மொட்டவிழ்ந்த தேனரும்பே -4

அத்தியாயம் -4

ருத்ரனின் ஆசையை கேட்ட பிறகு என்ன முடிவெடுக்க என்றே வள்ளிக்கு தெரியவில்லை. அவருக்கு உதவி செய்ய என்றே இருந்தது வைதேகியின் வருகை. ருத்ரன் மதிய உணவை முடித்து கிளம்பிய பிறகு மகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்து விட்டார் வள்ளி.

விஷயத்தை கேட்ட வைதேகி “அண்ணனே சொல்லுச்சாம்மா?” என வியப்பாக கேட்டாள்.

வள்ளி ஆமாம் என சொல்லவும் வைதேகியும் யோசனையானாள். கௌரியை சிலமுறை பார்த்திருக்கிறாள், அம்மா போல படிப்பு, அந்தஸ்து என்றெல்லாம் நினைக்காமல், “அண்ணன் சொல்லிட்டுன்னா செய்றதுக்கு என்னம்மா?” என்றாள்.

“இங்க வீட்ல யாருடி ஒத்துப்பா? நம்மகிட்ட எவ்ளோ கொட்டி கிடந்தாலும் வர்றவ ஊர் கண்ணுக்கு நிறைவா சீர்செனத்தியோட வந்தாதான நல்லாருக்கும்? பொண்ணே கிடைக்காம அங்க போய் எடுத்தாங்கன்னு பட்டுனு பேசிப்புடுவாங்களேடி? எல்லாத்துக்கும் மேல உன் அப்பத்தா! யாரு அவுகள  சம்மதிக்க வைக்கிறது? இதையெல்லாம் தள்ளி வை, அந்த பொண்ணு அதான்டி கௌரி…  பள்ளிக்கூடம் வரைதான் படிச்சிருக்கு, அவ தங்கச்சி அளவுக்கு அவ அவ்ளோ தரவுசும் கிடையாது, இவனை வச்சு வடிக்குமான்னே தெரியலையே?” தன் கவலைகளையெல்லாம் அடுக்கினார் வள்ளி.

அம்மா சொல்லும் எதையுமே பொருட் படுத்தவில்லை வைதேகி. கடந்த முறை அவளின் புகுந்த வீட்டில் ஏதோ சண்டை வந்த போது, “உங்க எண்ணத்துக்குத்தான் உன் அண்ணன் ஒத்தையில நிக்கிறான்” என குத்தி காட்டி பேசியிருந்தார் அவளின் மாமியார். அன்று அவள் அழுத அழுகைக்கு அளவே இல்லை.

எங்கே அண்ணன் இப்படி தனியாக இருந்து விடுவானோ என பயந்தவள், எப்படியாவது அண்ணனுக்கு திருமணத்தை நடத்தி விடு என அம்மாவிடம் அழுத்தி சொல்லத்தான் இங்கு வந்திருந்தாள்.

“படிச்ச பொண்ண கட்டி வச்சு எந்த ஆஃபீசுக்கு அனுப்ப போறம்மா? ஊர் பேசும்னா நாமளே முன்னாடியே நகையையும் சீர் வாங்க வேண்டிய பணத்தையும் அவுக கைல கொடுத்து சபையிலே நிறைவா செய்ய வைப்போம். அண்ணன் மனசுக்கு புடிக்கிறதுதான ம்மா முக்கியம்? உன் மாமியா பேசும்னு எல்லாம் காரணம் சொல்லாத. அண்ணனை பத்தின கவலை இருந்திருந்தா இந்நேரம் அதுல்ல வேற நல்ல பொண்ணா பார்த்திருக்கணும், ஏதாவது மெனக்கெட்டுச்சா? அது பேத்தி நல்லாருந்தா போதும் அதுக்கு. சம்மதிச்சா பாரு இல்லைனா ஓரமா உட்கார வை, எனக்கு என் அண்ணன் வாழ்க்கைதான் முக்கியம். ஏதாவது பண்ணும்மா” பட படத்தாள் வைதேகி.

குழப்பத்தில் இருந்தவருக்கு மகளின் பேச்சு கொஞ்சம் தெளிவை கொடுத்தது. அவள் சொல்வது போல மாமியாரை தள்ளியெல்லாம் வைக்க முடியாது, பேசி சரி கட்டுவோம் என முடிவு செய்து கொண்டார்.

