Advertisement

*மௌனமாய்…*

*அத்தியாயம் 06*

நேரம் இரவு பத்தரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
தன் அறையில் மூலையில் இருந்த கூடை ஊஞ்சலில் கால்களை மடக்கி குவிந்து அமர்ந்து இருந்தாள்,
மகா.

இரவு விளக்கு மட்டும் அறையில் ஒளிர்ந்து கொண்டிருக்க
மெதுவாக ஊஞ்சல் அசைந்து கொண்டிருந்தது.

மனம் அலையடித்துக் கொண்டிருந்தது,
அவளுக்கு.

நேற்றைய தினம் போல்..
இன்றும்…!

எத்தனை பிரயத்தனங்கள் செய்தாலும் அவளின் தனிமையின் போது மனதில் மித்ரனை பற்றிய எண்ணங்கள் வந்து நிற்பதை தவிர்க்க முடிவதில்லை.

ஏன் இப்படி இருக்கிறான்…?
ஏன் சிரிக்க மறுக்கிறான்..?
என்னவாம்..?
கொஞ்சம் மாற முயன்றால் என்ன நடந்திடுமாம்..?
விடை தெரியா பல வினாக்கள் மனதில் தோன்றிட அதை அப்படியே அவள் விழிகளும் பிரதிபலித்தது.

அதிலும் தன்னைக் கண்டதும் அவன் கூரிய கருவிழிகளில் மின்னிய சிறு எரிச்சல் தப்பவில்லை அவள் பார்வையின் ஸ்பரிசத்தில் இருந்து.

அதை,
நினைக்க ஏனோ மனம் கனப்பது போல்.

இத்தனை நாள் இப்படி இல்லையே…!
வெறுப்பை உமிழும் அவன் பார்வையோடு
அவனிடம் வாங்காத வசுவுகளா..?
அப்போதெல்லாம் புன்னகையுடன் கடந்து விடுவது தானே,
அவள் வழக்கம்.

இப்போது மட்டும் ஏன்..?
மௌனமான அவள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை,
அவள் மனம்..!

கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.

“யென்னோட பையனுக்கு வாய் பேச மூடியாதுன்ற ஒரே காரணத்துக்காக தான் உன்ன கட்டி வக்கிறேன்…
இல்லன்னா  உன்ன வைஷ்ணவியோட ப்ரென்டா கூட இந்த வீட்டுக்கு வர விட்ருக்க மாட்டேன்..”
அவன் தந்தை கூறியது,
அவள் காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.

சரி தானே..?
அவர் சொல்வதும் சரிதானே..?
அவனுக்கும் அவளுக்கும் எல்லாவற்றையும் சேர்த்து இந்த அந்தஸ்து பேதமும் அதிகம்
வித்தியாசப் பட்டது தானே…?

இருவரும் எதிரெதிர் துருவங்கள்.
எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்த்துக் கொள்ளும் என்று சொல்வார்கள்.

ஆனால்,
அவள் விடயத்திற்கு வரும் போது அந்த கொள்கைப் பிழையாகிப் போவதாய் நினைத்தாள் அவள்..!

எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக் கொள்ளும் என்பது கொள்கை அல்ல..
விதி என்பதை அவளுக்கு யார் தான் புரிய வைப்பது…?

விஷ்வமித்ரன் அதற்கு அதிகம் முயற்சிக்க வேண்டும் போலும்.

அவளுக்கு இன்னும் ஒரு சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்தது.

அவன் எப்படி தன்னை திருமணம் செய்ய சம்மதித்தான் என்பது..!
வைஷ்ணவியிடம் கேட்டுப் பார்த்தாள்.
அவள் பதில் சொன்னால் தானே.

இன்னும்,
அதற்கு பதில் கிடைக்கவில்லையே.

அவன் நினைவில் அவள் உழன்று கொண்டிருக்க..
மித்ரனோ அவனின் அலைபேசியை  பார்த்துக் கொண்டிருந்தான்,
நொடிக்கொரு தடவை.

அவன் பத்தரை மணியை தாண்டி விழித்துக் கிடப்பதெல்லாம் அரிது.
ஏனோ,
இன்று மனமும் உடலும் உறக்கத்தை ஏற்கவில்லை.

அந்த எண்ணிடம் இருந்து மீண்டுமொரு அழைப்பை அவன் மனம் எதிர்ப்பார்க்கிறது என்பது அவனுக்கு புரிந்தது.

ஆனால்,
ஏன்…?
அதை ஆராய அவன் முற்படவில்லை.

