Advertisement

   மொழி-11
     பெண் வீட்டில்தான் முதல் இரவு சம்பிரதாயம் நடக்க வேண்டும். ஆனால் அவள் வீடு ஒற்றை அறையே கொண்ட சிறு வீடு என்பதால், மாப்பிள்ளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அங்குதான் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
     வீட்டில் பெரிதாய் எந்த சொந்தங்களும் இல்லை! வசந்தியும், மீனாவும் மட்டும்தான் அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். வசந்திக்கு விருப்பம் இல்லை என்றாலும், தம்பியின் விருப்பம் ஆயிற்றே என்று தேனுவை நேரடியாக எதுவும் பேசாமல் இருந்தாள். பெரிதாய் ஈடுபாடின்றி, அவள் தேனுவின் தலை முடியைப் பின்னி முடித்து மல்லிகைப் பூக்களைச் சூட, மீனா அவரின் நகைகளை எடுத்து வந்து கொடுத்து அவளுக்கு அணிவிக்கச் சொல்லிச் சென்றார் வசந்தியிடம்.
     அவள் எதுவும் பேசாமல் அவர் சொன்னதைச் செய்ய, “உங்களுக்கு என்மேல கோபம்தானே?!” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள் தேனு வசந்தியிடம்.
     “கோபம்னு எல்லாம் இல்லை! ஆனா வருத்தம் இருக்கு!” என்று மனதை மறையாது உரைத்த வசந்தி,
     “அதுக்காக இந்த டிவி சீரியல்ல வர்ற நாத்தனார் ரேஞ்சுக்கு என்னை நினைச்சிடாதம்மா! நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என்று வசந்தி சொல்ல, தேனு வாய்விட்டுச் சிரித்தாள்,
     “ஹஹா அது உங்களைப் பார்த்தாலே தெரியுது! நீங்க காமெடி பீசுன்னு!” என்றபடி.
     “அடி! யாரைப் பார்த்து காமெடி பீசுன்னு சொல்ற?!” என்று அவளை முறைத்த வசந்திக்கு, தேனுவின் சிரிப்பில் தனது கோபத்தை நீட்டிக்க முடியாது போக,
     “இருந்தாலும் உனக்கு வாய் ஜாஸ்திதான்! வந்த முதல் நாளே நாத்தனாரை கேலி பண்ணுற?!” என,
     “நமக்கு நெருக்கமானவங்க கிட்டதானே அண்ணி ஜாலியா பேச முடியும்! அதென்னமோ இந்த வீட்ல இருக்க யாருமே எனக்கு புது ஆட்களாகவே தெரியலை! நீங்க, மீனா அக்கா, அத்தை எல்லோருமே ரொம்ப நல்லா பழகுறீங்க. ஆனா இந்த அபீசர்தான்” என்று அவள் நிறுத்த,
     “ஆபீசரா?! அது யாரு?!” என்று வசந்தி புரியாது பார்க்க,
     “ஹஹா உங்க தம்பிதான்! அவரை அப்படித்தானே எனக்குத் தெரியும்” என,
     “ஓ! ஆமாம் உங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கமாச்சு?!” என்றாள் வசந்தி.
     “அது அண்ணி, அன்னிக்கு முதமுதல்ல, ஆட்டோ எப்சி பண்ணி ஆபீசுக்குப் போனேனே, உங்க தம்பி ரொம்பபப… ஸ்ட்ரிக்டு இல்ல! ஆட்டோ ஒழுங்கா ரெடி பண்ணலைன்னு கையெழுத்துப் போடாம, போய் சரி பண்ணிட்டு வான்னு சொல்லி திரும்ப அனுப்பிட்டாரு. சரி, கையில காசு இல்லைனாலும் கடன் வாங்கி வண்டிய ரெடி பண்ணி எடுத்துட்டுப் போனா, எங்கயோ அவசர அவசரமா வெளில கிளம்பி போயிட்டாரு கையெழுத்தே போடாம. வேற வழியே இல்லாம அடுத்த நாள் எப்சி பண்ணலாம்னு போனா, அப்பவும் முன் நாளே தேதி முடிஞ்சு போனதுனால, பைன் போட்டுட்டு அப்புறம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரு! அப்போ வந்துது பாருங்க உங்க தம்பி மேல கோவம்…” என்று அவள் ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடிக்க, அதையெல்லாம் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மீனாவும் வசந்தியுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தார்.
