சிவா அணிந்திருந்த தங்க சங்கலி அவளின் முடியில் சிக்கி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. கழுத்தின் பின்பக்கம் அடிக்கடி கையை வைத்து சரி செய்து கொண்டாள். ருத்ரன் அருகில் இருந்ததால் அவள் கை அவனை உரசி அவனுக்கும் தொந்தரவாக இருந்தது.
பத்து நிமிட பயணத்திலேயே கோயில் வந்து விட்டார்கள். காரில் வைத்து ஒன்றும் பேசியிராதவன் இறங்கியதும், “என்ன பிரச்சனை உனக்கு? எதுக்கு கழுத்தை சொறிஞ்சுக்கிட்டே இருக்க?” எனக் கேட்டான்.
“என்னது சொறிஞ்சேனா!” என நொடித்தவள் விவரம் சொன்னாள். அந்த சங்கிலியை கழட்டித் தர சொன்னவன் தன் சட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டான்.
மங்களத்தம்மாளுக்கு காதுதான் மந்தம், கண் பார்வை மிகுந்த கூர்மை.
“எங்கடி உன் கழுத்துல கிடந்த சங்கிலி? காணாடிச்சிட்டியா? மூனு பவுன் நகை அது. எங்க போச்சு?” என சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
சிவாவுக்கு பேசவே இடம் தராமல் “காருக்குள்ள விழுந்துச்சா இல்லை இங்க எங்குட்டுமா? மதிப்பு தெரியாதவளுக்கு போட்டு விட்டா இப்படித்தான் ஆகும்” என்றார்.
“அவர்கிட்டதான் இருக்கு ஆத்தா” என மெல்லிய குரலில் சிவா சொன்னது அவரின் காதிலேயே விழவில்லை.
மற்றவர்கள் பாட்டியிடம் வரும் முன் ருத்ரன் வந்து விட்டான். பாட்டியின் புலம்பல் வைத்து சிவா சொல்லாமலே அவனுக்கு விளங்கி விட்டது.
பாட்டியின் கையை அழுத்தமாக பிடித்தவன், “செயின் என்கிட்டதான் இருக்கு ஆத்தா. அப்படியே அவ காணாடிச்சாலும் சம்பாதிச்சு வேற வாங்கி போடற திராணி எனக்கு இருக்கு. என் மதிப்பு என்னன்னு மட்டும் அவளுக்கு தெரிஞ்சா போதும். முந்தாநேத்து வரைக்கும்தான் அவ யாரோ, இப்ப இவ என்னை கட்டிகிட்டவ, அதை மறந்திட்டு கண்டபடி பேசாத ஆத்தா” என்றான்.
பாட்டியின் காதில் விழ வேண்டும் என்பதால் சத்தமாகவே அவன் பேசியிருக்க, அனைவரின் காதிலும் விழுந்தது.
“கோயிலடில இறங்கின உடனே அத்தைக்கு நல்லா நடக்குதே பூசை!” என தன் ஓர்ப்படிகளிடம் கிண்டலாக சொன்னார் கோதை.
“சும்மான்னு இரு, நல்ல நேரத்துல அவுங்க வாயை கிளப்பி விட பார்க்கிறான் இந்த பய, போ அத்தையை தள்ளி அழைச்சிட்டு போ” என வள்ளி சொல்ல, கோதையும் சலித்துக் கொண்டே சென்றார்.
பாட்டிக்கு வாய் ஓயவே இல்லை. “ஒத்த ராத்திரில சின்ன சிறுக்கி எம்பேரனை மயக்கி மடில கட்டி வச்சுக்கிட்டா. மை போட்ட கண்ணுக்காரி இவனுக்கும் சேர்த்துல்ல மை தடவியிருக்கா. எவளுக்கு வரும் இம்புட்டு சாமர்த்தியம்? இந்த பயலை சொல்லணும், புது பொண்டாட்டி மோகம் இருக்க வேண்டியதுதான், என்கிட்டயே சாமியாடுற அளவுக்கு இருக்க கூடாதுடாப்பா…” ராகம் இழுத்து இழுத்து பேசினார்.
