அம்மாவிடம் தெளிவாக பேசியிருந்தான் ருத்ரன்.

“அவளை எனக்கு பேசும் போதே ஏதோ உறுத்தல் மா, சரியா வராதுன்னு தோணிட்டதான் இருந்துச்சு. நடந்து போச்சு, அதுக்காக ஒரே வீட்ல மூஞ்ச திருப்பிகிட்டு எப்படி வாழறது?  அதை விட…” என சொல்லத் தயங்கியவன் குரலை செருமிக் கொண்டு, “அவ நினைப்பு எனக்குள்ள இருக்கிறதா அர்த்தம் வந்திட்டா அபத்தம் ஆகிப் போகும் மா. விட்டுத் தள்ளு” என்றான்.

பின்னர்தான் வள்ளியும் பிறையோடு பேசத் துவங்கினார். ஆனால் வைதேகி இவர்கள் மீது கோவத்தில்தான் இருக்கிறாள். அதை வெளிப்படையாக காட்டவும் செய்வாள்.

அந்த திருமணம் இந்த குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்த போகிறது என ஊரே எதிர்பார்த்ததுதான். ஆனால் வெளிப்பார்வைக்கு சுமூகமாகவே செல்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பே என் மகனுக்கு பெண் பார்க்கையில் பிறையின் படிப்பை காரணமாக்கி தடுத்தார்கள். இப்போது மகனுக்கு வயது ஓடி விட்டதே, எங்கே எப்படி பெண் பார்ப்பேன் என வள்ளிக்கு நல்ல மனஉளைச்சல்.

அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து இடுப்பில்  கட்டிய துண்டுடன் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் ருத்ரன். சிவரஞ்சனி  இவனது வீட்டை நோக்கி வருவது தெரியவும் யோசனையானான்.

இரவில் அந்த பிளவுஸ்  கொடுத்ததில் ஏதும் பிரச்சனையோ என தோன்ற வேகமாக ஆடையணிந்து கொண்டு கீழே சென்றான். சிவா அவனது அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கவும் வேறு ஏதோ என புரிந்து தள்ளியே அமர்ந்து தினசரியை கையில் எடுத்துக் கொண்டான்.

சிவா ஒரு லட்ச ரூபாய் சேமித்து வைத்திருக்கிறாள். அதை வட்டிக்கு விட்டு பெருக்க விரும்புகிறாள். யாரை நம்பி யாருக்கு கொடுப்பாள். ஆகவே வள்ளியின் மூலமாக கொடுக்க வைக்கலாம் என நினைத்து வந்திருக்கிறாள்.

வழக்கமாக வள்ளி எத்தனை சதவீதம் வட்டிக்கு விடுவாரோ அப்படியே விடட்டும், ஒரு சதவீத வட்டியை அவர் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தனக்கு கொடுத்தால் போதும் என சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நல்லாத்தான் இருக்கு உன் யோசனை. உன் அம்மா என்னடான்னா போன வாரம்தான் ஏதோ கல்யாணத்துக்கு சீர் செய்யணும்னு இருபதினாயிரம் மூனு பைசா வட்டிக்கு வாங்கிட்டு போச்சு. நீ சுளையா ஒரு லட்சம் எடுத்திட்டு வந்திருக்க?” என்றார் வள்ளி.

“ஐயோ அம்மாக்கு தெரியக்கூடாது இது. அக்காக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணனும், அதுக்காகத்தான் சேர்க்கிறேன்” என்றாள் சிவா.

சுடர்க்கொடியின் குடும்ப விவரம் அனைத்தும் அறிந்தவர் வள்ளி. தனக்காக என சொல்லாமல் அக்காவுக்காக என சொல்பவளை வாஞ்சையாக பார்த்தார். “தங்கம் விலை ஏறிகிட்டே போகுதே, நகை நட்டா வாங்கி போடலாமே ஆயி” என்றார்.

பட்டுக்கோட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் மாத சீட்டு போட்டிருக்கிறாளாம், அது போக இருவருக்கும் என பொதுவாக இருக்கும் சொற்ப நகைகளில் தனக்கென எடுத்துக் கொள்ளாமல் அக்காவுக்கே கொடுத்து விடுவாளாம்,  இது கல்யாண செலவுக்கு வேண்டுமாம்.

“அதுசரி எல்லாம் உன் அக்காளுக்குன்னா உனக்குன்னு எப்ப சேர்ப்ப?” எனக் கேட்டார் வள்ளி.

அவளுக்கு இப்போதைக்கு திருமணம் இல்லையாம், குறைந்தது நான்கைந்து வருடங்கள் ஆகி விடுமாம். என் அக்காவுக்கு திருமணம் முடித்தால் ஆகிற்றா? அடுத்து  அவளுக்கு பிள்ளை உண்டாகும், வளைகாப்பு செய்ய வேண்டும், பிரசவம் பார்க்க வேண்டும், குழந்தைக்கு பெயர் வைத்து, காதணி விழா நடத்துவது என நீண்டு கொண்டே இருக்குமே நிகழ்ச்சிகள், அனைத்தையும் முடித்து விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக  வரும் பையனை மணந்து கொள்வாளாம்.

கேட்டுக் கொண்டிருந்த ருத்ரனுக்கு தன்னால் புன்னகை பூத்தது.

“ஆத்தாடி! சீயாரமா அழைச்சிட்டு வந்திடுவியா உம் புருஷனை!” மோவாயில் கை வைத்து அதிசயித்தார் வள்ளி.

