மொட்டவிழ்ந்த தேனரும்பே -5

அத்தியாயம் -5

சிவரஞ்சனி விழுந்து விடாமல் ருத்ரன் பிடித்துக்கொண்டதில் அவளை அவன் கவர்ந்து விட்டான்.

ருத்ரனுக்கு முழுக்க முழுக்க அனிச்சையானது மட்டுமே அவனது செயல்.

“சகுந்தலை… ஏன் தள்ளாடுற, வயசாகிட்டுன்ன? தள்ளித்தான் நிக்கிறது!” உறவுக்கார பெண்மணி ஒருவர் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்.

அதற்குள் யாரோ உள்ளே சென்று வள்ளியிடம் விஷயத்தை சொல்லி விட்டனர். சடங்கு நடக்கட்டும் என அப்போதைக்கு அமைதியாகவே இருந்து விட்டார் வள்ளி.

பூஜையறை வந்த சிவா மடிப்பழத்தை அங்கே வைத்து விட்டு, விளக்கேற்றி வணங்கினாள். பின் ஹாலில் அமர வைக்க பட்டாள். சர்க்கரை பொங்கல் வைத்து அவளுக்கு நலங்கு செய்து கையிலும் துளி மருதாணி வைத்து வாழ்த்தினார்கள்.

இந்த சடங்குகளில் மனம் செல்லாத காரணத்தால் தனதறைக்கு செல்ல முனைந்தான் ருத்ரன். விடாத கேசவன் அவனை கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டு அங்கேயே நிறுத்தியிருந்தான். அவனது மனையாளின் கட்டளை அது.

மண்டபத்துக்கு புறப்பட்டனர், அங்கு நிச்சயப்பத்திரிக்கை வாசிக்க படவும் மணமக்களை ஒன்றாக அமரவைத்து நலங்கு செய்தனர். ருத்ரனுக்கு முள் மீது அமர்ந்திருக்கும் நிலையாகி விட்டது. எல்லார் மனதிலும் என்ன ஓடும் என்ற நினைப்பு தொண்டை வரை கசந்து வழிந்தது.

வெளியூரிலிருந்து நேராக மண்டபம் வந்த சொந்தக்கார பாட்டி ஒருவருக்கு மணப்பெண் மாறிப் போனது பற்றி தெரியாது. நலங்கு வைக்கும் போது, “பேரனை நல்லா பார்த்துக்க கௌரி” என சொல்லி விட்டார். அந்த பாட்டியின் மகள் பெயரும் கௌரி என்பதால் மணமகளின் பெயர் அவருக்கு நன்றாக நினைவிருந்தது.

ருத்ரன் முதற்கொண்டு அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். சங்கடமாகி விட்டது சூழல்.

இவரிடம் விளக்கம் சொன்னால் இன்னும் சங்கடம் ஆகும் என்பதை புரிந்து கொண்ட சிவா, “சரிங்க ஆத்தா, இப்பதான் வந்தீங்களா, லேட் ஆகுது பாருங்க சாப்பிட போங்க” என்றாள். அவளின் தாடை தடவி முத்தம் கொஞ்சி விட்டு மேடையிலிருந்து இறங்கினார் அந்த பாட்டி.

ருத்ரனின் கன்னக் கதுப்புகள் இரண்டும் தீயாக எரிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த தங்கையிடம், “முடிஞ்சுதா இல்லையா இன்னும் எவ்ளோ நேரம் உட்கார்ந்து இருக்கிறது?” என அடித் தொண்டையில் சீறினான்.

“இன்னும் நலங்கு வைக்க சொந்தம்லாம் இருக்கே அண்ணா” என இரைஞ்சுதலாக சொன்னாள் வைதேகி.

கணவனாக வரப் போகிறவனின் மனம் படும் பாட்டை உணர்ந்த சிவரஞ்சனிக்கும் வேதனையாக இருந்தது.

ருத்ரனுக்கு அந்த நிமிடங்கள் நத்தை வேகத்தில்தான் நகர்ந்தன. சுடரும் உத்தமனும் பயம், பதட்டம், கவலை என எல்லாம் சேர்ந்த கலவையாக தள்ளியே நின்றிருந்தனர். வள்ளி அவர்களையும் நலங்கு செய்ய சொன்னார்.  மேடை ஏறியவர்களை ருத்ரன் பார்த்த பார்வையில் மகளுக்கு மட்டும் நலங்கு செய்து இறங்கி விட்டனர்.

“கோவமா இருக்கான், தப்பா எடுக்க வேணாம்” என சங்கடத்தோடு அவர்களிடம் சொன்னார் வள்ளி.

கண்களில் நிறைந்து விட்ட நீரோடு சுடர் நிற்க, உத்தமன்தான் பரவாயில்லை என சொல்லி மனைவியின் கை பிடித்து அழைத்து சென்றார்.

ஒரு வழியாக நலங்கு முடிந்து மணமக்கள் இருவரையும் ஒன்றாக சாப்பிட அழைத்து சென்றாள் வைதேகி.  மேடையை விட்டு இறங்கிய ருத்ரன் நேராக மணமகன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்தாள் சிவா. மண்டபத்தில் உள்ளவர்கள் அனைவரின் பார்வையும் இவர்களிடம்தான் இருந்தது. சிவாவை பாவமாக பார்த்தாள் வைதேகி.

“நாம போலாம் அத்தாச்சி, அவங்களுக்கு சாப்பாடு ரூமுக்கு எடுத்திட்டு போய் சாப்பிட வைங்க” என்றாள் சிவா.