அவன் எதிர்ப்பார்ப்பு மறுமுனைக்கு புரிந்ததோ…
அவன் அலைபேசி ஒலித்தது.
பதட்டத்துடன் ஒரு வித எதிர்ப்பார்ப்புடனும் அலைபேசியை கைகளில் எடுக்க அவன் கண்களில் ஒரு வித மின்னல்.

அந்த இலக்கம் தான்.
அவன் எதிர்ப்பார்ப்பு பொய்யாகவில்லை.

ஓரிரு நொடி தன்னை சமப்படுத்த எடுத்துக் கொண்டு அழைப்பை ஏற்றான்.
விரல்களில் இழையோடியது,
மெல்லிய நடுக்கமொன்று.

அவன் அழைப்பை ஏற்ற கணம் மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் அழைப்பெடுத்தான்,
பதட்டத்துடன்.

அலைபேசியில் ஒளிர்ந்த தோழனின் எண்ணை சிறு புன்னகையுடனும் அதீத வியப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தான்,
அஜய்.

திவ்யா தோழி சொன்னதை அப்படியே இவனிடம் எத்தி வைத்திருக்க இவன் தான்,
நம்பவில்லை.

மகாவின் சிம்கார்டை கழற்றி எடுத்து தன் அலைபேசியில் போட்டு தோழனுக்கு அழைப்பெடுத்து இருந்தான்,
தோழனை சோதிக்க.
ஆனால்,
தோழன் மீண்டும்
அழைப்பான் என்ற நம்பிக்க அவனுக்கு துளிகூட இருக்கவில்லை.

நான்கு முறை அடித்தோய்ந்தது,
அலைபேசி.
மித்ரனும் அதன் பிறகு முயலவில்லை.
இரவு நேரம் அல்லவா..?
ஒரு வேளை மறுமுனையில் ஒரு பெண் என்றால் அந்தக் கலக்கம் தான்.

அஜய்யோ இங்கு,
துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.
“யெஸ்..யெஸ்.. யெஸ்..”அவன் இதழ்கள் மெல்ல இசைந்து கொண்டிருந்தது.

“டேய் விஷ்வா..
அவள புடிக்காது…அவ நம்பர மட்டும் புடிக்குதா..?
இனி உன்ன காதல் வலைல விழ வக்கிறது யென்னோட பொறுப்பு” மனதில் வீரசபதம் எடுத்துக் கொண்டவன்,
உறங்கிப் போனான் சிறு புன்னகை இதழ்களில் உறைந்திருக்கவே.

            ●●●●●●

அந்த ஆள் அரவமற்ற பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது,
அந்த வாகனம்.

கண்ணாடிகள் மூடியிருக்க ஓட்டுனர் இருக்கையில் கண்மூடி சாய்ந்து இருந்தான்,
அவன்.

இருக்கையின் மேல் விளிம்பை பற்றிக் கொண்டிருந்த வலது கையில் இருந்து குருதித் துளிகள் வழிந்து கொண்டிருந்தன.

இருக்கையின் மேல் பகுதியில் சில துளிகள் உறைந்து கரையை பூசிக் கிடந்தது.

அவன் மனமோ,
தகித்துக் கொண்டிருந்தது.

எப்போதும் போல் தன் இயலாமையால் உண்டாகிடும் கோபம் இம்முறை சற்றே அதிகமாய்.
தன்னையே காயப்படுத்திக் கொள்ளும் அளவில்.

மூடிய விழிகளில் திரையை தொட்டுக் கொண்டு நகர்ந்து வண்ணம் இருந்த கருமணிகள் அவன் மனதின் அலைப்புறுதலை அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

“விஷ்வா..இதுக்கு மட்டும் நீ ஒத்துக்கல..எங்க கூட பேச வராத..இவ்ளோ நாள் உன்னோட இஷ்டத்துக்கு விட்டு வச்சது தப்பா போச்சு..
அதுக்கப்றம் உன் இஷ்டம்..”
என்றும் தன்னை கண்டிக்கா அண்ணன்மாரின் கட்டளை இன்று அழுத்தமாகவே ஒலிக்க அவனால் மீறி எதையும் செய்யவில்லை.

அடித்துச் சொன்னால் கூட மறுத்து தள்ளலாம்..
இப்படி அணைத்து அன்பாய் சொல்லும் போது மீறிட இயலாதே.

