Advertisement

மௌனமே காதல் மொழி பேசு  

காதல் மொழி  – 01

சிறகிலிருந்து
பிரிந்து வந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில் ஒரு
பறவையின்
வாழ்வை எழுதிச்
செல்கிறது”

என்ற எழுத்தாளர் பிரமிள் அவர்களின் கவிதை வரிகளை விழிகள் விரிய வியப்பாக படித்துக் கொண்டிருந்தாள்  அழகே உருவான பனிமலர்.
நமது மண்ணுக்கே உரிய
அழகான மாஞ்சிவப்பு நிறத்தழகி.
மத்தாப்பு சிரிப்பழகி
பெற்றோருக்கு பாசக்காரி
ஊருக்கு குறும்புக்காரி
பிரச்சனை என்று வந்தால் 
சண்டைக்காரி எதையும் விட்டுக்கொடுக்காத
வீம்புக்காரி.

எம்.ஏ தமிழ் இவளது படிப்பு.  தமிழின் மீது தணியாத காதல் கொண்டவள். புத்தக விரும்பியும் கூட.  கல்கி,  சாண்டில்யன் முதல் கீட்ஸ், பிரமிள் வரை எழுதிய புத்தகங்களை தேடித்தேடி படிக்கும் புத்தகப் புழுவவள். “ஆடு, மாடு, கோழி” என உயிர்களை நேசிக்கும் அன்புக்காரி. “மார்கழித் திங்களில் பிறந்ததாலோ என்னவோ பனியில்
பூத்த மலர்” என்று எண்ணி அவளது பெற்றோர் பனிமலர் என்றே பெயரிட்டனர்.

“வயல் வெளிகளின் பசுமைகளுக்கு நடுவில் இருக்கும் மாமரத்தின் அடியில் உட்கார்ந்து மலர் கவிதையை ரசித்து படித்துக் கொண்டிருக்க.

தென்றல் காற்று அவளின் கொடி இடையை வருடி விடாப்பிடியாய் விளையாட. தாவணி காற்றில் விலகி விலகி மலரை சீண்டியது.  கொஞ்ச நேரம் கவிதையை படிக்க  விடுதா பாரு”  என தாவணியை  இழுத்து இடுப்பில் சொருகினாள்.

“தாவணி போனால் என்ன உன் நெற்றியில் கற்றை கூந்தல் இருக்கிறதே”  என முன் நெற்றியில் உள்ள அவளது கூந்தலை புரட்டிப் போட்டு மெல்ல வருடிக் கொடுத்தது தென்றல் காற்று.

 “அடடா!  உன்னை”  என தனது நெற்றியை வருடிய கூந்தலை தன் விரலால் சிறைப்பிடிக்க. அப்போது அங்கு சில்வண்டு சரவணன் மூச்சிரைக்க ஓடி வந்தான்.

“என்னடா இப்படி மூச்சிரைக்க ஓடி வர” என புத்தகத்தோடு எழுந்தாள் மலர்.

“மருதுவ உங்கப்பா அடிக்கக் கம்பெடுத்துட்டு கோவமா போறாகக்கா.  நீ மட்டும் போகலனா இன்னைக்கு  மருது அவ்வளவுதான் என்று”  அந்த பொடியன் கூற.

“இந்த அப்பாவுக்கு ஏன் புத்தி இப்படி போகுது.  அவன தினமும் அடிக்கலனா தூக்கமே வராது”  என மலர் அவசரமாக எழுந்தாள்.

“டேய்!  சரவணா, அப்பாரு எந்த பக்கம் போனாங்க”  என்று கேட்க.

“தெக்காட்டு பழனிசாமி இருக்காவளே,  அங்கிட்டு தான் மருது இருக்கான்னு சொல்லி போனாகக்கா” என்றான்.

“சரி வா போகலாம்” என மலர் தன் மெல்லிய பாதம் நோகாமல் அடி மேல் அடி வைத்து ஓட. சரவணனும்  கூடவே ஓடினான்.

ஒரு வழியாக  தெக்காட்டுக்கு வந்து சேர. அங்கு ஒரு கூட்டமே கூடியிருந்தது. நடுவில் மருது நிற்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தது.

“ஏனப்பா ராசு இது உனக்கே நல்லாருக்கா.  எத்தன வாட்டி உனக்கு சொல்றது. புள்ளைய அடக்கி வைக்க  துப்பில்ல.  இப்படி ஊர் மேய விட்டு வையித்த வளக்கற” என பழனிசாமி திட்டிக் கொண்டிருக்க.

