தான் கௌரியிடம் பேச முனைந்ததில் ருத்ரனுக்கு கோவம் வந்ததை சிவரஞ்சனியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதற்காக இப்படி இருளில், கொட்டும் மழையில் நிறுத்தி வைத்ததை அவளால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
குளிரின் அளவு கூடிக் கொண்டே போக, ஈரத்திலேயே நின்று கொண்டிருந்ததில் அவளின் பாதங்கள் இரண்டும் நோக ஆரம்பித்திருந்தன.
எப்படி கொடுமை செய்கிறார், அப்படியென்ன கோவம், இப்படியொரு நிலையா தனக்கு என வருத்தமும் வேதனையுமாக நின்றிருந்தாள் சிவரஞ்சனி.
ஹாலில் நடந்து கொண்டிருந்தவனுக்கு இன்னும் கோவம் வடியவில்லை. இரண்டு முறை துரோகத்தை எதிர்கொண்டவனுக்கு தன் மனைவி துரோகியோடு பேச முயன்றாள் என்பதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதையெல்லாம் தள்ளி வைத்து விட்டான், தனக்கு இவள் மனைவி என்ற கண்ணோட்டம் மட்டுமே அவனிடம்.
ஊரார் என்ன பேசிக் கொள்கிறார்கள் என இவன் காதில் விழவில்லையே தவிர, என்னவெல்லாம் பேசுவார்கள் என்ற கணிப்பு இருந்தது. சிறு வயதிலிருந்து கடினமாக உழைக்கிறவன், ஊர் பிரச்சனையில் கூட தலையிட்டுக் கொள்ள மாட்டான், அவன் விரும்பியதெல்லாம் அமைதியான அழகான குடும்ப வாழ்க்கை.
இரண்டு முறை ஏமாந்து போய், அதிலிருந்து மீளும் முன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறான். பழைய புண் பச்சையாக இருக்க, புதிய வாழ்வு கண் முன் நிற்கிறது. பழையதை இன்னும் மனம் மறக்கவில்லை, புதியதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த மனம் முன்னேறவும் இல்லை.
இரண்டுக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இப்போது சிவாவின் செயல், சண்டையில் தோற்ற முரட்டு விலங்கை சீண்டி விட்டது போல இருக்க, கொட்டும் மழையில் அவளை நிறுத்தி விட்டான். ஆனாலும் ஆத்திரம் தீரவில்லை.
சொந்தங்களுக்காக தம்பியையும் அத்தை மகளையும் சகித்துக் கொண்டாகிற்று. ஆசைப்பட்ட பெண் அவனுக்கு கீழே வேலை பார்த்தவனுடன் ஓடிப் போயிருக்க, அவளுடன் என் மனைவி உறவாடுகிறாள் என்றால்… நினைத்த மாத்திரத்தில் கோவம் எரிமலையாக வெடிக்க வெளியே சென்றான்.
பலமான இடிச்சத்தமும் குளிரில் நடுங்கிக் கொண்டு சுவரில் சாய்ந்திருந்த சிவரஞ்சனியின் நிலையும் அவனை ஸ்தம்பிக்க வைத்தது.
ருத்ரனின் கோவத்தின் கொள்ளளவு அதிகம்தான். சிறு துளை போதும் எந்த வெள்ளத்தையும் வடிக்க, அதுபோல் அவள் பால் சுரந்த இரக்கம் அவனது கோவத்தை வடிய விட்டது.
அவனை கண்டு விட்டு முகம் திருப்பிக் கொண்டவளிடம் “உள்ளுக்கு வா” என்றான்.
அவனை சுள் என பார்த்தவள், “என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனா உங்கம்மாட்ட தெளிவா சொல்லியிருக்கலாம், அதை வுட்டுட்டு வம்படிக்கு கட்டிக்கிட்டு உங்க இஷ்டத்துக்கு போட்டு படுத்திவீங்களா?” என கோவமாக கேட்டாள்.
“கட்டின அன்னிக்கே உன்கிட்ட வேற எதையும் தெளிவா சொல்லலையா நான்?” அவனும் கேட்டான்.
“அவ என் அக்கா, ஒன்னா ஒரே வீட்ல வளர்ந்தவங்க, எப்படி இருக்கா என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இல்லையா?”
அவனே இறங்கினாலும் அவள் விடமாட்டாள் போல. கௌரியின் பேச்சே மிளகாய் தடவியது போல அவனை எரிச்சலடைய வைத்தது.
கால்களை தரையிலிருந்து எடுத்து வைத்து, எடுத்து வைத்து சிரம பட்டவளிடம் இன்னும் கடுமை காட்ட மனமில்லாமல், “உன்னை கட்டியிருக்கவனுக்கு அவமானத்தை தேடி தந்திட்டு போனவ அவ. நீ அவ கூட பேசக்கூடாதுன்னு முன்னாடியே உன்கிட்ட சொன்னேதானே?” எனக் கேட்டான்.
