அதற்கு பதில் தராத ருத்ரன், “நூறு நாள் வேலை நடக்கிற இடத்துல நேத்து என்னவோ பிரச்சனையாம் சித்தப்பா, என்ன ஏதுன்னு நீங்களே பார்த்திடுங்க” என்றான். அவர்தான் ஊர் பிரஸிடெண்ட், ஆகவே தன் கவனத்துக்கு வரும் விஷயங்களை அவரின் காதில் போட்டு வைத்திடுவான்.

“நெதம் ஏதாவது ஒரு பிரச்சனை!” என அலுத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார் தனராஜன். பிறை அறையை விட்டு வெளிவரவுமே இயல்பாக செல்வது போல மாடியேறி விட்டான் ருத்ரன்.

தாத்தாவும் பாட்டியும் மாட்டு கொட்டகையிலிருந்து வந்து விட்டார்கள். செங்கமலம்தான் பெரியவர்களுக்கும் கணவருக்கும் உணவு பரிமாறியது.

 “மருமக வந்த பொறவும் நீதான் எல்லா வேலையும் பார்க்கணுமா? அவளை கேட்க என்ன உனக்கு?” என தன் ஓர்ப்படியை கடிந்து கொள்வார் வள்ளி.

“சின்ன சிறுசுக, என்ன இப்போ கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டும், ஏன் தொல்லை கொடுக்கிற?” என முந்திக் கொள்வாரே மங்களம்.

கோயில் கும்பாபிஷேகத்திற்காக நன்கொடைவசூலிக்கும் வேலை துவங்கியிருந்தது. வசதியான குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து பெரும் தொகை கொடுத்தனர். மற்றவர்களிடம் வசூலிக்கும் வேலையில் துடிப்பான இளைஞர்களை ஈடுபடுத்தியிருந்தான் ருத்ரன்.

அவர்களை உற்சாக படுத்தும் விதமாக வசூல் வேலை முடியும் வரை சுடர் உணவகத்தில் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிட்டு கொள்ள சொல்லியிருந்தான். அந்த விஷயத்தை ஓட்டலிலும் சொல்ல நினைத்தவனுக்கு அந்த மதிய வேளையில்தான் நினைவு வந்தது.

நல்ல வெயில், புல்லட்டை நிறுத்தி விட்டு ஓட்டல் வாயிலில் நின்று பார்த்தான். யாரையும் காணோம். இன்று ஓட்டல் விடுமுறை என சின்னதாக ஒரு சிலேட்டில் எழுதி கொட்டகையை தாங்கியிருந்த மூங்கிலில் தொங்க விட்டிருந்தார்கள்.

அதை அப்போதுதான் கவனித்தவன் அலுத்துக் கொண்டே திரும்ப, “யாருங்க?” என கேட்டுக் கொண்டே வந்து நின்றாள் கௌரி.

தலைக்கு குளித்து வெள்ளை துண்டை வைத்து கொண்டையிட்டிருந்தாள். அரைத்து பூசியிருந்த மஞ்சள் எதிர்வெயிலில் பட்டு அவளது முகத்தை ஜொலிப்பாக காட்டியது.

ஒரு நொடி எதற்கு இங்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டான் ருத்ரன். அவனை காணவும் கௌரியும் சின்ன பயத்தோடு தலை குனிந்து கொண்டாள்.

கால் நிமிடமாக அங்கே அமைதியே ஆட்சி கொள்ள, அவளே மெல்லிய குரலில், “என்னங்க விஷயம்?” எனக் கேட்டாள்.

“எங்க உன் அப்பா?” எனக் கேட்டான் ருத்ரன்.

“எங்க ஊருல ஒரு துக்கம், அப்பா அம்மா ரெண்டு பேரும் அங்குட்டுத்தான் போயிருக்காங்க” என்றாள்.

“ஹ்ஹான்! அப்ப இது உங்க ஊரு இல்லையா?” எனக் கேட்டான் ருத்ரன். என்ன சொல்வதென அவள் விழித்துக் கொண்டிருக்க, சிவரஞ்சனி வந்து விட்டாள்.

தங்கையை பார்க்கவுமே கௌரிக்கு அப்பாடா என ஆனது. அதற்கு ஏற்றது போல அவளே இவனிடம் என்னவென விசாரித்து கேட்டுக் கொண்டாள்.  “அப்பாகிட்ட நான் சொல்லிடுறேன், ஆனா வர்றவங்க இங்குட்டு வந்து ஏதும் சலம்ப கூடாதுன்னு நீங்கதான் எச்சரிக்கை பண்ணி வைக்கணும்” என்றாள் சிவா.

“ஏன் யாரும் ஏதும் வம்பு செய்றாவளோ?” என விசாரித்தான்.

பெரிதான வம்புகள் என இல்லை, சின்ன சின்ன தொந்தரவுகள்தான், அதைப் போய் இவனிடம் சொல்லி அவர்களை கூப்பிட்டு கண்டிக்கிறேன் என முடிந்ததை ஆரம்பித்து விடுவானோ என நினைத்த சிவா, அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்லி விட்டாள்.

