மகன் மருமகன் இருவருக்கும் காய்ச்சல் வந்ததில் வள்ளிக்கு மிகுந்த வருத்தம். வைதேகியையும் பிள்ளைகளையும் அழைத்து செல்ல வந்திருந்த கேசவனிடம் சொல்லி இருவரையும் மருத்துவமனை அழைத்து செல்லும் படி செய்திருந்தார்.
சாதாரண காய்ச்சல்தான், ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்து விட்டனர்.
வைதேகியின் புகுந்த வீட்டில் மருமகள் இல்லாமல் எல்லா வேளைகளும் செய்ய சிரம படுகிறாராம் அவளின் மாமியார். இதற்கு மேலும் மகளை இங்கு தங்க வைப்பது சரியாக இருக்காது என அவளை மருமகனுடன் அனுப்பி வைத்து விட்டார் வள்ளி.
தினம் ஒருமுறை கைபேசியில் பேசிக் கொண்டிருந்த மகள் இன்று அழைக்கவே இல்லையே என கவலையில் இருந்தார் சுடர். தானாக அழைக்கவும் பயம். அதை வைத்து மகளுக்கு அவள் கணவனுடன் பிரச்சனை ஆகி விடுமோ என நினைத்தார்.
மதியத்திற்கு மேல் கீழே வந்தாள் சிவரஞ்சனி. வள்ளி நலம் விசாரிக்க, “எனக்கு பரவாயில்லை அத்தை, அவுங்களுக்குத்தான் இன்னும் சரியாகல, இன்னும் தூங்குறாங்க” என்றாள்.
“உடம்போட சேர்த்து மனசும் அலண்டு போய் கெடக்குது அவனுக்கு. நாளைக்கு தெளிஞ்சிடுவான்” என்றார் வள்ளி.
தன் கைப்பேசி மழையில் நனைந்து வேலை செய்யவில்லை என பொய் உரைத்தவள், தன் பெற்றோரிடம் பேச அவரது கைப்பேசியை கேட்டாள்.
“பார்த்து கவனமா வச்சிக்கிறது இல்லையா?” எனக் கேட்டுக் கொண்டே தன் கைப்பேசியை மருமகளிடம் கொடுத்தார்.
தனிமையில் அம்மாவிடம் பேசிய சிவா, நேற்று இரவு கௌரிக்கு அழைப்பு சென்றது, ஆனால் பேச முடியவில்லை, அவள் நன்றாக இருக்கிறாளா என்பதை கேட்டு உறுதி செய்து கொள், எனக்கு கூப்பிட வேண்டாம் என்றும் சொல் என சொன்னாள்.
“அம்புட்டு சொல்லியும் அவளுக்கு பேசினியா நீயி?” என திட்ட ஆரம்பித்து விட்டார் சுடர்.
“போம்மா எனக்கே முடியலை, நீ வேற திட்டடாத” என்றாள் சிவா.
பக்கத்து தெருவிலேயே மகள் இருக்க, உடம்பு முடியாத சூழலிலும் ஒரு எட்டு பார்க்க முடியவில்லையே என ஆதங்கப் பட்டார் சுடர்.
“இங்க எந்த குறையும் இல்லை எனக்கு, உடம்பு சரியில்லைனு அப்பாகிட்ட சொல்லாத. திங்க கிழமை போஸ்ட் ஆஃபிஸ் போயிடுவேன், ரெண்டு பேரும் அங்க வாங்க” என சொல்லி, இன்னும் சில நிமிடங்கள் அம்மாவுக்கு ஆறுதலாக பேசி விட்டு வைத்தாள்.
கஞ்சி போட்டு வைத்திருந்தார் செங்கமலம். தான் பருகி விட்டு கணவனுக்கும் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள் சிவா. இரண்டு வாய் கஞ்சி பருகியவன் வாய் கசக்கிறது என சொல்லி வைத்து விட்டான்.
கீழே சென்று மாமியாரிடம் சென்றவள், “கை வைத்தியமா ஏதாவது செய்ய முடியாதா அத்தை? ரொம்ப ஓஞ்சி தெரியுறாங்க” என கவலையாக சொன்னாள்.
பக்கத்து ஊரில் நாட்டு மருந்து கடை ஒன்று இருக்கும். கலையரசனிடம் சொல்லி அங்கிருந்து ஆல்பக்கோடா வாங்கி வரச் செய்து மருமகளிடம் கொடுத்தார்.
படுத்துக் கிடந்தவ கணவனை எழுப்பி ஆல்பக்கோடா பழத்தை சாப்பிடக் கொடுத்தாள் சிவா. வாயின் கசப்பு தன்மையை அது கொஞ்சம் மாற்ற, “இதையும் மருந்து மாதிரி நெனச்சு சாப்பிட்ருங்க” என சொல்லி கஞ்சியை எடுத்தாள்.