“நான் என் அக்கா கூட பேசினது தப்பு சரியெல்லாம் இருக்கட்டும், என்ன செஞ்சிருந்தாலும் இப்படி வெளில மழைல நிறுத்துவீங்களா? எந்த நிலைமைல என்னை வச்சிருக்கீங்க? உங்களுக்கு கோவம்னா திட்டுங்க, பேசாம இருங்க, அதை வுட்டுட்டு இப்படித்தான் துன்புறுத்துவீங்களா?” என அவள் கேட்கவும் என்ன சொல்வான்?
கோவத்தில்தான் அவன் ஒரு நிலையில் இருப்பதில்லையே.
அவனுக்கும் குளிர் உரைக்க, “உள்ளுக்கு வந்து பேசு” என்றான்.
இப்படியே நின்று கொண்டிருந்தால் கண்டிப்பாக உடம்புக்கு முடியாமல் போய் விடும் என்பதால் வேண்டா வெறுப்பாக உள்ளே வந்தாள். அவனிடம் பேச்சு வைத்துக்கொள்ளாமல் நேராக அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.
பயந்து போனவன் கதவை தட்டி, “ஏய் என்ன செய்ற, கதவ தொற, இந்தா உன்னைத்தான் கதவ தொற” என சத்தம் போட்டான்.
சில நிமிடங்கள் அவனை பயப்படுத்தி விட்டு பட்டென கதவை திறந்தவள், “எதுக்காக இப்படி சத்தம் போடுறீங்க? ஈரமான ட்ரெஸ் மாத்திட்டு இருந்தேன்” என்றாள்.
“அதை சொல்றதுக்கு என்ன?” என கடிந்தான்.
ஒன்றும் சொல்லாமல் அவனை கடந்து சென்றவள் குடை எடுத்துக் கொண்டு குளியறைக்கு போய் ஈரத் துணியை போட்டு விட்டு வந்தாள்.
பொறுப்பாக அறையில் படுக்கையை தட்டி போட்டு கனமான கம்பளி எடுத்து வைத்தான். கைகளை கட்டிக் கொண்டு அவள் முறைக்க, “எனக்கு புடிக்காதத செஞ்சா என்னால பொறுக்க முடியாது. என் சொல் பேச்சு கேட்டு இருக்கிறத விட்டுட்டு எதுக்கு என்னைய கோவ படுத்திப் பார்க்கிற?” எனக் கேட்டான்.
“என் சாரியெல்லாம் இப்படித்தான்” என்றவன் அவளை பிடித்து வலுகட்டாயமாக படுக்கையில் விட்டான். ஈரத்தில் நின்றிருந்ததில் அவளின் பாதங்கள் இரண்டும் வெளிறிப் போய் கிடந்தன. சில்லிட்டு போயிருந்த பாதங்களை சூடு பறக்க தேய்த்து விட்டான். அவள் கால்களை இழுக்க, அவளின் முகத்தை கடுமையாக பார்த்தான். என்னவோ செய் என விட்டு விட்டாள்.
தைலக் குப்பியை கையில் வாங்காமல், அவனை கண்டனமாக பார்த்தாள்.
“ஏன் நெத்திக்கும் தடவி வுடணுமா?” எனக் கேட்டான்.
“புள்ளைய கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறதுனு சொல்வாங்களே அதுவா இது?” எனக் கேட்டாள்.
“சேராத இடம் சேர்ந்தா துன்பம் வரத்தான் செய்யும்” என்றான்.
அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“இது சம்பந்தமா உன்கிட்ட நான் கோச்சுக்கிறது இதுதான் கடைசியா இருக்கணும். இனிமே இதே மாதிரி நிலைமையை உண்டாக்க மாட்டேன்னு நம்புறேன்” என்றான்.
அவள் உச்சு கொட்ட, “ரொம்ப முறுக்காம படுத்து தூங்கு. உன்னை கஷ்ட படுத்தணும்ங்கிறது இல்லை என் நெனப்பு, திரும்ப அப்படி செய்யக்கூடாது என்ன? படு படு” என்றான்.
அவனது முகத்தில் குற்ற உணர்வுக்கான எந்த அடையாளமும் இல்லை, துளி மன்னிப்பு பாவம் இல்லை, அட கீற்று சிரிப்பு கூட இல்லை. ‘சரியான கடுக்கா!’ என மனதிற்குள்ளேயே வசை பாடிக் கொண்டேதான் படுத்தாள்.
அவனும் படுக்க தயாராக, மீண்டும் மாடு அவதியுறுவதாக செய்தி சொன்னான் வேலையாள் மாரியப்பன். சிவாவும் எழுந்து வந்து விட்டாள்.
இதற்கு மேல் சும்மா இருக்க கூடாது என கருதிய ருத்ரன், உடனே கால்நடை மருத்துவருக்கு அழைத்து பேசினான்.
மாட்டின் பக்கத்திலேயே இரு என சொல்லி மாரியை அனுப்பி வைத்தவன் சட்டை அணிந்து தயாரானான்.
“எங்க கிளம்பிட்டீங்க?” கனத்து பெய்யும் மழையையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே கேட்டாள் சிவா.