முதலில் மாமனாரிடம்தான் விஷயத்தை சொன்னார். தயங்கினாலும் மருமகள் எடுத்து சொன்னதிலும் பேரனுக்கு பிடித்திருக்கிறது என்பதிலும் சம்மதித்து விட்டார் சதாசிவம்.  அவரது மகன்களிடம் அவரே பேசிவிட்டார்.

மங்களத்தம்மாள்தான் ஒன்றும் இல்லாத வீட்டிலிருந்து வருபவள் என் வீட்டுக்கு மருமகளா என வாய் ஓயாமல் பேசினார். வீட்டினர் யார் பேசியும் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை. போதாததற்கு பிறையின் அம்மா சகுந்தலை வேறு வந்து விட்டார்.

“என் கல்யாணம், என் விருப்பம் அந்த பெண்ணைத்தான் கட்டுவேன்,  தலையிட உங்களுக்கு உரிமை இல்லை” என அத்தையிடம் கோவமாக சொல்லி விட்டான் ருத்ரன். கோவித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் சகுந்தலை.

மகளை இப்படி பேசி விட்டாயே என மங்களத்தம்மாள் ஆரம்பிக்க, கண்டு கொள்ளாத ருத்ரன் “ஆக வேண்டியதை பாரும்மா” என அம்மாவிடம் சொல்லி வெளியில் சென்று விட்டான்.

இப்படியாக மங்களத்தம்மாள் மற்றும் அவரின் மூத்த மகளின் எதிர்ப்பை அலட்சியப் படுத்திவிட்டு மற்ற குடும்பத்தினரோடு கௌரியை பெண் கேட்க சென்றார் வள்ளி.

வைதேகி தன் கணவன் கேசவனையும் வரச் செய்திருந்தாள். இந்த நிகழ்வில் ருத்ரன் கலந்து கொள்ளவில்லை. தோப்பு ஒன்றில் போர் போடுவதற்கு முன்னரே குறிக்கப் பட்டிருந்த நாள் அது. முடித்து விட்டு மாலையில் பெண் பார்க்க செல்லலாம் எனதான் அவன் சொன்னான்.

அங்கே பேச்சுக்கள் எப்படி செல்லும் என வள்ளிக்கு குழப்பம், மகன் சங்கடபட வேண்டாம் என நினைத்து, “ஏற்கனவே நீ பார்த்த பொண்ணுதானடா, அதும் உன்னை பார்த்திருக்கு, போர் போடுற வேலைய பாரு” என சொல்லி விட்டார். சொக்கனும் ருத்ரனுக்கு உதவியாக அங்குதான் இருந்தான்.

வீட்டுக்கு விலக்கு என சொல்லி பிறையும் அவளுக்கு துணை நான் என மங்களத்தம்மாளும் வீட்டிலேயே இருந்து கொண்டனர். மாமியார் வராதது வள்ளிக்கு கலக்கம் என்ற போதும் வந்து ஏடாகூடமாக பேசுவதற்கு இது பரவாயில்லை என மனதை தேற்றிக் கொண்டார்.

பெரிய வீட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களை பார்த்து சுடருக்கு தலைகால் புரியவில்லை. மயக்கம் வரும் நிலையாகி விட்டது. அந்த நேரம் சிவரஞ்சனி வீட்டில் இருக்கவில்லை, வேலைக்கு சென்றிருந்தாள்.

உத்தமனுக்கு பட படப்பாகி விட்டது. நடப்பது உண்மைதானா என யோசித்துக் கொண்டே இருந்தார். அவர்களின் மனநிலை புரிந்தது போல ருத்ரனின் சித்தப்பா தனராஜனும் இன்னொரு சித்தப்பா சேகரும் பேசி பேசியே அவரை இலகுவாக்கி விட்டனர்.

வள்ளியின் கடைசி ஓர்ப்படி கோதை, செங்கமலம் போல இல்லை, பேசி பேசியே ஆளை கவர்ந்து விடும் ரகம். அவர் பேசியதில் சுடருக்கும் மருட்சி நீங்கி விட்டது. வேகமாக மகளை அலங்கரித்து அழைத்து வந்தவர் பெரியவர்களின் காலில் விழுந்து  வணங்கும் படி பணித்தார்.