“ஒரே ஒரு மாசம் தான்டா..அந்த பொண்ணு கூட ப்ரெண்ட்லியா பழகி பாரு..அதுக்கப்றம் நீ வேணாம்னு சொன்னா கண்டிப்பா உன்ன போர்ஸ் பண்ண மாட்டேன்..ப்ளீஸ்டா..”
இளைய அண்ணன் அருள் சொன்னது இன்னும் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

ஆனால்,
அவன் மனம் தான் அத்தனை எளிதில் இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுக்க மறுக்கிறதே…
அவனும் என்ன தான் செய்ய..?

அலைபேசியில் திடுமென சிறு சத்தம்.

“மச்சான்..பிக் அப் பண்ணிக்க வந்துருடா..ப்ளீஸ்..”
அஜய்யிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருக்க பெரிய மூச்சொன்றை இழுத்து தன்னை சமப்படுத்திக் கொண்டான்.

மனதின் சஞ்சலத்தை யோசித்திட கடமை இடம் கொடுக்கவில்லை.
என்றுமில்லா வேகத்துடன் அவனது கார் சீறிப் பாய்ந்தது,
அந்த வீதி வழியே.

திவ்யாவின் வீட்டின் நுழைவாயில் அருகே வந்தாள்,
மகா.

உள்ளிருந்த காவலாளியே எட்டிப் பார்த்து விட்டு புன்னகைக்க..
திறந்து கொண்டன,
நுழைவாயிற் கதவுகள்.

“யென்ன மகா பாப்பா நல்லாருக்கியா…?”

“அது யென்னமோ இருக்கேன் பாஸ்..நீங்க எப்டி..?”

“ரொம்ப நல்லா இருக்கேன் பாப்பா…”

“ஆமா பாஸ்..நேத்து யென்ன ஆளயே காணோம்..?”

“அதுவா..நேத்து கனகாவோட கோயில் போயிருந்தேன் பாப்பா..”

“காதுல இருக்கும் ஜவ்வு..ஹாப் சென்ட்சரி அடிச்சும் குறையல்லபா உங்க லவ்வு..நடத்துங்க நடத்துங்க..”

“பாப்பாஆஆ..”

“யென்ன பாஸ்..”

“நீ இன்னும் இந்த பழக்கத்த விடலியா..?”

“யேன் பாஸ்..ரொம்ப கேவலமா இருக்கா..?”

“பாப்பா..அத நா சொல்லியா தெர்யனும்..”

“சரி சரி பாஸ்..கொஞ்சம் சிரிச்சு விடுங்க..அப்போ தா யென் மனசு கொஞ்சம் நிம்மதியாகும்..
இல்லன்னா கஷ்டப்பட்டு பர்போம் பண்ணியும் பதக்கம் கெடக்கலனு மனசு கவலப்படும்ல..”
அவள் புன்னகையுடன் கேட்க அவளின் பாவனையில் சிரித்து விட்டார்,
அவர்.

“வர வர உன்னோட அட்டகாசம் தாங்கல பாப்பா..”

“யென்ன பண்றது பாஸ்..நானும் யெவ்ளோ முயற்சி பண்றேன்..விட முடியலியே..
திட்டு வாங்கினாலும் வாய் மட்டும் அடங்கல்லா பா..
வெட்டி விட்டாலும் பல்லி வாலா திரும்ப மொளச்சிக்கிது..நானும் யென்ன தான் பண்ண..?”
ஒரு வித பெருமூச்சுடன் அவள் கூறி முடிக்க..
சிரிப்பில் அவர் விழியோரம் துளிர்த்திருந்தது,
சிறு நீர்த்துளியொன்று.

“உன் கூட பேசனாலே சிரிக்க வச்சர்ர பாப்பா..”

“அதான் மகாஆஆஆஆ..”
என்று கூறி சுடிதார்க் காலரை தூக்கி விட்ட படி ஒற்றைக் கண் அடித்தாள்,
பெண்.

“பாஆஆஆஸ்..”

“யென்ன பாப்பா..”

“கோயில் போனீங்கல்ல..யெனக்கு வேண்டிகிட்டீங்களா..?”

“உனக்கு வேண்டிக்காம இருப்பேனா பாப்பா..நீ சொல்றது மாதிரியே நீ வேண்டுறது யெல்லாம் நடக்கனும்னு வேண்டிகிட்டேன்..”
என்க,
மென் புன்னகையொன்று படர்ந்தது,
அவள் இதழோரம்.

“சரி பாஸ்..டைமாயிருச்சு..நா அப்றமா பேசறேன்..”

“சரி பாப்பா..”