“கூட்டத்தை விலக்கி விட்டு மலர் முன்னால் வந்து, இவுக மட்டும் எல்லா வேலைலயும் சரியா இருக்க மாதிரிதான்.  வாய் இருக்குனு வாய்க்கு வந்தபடி நீளமா பேசக் கூடாது அப்பு.  அப்புறம் நான் பேசினா  மஞ்சக் காட்டு மைனா சிட்டா பறந்துடும்”,  என்று கூற.
பழனிசாமி பதட்டத்தோடு, “அம்மா தாயே! நீ என் குடும்பத்தில  குண்டு வைக்காத. அய்யா ராசு நீ உன் பிள்ளைகள கூட்டிட்டு கிளம்பு முதல்ல” என்றான்.

“எல்லாம் இவனால வந்தது”, என ராசு மருதுவை   தடியால் அடிக்க.
மலர் தடுத்து, “அப்பா!  இதுக்கு மேல ஒரு அடி மருது மேலே  பட்டுச்சு அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்” என்றாள் கோபமாக.

“தே நீ சும்மா கிட கருத்தபுள்ள. வயக்காட்டப் பாரு. சோளப்பயிற  எல்லாம் அழிச்சு நாசம்  பண்ணிட்டான்.  என்னமோ  ஊர்லயே  இல்லாத மாடு இவகளது. அதிசயமான ஊட்டுல  ஆம்பள புள்ள பொறந்த கணக்கா  இந்த   காள மாட்டுக்கு மருதுனு  பேர வச்சி ஊர் மேய விட்டு அப்பனும் மகளும் ஆட்டம் போடுறீக. அதையும் தே இந்த  ஊரே வேடிக்கைப் பார்க்கது”  என்று பழனியின்  மனைவி கோபமாக பேசினார்.

“இந்தா பாரு, எங்கப்பனாத்தா எனக்கு மலருன்னு பேரு வச்சிருக்காங்க. கருத்தபுள்ளனு சொல்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத. அப்புறம் வகுந்துபுடுவேன் வகுந்து.  காக்கா மாதிரி இருந்துகிட்டு உனக்கு கூட அன்னம்னு பேரு. உன்ன பாத்தா அப்படியா இருக்கு”  என மலர் கலகலவென சிரித்தாள்.

“சரிடியம்மா. நீ செவத்த சிங்காரி சூரியனுக்கு சொந்தகாரிதே விடு புள்ள. உன் முகத்த கண்டுதே ஊருக்கே விடியுதாம் ஹீக்கும்”  என பழிப்பு காட்டினாள் அன்னம்.

“தாயி அது எங்க புள்ளையாட்டம் தான் வளர்க்கறோம்.  ஒருநாளும் அத நாங்க மாடா நினைச்சது இல்ல.  அவன் உங்க வயலுக்குள்ள வந்து மேஞ்சது தப்புதான் மன்னிச்சிடுங்க” என்றார்  ராசு.

ஹீக்கும். இதுக்கு ஒன்னும் கொறச்ச  இல்ல.  பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒத்த வரியில சொல்லிப்புட்டா மடிஞ்ச பயிரெல்லாம் திரும்ப வருமாய்யா. அட அது கூட பரவாயில்லக. இந்த மருது கூட இன்னொரு கெரகம் வருது பாருங்க. அது பேரு என்ன ஜில்லோ, கொள்ளோ ஆத்தாடி
கொஞ்ச நஞ்ச கூத்தா பண்ணுது.

“அது வாயில்லா ஜீவனுக ஆத்தா.  அது என்னத்த பெருசா பண்ணிடுச்சு” என ராசு கேட்க.

ஏனுங்க,  வயக்காட்டுல ஒரு ஆடு, மாடு கட்டிட்டு நிம்மதியாக வந்து செத்த மூச்சாற முடியல. எல்லாத்தையும் அவுத்து முடுக்கி விடுது. வெளியே வாசல்ல ஒரு  பண்டம் பாத்திரம் வைக்க முடியல. சுத்தமா நக்கிட்டு போயிடுது. கருமம். கருமம்.. ஒரு கோழிய கண்ணுல கண்டா அவ்வளவு தே. அப்பவே கழுத்த கவ்விட்டு போயிடுது. இதுக ரெண்டும் ஊர்ல பண்ற அட்டகாசம் தாங்க முடியல சாமி என்றாள்.

“என்ன ஆத்தா   இப்படி பொசுக்குனு சொல்லிபுட்டீக. நாய்னா அப்படித்தான் இருக்கும். இதுக்கெல்லாமா இப்படி கொற  சொல்லுவீக”,  என்றார் ராசு.

