ருத்ரனின் தாடை இறுகிப் போனது, தங்கை சென்ற திசை பக்கம் கூட பார்க்கவில்லை அவன்.
இலகுவான பருத்தி சேலை, தலையில் அரை முழம் பூ இவ்வளவுதான் சிவாவின் அலங்காரம்.
“நல்லா தூங்குங்க அண்ணி, இதெல்லாம் போட்டு விடலைன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீக” என்றாள் வைதேகி. கனமான பட்டு, ஜொலிக்கும் ஆபரணங்கள், ஒரு பந்து பூ என கொடுத்தனுப்பியிருந்தார் கோதை.
தன் நாத்தனாரை நன்றியாக பார்த்தாள் சிவா. சிநேக பாவத்தோடு புன்னகைத்த வைதேகி ஃபிளாஸ்க்கில் இருந்த பாலை சொம்பில் ஊற்றி அவளின் கையில் கொடுத்து அண்ணனின் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.
இன்னும் மேசையிலிருந்த நோட்டைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். சிவாவின் வருகை அவனுக்கு தெரியாமல் இல்லை, ஆனால் கண்டுகொள்ளவில்லை.
தன் அண்ணிக்கு கண்களால் தைரியம் சொல்லி கீழே சென்று விட்டாள் வைதேகி. தங்கை சென்று விட்டது தெரிந்த பிறகுதான் சிவாவின் பக்கம் திரும்பினான் ருத்ரன்.
சங்கடமாக அவனை பார்த்து நின்றாள் சிவா. அவன் ஒன்றும் சொல்லாத போதும் அறைக்குள் முன்னேறி நடந்து நடு மையத்தில் நின்றாள்.
புருவம் நெறித்து அவளை ஊன்றிப் பார்த்தவன், “உன் அக்கா விஷயம் முன்னாடியே உனக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.
வேகமாக, “சத்தியமா தெரியாதுங்க” என்றாள்.
தலையாட்டிக் கொண்டவன், “உன் வீட்ல?” எனக் கேட்டான்.
இதையெல்லாம் ஏன் கேட்கிறார் என்ற நினைப்புடன் அவள் நிற்க, “ம்ம்ம்!” என உறுமினான்.
ருத்ரன் எழுந்த வேகத்திற்கு அவன் அமர்ந்திருந்த நாற்காலி பின்னால் சாய்ந்தது.
உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைய, கால்களை தரையில் அழுத்தி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் சிவரஞ்சனி.
“நெனச்சேன், உன் அம்மாவுக்கும் அக்காளுக்கும் என்னை பார்த்தா எப்படி தெரிஞ்சுதாம்? உன் அம்மா உண்மையை சொல்லியிருந்தா இந்த அசிங்கம் எனக்கு வந்திருக்குமா? என் வூட்டு வேலைக்காரனை ஆசைப்பட்டவள என் தலைல கட்டி வச்சு என் வாழ்க்கைய நாசமாக்க பார்த்தாவுளா? உன் அப்பாக்கு தெரியாதுன்னு சொல்லாத, அவரும் இதுக்கு உடந்தை, என்ன?” என கோவமாக கேட்டான்.
இப்போது இவரிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என புரிந்து அமைதியாகி விட்டாள் அவள்.
“இந்த வீட்டுக்கு நீ வந்திட்ட, இனி இங்குட்டு மட்டும்தான் உன் நெனப்பு இருக்கணும். புரிஞ்சுதா?” என கடுமையான தொனியில் கேட்டான்.
என் அப்பா அம்மாவுடன் பேசக்கூடாது என சொல்கிறாரா, இதென்ன அநியாயம்? மனதில் குமுறியவள் அமைதியாகவே நின்றாள்.
இரண்டடி அவளை நெருங்கியவன், “ஊமைகோட்டான் கணக்கா நிக்கிறியே நீயும் ஏதாவது திட்டம் வச்சிருக்கியா? இப்பவே சொல்லிடு” என்றான்.
“என்ன திட்டம்?” என பதறினாள்.
தவறாக புரிந்து கொண்டாள் என்பதில் அவனுக்கே சற்று அதிர்ச்சியானது. காட்டிக் கொள்ளாதவன், “ம்ம்… என் பேச்சை மீறி உன் அம்மா அக்கா கூடலாம் ஏதாவது பேச்சு வச்சுக்கிட்டு என்னை உதாசீனபடுத்த திட்டமா?” என்றான்.
சிவாவுக்கு உள்ளுக்குள் அத்தனை கோவம். இதே இவரின் அத்தை மகள் தவறு செய்தும் ஒரே வீட்டில் அவளை வாழ வைத்து அழகு பார்க்கவில்லையா? இவருக்கு துரோகம் இழைத்த தம்பியுடன் இவர் பேசாமலா இருக்கிறார்? இவருக்கு ஒரு நியாயம் எனக்கு வேறா?
அக்கா ஏமாற்றி விட்டு சென்று விட்டாள், இதோ இன்று காலை வாழ்க்கை மாறிப் போய் விட்டது, இத்திருமணத்தை அனர்த்தம் ஆக்கி விடாமல் எப்படி நன்றாக எடுத்து செல்வது என யோசிக்காமல் இப்படி கோவம் கொள்வதும் அனாவசிய கட்டளைகள் விதிப்பதும் முறையா? இதையெல்லாம் பேச வேண்டும் என்றால் பேசியிருப்பாள்.
ஆனால் தான் சொல்ல நினைக்கும் சில விஷயங்கள் அவனது மனதை இன்னும் காயப்படுத்தும், சில விஷயங்களோ குழப்பமாக்கும் என்பதால் வாயை அடக்கிக் கொண்டாள்.