“பொய்ட்டு வர்ரேன் பாஸ்..”
என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாலும் அவள் சிந்தனையோ அவரின் மகள் சிவஸ்ரீயையே சுற்றி வந்தது.

மனதில் ஒரு வித சிந்தனையுடன் அவள் நடக்க ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மித்ரனின் கார் அவள் சிந்தையில் பதியவில்லை,
அத்தனை திருத்தமாய்.

தன் எண்ணத்தில் உழன்ற வண்ணம் அவள் நடை நீண்ட கொண்டு இருக்க வாயிற் கதவின் அருகில் கோபத்தின் உச்சத்தில் நின்று கொண்டு இருந்தான்,
மித்ரன்.

“த்ரீ மினிட்ஸ் லேட்..யென்ன பண்றானோ தெரில..இடியட்..”
தோழனை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்,
மௌனமாக.

ஏற்கனவே,
அவன் மனம் ஒரு நிலையில் இல்லாதிருக்க  இப்போது தோழனின் சிறு பிழையும் அதிகப்படியான எரிச்சலை தந்தது.

மனநிலை தெளிவில்லாது இருக்கையில் புள்ளியும் பூதாகரமாய் தெரிவது மனித  இயல்பு தானே.
அதற்கு ஒன்றும் விதிவிலக்கு இல்லை,
அவன்.

இங்கு மகாவோ,
சுற்றம் கவனிக்காமல் வாயிலுக்கு வர அங்கு நின்றிருந்தவ மித்ரனின் மித்ரனின் முதுகில் மோதப் பார்த்து சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டு நகர்ந்தாள், பின்னே.

பின்னே நகர்ந்த கால்கள் பின்னலிட்டு சதி செய்ய சமநிலையின்றி கீழே விழப்போனவள் தவறுதலாய் அவன் கையை பிடித்த மறுநொடி கனல் விழிகளுடன் அவன் திரும்ப…
அவன் திரும்பிய வேகத்திலும் நின்றிருந்தவன் மித்ரன் என புரிந்ததாலும் சட்டென கையை விட்டு கீழே சரிந்திருந்தாள்,
அவள்…!

தன்னிலிருந்து ஈரடி முன்னே கிடந்தவளை கண்டதும்,
அத்தனை கோபம் அவனுக்கு.

அவன் பார்வையில் கனல் நிரம்பி வழிய..
அவளோ,
அவனை பார்த்திருந்தாள்,
சிறு மிரட்சியுடன்.

அவனோ,
அவள் விழிகளை பார்த்த வண்ணமே அவள் பிடித்ததால் கசங்கிய தன் சட்டைக் கையை நீவி விட்டுக் கொண்டான்,
எரிச்சல் மோலோங்கிய பாவனையோடு.

சரி செய்து முடித்தவன்,
“புல்ஷிட்..”நிதானமாய் இதழசைத்து விட்டு நடந்தான்,
தன் காரை நோக்கி.

அப்போது தான்,
மூச்சு விட முடிந்தது பெண்ணுக்கு.

“யப்பா..ஒரு சென்ஸ் கூட இல்லியா இந்த பர்பெக்டுக்கு..விழுந்தவள பாத்துட்டு அப்டியே போகுது..”
மனதுக்குள் நினைத்துக் கொண்டே எழுந்தமரவே ஓடி வந்தாள்,
திவ்யா.

தோழியின் நிலை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை விட அவள் முகத்தில் நிறைய பதட்டம்.

“மகா..யென்ன ஆச்சுடி..”

“பேலன்ஸ் தவறி போச்சு…கைய குடுடி..கேள்வி கேக்காம..”

“இந்த நெலமைல கூட வாய் அடங்குதா பாரு..

“………”

சரி..சரி கோச்சிக்காத..”
என்றபடி எழுப்பி விட்டாள்,
தோழியை.

கால்களில் சிறு வலியை உணர முடிந்தது,
அவளால்.

தோழியின் தோள்களில் கையைபோட்ட படி எத்தி எத்தி நடந்தாள்.
வலது காலில் சற்றே கணுக்காலுக்கு கீழே சற்று  தகை பிசகி இருப்பது போன்றதோர் உணர்வு.

ஹாலில் வந்து காலை நீட்டி சோபாவில் அமர்நதவளின்,
அருகில் திவ்யா வந்து நின்றாள்,
ஏதோ மருந்தோடு.

“மகா..யென்ன பண்ணுதுடி..”

