Advertisement

*மௌனமாய்…*

*அத்தியாயம் 07*

கோபத்தோடு திரும்பி ஏறிட்டான்,
அவளை.

அதற்குள் வெளியே நகர்ந்திருந்தாள்,
அவள்.

“ப்ச்ச்ச்..”சலிப்புடன் தன்னைப் பார்த்துக் கொண்டவனுக்கு சட்டையிலும் பேன்ட்டிலும் விரவிக் கிடந்த கரிய காபிக் கரை வெகுவாய் கோபத்தை கிளப்பியது.
அவன் மிஸ்டர்.பர்பெக்ட் அல்லவா…?

அத்தனை சுத்தமாய் நேர்த்தியாய் இருப்பவன் அவன்.

பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவன் நான்கெட்டு முன்னே எடுத்து வைத்திருப்பான்…

எங்கிருந்தோ வந்த துப்பாக்கிச் சன்னமொன்று அந்த கண்ணாடித் தடுப்பை கிழித்துக் கொண்டு வந்து அவனுக்கே பக்கமாய் போடப்பட்டிருந்த நாற்காலியின் மேல் விளிம்பில் பட்டுத் தெறித்தது.

அச்சத்தோடு சேர்ந்த பதட்டம் தொற்றிக் கொண்டது,
அங்கிருந்த அனைவரிலும்.

திகைத்து நின்று விட்டான்,
மித்ரன்.
இமைகள் தொட்டுக் கொள்ள மறந்து போனது,
சில நொடிகளுக்கு.

அவன் நகர்ந்திராவிட்டால் நிச்சயம் அவன் தோட்பட்டையை உரசிப் பார்த்திருக்கும்,
அந்த புல்லட்.
அனிச்சையாக அவன் கை விரல்கள் அவனின் மறு தோட்பட்டைட் வருடிக் கொடுத்தன,
மென்மையாய்.

வெளியிலிருந்து இரு நபர்கள் அதீத பதட்டத்தோடு உள் நுழைய,
பாதிப் பேர் பயத்தில் வெளியேறி இருந்தனர்,
அவ்விடத்தில் இருந்து.

காக்கி உடையில் உள் நுழைந்தவர்கள் அனைவரையும் வெளியேறும் படி சைகை செய்ய மித்ரனோ அவர்களை ஆராய்ந்த படி வெளியேறி இருந்தான்.

அவன் வெளியே வர
அந்த அசம்பாவிதம் நடக்க சில நொடிகள் முன் வரை
பலருக்கும் அவன் அவ்விடத்தில் அமர்ந்திருந்தது தெரியும் என்பதால் பலர் சூழ்ந்து கொண்டு அவனின் நலம் விசாரிக்க அவன் பதிலாய் இருந்தது,
சிறு தலையசைப்பே.

அவன் விழிகளில் ஒரு வித தேடல்.

சரியான நேரத்தில் அவன் அவ்விடத்தில் இருந்து அகன்றிருந்ததில் ஒரு வித வியப்பு தான்,
அனைவருக்கும்.

அவன் கண்களிலும் இன்னும் அந்த அதிர்வின் சில துளிகள் மீதமிருந்தது.

“தம்பி..அந்த பொண்ணோட அவசரம் கூட நல்லதா போச்சு..யாரோ தெரியல..முடிஞ்சா தேங்க்ஸ் பண்ணிருங்க பாத்து..”
பெரியவர் ஒருவர் அவன் தோளை தட்டி சொல்லி விட்டு போக சிறு தலையசைப்புடன் ஆமோதித்தான்.
அவன் மனதிலும் அந்த எண்ணம் தான்.

கூட்டத்தை விலக்கி விட்டு முன்னே நகர்ந்திட முடியவில்லை,
அவனால்.

“யாராம் அவள்..?
ஏனாம் அங்கு வந்தாள்..?
என்னை காப்பாற்றவாமா..? யாராம் அவள்..?”
அவன் மனதில் கேள்விகள் துள்ளி எழுந்தன.

அவன் விழிகள் சுழன்று அவளைத் தேடின.
இதயத்தில் ஒரு வித படபடப்பு..
விழிகளில் ஒரு வித பரிதவிப்பு..

