சிவாவுக்கு சனிக்கிழமை கூட வேலை உண்டு, அதை சொன்னவள் “மூனு நாள் லீவ் போடணும் அத்தை” என்றாள்.
“அப்ப போட்ரு, அவன் கூட இருக்க சங்கட பட்டுக்கிட்டு இங்குட்டு வந்து கெடக்காத. எம்மவன்னு பெருமைக்கு சொல்லலை, அவன் நல்லவன், உன்னை தங்கமா பார்த்துப்பான். நீதான் அவனை உன் பக்கம் வளைச்சுக்கணும், அவன்கிட்ட போ” என்றார்.
மாமியார் மற்றும் நாத்தனாரின் கைப்பேசி எண்களை பெற்றுக் கொண்டுதான் மாடிக்கு சென்றாள்.
அறையில் சிவா கட்டி அவிழ்த்து போட்ட புடவைகள் ஓரோர் பக்கம் கிடந்தது, அதை அவளிடம் சுட்டிக் காட்டிய ருத்ரன், “இப்படி கன்னா பின்னான்னு போடாத, ஒழுங்கு பண்ணி வை” என்றான்.
“சாப்பிட லேட் ஆகிட்டுனு கூப்பிட்டாங்களா, அதான் அப்படியே போட்டுட்டு போயிட்டேன்” என சொல்லிக் கொண்டே ஒழுங்கு படுத்தினாள். பீரோவிலிருந்த பழைய கணக்கு நோட்டுக்களை எடுத்து தேவையானது தேவையில்லாதது என பிரித்து தனியாக கட்டிக் கொண்டிருந்தவன் ஏதும் சொல்லவில்லை.
“என் துணிகளை எங்க வச்சுக்ககட்டும்?” எனக் கேட்டாள்.
“ரூம்ல அலமாரியும் பீரோவும் இருக்கே, எங்க வசதியோ வச்சுக்க” அவளை பார்க்காமலே சொன்னான்.
“பெரிய மனசுதான், துணி வச்சுக்க இடம் கொடுத்திட்டார்” அவன் காதில் விழ வேண்டும் என்றேதான் முணு முணுத்தாள்.
அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன் தேவையில்லாத நோட்டுக்களை ஹாலில் உள்ள மேலடுக்கு அலமாரி ராக்குகளில் வைத்து விட்டு வந்தான்.
வேலைக்கு செல்வதால் சிவாவிடம் நிறைய ஆடைகள் இருந்தன, சுடரும் மகள்களுக்கு குறையில்லாமல் துணிகள் எடுத்து கொடுப்பார். ஆகவே அலமாரி நிறைந்து விட்டது. பீரோவின் எல்லா அடுக்குகளிலும் அவனது துணிகள் இருந்தன.
அவனது ஆடைகளை ஒரே அடுக்கில் வைக்கலாம் என நினைத்து அனைத்தையும் எடுத்து கட்டிலில் வைக்க ஆரம்பித்தாள்.
“ஏய் என் துணிய எதுக்கு எடுக்கிற?” என அதட்டினான்.
“அப்படி என்ன குத்தம் பண்ணிட்டேன்னு வெடுக் வெடுக்னு பேசிட்டு இருக்கீங்க? உங்க துணியெல்லாம் ஒரு ஷெல்ஃப்ல வச்சாதான் என்னோடது வைக்க இடம் இருக்கும்” என்றாள்.
“அதை என்கிட்ட கேட்டுகிட்டு செய்ய மாட்டியா?” என்றான்.
“நீங்கதானே எங்க வேணா வச்சுக்க சொன்னீங்க?”
“ம்ம்… என்ன வேணா செஞ்சுக்கன்னு சொல்லலையே?” என அவன் கேட்ட தொனியில் கடுப்பாகி விட்டாள். பழைய படி அவனது துணிகளை பீரோ முழுக்க அடுக்கியவள் அவளுடைய உடமைகள் இருந்த பேகை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டாள்.
“இந்தா! வாய் வார்த்தையா ஒரு சேதி சொல்லத்தானே செஞ்சேன், எதுக்கு வெடைக்கிற இப்போ? துணிய வச்சுக்க” என்றான்.
