள் திணறலாய்.
     “ஓ! அப்போ ஏன் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சான்னு போட்டு வாங்க அப்படிக் கேட்ட?!” என அவன் கேட்க,
     “எப்படி?! நான் என்ன கேட்டேன்?!” என்றவளுக்கு நன்றாய் நினைவிருந்தது, தான் அவர் மனைவிக்கு பிரசவம் போது கஷ்டம் நேர்ந்ததால் தான் ஜெயாவிற்கு உதவி செய்தாரோ என்று கேட்டது.
     “ரொம்ப நடிக்காத தேனம்மா! அன்னிக்கு எனக்கு கல்யாணம் ஆகி நாலு பசங்க இருக்காங்கன்னு சொன்னதும் உன் முகம் போன போக்கிருக்கே! எல்லாத்தையும் மிரர் வழிய கவனிச்சிட்டுதான் இருந்தேன்” என்றவன்,
     “ஆனா, அதுக்கும் முன்னாடி என் ஆபீஸ்க்கு அந்தப் பொண்ணோட என்னைப் பார்க்க வந்தியே! அப்பவே நீ என்னை சைட் அடிச்சதும் எனக்குத் தெரியும்!” என்றான்.
     தன குட்டு அப்போதே வெளிப்பட்டு விட்டதை எண்ணி அசடு வழிந்தவள், “நிஜம்தான் ஆபிசரே! அப்போதிலிருந்தே எனக்கு உங்க ஞாபகம்தான்! லவ் எல்லாம் பண்ணலை ஆபிசரே! ஆனா உங்களைப் பிடிச்சுப் போச்சு ரொம்ப! இருந்தாலும் எனக்கும் உங்களுக்கும் எப்படி சரியா வரும்! நினைச்சுக் கூட பார்க்கத் தடை போட்டுட்டேன் மனசுக்கு! ஆனா அன்னிக்கு மறுபடியும், நீங்க உங்க அக்கா நாத்தனாரோட கோவில்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தீங்களே! அதுவரைக்கும் நீங்க சொன்னது பொய்ன்னு நினைச்சிட்டு இருந்தவ, அன்னிக்கும் உங்ககிட்ட போட்டு வாங்கத்தான் அங்க வந்து உங்ககிட்ட பேச்சு கொடுத்தேன். அப்பவும் நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி போல ஜோடியா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க, மனசே விட்டுப் போச்சு! அதான் சாமியைக் கூட பாக்காமயே வீட்டுக்குப் போயிட்டேன்! அன்னிக்கில்லாம் அம்மா கிட்ட கூட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தேன் தெரியுமா?!” என்றவளை,
     “இப்படியெல்லாம் நினைச்சுகிட்டு இருந்துட்டு, உங்க அம்மா சொன்னதும், அவங்க விருப்பம்னு சொல்லி நீ நல்ல பேரு வாங்கிக்கிட்ட?! நான் மட்டும் உங்க அம்மாவுக்கு வில்லனாகிட்டேன்!” என்றான் முறைத்தபடி.
     “ச்சே! ச்சே! அம்மா உங்களை வில்லனா எல்லாம் நினைக்கலை! அதுக்கு பெரிய இடமாச்சேன்னு பயம்! நாளைக்கு ஏதாவதுன்னா?” என்று அவள் முடிப்பதற்குள்,
     “ஏதாவதுன்னானா?!” என்று அவன் குரல் சட்டென மாறிவிட,
     “இல்லை ஏதாவது பிரச்சனைன்னா?!” அவள் தடுமாற,
     “பிரச்சனைன்னா?!” என்றான் அவள் மனதில் என்ன நினைப்பு இருக்கிறது  என்பதை தெளிவாக அறியும் பொருட்டு.
     “இப்போ எதுக்கு அதெல்லாம் கேட்டுகிட்டு இருக்கீங்க?! வாங்க வீட்டுக்குப் போகலாம்!” என்று அவள் அழைக்க,
     “இல்ல! பிரச்சனை வந்தா என்ன பண்ணுவேன்னு நினைக்குற?!” என்றான் கடினமாய்.
     “நான் ஒன்னும் நினைக்கலை ஆபிசரே! நீங்க வாங்க கிளம்பலாம்” என்றாள் அவன் முகம் சரியில்லை என்பதை உணர்ந்து.
     “பிரச்சனைன்னா உன்னைத் துரத்தி விட்டுடுவேன்னு நினைச்சீங்களா அம்மாவும் பொண்ணும்?!” என்றான் கடினமாய்.
     “அ அப்படி எல்லாம் இல்லை அபீசரே!” என்று அவள் திக்க,
     “சீ!” என்று எழுந்தவன், வேகமாய் கடல் மணலில் நடைபோட்டு முன்னேற, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி நடந்து வந்தாள் அவன் பின்னோடு.
     பார்கிங்கை அடைந்து தன் வண்டியை ரோட்டிற்கு எடுத்து வந்தவன், ஸ்டார்ட் செய்துவிட்டு அவளை ஏறு என்று கூட சொல்லாமல், அக்சிலேட்டரை முறுக்கியபடி வண்டியைக் கிளப்பாமல் நிற்க, அதன் சத்தத்தில் அங்கிருந்த சிலர் திரும்பிப் பார்க்க, அவள் சட்டென எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.
     அவள் கண்ணாடி வழியே கலக்கத்துடன் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வர, அவன் மறந்தும் அவளைப் பார்க்கவில்லை!
    சில நிமிடங்கள் கடந்த பிறகு, “அ ஆபிசரே!” என்றழைத்தாள் அவனை மெல்ல சமதானப்படுத்தும் விதமாய். பதிலாய் அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை!
    திருமணத்திற்கு முன் அவன் அவளிடம் பலமுறை கோபமாக பேசி இருந்தாலும், திருமணத்திற்குப் பின் அவளிடம் கோபப்படுவது இதுவே முதன்முறை!
     ‘நான் இப்போ அப்படி என்ன சொல்லிட்டேன்’ என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை! திருமணமே செய்யக் கூடாது என்று நினைத்தவன் அவளைப் பார்த்த நொடியில் இருந்து தன் தவத்தைக் கலைத்துக் கொண்டு தன் மனதை அவள் பின்னே அலையவிட்டதை! அப்படிப் பட்டவளை எப்படி விட்டுக் கொடுப்பான் அவனாக!
                                       -மௌனங்கள் மொழி பேசுமா?!
 
     
 
    
        
           

Advertisement