அவள் எங்கும் தென்பட மாட்டாளா..?
மனம் அரற்றியது,
மௌனமாய்.

ஒருவாறு கூட்டத்தை விலக்கி விட்டு முன்னே நகர்ந்திருந்தான்.

அவன் நின்றிருந்த புறத்தின எதிர்புறமாய் முன்னே
அவள் நடந்து கொண்டிருந்தாள்.
அவளே தான்.
தன் மீது காபியை சிதற விட்டவள்…!

அவன் மறுபுறம் மாறி அவளை பின் தொடர அவளை உற்று நோக்கிய போதே அவனுக்கு புரிந்தது,
அவள் நேற்று பேரூந்தில் தன்னருகே இருந்த பெண் என்று.

அவள் தான் என்று அவன் மனம் அடித்துச் சொன்னது.

மெல்லிய அதிர்வலைகள் அவன் இதயத்தில்.
மனதிலோ சொல்ல இயலா உணர்வொன்று தோன்றி மறைந்தது.

அவளுக்கு எப்படி தெரியப் போகிறது அவன் அவளைப் பின் தொடர்வது…?

யாருமில்லாது போக தனிமைக்கு பயந்து அதிவேகமாய் நடந்து கொண்டிருந்தாள்,
அவள்.

அவனோ அவள் முகத்தை பார்த்து விடும் ஆவலில் தன் நடையை விரைவாக்க சரியாக அவன் முன்னே வந்து நின்றது,
சாம்பல் நிற காரொன்று.

அதில் இருந்து இறங்கினாள்,
அவள்…!

அவன் மொத்த மனநிலையும் தலைகீழாகிப் போனது.

            ●●●●●

அஜய்யின் அலுவலகம் அது.

தன் முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளை வெற்றுப் பார்வை பார்த்தான்,
மித்ரன்.

அவன் பார்வையில் உணர்வுகள் தொலைந்து போயிருந்தது.

சொல்லியும் கேட்காமல் பேசி முடிவு கட்டி விடு எனக் கூறி தன்னை அழைத்து வந்த தோழனின் மீது அத்தனை ஆத்திரம் அவனுக்கு.

பாதையில் இவளைக் கண்டவுடன் நகரப் பார்த்தவன் ஆயிற்றே.
வலுக்கட்டாயமாக அழைப்படுத்து வரச் சொன்னது அஜய் அல்லவா.

அவள் முன் அஜய்யை விட்டுக் கொடுக்கவும் அவனுக்கு மனதில்லை.

அஜய்யின் அறையின் அவர்கள் அமர்ந்திருக்க கண்ணாடித் தடுப்பின் வெளியே நின்றிருந்தான்,
அஜய்.

மித்ரன் எத்தனை சொல்லியும் அவனுடன் இருக்க மறுத்து விட்டு வெளியே நின்றிருந்தான்.

அவளின் நயனங்கள் அவனை அளவிட்டன.
இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை.

“யெப்டி இருக்க விஷு..சாரி சாரி..மிஸ்டர் விஷ்வ மித்ரன்..?”

“…………”

“சாரி..சாரி..உங்களால பேச முடியாதுல..லைட்டா மறந்துட்டேன்..”
உச்சுக் கொட்டிக் கொண்டு சொன்னாள்.

அவன் எப்போதும் போல் இருந்தான்,
மௌனமாய்.
அவன் பார்வை அவளைத் தவிர வேறிடங்களில் சுற்றித் திரிந்தது.

“ஊமயாப் போனாலும் உன் திமிர் அடங்கலல..”
அத்தனை வன்மம் அவள் குரலில்.

அவனிடம் இருந்து பெருமூச்சொன்று.

“ஏன்னு தெரியல..உன்ன விட்டு வந்துட்டாலும் நீ சந்தோஷமா இருக்குறத பாக்க முடில…அன்னிக்கு அவன் யென்ன அறைரப்போ யென்ன விட உனக்கு நல்ல பொண்ணா பாத்து மேரேஜ் பண்ணி வப்பேன்னு சொன்னான்..”
தீவிரமாய் சொன்னவளின் பார்வை அஜய்யில் நிலைத்திருந்தது.