குளிரான கால நிலையால் அது ஆறிப் போயிருந்தது. சூடு செய்ய மீண்டும் கீழே போனாள்.
“கொடு அதையே, எத்தன தடவ ஏறி இறங்குவ?” என்றான்.
“சூடா இருந்தாதான் வாய்க்கு ஒனக்கையா இருக்கும்” என சொல்லி சென்று விட்டாள்.
உனக்கும்தான் உடம்புக்கு சுகமில்லை, ஏன் அலைகிறாய் என வள்ளியுமே அவளை கடிந்து கொண்டார்.
“மாத்திரை போட்டதுமே நல்லாகிட்டேன் அத்தை” என்றவள் அவளே கஞ்சியை சூடு செய்து கொண்டாள்.
நல்ல நாளில் கூட கணவனுக்காக என பிறை எதையும் செய்தது கிடையாது, இதில் காதல் திருமணம் வேறு, கலையும் பொறுப்பில்லை என்றாலும் மனைவி நினைத்தால் அன்பால் மாற்ற முடியாதா? நேற்று வாக்கப் பட்டு வந்தவள் கணவனுக்கு காய்ச்சல் எனவும் என்ன ஓட்டம் ஓடுகிறாள் என சிவாவை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டார் செங்கமலம்.
சாப்பிட முடியவில்லை என்றாலும் தன்னை சாப்பிட வைக்க தன் மனைவி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக மல்லுகட்டி முழு காஞ்சியயும் குடித்து விட்டான் ருத்ரன். வயிற்றுக்கு உணவு செல்லவும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான். மாத்திரையெல்லாம் போட்டுக் கொண்டவன் மாட்டை பார்த்து வருகிறேன் என கிளம்ப, அவளும் அவனுடன் கிளம்பினாள்.
“நீ குடிச்ச கஞ்சி எப்பவோ செமிச்சு போயிருக்கும் புள்ள, சொன்னாலும் கேட்டுக்கிட மாட்ட, சரி வா” என சொல்லி அவளையும் அழைத்து சென்றான். ஆளுக்கொரு குடை வைத்துக்கொண்டு மழையில் நடந்தார்கள்.
தாத்தாவும் பாட்டியும் காலையிலிருந்தே மாட்டுக் கொட்டகையில்தான் இருந்தனர். பேரனை கண்டதும் நலம் விசாரித்தனர்.
சிவாவை பார்த்த பாட்டி, “இந்தாடி… உன் சாதகம் இருந்தா வாங்கு, காலடி வச்ச உடனே மாடும் படுத்திடுச்சு, கல்லு மாதிரி இருந்த எம் பேரனுக்கும் முடியாம போச்சுது” என்றார்.
“நீ வீட்டுக்கு போ புள்ள” என சிவாவிடம் அதட்டலாக சொன்னான் ருத்ரன். அவளும் பாட்டிக்கு எந்த பதிலும் சொல்லாமல் வீடு நோக்கி சென்றாள்.
“அவளை இப்படி ஏதாவது பேசிட்டிருந்தா கெட்ட கோவம் வரும் ஆத்தா” என பாட்டியிடம் அவன் கடுமையான தொனியில் சொல்வது சிவாவின் காதில் நன்றாகவே விழுந்தது.
“அதென்னடா இப்படி பேசுற, நான் சாதாரணமாதான் கேட்டேன், அவ கட்டம் சரியில்லன்னா பரிகாரம் ஏதாச்சும் பண்ணனுமா இல்லியா? என்னை விட அவ முக்கியமா போயிட்டாளா உனக்கு?” என பேரனை சாடினார் பாட்டி.
“உனக்கென்ன தாத்தா இருக்காரு, போதாததுக்கு மருமக மகன்னு எல்லாரையும் ஆட்டி வச்சிட்டு இருக்க. அவ என்னை நம்பி வந்தவ, என் பேச்சை கேட்டுகிட்டு பொறந்த வீட்டையும் விட்டுட்டு இருக்கா. அவ ஏதும் தப்பு செஞ்சா என்கிட்ட சொல்லு, நான் கேட்டுப்பேன், வேற யாரும் குதர்க்கமா அவகிட்ட பேசக்கூடாது சொல்லிப்புட்டேன்!” என்றான்.
“உம்பொஞ்சாதிகிட்ட நான் பேச்சே வச்சுக்கல போதுமா?” நொடித்தார் பாட்டி.
“அது உன் இஷ்டம் ஆத்தா” என்றவன் மாட்டின் பக்கம் சென்று விட்டான்.