“அய்யா சாமி நாயி நாயா இருக்கணுமய்யா. இது பேயா இல்ல திரியுது. பேர் ஒண்ணு வச்சிருக்கீக மாட்டுக்கு மருதாம். நாய்க்கு ஜில்லு, கொள்ளுனு முதல்ல எடத்த காலி பண்ணுங்கய்யா”,  என அன்னம்  கோபமாகக் கூற.

கோவம் வந்த ராசப்பன் நாய் ஜில்லுவையும்,  கன்றுக்குட்டி மருதுவையும் தடியால் அடிக்க.
ஜில்லு  அவரை சுற்றி சுற்றி வந்தது.  மலரிடம் சென்று குறைத்து சாட்சி சொன்னது.

“ஏன்டா அப்பா அடிக்கிறாங்களா?  அவர  நான் பேசிக்கிறேன்”,  என்று அப்பாவிடம் இருந்த தடியை  பிடுங்கி தூர வீசிவிட்டு,  “மருது வாடா போலாம்”  என கயிறை பிடிக்க மருதுவும், ஜில்லுவும் மலருடன்  போக.

“என்னால ஊருக்குள்ள இப்படிலாம் இனி அசிங்கப்பட முடியாது.  ஆள வரச்சொல்லி இவன முதல்ல விலைய  காட்டுறேன்.  இந்த நாயி மட்டும் இன்னக்கி வீட்டுக்குள்ள வந்துச்சு காலோடு சேர்த்து அந்த ஆட்டுற வாலையும்  நறுக்கிடுவே”  என்று கோபமாக கூறிவிட்டு சென்றார் ராசு..

மலர் ஒருவழியாக மருதுவை வீட்டிற்கு அழைத்து வந்து தொழுவத்தில் கட்டி விட்டு மருதுவை ஒரு கொஞ்சல் கொஞ்சிவிட்டு உள்ளே வர ஜில்லு கூடவே வந்தான்.

“ராசுவைப் பார்த்து மெல்ல வாலை ஆட்ட. அடிங்க” என ராசு தடியை எடுக்க. ஜில்லு வாலை ஆட்டிவிட்டு ஒரே ஓட்டமாக வெளியே ஓடினான்.

“என்னமோ ஏதோ வாசனை எல்லாம் பலமா வருது” என கையில் இருந்த புத்தகத்தை கட்டிலில் போட்டு விட்டு அம்மா சரஸ்வதியிடம் மலர் போய் நின்றாள்.

அஞ்சறைப் பெட்டியில் உள்ள செலவுகளை பக்குவமாக எடுத்து தேங்காயோடு அம்மியில் வைத்து  பதமாக அரைத்து,   விறகு அடுப்பு பற்ற வைத்து மண்சட்டியில் நாட்டுக்கோழி குழம்பு மணம் வீசு வைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.

என்ன விசேஷம்மா.  இவ்வளவு பக்குவமா  பார்த்துப் பார்த்து சமைக்கிற” என மலர் கேட்க.

“உங்க அப்பாவோட தங்கச்சி மகன் சின்னவன் வெளியூரிலிருந்து வரான். அதே வாய்க்கு ருசியா சமைச்சு போடலாம்னு.  பாவம் புள்ள வெளியூர்ல சுத்தி நாக்கு செத்து கிடக்கும். நம்மள பாக்காம அவிக வீட்டுக்கே போக மாட்டான். நேரா இங்குட்டு வந்துதே நிப்பான். அம்புட்டு பாசக்காரேன் முத்து”,  என்று  சரஸ்வதி கூற.

“முத்து மாமா ஊருக்கு வருதாம்மா”, என மலர் கேட்க.

அதை தானடி இவ்வளவு நேரமா சொன்னேன்.  உங்க அக்கா அவகளுக்கு பண்ண கொடுமைக்கு வேற யாராவதா இருந்திருந்தா இந்நேரத்துக்கு மொத்தமா உறவையே முறிச்சிவிட்டு இருப்பாக.  ஏதோ இவங்க தங்கச்சியா இருக்க போய் சும்மா கெடக்கறாக என்றாள்.

“அம்மா அக்கா என்ன கொடுமை பண்ணினா.  நீயே  இப்படி பேசாதம்மா.  அவ நல்லதுதானே பண்ணினா.  போக போக உனக்கே புரியற  நாள் வரும்மா” என்றாள் மலர்.