“யெல்லாருக்கும் முன்னாடி அவன் அரயும் போது யென்னால யெதுவும் பண்ண முடில..ஆனா இப்போ அதுக்கும் சேத்து உன்ன பழிவாங்கனும்னு தோணுது..
அவ்ளோ வெறி இருக்கு உன்மேல..”
அவள் பேச அவன் கொஞ்சமும் கணக்கில் கொள்ளவில்லை,
அவளை.

விரும்பியதை,
பேசட்டும் என்று விட்டு விட்டான்.
அவள் நிலைக்கு இறங்க அவன் மனம் விடவில்லை.

அவளைப் பற்றி அவனுக்கு தெரியுமே.
தான் தூக்கி எறிந்தது வேறொரு கையில் நிம்மதியாக இருப்பது அவளுக்கு பிடிக்காதே.

தான் தூக்கி எறிந்தாலும் அது தன்னுடைய பொருள் தான்.
உணர்வுள்ள மனம் என்றாலும் சரி..
உயிரற்ற சடம் என்றாலும் சரி..!
அவளது..
அவ்வளவே.

மித்ரனை விட்டுச் சென்றது அவள் தான்.
தனக்கு ஒரு காதலை தேடிக் கொண்டும் விட்டாள்.
ம்ஹும்..
ஒரு ஈர்ப்பை தேடிக் கொண்டும் விட்டாள்.
ஆனால்,
மித்ரன் மட்டும் தன்னையே நினைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறது அவள் மனம்…!

அவளைத் தவிர அவனால் யாரையும் நேசிக்க முடியாது என்கின்ற கர்வம் வேறு.

அதனால் தான் இப்படி ஆவேசமான நடத்தை.
அதிலும் தோழனை திட்டியதற்காக அஜய் அவளை அனைவர் முன்னிலையிலும் அறைந்தது,
அவளுக்குள் வன்மத்தை விதைத்திருந்தது.

“ஹலோ..மிஸ்டர்.விஷ்வமித்ரன்..யென்ன யோசிக்கிறீங்க..யெப்டி ஊம பாஷ பேசுறதுன்னா…”

“………”

“ஹஹ்ஹா..அப்டி தான் யோசிச்சு இருப்பீங்க..அதா உங்க இளிச்சவாயன் ப்ரெண்டு இருக்கானே..அவன் கூட பேசுங்க..”

“………..”

“ஆமா உங்க ப்ரெண்டு நிச்சயம் நின்னதும் யென்னால தான்..பிகாஸ் ஆராதனா யென்னோட க்ளாஸ் தான்..”
என்றவள் எதையோ சாதித்த திருப்தியில் கூற இத்தனை நேரம் அமைதியாய் இருந்தவன் மனம் சீற்றம் கொண்டது.

கதிரையை தள்ளி காலால் எட்டி உதைத்த படி எழுந்து நின்றான்.
அத்தனை கோபத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தன, அந்த கூரிய கருவிழிகள்.

அவனின் இந்த அதிரடியில் அவளுக்கு சற்றே பயம் இருந்தது.

மித்ரனின் கோபம் அவள் அறிந்ததல்லவா…?

ஒற்றை விரலை அசைத்துக் காட்டி
அவளை வெளியேறுமாறு சைகை செய்ய அவளோ அசையாது நின்றிருந்தாள்,
வீம்புக்காக.

இருந்த கொஞ்சம் பொறுமையும் கரைந்திருந்தது.

அவள் ஏதோ பேச வர சட்டென்று அருகிருந்த இரும்பு  நாற்காலியை தூக்கி நிலத்தில் அடிக்க நொருங்கியது,
அது.

பயத்தில் எச்சிலை விழுங்கி அரண்டு போய் அவனை பார்க்க அவனோ கண்களாலே கதவை காட்ட நகர்ந்து போனாள்,
வெளியே.

ஆனால்,
கண்களில் மட்டும் திமிர் மின்னியது.

அவள் வெளியேற உள்நுழைந்தான்,
அஜய்.
தோழனின் நிலை புரிந்தது அவனுக்கு.