‘மனக் கொதிப்பில் பேசுகிறார், ஒதுக்கி தள்ளு’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். “பால் ஆறிட்டு இருக்கு, குடிச்சிட்டு படுங்களேன், தூங்கி எந்திரிச்சா தெளிவா இருப்பீங்க” என கூறிக் கொண்டே டம்ளரில் பாலை ஊற்றி நீட்டினாள்.
அவளை முறைத்தவன், “நீயே குடி. நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு” என்றான்.
“இப்ப எது பேசினாலும் சரியா வராதுங்க”
“என்ன சரி தப்புன்னு நான் சொல்றதுதான். என் கையால தாலி வாங்கிகிட்டவ நான் சொல்றததான் கேட்டு நடக்கணும். பழைய உறவெல்லாம் என்னை விட முக்கியம்னு பட்டா தாலிய கழட்டி வச்சிட்டு போயிட்டே இரு” என இரக்கமே இல்லாமல் சொன்னான்.
சிவாவின் பொறுமை அவளின் கை நழுவிப் போனது.
“இதையெல்லாம் தாலி கட்டுறதுக்கு முன்னல்ல சொல்லிருக்கணும் நீங்க? உங்கம்மா வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்வாங்க, நீங்க கழட்டி வச்சிட்டு போக சொல்வீங்க. எல்லாத்துக்கும் தலையாட்டுவேன்னு நினைக்காதீங்க” என கண்கள் சிவக்க சொன்னாள்.
நேற்று மதியம் ஏற்பட்ட அதிர்ச்சி, கோவம், வெறி எல்லாமே வெளியேற்ற படாமல் ருத்ரனின் உள்ளேயே அமுங்கி கிடந்தது. இப்போது சிவாவின் சீற்றம் அவனை தூண்டி விடுவது போலானது.
“என்ன சத்தம் போடுற? ஏன் கழட்டி வச்சிட்டுத்தான் போயேன், உரிமை இல்லாதவ எக்கேடு கெட்டாலும் கவலையில்லடி எனக்கு. ஆனா நீ எனக்கு உரிமை பட்டவ, ஏதாவது எனக்கு ஆகாத காரியம் செஞ்சேன்னு வையி… குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்றான்.
“குழி தோண்டி புதைக்க நீங்க வளர்க்கிற தென்னம்புள்ளைன்னு நினைச்சீங்களா?” என அவளும் முதலில் கோவப்பட்டாள். ஆனால் அடுத்த நொடியே, “கோவத்துல ஏதேதோ பேசுறீங்க, இதையெல்லாம் நினைச்சு பின்னால நீங்களே வருத்த படுவீங்க. தப்பு என் அக்கா அம்மா மேலதான், ஒத்துக்கிறேன். அதோட நம்ம வாழ்க்கைய சம்பந்த படுத்தி பார்க்காதீங்க. உங்க மரியாதைக்கு பங்கம் வர்ற எதையும் நான் செய்ய மாட்டேன், நம்புங்க. இப்ப பேசாம படுங்க” என்றாள்.
பதிலுக்கு பதில் பேசியிருந்தால் நிலைமை ருத்ரனின் கை மீறிப் போயிருக்கும், ஏனென்றால் அவனது உள்ளக் கொந்தளிப்பு அப்படியானது. மாறாக அவள் அவனை சாமர்த்தியமாக கையாண்டு விட்டாள். அவள் இறுதியாக சொன்னது அவனை வெகுவாக சமாதான படுத்தியது.
அவனது அமைதியில் கோவம் குறைந்து விட்டதாக நினைத்தவள் பால் சொம்பை மேசையில் வைத்து விட்டு பாய் விரித்து படுக்க தயாரானாள்.
“என்ன செய்ற?” எனக் கேட்டான்.
“தூங்க ரெடி பண்றேன்” என்றாள்.
“மேல படு” என அவன் சொல்ல, திகைப்போடு அவனை பார்த்தாள்.
சொன்ன செய்தியை பார்வையில் தாங்கி கடு கடு என நின்றான்.
‘சும்மாவே இவரு மூஞ்சுல முள்ளு கொட்டிக்கிடக்கும், இப்ப நாலு கீரிப் புள்ளைய தொங்க விட்ட மாதிரியே இருக்கு!’ என மனதில் சொல்லிக் கொண்டாள்.
“காதுல வுழுவல? கட்டில்ல படு!” என அதட்டியவன் வேஷ்டியை மடித்துக் கட்டி கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.
நெஞ்சமெல்லாம் அதிர, நடக்க மறுத்த கால்களை அசைத்து மெல்ல படுக்கைக்கு சென்றாள் சிவா. அவனை கடக்கும் போது அவள் கண்ட அவனது தீவிரமான பார்வை அவளுள் பீதியை கிளப்பியது.
அவள் எதையோ நினைத்து பயந்திருக்க அவனோ வெளியே சென்று விட்டான். ஏதும் புரியாமல் மிகவும் குழப்பமானாள். வெகு நேரமாகியும் அவன் அறைக்கு திரும்பாததால் அவளும் வெளியே சென்று பார்த்தாள்.
ஹாலிலும் அவன் இல்லை. அதைக் கடந்த வெளிப் பரப்பில் நாடாக் கட்டிலில் படுத்திருந்தான். இவளை கண்டவன், “என்ன?” என்றான்.
ஒன்றுமில்லை என மறுப்பாக தலையாட்டியவள் அக்கம் பக்கம் பார்த்தாள். அங்கிருக்கும் வீடுகளின் மாடி வழியே யாரும் பார்த்தால் இவன் வெளியில் உறங்குவது தெரிந்து விடும். அவனிடம் அதை சொல்லவும் பயந்தவள் அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.