“வேணாம் சாமி வேணாம், தொட்டதுக்கெல்லாம் கோவம் அதட்டல்! யாரு சகிப்பா? எல்லாம் உங்க இடம்தான், அலமாரில இருக்கிறத கூட எடுத்திடுறேன், நானும் ஓரமா ஒண்டிக்கிறேன்” என்றாள்.
“ஏய் சும்மா ஏதாவது பேசாத. ராத்திரி உனக்கு கட்டில விட்டுட்டு நான் போய் வெளில படுத்துக்கலையா? சொல்லிட்டு செய்யுன்னு சொன்னது குத்தமா?”
“ம்ம்ம்… அதை கூட சிடு சிடுப்பாதான் சொல்றீங்க”
“நான் சாதாரணமாதான் சொல்றேன்”
“இல்லையில்ல, உங்ககிட்ட இப்பதான் நான் பேசுறேனா, முன்னல்லாம் இவ்ளோ கடுப்படிக்க மாட்டீங்க, இப்பதான் இப்படி ஆகிட்டீங்க” என்றாள்.
“அப்படி என்னங்க அடுத்தவங்க நம்மள மாத்துறது? அந்த அளவுக்கு பலஹீனமா ஏன் இருக்கணும்?” எனக் கேட்டாள்.
“அதிகமா பேசுற” என்றவன் அடுத்து மேசை டிராயரை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தான்.
அவள் ஹால் செல்ல போக, “உன் துணியெல்லாம் வச்சுக்க” என்றான்.
“அப்புறம் வச்சுக்கிறேன்”
“ஏன் இப்ப என்ன சோலி உனக்கு? கட்டிலுக்கு கீழ எல்லாம் ஏதும் வைக்காத, எடு அதை” என்றான். அவன் பேச்சில் அதிகாரம் தூள் பறப்பதை போலவேதான் உணர்ந்தாள்.
பேகை எடுத்தவள் புடவைகள் அதற்கு பொருத்தமான பிளவுஸ்கள் என தனித் தனியாக எடுத்து வைத்தாள். நினைவு வந்தவளாக மாமியாருக்கு அழைத்தவள், விருந்துக்கு பட்டுப் புடவைகள்தான் கட்டிக் கொள்ள வேண்டுமா எனக் கேட்டாள்.
“ஆமாம், அதை பத்தியெல்லாம் கவலை படாத, உன் அளவு பிளவுஸ் ஒன்னு என்கிட்ட இருக்கு, புடவைக தச்ச பிளவுஸ்னு எல்லாம் வந்து சேர்ந்திடும்” என்றார்.
காதில் வாங்கிக் கொண்டிருந்த ருத்ரன், “என்ன… என்ன விருந்து என்ன புடவை?” எனக் கேட்டான்.
சிவா விவரம் சொல்ல, வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டவன் கோவமாக கீழே செல்ல நடந்தான். ஐயோ இவரிடம் அத்தையே சொல்வதாக சொன்னாரே, அவசரப் பட்டுவிட்டோமே என பதறியவள், ஹால் வாயிலில் வைத்து அவனை பிடித்து விட்டாள்.
“விருந்து மண்ணாங்கட்டி! விடு என்னை” என சீறினான்.
“அத்தை இப்பதான் ரெஸ்ட் எடுக்க போனாங்க. அவங்களே பக்குவமா உங்கள்ட்ட சொல்லிருப்பாங்க, நான்தான் அவசர பட்டுட்டேன். ப்ளீஸ் கோவ படாதீங்க”
“கையை விடுன்னு சொன்னேன் உன்கிட்ட!” என அவன் அழுத்தி சொல்லவும் கையை விட்டு விட்டாள்.
“கீழ போக முன்னாடி ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுட்டு போங்க” என அவள் கெஞ்சவும் என்னவோ அதற்கு கட்டுப்பட்டு நின்று விட்டான்.