மேசையின் மீது காலை வைத்து கதிரையில் சரிந்தமர்ந்து நெற்றியை கையால் தாங்கிய படி அமர்ந்திருந்தவனை கண்டதும் அவனுக்குள் சிறு வலி.

தன் வலிகளில் தோள் கொடுத்தவனின் இந்நிலை அவனையும் வெகுவாக பாதிக்கத் தானே செய்யும்..?

அவனருகே மற்றொரு கதிரையை இழுத்துப் போட்டு அவனும் அமர்ந்து கொண்டான்.

“விஷ்வா…”

“………..”

“விஷ்வா..சாரிடா..ரியலி சாரி..அவ டார்சர் பண்ணவும் தான் உன்ன மீட் பண்ண வச்சேன்..
உன்னோட மனசுல அஞ்சலி மேல இருக்குற அபிப்ராயத்த தெரிஞ்சிக்க தா அப்டி பண்ணேன்..சாரிடா..”

நிஜமாய் அவனின் எண்ணம் அது தான்.
மகாவை பிடித்து திருமணம் செய்தானா என்பது அவனுக்கு தெரியாது.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அவன் அறிந்ததில்லை.
அஞ்சலியை தூக்கி எறிந்த பின்னர் தான் மகாவை திருமணம் செய்ய தோழன் ஒத்துக் கொண்டிருப்பான் என்று தெரிந்தாலும் மனதிற்குள் ஒரு வித மருகல்.

மித்ரனின் தோழன் மட்டுமல்லவே..!
மகாவின் அண்ணனும் தானே.

அதற்கு தான் இத்தனை போராட்டம்.

தோழனின் பேச்சை கேட்டு உறுத்து விழித்தவனின் முகத்தில் கோபத்தின் ரேகைகள்.

அஜய்யின் விழியை ஊடுருவிப் பார்த்துக் கொண்டு…
“அவ யென்னகி யென்ன தூக்கிப் போட்டு போனாளோ அன்னிக்கே அவள யென் மனசுல இருந்து தூக்கி யெறிஞ்சுட்டேன்..
இப்போ யென்னோட மனசுல அவ மேல காதல் இல்ல..
யெந்த பொண்ணயும் நம்ப முடியாதளவு காயம் மட்டுந்தான் இருக்கு..
போதுமா..?”
திக்காமல் திணறாமல் இதழசைத்தவனை இமைக்காமல் பார்த்தான்,
அஜய்.

இதழ் அசைவும் விழிமொழியும் அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வைத்தன.

சொல்லி விட்டு அவன் அகன்று விட தோழன் கோபத்தில் செல்வது புரிந்தாலும் அவனின் பதிலில் அத்தனை நிம்மதி அஜய்யின் மனதில்.

இதை,
தானே அவன் எதிர்ப்பார்த்தான்..?

புன்னகையுடன் வீடு வந்து சேர்ந்தவனை எங்கும் பரவியிருந்த நிசப்தமே வரவேற்றது.

யோசனையுடன் உள் நுழைந்தவனுக்கு யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

“ப்ரியா..”

“………”

“திவ்யா..”
கத்தியவனுக்கு,
“ப்ரியா ரூம்ல இருக்கோம்..வாங்க அஜய்..”என்று பதில்மொழி கொடுத்தாள்,
திவ்யா.

அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள்.
விடுவிடுவென மாடிப் படியேறி ப்ரியாவின் அறைக்குள் நுழைய கட்டிலின் ஒரு மூலையில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்,
ப்ரியதர்ஷினி.
திவ்யாவின் தங்கை.

அவளுக்கு சற்றுத் தள்ளி திவ்யாவும் கட்டிலுக்கு நேர் எதிரே போடப்பட்டிருந்த நீள் சோபாவின் ஒரு மூலையில் முழங்கையை கைப்பிடியில் ஊன்றி உள்ளங்கைகளை கொண்டு முகத்தை தாங்கி அழுத்தமான பார்வையை சுவரில் பதித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்,
மகா.

கோபம் கண்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

“பிசாசு..யெதுக்கு இவ்ளோ அமைதியா இருக்கு..யென்னமோ தரமா நடந்துருக்கு..”
யோசித்துக் கொண்டே அவளுக்கு எதிர் மூலையில் அமர்ந்து கொண்டான்.

