“ டாக்டரை கூட்டிட்டு வந்திடுறேன், இங்குட்டு யாருக்கும் சொல்ல வேணாம், எல்லார் உறக்கமும் கெட்டு போவும், யார் எந்திரிச்சும் ஆவ போறதும் ஏதுமில்லை” என்றான்.
“டாக்டர் வீடு தூரமா?” கவலையாக கேட்டாள்.
“அவ்ளோ தூரம் இல்லதான், வயசானவர் வேற, கார் எடுத்திட்டு போனாதான் வருவாரு. கதவை சாத்திக்க” என்றவன் கார் சாவியோடு கிளம்பி விட்டான்.
பால்கனியில் நின்று கார் செல்வதை பார்த்திருந்தவளுக்கு பயமாக இருந்தது. பத்து நிமிடங்களில் மாடு மிகவும் சோர்ந்து விட்டதாகவும் தனக்கு பயமாக இருப்பதாகவும் வந்து சொன்னான் மாரியப்பன். சொக்கனுக்கு பிறகு இவன்தான் தற்காலிகமாக மாடுகளை பார்க்கிறான்.
ருத்ரனுக்கு அறிவிக்க கைப்பேசி அவளிடம் இல்லை, மாரியப்பனிடமும் இல்லை.
எப்படியும் மருத்துவரை அழைத்து வரப் போகிறார், வீட்டினரின் கைப்பேசி எடுத்து பேசினாலும் என்ன ஆக போகிறது, கார் ஓட்டிக் கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தவள் தானே மாட்டுக் கொட்டகை வருவதாக சொன்னாள்.
துப்பட்டா ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டவள் டார்ச் லைட் குடை என எடுத்துக் கொண்டு கொண்டு கொட்டகைக்கு சென்றாள்.
உண்மைதான், படுத்திருந்த மாடு மூச்சு விடுவது மட்டுமே தெரிந்தது. ருத்ரனின் கார் வருகிறதா என பார்த்த வண்ணம் மாட்டின் அருகில் அமர்ந்து அதற்கு தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள்.
அவளது அனுமதி இன்றியே அவளின் உள்ளம் சற்று முன் நடந்ததை பற்றியே அசை போட்டது.
“இந்த மாடுகள எல்லாம் அந்த சொக்கன் பயதான் கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டிருந்தான். உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிட்டு ஓடிப் போயிட்டான், எப்படித்தான் மனசு வந்துச்சோ? என்ன குறை இங்குட்டு அவனுக்கு? வீட்ல ஒரு ஆள் கணக்கா அப்படி வச்சிருந்தாவோ!” என வாய்க்கு வந்ததை பேசினான் மாரியப்பன்.
இவனுக்கே இவ்வளவு ஆத்திரம் என்றால் ருத்ரனுக்கு எந்த அளவு இருக்கும் என நினைத்துக்கொண்டாள்.
தனக்குத்தான் அக்கா என்ற பாசம் அக்கறை எல்லாம், அவனுக்கு என்ன வந்தது அவமான படுத்தி சென்றவள் என்ற வெறுப்பும் கோவமும்தானே நிறைந்து கிடக்கும்?
அவனது கோவத்தை நான்தான் தூண்டி விட்டேனோ?
மழை அவளை பயமுறுத்த, என்னவோ அக்காவின் நினைப்பும் அலைக்கழித்து விட்டது. அப்போதும் அவன் இல்லாத நேரமாக பார்த்துதான் அக்காவிடம் பேச முயன்றாள், இப்படி அவன் முன்னிலையிலேயே அக்காவிடமிருந்து அழைப்பு வந்து மாட்டிக்கொள்வோம் என எதிர்பார்த்திருக்கவில்லை.
அதற்காக அப்படி மூர்க்கமாக நடந்து கொள்வாரா? மூக்கின் மேலேயே கோவத்தை சுமந்து கொண்டிருப்பவர் இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால்தான் ஆச்சர்யம், எனக்குன்னே வந்து நல்லா வாய்ச்சார்!
இந்த கோவமுனியுடன் எப்படி வாழப் போகிறோமோ? பத்தாயிரம் மதிப்புள்ள கைப்பேசி, வாங்கி ஆறு மாதங்கள்தான் இருக்கும், அதைப் போய் உடைத்து விட்டாரே! இவரு கோவத்துக்கான விலை ரொம்ப காஸ்டலிதான்! என மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.
மாட்டின் மூச்சு வேகம் குறைவது போலிருக்கவும் சிவாவுக்கு மிகுந்த பயம்.
“தம்பி எப்ப வருவாப்ளன்னு தெரியலையே. ஏதாச்சும்னா நீ வந்த நேரம்னு வேற சொல்லிடுவாகளே ஆயி” என்றான் மாரி.
மாரி பயமுறுதியத்தை விட தன் கண் முன்னால் ஒரு உயிர் போவதை சிவாவால் சகிக்க முடியவில்லை. “வெள்ளியில மாடு பொம்மை செஞ்சு காணிக்கை வைக்கிறேன் நாடியாத்தா, காப்பாத்தி கொடுத்திடும்மா” என வாய் விட்டு கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டாள்.
மாரியப்பனுக்கு நாற்பது வயதிருக்கும். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவன் உறக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தான்.
ருத்ரன் வர ஒரு மணி நேரமாகி விட்டது. சிவாவை கண்டவன், “நீயென்ன செய்ற இங்குட்டு?” எனக் கேட்டான்.