“கணுக்காலுக்கு மேல நல்லா அடிபட்டுச்சு..அந்த க்ரீம  பூசினா சரியாய்டும்..குடு நா பூசிக்கிறேன்..”
என்றவளை முறைத்து விட்டு மருந்தை பூசி விட்டாள்,
திவ்யா.

தோழியின் அக்கறையில் என்றும் போல் இன்றும் மனதிற்குள் சிறு தூறல் அவள் மனதில்.

அவளோ,
காலை நீட்டிய வண்ணம் அம்ர்ந்திருக்க மாடியில் இருந்து கீழை இறங்கி வந்தான்,
அஜய்.

மெல்லிய கலக்கம்
அவன் முகத்தில்.

அப்போது தான்,
மகா வீழ்ந்தாள் அவனின் பார்வை வீச்சில்.

“ஹேய் மகா..யென்னடி ஆச்சு..?”
பதட்டம் தாங்கிய விழிகளுடன் அவன் கேட்க அவனை முறைத்தாள்,
மகா.

“நொன்ன ஆச்சு..யெரும மாடு..யெதுக்குடா யென்னோட சிம்ம திருடுன..பிசாசு..அதயெடுக்க வந்ததால தான் இப்டி ஆச்சு..”
என்றாள்,
நொடித்துக் கொண்டே.

“ஐயோயோ..பிசாசு கண்டுபிடிச்சுட்டாளே..சரி சரி..சமாளிப்போம்..”

“டேய்ய்ய்ய்..குட்ரா..?”

“யெந்த சிம் கார்ட மகா சொல்ற..நா யெதயும் எடுக்கல்லடி..”

“ஆமா..நீ எடுக்கல..உன் கை எடுத்துருக்கும்..குட்ரா..”

“நெஜமாடி..”

“பொய் சொல்லாதடா..ஏற்கனவே கால் வேற வலிக்கிது..அண்ணன்னு பாக்க மாட்டேன்..
அப்புறம் அப்புற அப்புல அப்புக்கே போயிருவ..”

“உண்மயா தான்டி..”

“ஆமா..சிம் கார்டு உன்கிட்ட இல்ல பாரு..அதான் விடியக் காலைல போன் பண்ணதும் அட்டன்ட் எழிலு..எழிலு..ன்னு பேசனியே..அப்றம் என்ன..?”

“டேய் யெரும மாடு..ஒன்ன கூட ஒழுங்கா பண்ண மாட்டியா..பக்கிப் பயலே..”
தன்னையோ திட்டிக் கொண்டவன் அசடு வழிய சிரித்து வைத்தான்,
அவளைப் பார்த்து.

அவளோ அவனை உறுத்து விழிக்க..
“சாரி” என்று பவ்யமாக சொல்லி சிம்கார்டை கழட்டி அவள் கையில் கொடுத்து விட்டு வெளியே ஓடியே விட்டான்.

அவன் ஓடுவதை பார்த்து மெல்ல அவளிதழ்கள் விரியாமல் சிரித்துக் கொண்டன.

●●●●●●

இருளின் திரை துவங்க முற்பட்ட நேரம் அது.

“காலைல அவ கிட்ட மாட்டி..அவன் கிட்ட திட்டு வாங்கி..ஷப்பாஹ் முடியல..இந்த புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப தான் பண்றாங்க..”
சலிப்பான குரலில் அஜய் சொல்ல இதழ் விரித்து புன்னகைத்தான்,
அருள்…!
அருள் வேலவன்…!

விஷ்வமித்ரனின் இளைய அண்ணன்.

“அஜய்ணா..இதுக்கே இப்டீன்னா..மத்ததெல்லாம் யெப்டி சமாளிக்க போறீங்க..?”
கலாய்த்துக் கொண்டு அவனிடம் கேள்வி கேட்டாள்,
வைஷ்ணவி.

“அதான் வைஷ்ணவி தெரியல..இதுங்க ரெண்டயும் சேத்து வக்கும் போது நாக்கு தள்ளிரும் போல இருக்கே..”

“அது சரி தான் தம்பி..
ஒரு லுக் விட வக்கவே ரொம்ப பாடு பட வேண்டி இருக்கும் போல..”

“அது சரி தான் அண்ணி..ஜாடிக்கேத்த மூடி..
ஆனா,ஜாடி இறுக்கமா இருக்கும்..மூடி லூஸா சுத்தும்..”
மித்ரனையும் மகாவையும் நினைத்துச் சொன்னாள்,
அவள்.

அவளின் கூற்றில் சிரிப்பு பீரிட்டது,
காவ்யாவுக்கு.
அருள் வேலவனின் மனைவி அவள்.