மகாவின் பார்வை கடந்து செல்லும் அஜய்யில் ஒரு நிமிடம் படிந்து மீண்டிருந்தது.

“என்னவாயிற்று…?”
விழிகளை உயர்த்தி திவ்யாவிடம் கேட்க அவள் “ஆகாஷ்..”
என்று இதழசைத்தாள்,
மெல்லமாய்.

தன்னாலே அவன் கைகள் தலையை தாங்கிக் கொண்டன.

“இப்போ தான் விஷ்வாவோட பர்பாமன்ஸ் முடிஞ்சுது..
இப்போ மிஸஸ்.விஷ்வாவா..?
புருஷனும் பொண்டாட்டியும் மாறி மாறி அடிக்கிறாய்ங்களே..”
உள்ளுக்குள் நினைத்தவனுக்கு சற்றே கலக்கம் தான்,
மகாவின் இந்த அழுத்தமான கோபத்தை நினைத்து.

ஏதோ தோன்றவே மீண்டும் திவ்யாவிடம் “ஸ்டார்டா..?”
என்று இதழசைத்து கேட்க மறுப்பாய் அசைந்தது,
அவள் தலை.

அவன் மனது எதையோ வேகமாக கணக்குப் போட்டது.
மகாவின் அலைபேசியை கண்களால் துழாவினான்.

சோபாவின் நடுவில் வைத்திருந்த அலைபேசியை அஜய் கவர்ந்து கொண்டது,
பதியவில்லை அவள் கருத்தில்.

“மகா..”

“யென்ன அஜய்..”

“ஏய் என்னடி இது..இப்டி ஆம்பள வாய்ஸ் போல இருக்கு..”

“தொண்ட கட்டிப் போச்சு..”
என்று கரகர குரலில் சொன்னாள்.

அவள் குரல் கரகரப்பாய் மாறி இருந்தது,
நேற்று சாப்பிட்ட ஐஸ்கிரீமின் விளைவால்.

“சரி…யென்ன ஆச்சு..?”என்று கேட்டுத் தூண்டினான்,
அவளை.

கைகள் மித்ரனுக்கு அழைப்பை தட்டி விட்டிருந்தது.

அவளின் பழக்கம் அது.
கோபத்தின் போது எதுவும் பேசாமல் இருப்பது.
ஆனால்,
விழிகளின் முகபாவனையும் அத்தனை கோபத்தை பிரதிபலிக்கும்.

தவறுதலாய் யாராவது என்ன நடந்தது..?
ஏன் இப்படி..?
என்று கேட்டால் போதும்..!
படபடவென அனைத்தையும் கொட்டி விடுவாள்.
தன்னை கோபப்படுத்தியவருக்கு வசை பொழிந்து தீர்த்து விடுவாள்.

அவளின் பழக்கத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்,
அஜய்.

“யென்ன ஆச்சுன்னாஆஆஆஆ..
என்று இழுத்துக் கொண்டு அவள் எழுந்திட மறுமுனையில் அழைப்பை ஏற்றிருந்தான்,
அவன்..!
விஷ்வமித்ரன்…!

மனம் ஒரு நிலையில் இல்லாது இருக்கவே,
அந்த ஆள் அரவமற்ற இடத்தில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு கண்மூடி சாய்ந்திருந்தவனை கலைத்தது,
அலைபேசியின் ஒலி.

அந்த எண்ணை கண்டதும் ஏற்காமல் இருக்க முடியாது போக,
ஏற்றிருந்தான் அழைப்பை.

“அறிவிருக்கா..அறிவிருக்கா உனக்கு..?”
என்பதே முதன் முதலாய் அவன் காதில் விழுந்தது.
திகைத்து விட்டாலும்,
அழைப்பை துண்டிக்க மறுத்தது,
மனம்…!

ப்ரியாவை பார்த்து திட்டத் தொடங்கியிருந்தது,
மகா தான்.

“உன்ன தான் கேக்கறேன் ப்ரியா..கொஞ்சமாவது அறிவிருக்கா..? நா பேசி முடிக்கற வர ப்ரியாவ தவிர யாரும் எதுவும் பேசக் கூடாது..சரியா..?”
சரி என்பதாய் தலை அசைத்தனர்,
மற்றைய இருவரும்.