“உங்க கூடவே இருக்கிற உங்கம்மா, தங்கச்சி, நான் எல்லாரும் உங்களை முக்கியமா நினைக்கிறோம், என்ன பண்றதா இருந்தாலும் உங்களை சுத்தி சுத்தியே யோசிக்கிறோம், உங்க மனசு கஷ்ட பட்றக் கூடாது, நீங்க ஏதும் தப்பா நினைச்சிட கூடாது, உங்க சந்தோஷத்துக்கு எதை செய்யலாம்னு உங்கள மையமா வச்சே எல்லாம் செய்றோம். ஆனா நீங்க அப்படி எங்கள நினைக்க மாட்டேங்குறீங்க” என பொறுமையாக சொன்னாள்.
மார்புக் கூடு ஏறி இறங்க அவளையே பார்த்து நின்றிருந்தான்.
“இந்த கோவத்துக்கு யாருங்க காரணம்? இதனால பாதிக்க படுறது யாருங்க? ரெண்டு கேள்விக்கும் உங்கள்ட்ட பதில் இருக்கும்ல? அதை வச்சு செயல்படுங்க” என்றாள்.
கோவத்துக்கு காரணமானவள் எவனுடனோ சென்று விட்டாள், பாதிக்க படுவதோ உன் அன்புக்கு உரியவர்கள்தான் என்பதை அவனையே யோசித்து அறிந்து கொள்ள வைத்தாள்.
அவன் மீண்டும் கீழே செல்லத்தான் முனைந்தான்.
“அத்தை பாவங்க” என்றாள்.
“என்ன செய்ய போறாக உன் அத்தையை? இந்த விருந்தெல்லாம் வேணாம், சொல்லிட்டு வந்திடுறேன்” என்றான்.
“ஏன் வேணாம்? இதெல்லாம் முறைதானே? எதுக்கு வேணாம்னு சொல்றீங்க? என்ன சங்கட படுத்துது உங்களை? நார்மலா உள்ள எதையும் செய்யாம போனாதான் என்னமோ ஏதோன்னு பேசிப்பாங்க, சாதாரணமா இருங்க, அவுங்க அவுங்க வேலைய பார்த்துகிட்டு போயிடுவாங்க” என்றாள்.
ருத்ரன் கோவமுறும் சமயங்களில் அவனது முக பாவமும் உடல்மொழியும் எதிராளியை அச்சப் படுத்தி விடும். அவனுக்கே என்ன செய்கிறோம் பேசுகிறோம் என கட்டுப்பாடு இருக்காது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் எடுத்து சொன்னால் புரிந்து கொண்டு விடுவான். அப்படி எடுத்து பேச அதிகம் ஆட்கள் இல்லை. அவனுடைய தாத்தா, அம்மா இருவர் மட்டும்தான் அவனுக்கு பயப்படாமல் அவனை சமாளிப்பார்கள்.
ருத்ரனை விட சரியாக ஒன்பது வயது சிறியவள் சிவரஞ்சனி. அவனுடைய நடத்தையில், பேச்சில் எல்லாம் அவளுக்கும் பயம் எழாமல் இல்லை, ஆனால் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் பேச அவளால் முடிந்தது.
கீழே செல்லாமல் அவளிடமும் பார்வை வைக்காமல் ஏதோ யோசனையுடன் அங்கேயே நின்றிருந்தான்.
“மேசை டிராயரை கவுத்து போட்டு அப்படியே கெடக்கு, கன்னா பின்னான்னு போடாதன்னு என்னை மட்டும் சொன்னீங்களே, சரி பண்ணுங்க” என்றாள்.
‘என்னையவே வேலை ஏவுறத பாரேன்!’ என கிண்டலாக அவளை பார்த்தான்.
அசட்டு சிரிப்பு சிரித்தவள், “அது… அதெல்லாம் எது வேணும் வேணாம்னு உங்களுக்குதானே தெரியும், நான் செய்ய முடியாதில்ல, அதான்…” என்றாள்.
‘நல்ல ஆளு இவ!’ என மனதில் நினைத்துக்கொண்டே அறைக்கு சென்றவன், விட்ட வேலையை தொடர்ந்தான். அவளும் பீரோவில் துணிகளை அடுக்கினாள்.
இருவருக்கும் நடுவில் ஒத்திசைவுத் தன்மை மெல்ல முளை விட ஆரம்பித்தது.