“செவத்த தோளுக்கு மயங்கி உன்னை கட்டித் தொலைச்சிட்டேன், வெவரம் இல்லாத மழுமட்டைடி நீயி. ஏன் பொம்பள புள்ள சாதகம்தான் பேசுமா? ஆம்பளைங்ளுக்கு சாதகம் இல்லியா?” என தாத்தாவும் மனைவியை கடிந்து கொண்டார்.

“இங்குட்டே உட்கார்ந்து கெடக்காம வீட்டுக்கு போங்க, மாடு நல்லாருக்கு” என சொல்லி நகர்ந்தான் ருத்ரன்.

தென்னந்தோப்பில் பூச்சி அடித்திருந்த மரங்களுக்கு வைத்தியம் செய்யப் பட்டிருந்தது. திருமணத்திற்கு முதல் நாளில் இருந்தே அங்கு சென்று பார்த்திருக்கவில்லை ருத்ரன். கலையரசனை நம்ப இயலாது என்பதால் சித்தப்பாவிடம்தான் சொல்லியிருந்தான்.

அவருக்கு ஊர் வேலைகள் குவிந்து கிடந்தது. முந்தாநாள் பார்த்து வந்ததாக சொன்னார். இந்த மழையில் என்னவானதோ என ருத்ரனுக்கு கவலை.

 இரண்டு மூன்று நாட்களாக கோயில் விஷயமாக வசூலுக்கு செல்பவர்கள் கூட செல்லவில்லை, அதற்கு முந்தைய நாள் வசூலை இன்னும் இவனிடம் சேர்க்கவும் இல்லை. கோயில் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி முறையாக வசூல் பணத்தை செலுத்தி வருகிறான். கைப்பேசியில் கேட்பதை விட நேரில் பேசினால் சரியாக இருக்கும் என அவனுக்கு பட்டது.

ரெயின் கோட் போட்டுக் கொண்டு கிளம்பியவனை விடவில்லை வள்ளி.

“எத்தனை வேலையாள் அங்குட்டு இருக்காக, நீதான் எல்லாம் கட்டி சுமக்கிற மாதிரி நடக்காத. வீட்ல ரெஸ்ட்டா இருந்தாதான் தேவலையாவும். நேத்து நைட் டாக்டரை கூப்பிட போவணும்னா கலைய எழுப்பி போவ சொல்லிருக்கலாம்டா. புது மாப்ள நீதான் ஓடணுமா? இப்படி எல்லாத்துக்கும் ஓடி ஓடிதான் காய்ச்சல் வரவச்சுகிட்ட, அது போதலைன்னு அந்த புள்ளைக்கும் ஒட்ட வச்சிருக்க” என சத்தம் போட்டார் வள்ளி.

“சத்தம் போடாத ம்மா, நான் எங்குட்டும் போகல போதுமா?” என சொல்லி மாடிப் படிகளில் ஏறினான் ருத்ரன்.

ருத்ரன் தலை மறையவுமே, பெரிய மாமியார் முன் வந்து நின்றாள் பிறை.

துரையம்மா வந்திட்டா என மனதிற்குள் நொடித்தார் வள்ளி.

 “என்ன அத்தை, சாடையா எம்புருஷன் எந்த வேலையும் பார்க்கிறது இல்லைனு சொல்லி காட்டுறீங்களா? அவரை நம்பி யாரும் எந்த பொறுப்பும் கொடுக்கிறது இல்லை, அவரை உப்புக்கு சப்பாணியாட்டம்தான் வச்சிருக்காங்க. நீங்களும் சில்லறை வேலையெல்லாம் சொல்லி அவரை வேலைக்காரனாட்டம் நடத்துறீங்க. அவர் ஒன்னும் சின்ன புள்ள கிடையாது, அவருக்குன்னு குடும்பம் வந்திடுச்சு பார்த்து பேசுங்க, நடத்துங்க” என்றாள்.

“இந்தாடி இந்த சிலுப்புற பேச்செல்லாம் என்கிட்ட வேணாம். உன் மாமனார் வருவாரு, அவர்கிட்ட சொல்லிக்க இந்த சேதியெல்லாம். எம்புள்ளைக்கும் எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கிட்டு நோவணும்னு அவசியம் இல்லை” என்றார் வள்ளி.

என்ன பேசுவது என செங்கமலம் கையை பிசைந்து கொண்டிருக்க, “வரட்டும் மாமா, இன்னிக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சுக்கிறேன்” என சொல்லி அறைக்குள் நுழைந்து கொண்டாள் பிறை.

“நான் பார்க்க வளர்ந்தவ பேசுற பேச்சை பாரு, முளையிலேயே  இவ திமிர அடக்காம விட்ட உன்னைத்தான் சொல்லணும்!” என தன் ஓர்ப்படியை இடித்துக் கூறி விட்டு சென்றார் வள்ளி.

மாடிப் படியிலேயே நின்றிருந்த ருத்ரனுக்கு இந்த பேச்சுக்கள் எல்லாம் கேட்டிருத்தன. இறுகிய முகத்துடன்தான் மேலே சென்றான்.

மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள் சிவா.

“சாரல் அடிக்கலையா உனக்கு? திரும்ப முடியாம போக போவுது. உள்ளுக்கு வா” என்றான் ருத்ரன்.

“உங்க ஆத்தாவுக்கு என்னை பிடிக்கலைதானே?” எனக் கேட்டாள்.

“ஏன் உன்கிட்ட அப்படி சொல்லுச்சா?”

“அவங்க பேசுறது வச்சு எனக்கே தெரியுது”

“ஆத்தா பேசுறத எல்லாம் கணக்குல எடுக்காத, அம்மா சித்திலாம் நல்ல விதமா நடக்கிறாவோதானே? வேற ஏதும் மன சங்கட்டமானா என்கிட்ட சொல்லு”

“ம்ம்…  நல்லாதான் அக்கறையா பேசுறீங்க, அப்புறம் திடு திப்புனு கோவம் வந்திடுது உங்களுக்கு” என்றாள்.

“ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு கோவபடுறேனா என்ன?” எனக் கேட்டுக் கொண்டே நாடாக் கட்டிலில் படுத்து விட்டான்.

அவள் இன்னும் பின் பக்க வாயில் அருகிலேயே அமர்ந்திருக்க, “இந்தா புள்ள, நைட்டு மேலுக்கு முடியாம போனா என்னால ஆஸ்பத்திரிக்கு கூட அழைச்சிட்டு போக முடியுமா தெரியலை. உள்ள வாங்கிறேன்ல?” என அதட்டல் போட்டான்.

“எவ்ளோ நேரம் ரூமுக்குள்ளேயே இருக்க?” என சலித்துக் கொண்டேதான் எழுந்தாள்.

“சரி இப்படி வா, இங்குட்டு உட்கார்ந்து மழைய பாரு” என அவன் படுத்திருந்த கட்டிலை காட்டி கூறவும், சரிதான் என அவளும் அவன் பக்கத்திலேயே அமர்ந்து விட்டாள்.

பகலில் உறங்கி விட்டதால் ருத்ரனுக்கு உறக்கம் வரவில்லை, வெறுமனே கண்களை மூடித்தான் படுத்திருந்தான். மழையை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை எப்போது அவன் பக்கம் சென்றது என தெரியவில்லை.

அவன் திடீரென கண்களை திறக்க, வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டாள். அவனும் மழையை பார்க்க ஆரம்பித்தான்.

“உங்க நெத்தில தழும்பு இருக்கே, எப்படி வந்துச்சு?” என விசாரித்தாள்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஊர்த் திருவிழாவில் இரண்டு இளைஞர்களுக்கு நடந்த சண்டை பெரிதாகி விட்டது. அதை தடுக்கும் போது ஏற்பட்டு விட்டது என்றவன், “அதுதான் இந்த ஊர் காரியத்துல எல்லாம் கலந்துக்கிறதே இல்லை நான். ஐயாதான்  சும்மான்னு இல்லாம எல்லாத்தையும் மடில கட்டிக்கிட்டு என் தலையிலேயும் கட்டி விட்ருவாக” என்றான்.

“அமைதியா கூட சண்டையை விலக்கி விட்ருக்கலாம், நீங்களும் போய் சண்டை போட்ருப்பீங்க” என அவனையே குறை சொன்னாள்.

“எது பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்லுற” என கிண்டல் செய்தான்.

வெகு நாளைக்கு முன் கோயிலடியில் இரு சகோதரர்களுக்கு நடந்த சண்டையை இவன் பிரித்து விட்டதை நினைவு படுத்தியவள், “என் காலுல வந்து விழுந்துச்சு குடம்” என்றாள்.

“ம்ம்… வெத்து குடம் பட்டு பெரிய அடியாகி கால் கட்டு போட்டுக்கிட்டியாக்கும்?” எனக் கேட்டான்.

“ம்ஹூம், உங்களுக்குத்தான் கால் கட்டு போட்ருக்கு” என்றாள்.

“என்ன?”

“நம்ம கல்யாணத்தை சொன்னேன், இனிமே உங்க இஷ்டத்துக்கு திரிய முடியாது, பொறுப்பா குடும்பம் பண்ணனும்” என்றாள்.

“நான் பொறுப்பா இல்லையான்னு போவ போவ உனக்கு தெரியும். ஆனா கால்கட்டுக்கு அதில்ல அர்த்தம்”

“சும்மா சொல்லாதீங்க, அதான் அர்த்தம்”

“இல்லை புள்ள. கலிகட்டுதான் கால்கட்டா மாறிப் போச்சு.  கல்யாணம் கூட சரி கிடையாது, கலியாணம் அப்படி சொல்றதுதான் சரி, ‘கலி’ அப்படினா மகிழ்ச்சி ஆரவாரம்னு அர்த்தம். யாணம் யாண் நாண் கயிறு’னு அர்த்தம் ஆவுது. கட்டு அப்படினா பிணைப்பு பந்தம் அப்படி சொல்லலாம். கலிகட்டுன்னா ஊரார்