அந்த அடர் சிவப்பு புடவையில் ஜொலித்தாள்  கௌரி. நல்ல அழகான சாதுவான பெண், நம் குடும்பத்திற்கு ஏற்றவள் என வந்தவர்கள் நினைக்க, கலையரசனோ அண்ணனுக்கு  நல்ல அழகான பெண் வாய்க்கிறாளே என பொறாமை பட்டான்.

வள்ளிக்கு மட்டும் அவளின் முகத்தில் தெரிந்த பயம் நெருடியது. ருத்ரன் நல்லவன் என்றாலும் கரடு முரடானவன்தான், இப்படி பயப்படும் பெண் அவனுடன் எப்படி வாழ்வாள் என அவருக்கு உள்ளுக்குள் உதறல்.

மகள் இங்கே இருக்க சங்கட படுகிறாள் என்பதால் சில நிமிடங்களிலேயே அவளை உள்ளே அனுப்பி வைத்து விட்டார் சுடர்.

உத்தமன் தம்பதியரிடம் சம்மதத்தை கேட்டார் பெரியவர்.  சின்ன மகளிடம் கூட கலந்து கொள்ளவில்லை அவர்கள், மகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்க அதை ஏன் விட வேண்டும் என சம்மதம் சொல்லி விட்டனர்.

திருமணத்திற்கான நாள் குறித்து விட்டுத்தான் தன் உறவுகளுடன் அங்கிருந்து கிளம்பினார் வள்ளி.

ஊரெல்லாம் அதே பேச்சுதான். கௌரிக்கு வந்த வாழ்வை பாரேன் என ஆளாளுக்கு வியந்தார்கள்.

வீடு வந்த சிவரஞ்சனிக்கு முதலில் ஆச்சர்யம் என்றாலும் பிறகு மகிழ்ச்சிதான். உறங்கிக் கொண்டிருக்கும் அக்காவை பூரிப்போடு பார்த்து விட்டு வந்தவள் அம்மாவை ஆசையாக கட்டிக்கொண்டாள்.  தாயும் சின்ன மகளும் இரண்டு மணி நேரம் வாய் ஓயாமல் பேசிக் கொண்டனர்.

பெரிய இடத்து சம்பந்தம் குறை வைக்காமல் செய்ய வேண்டும், எப்படி சமாளிக்கலாம் என்றெல்லாம் திட்டம் போட ஆரம்பித்திருந்தனர்.

வெளியில் சென்றிருந்த உத்தமன் கவலையோடு உள்ளே வந்தார். என்னவென விசாரித்த மனைவி மகளிடம், “நகையும் பணமும் ரெண்டு நாள்ல பெரிய வீட்டம்மா தரேன்னு சொன்னாங்க, நாம செய்ற மாதிரியே கௌரிக்கு செஞ்சிடுறதாம், யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லிப்புட்டாங்க” என்றார்.

மகளுக்கு அவள் வாக்கப் படும் இடத்திலிருந்தே வாங்கி செய்கிறோமே என அவருக்கு வருத்தம்.

நம்மால் முடிந்ததையும் நாம் செய்து விடலாம் அப்பா என சிவாதான் தைரியம் சொன்னாள்.

திருமணத்திக்கு அதிக நாளும் இல்லை. இருபது தினங்களில் இருந்த முகூர்த்த நாளைதான் குறித்திருந்தார்கள்.

அன்றிலிருந்தே கௌரியை ஓட்டலில் வேலை செய்ய வர வேண்டாம் என சொல்லி விட்டார் சுடர். ஓட்டலிலும் காலை மாலை டிபன் மட்டும்தான், மதிய உணவு கிடையாது. கல்யாண வேலைகள் பார்க்க வேண்டுமே. சொல்லப் போனால் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை, அழைப்பிதழ் வைப்பது மட்டும்தான். அதுவும் அக்கம் பக்க ஊர்களிலேயே உறவுகள் இருக்க அலைச்சலும் இல்லை.

சிவா போட்டிருந்த நகை சீட்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன, இப்போது எடுத்தால் முழுப் பயனும் இருக்காது. அம்மாவிடமே இப்போதுதான் சொன்னாள்.