“அண்ணன் இப்படி செய்யுதுன்னு…” ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் வைதேகி.

“நீங்க ஏதும் சொல்ல வேணாம் அத்தாச்சி, சங்கடமும் படாதீங்க. எல்லாம் சரியாகும்” என தனக்கும் சேர்த்தே சொன்னாள் சிவா. அவளை மட்டும் சாப்பிட அழைத்து சென்றாள் வைதேகி.

சிவரஞ்சனியாலும் அதிகம் சாப்பிட முடியவில்லை. அவள் மனதிலும் புயல் ஒன்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் பக்குவமாக நடந்து கொண்டாள்.

கல்யாண நாள் விடிந்தது. ருத்ரனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. சிவரஞ்சனியோ மனமாற அவனை மணமுடிக்க தயாராகியிருந்தாலும் கலக்கத்தோடே இருந்தாள்.

ஊரில் உள்ளவர்கள், சொந்த பந்தங்கள் அனைவருக்கும்  வாய் ஓயவில்லை. சிலர் வியந்தார்கள், சிலர் பரிகசித்தார்கள், சிலர் பொருமினார்கள் ஆனால் பெரும்பாலோனோர் நல்ல மனதோடு வாழ்த்தினார்கள்.

இன்னாருக்கு இன்னார் என இறைவன்தான் நிர்ணயிக்கிறான் என்பது ருத்ரேஷ்வரன் சிவரஞ்சனி விஷயத்தில் ஊர்ஜிதமாகி விட்டது.

கல் என இறுகிப் போன மனதுடன் சிவாவின் கழுத்தில் தாலி பூட்டினான் ருத்ரன். தாழ்ந்திருந்த பார்வை வழி நெஞ்சம் உரசிய திருமாங்கல்யத்தை கண்ட சிவா அவனை உற்ற உறவாக ஏற்றுக்கொண்டு விட்டாள்.

நேராக ருத்ரன் வீட்டுக்குத்தான் சென்றனர். உள்ளே நுழைந்ததுமே மாடியேறி விட்டான் அவன்.

விளக்கேற்றி வணங்க அவள் மட்டும் தனியாக பூஜையறை அழைத்து செல்லப் பட்டாள். “தன்னிச்சையா முடிவு பண்ணி கண்ணாலம் பண்ணி வச்சா மட்டும் ஆச்சா? அவனை போய் கூட்டிட்டு வா” என வள்ளியிடம் சத்தம் போட்டார் மங்களத்தம்மாள்.

வள்ளி தன் மகளுக்கு கண் காட்ட, அவளோ தன் கணவனை பார்த்தாள். ‘வில்லங்கமான நேரத்துல எல்லாம் என்னையவே கோர்த்து விடு!’ என மனைவியை முறைத்துக் கொண்டே சென்றான் கேசவன்.

வேறு யார் வந்திருந்தாலும் கோவமாக ஏதாவது பேசியிருந்திருக்க கூடும் ருத்ரன், வீட்டு மாப்பிள்ளையிடம் அப்படி முகம் காட்ட முடியாமல் கீழே வந்தான்.

இருந்தவர்கள் அனைவரும் நெருங்கிய சொந்தங்களே என்ற போதும் அவர்களின் துளைக்கும் பார்வை அவனை இயல்பாக இருக்க விடவில்லை, எப்போதாடா கிளம்பித் தொலைவார்கள் என்ற மனநிலையில் இருந்தான்.

விளக்கேற்றி வைத்து வணங்கிய சிவா, கண்களை திறந்த போது ருத்ரன் அங்கிருக்கவில்லை. அதற்குள் எங்கே போய் விட்டான் என சுற்றிலும் பார்த்தவள் தன்னையே எல்லாரும் பாவமாக பார்ப்பதை உணர்ந்து தலை குனிந்து கொண்டாள்.

மகளிடம் சொல்லி சிவாவையும் மேலே அழைத்து செல்ல வைத்தார் வள்ளி. பால் பழம் கொடுப்பதெல்லாம் அங்கேயே வைத்துக்கொள்ள நினைத்தார்

சற்று நேரத்தில் கோதையும் மேலே சென்றார். ஹாலில் அமர்ந்திருந்த சிவா, “அத்தாச்சி அவங்கள கூப்பிட போயிருக்காங்க” என்றாள்.

“சரி சரி, இதெல்லாம் பார்த்து நீ ஒன்னும் அஞ்சாத, அவன் நிலைமை அப்படி” என்றார் கோதை.

“என்ன சித்தி என்ன நிலைமை எனக்கு?” கோவமாக கேட்டுக் கொண்டே வந்து நின்றான் ருத்ரன்.

கோதை என்ன சொல்லவென பாவமாக பார்க்க, சிவா பவ்யமாக எழுந்து நின்றாள்.

“அண்ணன் அண்ணன்… பால் பழம் சாப்பிட்டு நீ ரெஸ்ட் எடுக்க போலாம் ண்ணா. உட்காரு ண்ணா” என தாஜாவாக சொல்லி அண்ணனை அமர வைத்த வைதேகி, சிவாவையும் கண் சாடை காட்டி அவன் பக்கத்தில் அமர வைத்தாள்.

சொன்னதை செய்த ருத்ரன் விட்டால் போதும் என மீண்டும் தன் அறைக்கே திரும்பி விட்டான்.

“மாடிக்கு யாரும் வராம பார்த்துக்கிறேன், இங்க ஹால்லேயே படுத்து ரெஸ்ட் எடு” என சிவாவிடம் சொன்ன கோதை, வைதேகியை அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டார்.