“ம்ம்… வர்றவங்களும் சரியா நடப்பாங்க, இல்லைனா என்கிட்ட சொல்ல சொல்லு உன் அப்பாவை” என்றவன் கௌரியை காணும் ஆவலில் திரும்ப, அவள் எப்போதோ உள்ளே சென்றிருந்தாள். ருத்ரனும் கிளம்பி விட்டான்.

வீட்டு வாசலில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தாள் பிறை. அம்மாவிடம் தனக்கான உணவை எடுத்து வரும் படி சொல்லி மாடியிலிருந்த தனது அறைக்கு சென்று விட்டான் ருத்ரன்.

தன் மகனுக்கு முன்பு போல இங்கு இலகுவாக இருக்க முடியவில்லை என்பது வள்ளிக்கு நன்றாகவே தெரிகிறது. அவரின் மாமனார் மாமியார் இருக்கும் வரை தனியாக போவது பற்றி பேச்சு எடுக்கவே முடியாது. கடைசி மகன் தனியாக போன போதே அத்தனை ரகளை நடந்தது.

அதைவிட செங்கமலம் வள்ளியோடு மிகுந்த ஒட்டுதலோடு உள்ளவர். அதெப்படி அக்கா, இதை என்ன செய்வது அக்கா என வள்ளியின் யோசனை இல்லாமல் அவருக்கு ஏதும் ஓடாது.  கலையரசனும் எனக்கு மகன்தானே, பிள்ளை தவறு செய்தால் தள்ளி போய் விட முடியாதே என்றெல்லாம் வள்ளியிடம் எண்ணங்கள். ஆகவே தனியாக போவது பற்றிய யோசனையை கைவிட்டு விட்டார்.

ஆனால் ருத்ரனின வயதை ஒத்த ஆண்களுக்கு மணமாகி  குழந்தையுடன் குடும்பமாக வாழ்வதை காண நேரிடும் போதெல்லாம் அவருக்குள் வேதனை பரவுவதை தடுக்க முடியவில்லை. இதோ இந்த வீட்டில் இருக்கும் கலையரசன் ருத்ரனை விட நான்கு வயது இளையவன், அவன் மீது பொறாமை இல்லையென்றாலும் அவருக்கு ஆதங்கம் எழத்தான் செய்கிறது.

தன் மகனுக்கும் திருமணம் முடிந்து விட்டால் அவனும் மகிழ்ச்சியாக நன்றாக வாழ்வான் என நினைத்து மனதை தேற்றிக் கொண்டவர் மும்முரமாக பெண் பார்க்கிறார்.

அந்நியத்தில் பார்க்கும் போது ருத்ரனின் வயதை சுட்டிக் காட்டுகிறார்கள், முப்பதிரெண்டு என்பது அதீத வயதில்லை என்ற போதும் நான்கு வயது வித்தியாசம் என்றால் பரவாயில்லை அதற்கு அதிகமாக வேண்டாம் என்றே சொல்கிறார்கள்.

சொந்ததில்தான் வயது பார்க்க மாட்டார்கள், வைதேகியின் சொந்தத்திலேயே நிறைய பேருக்கு ருத்ரனை கேட்டு அப்போது முடியாது என சொல்லி விட்டார் வள்ளி,  அந்த பெண்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து விட்டது. ருத்ரனுக்கு ஏற்ற வயதில் சொந்தத்தில் இப்போது பெண்களே இல்லை எனும் நிலைதான்.

  வயதை பொருட்டாக நினைக்காதவர்கள் கிராமத்தில் பெண்ணை கொடுக்க மாட்டோம் என்கிறார்கள்,  ஒத்து வரும் வரன்களின் ஜாதகம் இவனது  ஜாதகத்துடன் பொருந்தவில்லை.

எப்படியாவது மகனுக்கு திருமணம் கை கூடி விட வேண்டும் என்ற ஆசையில் விரதம், வேண்டுதல் என இருந்தார் வள்ளி.

‘ஓட்டல்காரர் உத்தமனின் மூத்த  மகளை பெண் கேள் அம்மா’ என ருத்ரன் வந்து கூறவும் வள்ளிக்கு ஏதும் புரிபடாத நிலை.

ஒரே இனம்தான் என்றாலும் அந்தஸ்து என பார்க்கும் போது அவர்கள் இவர்களுக்கு ஈடில்லை, அந்தப் பெண்  பெரிதாக படிக்கவும் இல்லை, எப்படி இவனுக்கு அவள் மீது ஆசை வந்தது என குழம்பித்தான் போனார்.

கௌரியின் அமைதியும் அழகும் வயது வாலிபர்களை ஈர்க்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம் என்பது அவருக்கு தெரியவில்லை.

மேலும் மகனின் திருமண விஷயத்தை பிரச்சனைக்கு கொண்டு போக போகிறோம் என்பதை அறியாமலேயே செயல்பட்டார் வள்ளி.