“என்ன சொல்றீங்க?” புரியாமல் கேட்டாள்.

“என்னத்தடி கேட்குற?” என வள்ளியும் அவளின் சந்தேகம் புரியாமல் கேட்டார்.

“ம்மா… சீயாரம்னா என்னன்னு தெரியாம கேட்குது போல” என்றான் ருத்ரன்.

தள்ளி உட்கார்ந்து கொண்டு என் விஷயங்களுக்கு  காது கொடுத்திருக்கிறாரா என பார்த்த சிவாவுக்கு, இவனுக்கு தெரியும் படி சொந்த விஷயங்களை சொல்லி விட்டோமே என இருந்தது. இத்தனை விவரங்களை இந்த வள்ளியம்மாவிடமும் சொல்லியிருக்க வேண்டாமோ எனவும் நினைத்தாள்.

“சீயாரம் சீயார புத்திரன் அப்படினுல்லாம் வீட்டோட மாப்பிள்ளையா வர்றவரை சொல்றது, உன் அக்காளுக்கு எல்லாம் செஞ்சு உன்னை பெத்தவங்களையும் விடக்கூடாதுன்னு பார்க்கிறியே! ஆனாலும் கெட்டிக்காரிதான் ஆயி நீயி! சும்மா சொல்லக்கூடாது சுடரு சூட்டிகையான பொண்ணைத்தான் பெத்திருக்கா. சரி ஆயி நீ சொன்ன விஷயத்துக்கு வருவோம், உனக்கு மாசா மாசம் வட்டிப் பணம் கைல வேணுமா, ஏன் கேட்கிறேன்னா வருஷம் கழிச்சு வாங்கிக்கிட்டீனா அரை பெர்சண்ட் கூடுதலா வட்டி போட்டு தருவேன்” என்றார் வள்ளி.

கணக்கு போட்டு பார்த்த சிவா, வருடம் முடிந்தே வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி விட்டாள்.

நன்றி சொல்லி விட்டு கிளம்ப போனாள் சிவா.

“காபி டீ ஏதாவது குடிச்சிட்டு போலாம் ஆயி” என்றார் வள்ளி.

தினசரியை விலக்கி அம்மாவை வினோதமாக பார்த்தான் ருத்ரன். ஏனென்றால் இப்படி பண விவகாரமாக வருபவர்களிடம் கடினத் தொனியுடன்தான் நடந்து கொள்வதுதான் அவரின் வழக்கம். இளக்கம் இருந்தால் சலுகை எடுத்துக் கொள்வார்கள் என்பதால் அப்படி.

ஏதும் வேண்டாம் என மறுத்த சிவா, “இந்த விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும், தயவுசெஞ்சு என் வீட்ல யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்” என இன்னொரு முறை அழுத்தி சொன்னாள்.

“அதெல்லாம் சொல்ல மாட்டேன் ஆயி” என வள்ளி உறுதி கொடுக்க, சிவாவின் பார்வை ருத்ரனிடம் சென்றது. அந்த சமயம் அவனும் இவர்களைத்தான் பார்த்திருந்தான், அவளது பார்வைக்கான அர்த்தம் புரிந்து அம்மாவை முறைத்தான்.

வள்ளிக்கு ஏனோ சிரிப்பு வந்து விட்டது.

“நீயும் ஒரு வார்த்தை சொல்லுடா ருத்ரா” என அம்மா சொல்லவும் கடுப்பாகி விட்டான்.

ருத்ரனின் காட்டமான முகத்தை பார்த்து அதிர்ந்த சிவா, பாவமாக வள்ளியை பார்த்தாள்.

“அவனும் சொல்ல மாட்டான் ஆயி, தைரியமா போ” என சொல்லி அவளை அனுப்பி வைத்தார் அவர்.

“என்னம்மா அந்த பொண்ணு நைட் என்னை எதிர்த்து பேசிட்டான்னு கோவப்பட்ட, இப்ப என்னமோ பரிவா நடக்கிற?” எனக் கேட்டான் ருத்ரன்.

“வந்த உடனே அம்புட்டையும் அவளே சொல்லிபுட்டா. நேத்து வந்தவனோட துணிதானாம் அது. டைலர்கிட்ட காலைலதான் பேசி தெரிஞ்சுக்கிட்டாளாம். ஆனாலும் அவ பக்கம் சரிதானேடா? பொண்ணு நல்ல விவரம், அம்மாளை போல இல்லாம அவ அம்மாச்சிய கொண்டு பொறந்திருக்கா” என்றார் வள்ளி.

“பெத்தவங்க திறமையில்லாம போனா  பாவம் புள்ளைக படாத பாடு படுதுக” என பொதுவாக சொல்லி விட்டு ருத்ரனும் தினசரியில் கவனம் வைக்க ஆரம்பித்து விட்டான்.

மாடுகளுக்கு தீவனம் வாங்க பணம் பெற வந்தான் சொக்கன். பணத்தோடு, முதல் நாளே காய வைத்திருந்த மல்லி மிளகாயை கொடுத்து அதையும் அரைத்து வந்து விடு என அனுப்பி வைத்தார் வள்ளி.

அதிகாலையே வெளி வேலையாக சென்றிருந்த தனராஜன் வீடு வந்தார். பூச்சி கடியால் பாதிக்க பட்ட தென்னை மரங்கள் என்னவானது என ருத்ரனிடம் விசாரித்தார். அவனும் விவரம் சொல்ல, “இன்னும் இந்த பய எழும்பலையா?” என கலையரசனை நினைத்து அதிருப்தியாக கேட்டார்.