மறுமுனையில் இருந்த மித்ரனுக்கு தன்னை திட்டவில்லை என்பதே அப்போது தான் புரிந்தது.

வழமையாக தனக்கில்லாத அழைப்புக்களை ஏற்கவே மறுப்பவனுக்கு இது தனக்கானது அல்ல என்பது தெரிந்ததும் துண்டிக்க மனம் வரவில்லை.
ஏதோ ஓர் உணர்வு அவனை கட்டிப் போட்டிருந்தது,
இறுக்கமாய்.

“உன்ன தான் கேக்கறேன் ப்ரியா..?”

“இல்லக்கா..”

“இல்லக்கா..நொல்லக்கா..பாவக்கா..பூசணிக்கானு இங்க பேசு..தேவயான யெடத்துல பேசாத..”
எகிறியவளின் குரலில் இலேசான புன்னகை எட்டிப் பார்த்தது,
மித்ரனுக்கு.

“அந்த யெரும மாட்ட பாத்தா உனக்கு நாள் புல்லா அப்சட் ஆகிரும்..மேடம் போன கூட ஆப் பண்ணிட்டு எங்கயாவது இருப்பீங்க..நாங்க பதறிகிட்டு தேடனும் அதான..?”
சாதாரணமாகவே அவள் பேசுவது சற்று சத்தம் கூடுதல் தான்.
இப்போது கோபத்தில் கத்துவது இன்னும் ஹைடெசிபிளில் ஒலிக்க ஸ்பீக்கர் போட்டு விட்டு அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கே காது குடைந்தது.

“யாருடா இது..இப்டி கத்துறது..வாயஸ் ஆம்பள வாய்ஸா இருக்கு..ஆனா அக்கானு பேசுது..”
மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டான்.

மெலிதான புன்னகையை தாங்கி நின்றன,
அவனிதழ்கள்.

மனதில் ஒரு வித ஆர்வம் முளைத்து விரிந்தது.
அனைத்தும் அவனுக்கென்று பேசுவது போல்..!

“இல்லக்கா…”

“இல்லக்கா..இல்ல நா நல்ல புள்ளனு சொன்னா நா நம்பிரனும் அதான..?”
விழியுயர்த்தி அவள் கேட்க சட்டென்று நின்றது,
ப்ரியாவின் பேச்சு.

“உனக்கு தொண்ட வேற சரியில்லயேக்கா..?”

“யெனக்கு தொண்டைல ப்ரச்சுன..உனக்கு மண்டைல ப்ரச்சுன..சரி தான..?”

“கோபத்துல கூட ரைமிங்க விடமாட்டாளே..முடியலடா சாமி..”
தனக்குள் சிரித்துக் கொண்டான்,
அஜய்..!

“கால் வாலியூம் லோ வா இருக்குல..”
என்று எண்ணியபடி அதையும் சரிபார்த்துக் கொண்டான்,
மகா அறியாமல்.

“ஆமா நா கேக்கறேன்.. ஆக்ஸிடன்ட் நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு..அந்த பஸ்ல இருந்த யெல்லாருக்கும் அடிபட்டுச்சு..”
சொன்னவளின் குரல் கமற கண்கள் லேசாய் கலங்கிப் போனது.

அவளின் விழிகளில் திடுமென ஏறிய சிவப்பு தப்பவில்லை,
திவ்யாவின் விழிகளில் இருந்து.

மித்ரனோ படபடக்கும் இதயத்துடன் கேட்டான்.
அவனுக்கு குரல் போனது அந்த விபத்தின் போதல்லவா.

இன்னும் அவன் செவிகள் அவள் பேசுவதை கவனிக்க துவங்கியது.

“க்கும்..நெறய பேருக்கு அடிபட்டுச்சு..யெல்லாரும் உன்ன மாதிரி அத நெனச்சு பீல் பண்ணிட்டா இருக்காங்க..
கடந்து வர்ல..”

“யெல்லாருக்கும் சின்ன அடி தான்..
யென்ன மாதிரி காதுக்கு மெஷின் போட வேண்டி வந்துச்சா..?”
மனத்தாங்கலுடன் அவள் கேட்க உறுத்து விழித்தாள்,
அவளை.