“சரி..நாம விஷயத்துக்கு வர்லாம்..
யெல்லாரும் கேளுங்க..உங்கப்பா யெப்ப வர்ராருனா..?”

“அதுக்கு ஒரு த்ரீ மன்த்ஸ் ஆகும் அஜய்..”

“ம்ம்ம்ம்ம்..விஷ்வா கிட்ட யென்ன சொல்லி இருக்கீங்க..?”

“மகாகூட ப்ரெண்ட்லியா பழகி பாக்க சொல்லிருக்கோம் தம்பி..”

“அப்போ..மகா கிட்ட என்ன சொன்ன வைஷ்ணவி..?”

“யெங்கண்ணன் ரொம்ப டிப்ரஸ்டா இருக்காரு..அவர தேத்த வேண்டியது உன் கடம..நீ தான் அவர் மாத்தனும்னு சொன்னேன்..”

“ம்ம்ம்..அப்போ விஷ்வாக்கு மித்ரன் கூட மகா யெதுக்கு பேசறானு தெரியுந்தான..?”

“ஆமா அஜய்ணா…அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு..நீ தான் மாப்ளனு சொன்னா உன் கூட பேசாது…அதா உனக்கு கொஞ்சம் கவுன்சிலிங்க தேவப்படுதுனு சொல்லி இருக்கோம் அந்த பொண்ணு கிட்ட..
அப்டில்லனா பொண்ணு ஒத்துக்காது…நீயும் காட்டிக்காதனு சொல்லி எப்டியோ சம்மதம் வாங்கியாச்சு..”

“ஹப்பாடா..சரி அந்த பொண்ணு மகா தான்னு மித்ரனுக்கு..?”
அஜய் கேட்க இல்லை,
என்பதாய் தலை அசைத்தனர்,
மற்றையவர்.

தன்னாலே
தலையை தாங்கிக் கொண்டது,
அஜய்யின் கைகள்.

“அஜய் என்னாச்சு..?”

“ஆமா தம்பி என்னாச்சு..?”

“அஜய்ணா..?”

“இல்லபா..மகா தான் பொண்ணுன்னதும் விஷ்வா குதிப்பானே..அதானு யோசிக்கறேன்..”

“ஆமாண்ணா..சும்மாலே அவனுக்கு மகாவ கண்டா ஆகாது..”

“சரி சரி விடுங்க..யோசிப்போம்..யேதாவது வழி கெடக்காமலா போய்டப் போகுது..பாக்கலாம்..”
என்றவனின்,
நெற்றிதனில் சிந்தனை கோடுகள்.

அதே நேரம்,
அந்த வீதியின் ஓரத்தில் இருக்கும்
அந்த உணவகத்தில் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான்,
மித்ரன்.

ஒவ்வொரு மூலையிலும் தொங்கிக் கொண்டிருந்தன,
பூச்சாடிகள்.

கொண்டு வந்திருந்த காபி ஆறி இருந்தது.
அவன் ஒன்றும் குடிப்பதற்காக கொண்டு வரச் சொல்லவில்லையே.

ஆறிப் போன காபியை சுமந்து கொண்டு மேசை நுனியில் வீற்றிருந்தது,
அந்த காபி கோப்பை.

எதுவும் கேட்டிடாமல் அமர்ந்து இருக்க முடியாது என்பது தானே,
காரணம்.

கண்ணாடித் தடுப்பின் வழியே அவன் பார்வை வீதியை மேய்ந்து கொண்டிருந்தது.

இலக்கில்லாத பார்வை அவனது.

அவனோ,
தன் சிந்தனையில் லயித்திருக்க வேகவேகமாக நடந்து வந்தாள்,
ஒருத்தி.

அவள் நடையில் அத்தனை வேகம்.
உடல் மொழி பதற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

வேகவேகமாக வந்தவள் கவனமின்றி மேசையில் இடித்துக் கொள்ள ஓரமாய் நின்றிருந்தா காபி கோப்பை துள்ளி எழ..
அவன் மடியை நனைத்தது,
காபி.

“சாரி..சாரி..சார்..”
பதட்டத்துடன் சொல்லி விட்டு அவள் நகர்ந்து விட இவனுக்கு தான் அத்தனை கோபம்.

மிஸ்டர்.பெர்பெக்ட் ஆயிற்றே.

கோபத்துடன் திரும்பி ஏறிட்டான்,
அவளை

தொடரும்.

🖋️அதி…!
2023.04.27

Advertisement