“மாரி அண்ணன் பயந்து போயிட்டார், அதான் துணைக்கு நான் வந்தேன்” என்றாள்.
“பயந்த ஆள் விடுற கொறட்டைய பார்த்தியா ருத்ரா?” என கிண்டல் செய்து கொண்டே அணிந்திருந்த ஸ்வெட்டரின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு மாட்டை கவனிக்க ஆரம்பித்தார் அந்த வயதான மருத்துவர்.
மாரியை எழுப்பி விட்டு மருத்துவர் கேட்டதை எல்லாம் எடுத்து வரச் செய்தான் ருத்ரன்.
மாட்டுக்கு வயிற்றுப் போக்கு மட்டுமில்லை, வலிப்பும் வருவதாக மருத்துவர் சொல்லவும் ருத்ரனும் பயந்து விட்டான்.
“நான்தான் சாதாரணமா எடுத்துக்கிட்டேனா டாக்டர்? தாத்தாவை அழைச்சிட்டு வந்து காட்டியிருக்கணும், அவருக்கு தெரிஞ்சிருக்கும்” என வருத்தப் பட்டான் ருத்ரன்.
“இல்லையில்லை, இப்பதான் ஃபிட்ஸ் வருது. காப்பாத்திடலாம் நான் எதுக்கு இருக்கேன்?” என்றார் மருத்துவர்.
“இவரு எப்பவுமே இப்படித்தான் ஒன்னுன்னா ஒம்போதும்பாரு” என முணு முணுத்துக் கொண்டான் மாரி.
மாட்டுக்கு சலைனில் மருந்து கலந்து போட்டு விட்டவர் அதை சிவாவை பிடித்துக்கொள்ள செய்தார். மருந்து செல்லும் நேரத்தில், என்ன படித்தாய், எப்படி வேலை கிடைத்தது என அவளிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த விசாரணை முடியவும் அஞ்சலகத்தில் என்ன திட்டங்கள் உள்ளன, எதில் நல்ல பலன் கிடைக்கும் என அடுத்தக் கட்ட விசாரணை.
‘ஒழுங்கா வைத்தியம் பார்ப்பாரா?’ என்ற சந்தேகத்தோடே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் சிவா.
சலைனை சிவாவிடமிருந்து தான் வாங்கி பிடித்துக்கொண்ட ருத்ரன், “டீ காபி ஏதாவது போட்டு எடுத்திட்டு வா, டாக்டருக்கு தூக்கம் வந்திடுச்சு போல, அதான் தூக்கத்தை விரட்ட வாய் ஓயாம பேசுறாரு” என்றான்.
“அட என்னப்பா வேலை நேரத்துல தூங்குவேனா?” எனக் கேட்டார் மருத்துவர்.
“உங்க கண்ண பார்த்தாலே தெரியுது, தூக்கம் வரலைன்னே வச்சுகிடுவோம். சூடா ஏதாவது சாப்பிட்டா தெம்பா வைத்தியம் செய்யலாம்ல?” என்றவன் சிவாவுக்கு கண் காட்ட, குடை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் அவள்.
இருந்த பாலில் தயிருக்கு உரை ஊற்றி விட்டார்கள் போலும். சுக்கு, மிளகு சேர்த்து கருப்பு காபி போட்டு வழங்கினாள் சிவா.
“கொட்டுற மழைக்கு இந்த கட்ட காபி இதமா இருக்குதும்மா” என சொல்லிக் கொண்டே கயிற்று கட்டிலில் அமர்ந்து விட்டார் மருத்துவர்.
மாடு இப்போது கண் திறந்திருந்தது. இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் மருந்து செலுத்த வேண்டும் என சொல்லி படுத்தே விட்டார் மருத்துவர். மூங்கில் தூணில் சாய்ந்த வண்ணம் உறங்கி விட்டான் மாரி.
மழையை பார்க்க நின்று காபி பருகிய ருத்ரனின் பார்வை அப்படியே சிவாவிடம் சென்றது.
“வீட்ல பால் இல்லையா என்ன?” எனக் கேட்டான்.
விவரம் சொன்னவள் அவனை நெருங்கி வந்து, “நல்ல டாக்டர்தானா இவர்? காப்பாத்திடுவாரா?” எனக் கேட்டாள்.
பின்னால் திரும்பி மருத்துவரின் காதில் இந்த பேச்சுக்கள் விழாதே என உறுதி செய்து கொண்டவன், “நம்ம பக்கம் இவரை விட்டா வேற டாக்டர் இல்லை, கைராசியானவர்தான் பார்ப்போம்” என்றான்.
தலையாட்டிக் கொண்டவள் மாட்டை கவலையாக பார்க்க, “நீ போய் தூங்கு” என்றான்.
“ரூம் போனா மட்டும் தூக்கம் வரவா போவுது? இது நினைப்பாவே இருக்கும், நானும் இங்கேயே இருக்கேனே” என அவள் சொல்லவும், சற்று முன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதில் அவள் மீது இரக்கம் ஏற்பட்டிருக்க அவளிஷ்டப்படி விட்டு விட்டான்.
அடுத்து மருந்து செலுத்திய மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து எழுப்பி விடு என சொல்லி உறங்க ஆரம்பித்து விட்டார்.
அமர்ந்து கொண்டு பால் கறக்கவென சின்ன முக்காலி ஒன்று எப்போதும் அங்கு கிடக்கும். அதில் சிவாவை அமர சொன்னவன் மாரியை போலவே இன்னொரு மூங்கிலில் சாய்ந்த வண்ணம் தரையில் அமர்ந்து விட்டான்.