     “அட வசு! நம்ம தம்பி பைன் போட்டு போட்டு கடைசியில அவரே அவளுக்கு பைன் கட்டுற மாதிரி ஆகிடுச்சு பாரு வாழ்க்கை முழுக்க!” என்று சொல்ல,
     “ஹஹா! ஆமாம் அண்ணி நா கூட எப்படிடா இந்த பையனுக்கெல்லாம் லவ் வந்ததுன்னு நினைச்சேன்! கடைசியில ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாதிரி சீன போட்டுட்டு இப்படிக் கவுந்துட்டானே!” என,
     “போங்க அண்ணி! நான் ஒன்னும் அவர் மாதிரியெல்லாம் பைன் போட மாட்டேன்! அவரை நல்லா பார்த்துப்பேன்” என்றாள்.
     அதற்கு வசந்தி, “அப்போ என் தம்பி உன்னை நல்லா பார்த்துக்க மாட்டான?! இவ்ளோ பிடிவாதமா நின்னு கல்யாணம் பண்ணி இருக்கான். நீ அவனைப் பார்த்துக்கறதை விட அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என, தேனு சிரிப்புடன் தலை குனிந்தாள்.
     “சரி சரி நேரமாகுது வசந்தி! முழு அலங்காரமும் முடிஞ்சுதுன்னா அவளை அனுப்பி வச்சுடலாம். அப்புறம் அவ ஆபீசர் அதுக்கும் பைன் போட்டுடப் போறாரு!!” என்று மீனா சிரிக்க,
     “ஹ! ஆமாம் ஆமாம்! போட்டாலும் போட்டுடுவார்! நான் கிளம்புறேன்” என்று தேனு வேகமாய் எழ,
     “ஏய்! பார்த்து மெதுவா போம்மா!” என்று தேனுவிற்கு அறிவுரை வழங்கி அவளை அழைத்துக் கொண்டு போய் தம்பியின் அறையில் விட்டுவிட்டு வந்தாள் வசந்தி.
     அங்கு அவன் சாதாரணமாய் இருப்பது போல் தெரிந்தாலும், அவளிடம் பேச நினைத்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
     நெடுநேரமாய் யோசித்திருந்தவன், இறுதியாக அவளிடம் பேச நினைத்ததை இப்போது பேச வேண்டாம், இன்னும் சில நாட்கள் போகட்டும், என்று முடிவெடுக்க, அவள் உள்ளே நுழைந்தாள் அவனை பார்வையால் வருடியபடியே.
     அவள் வருகையைக் கண்டதும், மெல்லிய சிரிப்புடன், “வா தேனம்மா” என்று அவளை வரவேற்றவன், அவள் கையில் இருந்த, பால் செம்பை வாங்கி அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு,
     “உட்காரு” என்றான்.
     “நீங்க உட்காருங்க”
     “பரவாயில்லை! நீங்க முதல்ல உட்காருங்க” என்று அவள் சொல்ல,
     “இங்க நீதான் தேனம்மா எனக்கு ஆபீசர்!” என்றான் குறும்பாய்.
     அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “ஆமாம்! அதனால்தான், இப்போ கூட அண்ணி நேரமாகுதுன்னு சொன்னதும் எங்க இதுக்கும் சேர்த்து பைன் போட்டுடப் போறீங்களோன்னு வேகமா கிளம்பி வந்தேன்!” என்று அவள் சிரிக்காமல் சொல்ல, அவன் வாய்விட்டுச் சிரித்தான் முதன் முறையாய்.
     அவன் சாதரணமாகவே அழகுதான்! அதிலும் சிரிக்கும் போது அத்தனை வசீகரம்! அவள், அவன் சிரிக்கும் முகத்தை முதன்முறையாய் ரசிக்க, அவனோ, சட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு சீரியஸ் மோடிற்குத் தாவி,
     “அடடா நீயே ஞாபகப் படுத்திட்டயே பைன் போடணும்னு! ஒரு அஞ்சாயிரம்!” என்று அவன் முடிப்பதற்குள்,
     “போங்க! அபீசரே! உங்களைப் பார்த்ததுல இருந்து பைன் பைனா கட்டி, அலமு அக்காகிட்ட கடன்காரி ஆனதுதான் மிச்சம்! இனிமே பைனெல்லாம் கட்ட முடியாது!” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு.
     “அதெல்லாம் முடியாது. கட்டித்தான் ஆகணும்!” என்றவன்,
     “என்ன பைன் தெரியுமா?!” என, அவள் முறைக்க,
     “அஞ்சாயிரம் முத்தம்!” என்றான் சிரிக்காமல்.
     “ஹா!” என வாய்பிளந்தவள், “அம்மாடியோ! மூச்சு முட்டி செத்துடுவேன்!” என்று கண்களை அகல விரித்துச் சொல்ல, அதைப் பார்த்ததில் எழுந்த சிரிப்பைக் கட்டுபடுத்தி அவளை முறைத்தான்.
     “ப்ச்! வேணும்னா ஒரு ஆயிரம் முத்தம்?!” என்றாள் வினாவாய்.