கடுப்பான ருத்ரன் தள்ளி சென்று விட, சிவா ‘என்னடா இது இப்படி அடித்து விடுகிறார்?’ என ஆ என பார்த்து நின்றாள்.
“கண்டுக்காத, அப்படியே விட்டா தானா அடங்கிடுவாக. வாய் கொடுத்தோம்னு வையி, புல் பாம்ல கச்சேரி கட்டிடுவாக” என்றார் கோதை.
சிவா லேசாக சிரிக்க, “உள்ளுக்கு போகாம இங்கேயே என்ன வெட்டிக் கதை?” என அதட்டி தனராஜன் தான் அனைவரையும் கோயில் உள்ளே அனுப்பினார்.
வழிபாடு திருப்தியாக முடிந்தது.
திரும்ப வரும் போதும் சிவாவின் பார்வை தன் வீட்டுப் பக்கம்தான் சென்றது. மூத்தமகள் வீட்டை விட்டு வெளியேறியிருக்க, இளைய மகள் ஒரே ஊரில் பக்கத்து தெருவில் வாக்கப் பட்டு சென்றும் வீட்டுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் அந்த பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும். அந்த நினைவில் சிவாவின் கண்கள் கலங்கிப் போயின.
கல் நெஞ்சம் படைத்தவனுக்கு தன் மனைவி படும் பாடு புரியாமல் இல்லை, இந்த விஷயத்தில் மட்டும் இளகவே கூடாது என உறுதியாக இருந்தான்.
வீடு வந்த பிறகு ஓய்வாக இரு என சொல்லி மருமகளை மாடிக்கு அனுப்ப பார்த்தார் வள்ளி. அவளோ எப்போது என் பிறந்த வீட்டுக்கு செல்வது என வெளிப்படையாக கேட்டு விட்டாள்.
கோதை அவரின் வீடு சென்று விட்டார். அங்கிருந்த செங்கமலமும் வைதேகியும் சிவாவை பாவமாக பார்த்தனர்.
மருமகளின் கையை வாஞ்சையாக பிடித்துக்கொண்ட வள்ளி, “கொஞ்ச நாள் பொறுத்துக்க ஆயி, அவனோட கோவம் கொஞ்சம் போல மட்டு படட்டும். இப்படியே நிரந்தரமா உன் பெத்தவங்கள விட்டு விலக்கி வச்சிட மாட்டான், நானும் அதுக்கு விட மாட்டேன்” என்றார்.
“எவ்ளோ நாளைக்கு அத்தை இப்படி இருக்கிறது நான்?” ஆதங்கத்தோடு கேட்டாள்.
“எம்புட்டு கோவமா இருக்கான்னு உனக்கும் தெரிஞ்சிருக்குமே ஆயி, எவ்ளோ நாள் இப்படியே இருப்பான், பழையபடி அவன் ஆவட்டும், அதுவரைக்கும்” என்றார்.
நேற்று தன் கணவன் பேசியதுதான் சிவாவுக்கு தெரியுமே, இப்போதைக்கு அவரிடம் சரி என சொல்வதை தவிர அவளிடம் வேறு வழியிருக்கவில்லை.
“அவங்கள்ட்ட ஃபோன்லயாவது பேசிட்டு அப்புறம் மேல போறேன் அத்தை” என்ற சிவாவை தன்னுடைய அறைக்கு அனுப்பி வைத்தார் வள்ளி.
மகளும் இங்கு வர தடை சொல்லி விட்டார்கள் என அறிந்ததுமே சுடர் அழுது விட்டார். உத்தமனோ, இதற்கும் அமைதியாக இருப்பதா, போய் என்னவென கேட்டு வருகிறேன் என பொங்கினார்.
சிவாதான் சண்டை போட வேண்டும் என்றால் என்னாலேயே செய்ய முடியும், சற்று பொறுக்கலாம், அப்படியெல்லாம் உங்களை விட்டு இருந்துவிட மாட்டேன் என சமாதானம் சொன்னாள். ஆனால் பேசி முடித்த பிறகு அவளுக்கும் அழுகை முட்டிக்கொண்டுதான் வந்தது.