அத்தனை கோபம் மனதில்.

“காதுக்கு மெஷின் தான போட்ருக்க..செவாடாகலியே..
இப்போ நான் செவுல்ல விட்ற அடில செவிடாகிருவ பாத்துக்க..”

திவ்யாவும் அஜய்யும் எதுவும் பேசவில்லை.
ப்ரியாவிடம் சொல்லி களைத்து போனது தான் மிச்சம்.

“இல்லக்கா..யெனக்கு அப்டி நடந்ததுனால தான மகேஷ் யென்னோட லவ்வ ப்ரேக்அப் பண்ணிகிட்டான்..”
என்றவளின் குரலில் அத்தனை ஆதங்கம்.
அழும் நிலையில் இருந்தாள்,
அவள் பழையதை நினைத்து.

கேட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கும் நிலை கொள்ளவில்லை.
அவன் நிலையை அப்படியே இன்னொரு ஜீவன் பிரதிபலிக்கிறதே..!

அவனுக்குள் இன்னும் அவள் தந்த காயம் குத்திக் கொண்டி இருக்கிறதல்லவா..?

அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள்..?
அவன் மனம் அத்தனை எதிர்ப்பார்த்தது.

“வாய மூடு..அது லவ்னு சொல்லாத..அது லவ்வுல யேதோ யெழவு..நீ இன்னும் அத லவ்வுனு நெனச்சிகிட்டு இருந்தா அது உன்னோட தப்பு..”

பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள்,
அவள்.
எத்தனை சொல்லியும் புரிந்திட முயலாதவளை உடலும் மனமும் தளர்ந்து போனது,
ஒருசேர.

“நா சொல்றத ஒரு நிமிஷம் கேக்கறியா ப்ரியா..?”
என்றவள் ப்ரியாவின் அருகில் அமர்ந்து கொள்ள பதறிய அஜய்யும் அவள் அருகில் கதிரையை இழுத்துப் போட்டு அம்ர்ந்து கொண்டான்.

பேன்ட் பாக்கெட்டில் இருந்தது,
மகாவின் அலைபேசி.

“யென்னக்கா..?”

“இன்னிக்கு நீ பண்ணது சரியான்னு சொல்லு..?”
மென்மையாய் ஒலித்தது அவள் குரல்.

அக்குரலே அவளின் தளர்வை எடுத்துரைத்தது.

“நா சொல்றேன் கேட்டுக்க..இதெல்லாம் நாம செஞ்சோம்னு காடறதுக்காக சொல்லல..கொஞ்சமாவது நீ புரிஞ்சிக்கனும்னு தான் சொல்றேன்..
வேலக்கி போனவ வீட்டுக்கு வர்ல…அத்தயும் மாமாவும் யெவ்ளோ பயந்துருப்பாங்க.. உங்கப்பா ரொம்ப பயந்துட்டாரு..ஒரு தடவ நீ தனியா ஸ்கூல் மாட்டிகிட்டது தெரியும்ல..
அது மட்டுல்ல ஒரு பொண்ண காணோம்னு வர்ரப்ப அந்தப்பாவோட மனநெல அவருக்கு மட்டுநதான் தெரியும்..நம்மலாள யெல்லாம் அத பீல் பண்ணவே முடியாதே..
சரியா சொன்னா அந்த பீல் கிட்ட நெருங்கவே முடியாது..”

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்,
மித்ரன்.
மனதில் புதைந்து கிடந்த ஏதோ ஒரு உணர்வு மெல்லமாய் துளிர் விட்டு வியாபிக்கத் துவங்கியது.

“உங்கப்பாவுக்கு பிபி வேற இருக்கு…உங்கம்மாவுக்கும் அவ்ளோ டென்ஷன்..திவ்யாவுக்கு யெனக்கு போன் பண்ணி இருக்க..நா ஒரு வேல விஷயமா வெளில போயிருந்தேன்…அப்றம் உங்கம்மாவுக்கு போன் பண்ணி நீ யெங்க கூட தான் இருக்கன்னு பொய்ய சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் உன்ன தேட வந்தோம்…அவங்கள டென்ஷன் படுத்தகூடாதுனு..”