     “ம்!” என்று யோசிப்பதைப் போல் சொன்னவன்,
     “சரி! இப்போதைக்கு ஆயிரம் ஓகே! ஆனா இப்போ குறைச்சதுக்காக இன்னொரு அஞ்சாயிரத்தை சேர்த்து அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடு” என்று அதற்கும் பைன் போட்டவன், அவளிடம் இருந்து பைனைப் பெரும் வேலையைத் துவங்க நெருங்க,
     “முதல்ல இந்தப் பாலைக் குடிங்க!” என்று அவள் மேஜையிலிருந்த பால் செம்பை எடுத்து நீட்டினாள்.
     “ம்! இதெல்லாம் அப்புறம்!” என்று அதை வாங்கி மீண்டும் மேஜை மீதே வைத்தவன்,    
     “தேனம்மா!” என்று உருகியபடி, தன்னை கவர்ந்திழுத்த அவளது நயனங்களில் தனது முதல் முத்தத்தைப் பதிக்க, அவள் உடல் சிலிர்த்தது.
     அவளிடம் முத்த அபராதம் கேட்டவன், இப்போது அவளுக்கு அபராதம் வழங்கத் துவங்கி இருந்ததை எண்ணி அவள் வெட்கச் சிரிப்புடன் அவனுக்கு இணங்க, முகம் முழுவதும் படர்ந்த அவனது முத்தங்கள், எல்லைகள் தாண்டி அவள் மேனியெங்கும் படர, அவள் உடல் அவனுக்காய் இளகத் துவங்கியது. சில நொடிகளில் அவன் ஆட்டுவிக்கும் பொம்மையாய் அவள் மாறியிருக்க, ஆடைகள் விடைபெற்று ஆதாம், ஏவாளாய் மாறியிருந்தனர் புதுமணத் தம்பதிகள்!
                                      *****
     இங்கு மகளின் வாழ்க்கை இனிதாய்த் துவங்கி இருந்த போதிலும், அவர் மட்டும் தங்கள் வீட்டில் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் மனம் ஒரு நிலையில் இல்லாமல்!
     அன்று அவன் அப்படிச் சொல்லிவிட்டுச் சென்ற பிறகும், மகளின் விருப்பமும் அறிந்து கொண்ட பிறகும் செல்லம்மாவால் தன் பிடிவாதத்தை இழுத்து வைக்க முடியவில்லை!
     ‘அவன் என்னவென்றால் இனி அவர்கள் வீட்டிற்கு வரவே மாட்டேன்!’ என்று சொல்லிச் சென்றுவிட்டான். இவள் என்னவென்றால் இப்போதுதான் அவரைப் பிடித்திருக்கிறது என்றே சொல்கிறாள்?!’ என்று குழம்பியவர்,
     ‘இனி எப்படி அவர்கள் வீட்டில் பேசுவது?!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஜெயா அங்கு வர,
     “ஏய் ஜெயா அந்த ஆபீசர் வீடு தெரியுமாடி உனக்கு?!” என்றார்.
     “வீடெல்லாம் தெரியாதும்மா. ஆபீசுக்குத்தான் ஒருமுறை போயிருக்கோம்” என்றவள்,
     “ஏம்மா?!” என,
     “இல்லடி! இந்த தேனு பொண்ணுக்கும் அவரைப் பிடிச்சிருக்கு போல! நீயும் நல்லவர்னு சொல்ற! அதான் என்ன செய்யன்னு யோசிக்கிறேன். கொஞ்சம் பெரிய இடம் அதான் பயமா இருக்கு! இன்னிக்கு கல்யாணம் எப்படி அவங்க முடிவா நடக்குதோ அதே போலதான் எல்லா விஷயத்திலையும் நடக்கும்! நாளை பின்ன தேனுவை அவங்க ஏதாவது சொல்லிட்டா! அதை நினைச்சாலும் பயமா இருக்கு! என்ன செய்யுறதுன்னே புரியலடி!” என்றார் இரண்டு மனமாக.
    “நம்ம தேனு மனசுக்கு எல்லாம் நல்லதேதான் நடக்கும் ம்மா! நீ வா இன்னிக்கே நாம ஆபீசுக்குப் போய் அவரைப் பார்க்கலாம்” என்று ஜெயா அழைக்க, 
     “இல்ல இல்ல இன்னிக்கே வேணாம்! நான் அந்தத் தரகர் கிட்ட சொல்லி இன்னிக்கு வர இருந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை முதல்ல வேணமான்னு சொல்றேன்! அப்புறம் அவரை விட்டே இவங்களைப் பத்தி விசாரிக்கச் சொல்றேன். அப்புறம் போய் பார்க்கலாம்” என்றார்.
 

Advertisement