மாமன் அவன் படிப்பிற்காகவும்,  வேலைக்காகவும் பிரிந்து சென்று  ஆறு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வருகிறான். அவன் மேல் எப்போதும் மலருக்கு தனி  பாசமுண்டு. சிறுவயதிலிருந்தே மாமன் மேல் உயிரானவள்.  ஆனால் இன்று வரை அந்த அன்பை சிறிதும்  வெளிக்காட்டியது இல்லை  எந்த அளவுக்கு மலர் வம்புக்காரியோ, குறும்புக்காரியோ  அதே அளவுக்கு வீம்புக்காரியும்  கூட.  எந்த நிலையிலும் தனது அன்பை வெளிப்படுத்தாமல் இன்று வரை மனதிற்குள்ளேயே காதலித்து அதை மறைத்து கண்ணியம் காப்பவள்.  அந்தக் கன்னி மயில் இதயத்தில் இருக்கும் மௌனத்தை உடைத்து காதல் மொழி பேச வைக்க இதமான தென்றலாய் அவளின் இதயத்தை தொடும் நாயகனாய் மாமன் வந்து கொண்டிருக்கிறான்.

மாமனின் வரவு அவள்  நெஞ்சத்தில் பன்னீர் தெளித்தாலும் வீம்பு விட்டுக் கொடுக்கவில்லை.  மகிழ்ச்சியை வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டாடினாள்.

“அடியேய்! அப்படியே இந்த கழனி  தண்ணிய  ஊத்திட்டு வா”  என  சரஸ்வதி கூற.

“இப்ப இதுக்கு என்ன அவசரம்” என்று மலர் கூற.

“நேரமாவது பிடி” என அவள் கையில் வம்படியாக கழனி தண்ணி இருந்த குண்டானை கையில் திணித்து விட்டு சரஸ்வதி தன் வேலையை கவனிக்க.

மாமனை மனதில் எண்ணிக் கொண்டு அவன்  வரவை நோக்கி அவளின் கால்கள் நகர மறுத்தமையால் வாசலிலேயே நின்று விசிறி ஊற்றினாள்.
ஊருக்குள் மாமன் மகளின் காதலை எண்ணி மத்தாப்பாய் சிரித்துக் கொண்டு வரும் அவனின் தேகத்திற்கு  கழனி அபிஷேகம் கிடைக்க.

மாமன் மகள்  ஊற்றிய கழனி  தண்ணி கூட   விழாவில் மாமன் மகள் ஊற்றி விளையாடும் மஞ்சள் நீராக  தெரிந்தது..

முத்துவின் சுருளான கேசம், குறும்பான அரும்பு மீசை, பட்டாம்பூச்சியாய் படபடக்கும்  விழிகள், எதையோ சொல்ல துடிக்கும்  இதழ்கள், அவனைப் பார்த்த நொடி மொத்தமும் அடங்கி,  சப்த நாடிகளும் ஒடுங்கி சொல்ல நினைத்ததை  சொல்ல முயற்சி செய்யாமலே தோற்றுப்போனது.
தன் இதயம் தொட்ட காதலி. மாமன் மகளை பார்த்தவன் சிலையென மெய் மறந்து நிற்க. மனம் மட்டும்…

மாமன் மகள் ஒன்ன நெனச்சு 
அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்ன பார்த்ததுமே
அடி அஞ்சுகமே
உன்னை கொஞ்சனுமே
நான் மெல்ல
சேதி சொல்ல 
ஒரு வார்த்தை 
ஒன்னும் வரவில்லை..
என மனசு அவளை நோக்கிப் பாடியது.

ஆறு வருடம் கழித்து தன்னுயிர் மாமன் அவனைப் பார்த்த மலரின் மான் விழிகள் இரண்டும் மயங்கி நின்றது.

நீயும் இல்லா நேரத்தில
நினைப்பு மட்டும் சுத்துதய்யா 
கண்ணால வலை விரிச்சு
தன்னாலே புலம்ப வச்ச
ஒன்னோட மனசுக்குள்ள
பொல்லாத காதல வச்ச
மாமாங்கம் ஆனா கூட
மாமா நான் காத்திருப்பேன்..

என மனம் தென்றலாய் பாடினாலும்,  மறுநொடி அவளுக்குள் இருந்த வீம்புஇதயத்திலிருந்து எட்டிப்பார்த்தது.

தொடரும்……..

அன்பு நெஞ்சங்களுக்கு..
உங்கள் பொன்னான விமர்சனம் தான் எனக்கு உயிர் நாடி.. மௌனமாக படித்து விட்டு செல்வாமல் உங்கள் கருத்துக்களை கூறி என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்துங்கள் சகோக்களே..

Advertisement