அசாத்திய மௌனம் அவ்விடத்தில்.
திரையிட்டிருந்த மௌனச்சுவரை உடைத்ததும் அவளே தான்.

“அப்றம் உங்கக்கா உன் ப்ரெட்ஸ்கு போன் பண்ணிகிட்டே உன்ன அந்த பார்க்குகு தேடி போக நா உன்னோட அந்த யெடத்துக்கு போனேன்..
டென்ஷன்ல வண்டி ஓட்டுனதால வண்டி ஸ்லிப்பாகி கீழ விழுந்து அவளுக்கு காயமும் பட்டுருச்சு..”
என்க பதறிய படி திவ்யாவின் கையை ஆராய்ந்தாள்,
ப்ரியா.

முழங்கைக்கு சற்று கீழே இருந்த காயத்தை சுத்தம் செய்து கட்டுப் போட்டிருந்தாள்.

“அது மட்டுல்ல..அந்த பார்க்ல கூட நீ இல்ல..யெவ்ளோ பயந்து பொய்ட்டோம் தெர்யுமா..?”

“அப்போ நீங்க அந்த ஏ.கே காபிஷாப்புக்கு போனீங்களா அக்கா..?”

ஆம் என்று தலையசைத்தாள்,
அவள்.

மித்ரனுக்கு அவள் தலையசைப்பது தெரியுமா என்ன..?
அதிவேகமாய் துடித்தது,
இதயம்.
அவன் சென்றிருந்த இடம் அல்லவா அது..?

இதயத்தின் தாளம் எகிற அவன் பதிலைக் கேட்க அவன் தவிக்க அவள் பதில் சொல்லவில்லையே அவனுக்கும் கேட்கும் படி.

“நெஜமா போனீங்களாக்கா..?”

“ம்ம்ம்ம்ம்ம்..”
அந்த ஒற்றைச் சொல் அவன் செவியை உரச அவனுக்குள் என்ன மாற்றம் என்று அவனுக்கே தெரியவில்லை.

அந்த “ம்ம்ம்ம்ம்” அவனுக்குள் பலநூறு வசனங்களை சொல்லி விட்டிருந்தது.

மனதில் தோன்றிய எதிர்ப்பார்ப்பை விழிகள் ஏக்கமாய் பிரதிபலித்தன,
அவன் அறியாமலேயே.
இன்னும் அதி வேகமாய் துடித்தது,
அவனிதயம்.

அவள் தான்..
தன் மீது காபியை சிறவிட்டவளே தான்..
உள்ளுணர்வு உரக்கக் கத்தியது.

“அங்க கன் ஷுட் நடந்துச்சு சொன்னாங்க..?”

“ம்ம்ம்ம்..நா வெளில வந்தப்றம் தான்..அது மட்டுல்ல ப்ரியா..நா அங்க பாத்துட்டு நீ இல்லன்னு பதறிட்டு வரும் போது யார் மேலயோ காபிய வேற தட்டி விட்டுட்டேன்..யாருன்னு தெரில..பதட்டத்துல சரியா மன்னிப்பு கேக்கவும் முடில..அவருக்கு காயமாகிருச்சானும் தெரில..காபினா சூடா இருந்துருக்கும்ல..தோ இவ ஸ்கூட்டி விழுந்தப்பவும் பக்கத்துல வந்த ரெண்டு பேர் சேந்து விழுந்துருக்காங்க..அவங்களுக்கும் காயம்..
நாங்க ரெண்டு பேர் உனக்கு தெரிஞ்சவங்க..ஆனா இவங்க மூணு பேருக்கு நீ யாருனே தெரியாது..அவங்களுக்கும் கஷ்டம் ஆகிருச்சுல”
என்றவளுக்கு குரல் கம்ம தண்ணீரை எடுத்துப் பருகிக் கொண்டாள்.

மித்ரனின் மனம் கத்திக் கூப்பாடு போட்டது,
தன் கணிப்பு சரியென.
அவன் விழிகளில் ஒரு வித துள்ளல் ஏறியிருந்தது.

தொடரும்.

🖋️அதி…!
2023.04.28

Advertisement