இப்படி என்னை என் பெற்றவர்களிடம் இருந்து பிரிப்பதற்கு அக்கா சென்றதற்கு ஏதாவது சண்டையிட்டு ஊரை விட்டே அனுப்பியிருக்கலாம், அதை எளிதாக கடந்திருக்கலாம் என கூட நினைத்தாள். வைதேகி வந்து அழைக்கவும் கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டாள்.
“மதியானம் சாப்பிட வரலாம் அண்ணி, செத்த போய் படுத்து எந்திரிங்க” என நாத்தனார் சொல்லவும், தலையாட்டிக் கொண்டவள் மாடிக்கு சென்றாள்.
ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன் இவளது அழுத முகத்தை கண்டதும், “அழுதிருக்கியா என்ன? கீழ என்னாச்சு?” எனக் கேட்டான்.
உன்னால்தான் இந்த அழுகை என கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் தலைவலி என பொய் உரைத்து அறைக்கு சென்று விட்டாள்.
இப்படி வீட்டில் அமர்ந்ததே இல்லை ருத்ரன், ஏதாவது வேலை செய்து கொண்டேதான் இருப்பான். நல்ல முறையில் திருமணம் ஆகியிருந்தால் புதுமனைவியுடன் இனிமையாக நேரம் சென்றிருந்திருக்குமாக இருக்கும். இப்போது எப்படி நேரத்தை ஓட்டுவது என்றே அவனுக்கு தெரியவில்லை.
வெளியில் எங்கேயும் செல்லக் கூடாது என உறுதியாக சொல்லியிருந்தார் வள்ளி.
மதிய உணவின் போதே இலகுவான புடவைக்கு மாறியிருந்தாள் சிவா. உணவுக்கு பின் மேலே தனியாக இருந்து என்ன செய்வது என கீழேயேதான் இருந்தாள். அடுத்து என்ன என மாமியாரிடமும் அவளுக்கு பேச வேண்டியதாக இருந்தது. வேலைக்கும் போக கூடாது என்றால் என்ன செய்வாள் அவள்?
மற்றவர்கள் ஓய்வுக்காக சென்ற பிறகு மாமியார் மட்டும் தனியாக இருக்கும் போது, நாளையிலிருந்து வேலைக்கு செல்லவா எனக் கேட்டாள்.
இன்னும் இரண்டு நாட்கள் போனால் வார இறுதி வந்துவிடும், திங்கட்கிழமையிலிருந்து போகலாம் என்றார் வள்ளி.
வேலைக்கு போவதை தடுக்கவில்லை என்பதில் நிம்மதி அடைந்தவள், “கல்யாணத்துக்கு முன்னாடியே லீவ் எடுத்திட்டேன், நாளைக்கு போறேனே, இங்க இருந்துதான் என்ன செய்ய போறேன்?” எனக் கேட்டாள்.
“நாளைக்கு நீதான் இங்குட்டு சமைக்க போற, உடனே பயந்துக்காத, முத முத நல்ல நாள் பார்த்து சமைச்சிடு, அப்புறம் நாங்க எல்லாம் பார்த்துகிடுவோம். கோதை வூட்டுக்கும் ருத்ரன் அத்தைக மாமனுங்க வீடுகளுக்கும் விருந்து இருக்கும், எல்லாத்தையும் முடிச்சிடுங்க” என்றார் வள்ளி.
“திடுதிப்புனு நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகிட்ட, ஒன்னா சேர்ந்து போக வர இருந்தாதான் உங்களுக்குள்ள புரிஞ்சிக்கிட முடியும். அவனோட பெரியத்தை தவிர மத்தவக வீட்ல குறையில்லாம விருந்து வச்சு அனுப்புவாக. அவனை நான் ஒத்துக்க வைக்கிறேன், ரெண்டு நாள் சேர்த்து லீவை போடு” என்றார்.