“தூரமா இருந்தா ஒன்னுமில்லப்பா, பக்கத்துல இருந்துகிட்டே எங்களை அவங்களால பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே? எப்ப எங்கள பார்க்கணும்னாலும் சொல்லுங்க, புள்ளைய தூக்கிட்டு வந்திடுறேன்” என பெற்றோரை சமாதானம் செய்து விட்டாள்.
குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் சிவா. அழுகை கட்டுக்கடங்காமல் போகும் போதெல்லாம் மகனை காரில் வைத்து மனைவியிடம் கொண்டு செல்வான் ருத்ரன்.
“ஏன் இப்படி அல்லாடணும்? அவ கொண்டு வந்துதான் வீடு நெறையுதா? வேலைய வுட சொல்லுடா” என பாட்டி சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார்.
ருத்ரனும் வள்ளியும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் துணையோடுதான் இப்போது மேலதிகாரியாக பட்டுக்கோட்டை அஞ்சலகத்தில் பணியில் இருக்கிறாள் சிவா. அவர்களின் தைரியத்தில்தான் இன்னொரு குழந்தையும் பெற்றுக் கொண்டாள்.
மனைவிக்கு புடவை கட்ட மட்டும் நேரம் கொடுத்த ருத்ரன், “ஏட்டி நகையெல்லாம் கார்ல வச்சு போடுடி, நேரத்தை பாரு” என்றான். அவனை முறைத்துக் கொண்டே நகை இருந்த பையை அவன் கையில் கொடுத்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் சிவா.
காரில் வைத்தும் மகள் படுத்தி வைக்க, அவளை மட்டும்தான் சிவாவால் கவனிக்க முடிந்தது.
மண்டபம் வரவும் முறைத்த மனைவியை கண்டு கொள்ளாமல் மகளை வாங்கிக் கொண்டு மகனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
கணவனை கடிந்து கொண்டே சிவாவும் உள்ளே வர, வைதேகி வந்து அவளை அழைத்து சென்றாள்.
“அண்ணி உங்களுக்கு நல்லா மேக்கப் போட்டு விடணுமாமாம், ஒரு குறை நீங்க சொல்லப்படாதாம், அண்ணன் சொல்லியிருக்கு” என்றாள் வைதேகி.
“அட ஏன் அத்தாச்சி அந்த பாடு படுத்தி இழுத்துகிட்டு வந்தாரு மனுஷன், அப்படி என்ன தலை போற வேலை அவருக்கு இங்க காத்து கெடக்குதாம்?” எனக் கேட்டாள் சிவா.
“அதானே, இப்படியா பண்ணும் அண்ணன்?” என வைதேகி கேட்க, “நல்லா சொன்ன, ரெண்டு வார்த்தை நானும் சூடா கேட்டுப்புடுறேன்” என்றார் கோதை.
“எல்லாரும் சேர்ந்து கேப்போம்” என்றாள் செங்கமலத்தின் மூத்த மகள்.
“அச்சச்சோ இதென்ன இப்படி ரவுண்டு கட்டுறீங்க! அவங்களுக்கு வேலை இருக்கோ இல்லியோ குடும்பத்துக்கு மூத்த புள்ளையா முன்னுக்கு நிக்க வேணாமா? அதான் சீக்கிரம் அழைச்சிட்டு வந்திட்டாங்க” என்றாள் சிவா.
கொல் என அனைவரும் சிரித்து விட்டனர். சிவா பாவமாக வைதேகியை பார்க்க, “நீங்களே குறை சொல்லுவீய, அத என்னான்னு யாரும் கேட்டா நீங்களே அண்ணனுக்கு வக்காலத்தும் வாங்குவீய, பொறவு சிரிக்காம என்ன பண்ணுவாவோ அண்ணி?” எனக் கேட்டாள் வைதேகி.
“சின்ன பாப்பா உங்க மாமியாகிட்ட” என்ற செங்கமலத்தின் மகள் சிவாவை சுட்டிக் காட்டி, “இந்த பெரிய பாப்பா உங்க நாத்தனாருங்ககிட்டன்னு ஒப்படைச்சுருக்காக எங்க அண்ணன். மூஞ்ச காட்டுங்க, இந்த ரூஜ் பவுடர் கொஞ்சம் கன்னத்துல தடவி விடுறேன், அண்ணி கன்னம் சிவக்குறதெல்லாம் மத்தவக பாத்தா கண்ணு படுமா இல்லையா?” என்றாள்.
“நான் எங்க அத்தாச்சி வெட்க பட்டேன், எல்லாரும் சேர்ந்துகிட்டு ஓட்ட புது ஜோடி வர போவுது, இனியாவது எங்கள ஆள வுடுங்க” என்றாள் சிவா.
“அப்படிலாம் வுட முடியாது, எத்தன புது ஜோடி வந்தாலும் நல்லா நையாண்டி செய்ய உங்க ரெண்டு பேரு மாதிரி யாரும் கன்டெண்ட் கொடுக்க மாட்டேங்குறாவோளே!” என்றாள் கோதையின் மகள்.
“ஏட்டி நீயுமாடி!” என சிவா வியக்க, இரு கண்களையும் சிமிட்டி சிரித்தாள் கோதையின் மகள்.
கோதையின் மகனுக்கு காதல் திருமணம்தான், சிவாதான் கணவனிடம் பேசி அவனை கொண்டு நடத்தி தருகிறாள்.
கலையரசன் இப்போது நண்பனுடன் சேர்ந்து உணவகத்தைதான் பார்க்கிறான். அவனுக்கும் பிறைக்கும் குழந்தைபேறு தள்ளிப் போய் சென்ற வருடம்தான் ஒரு மகன் பிறந்தான். தனராஜன் ஒருவரால் நிலங்களையெல்லாம் பார்க்க முடியவில்லை, குத்தகைக்கு எடுத்துக் கொள் என ருத்ரனிடம் கேட்டுப் பார்த்தார். உறுதியாக மறுப்பு சொல்லி விட்டான்.
இப்போது சேகர்தான் குத்தகைக்கு பார்க்கிறார், சகோதரர்களுக்குள் மனக் கசப்பு வரும் போது ருத்ரன் சமாதானம் பேசி வைப்பான். சேகரும் இந்த வருடத்திற்கு பின் ஒதுங்கிக் கொள்வது என இருக்கிறார்.
சொக்கனுக்கும் கௌரிக்கும் இரண்டு பிள்ளைகள். சுடரும் உத்தமனும் மகள் மருமகன் உடன் நிம்மதியாக இருக்கிறார்கள்.
தாத்தா, பாட்டி இருவருக்கும் உடல் மிகவும் தளர்ந்து விட்டது. அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.
நல்ல படியாக திருமணம் முடிந்தது.
காரில் ஊர் சென்று கொண்டிருக்கும் போதே குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டாள் சிவாவின் புத்திரி. வீடு வந்து மாடியறையில் உள்ள தொட்டிலில் போட்டு ஆட்டி விட்டாள் சிவா. விரல்களை வாயில் வைத்துக்கொண்டு மொச்சை கண்களை விரித்து விரித்து பார்த்தாள் குட்டிப் பெண்.
செல்லமாக மகளை முறைத்த சிவா, “வெளில போனா வேடிக்கை பார்க்க வேணாம், இப்படியாடி அழுது ஊரை கூட்டுவ?” என கடிந்தாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ வீல் என அடுத்த அழுகையை துவங்கியது.
“ஏட்டி ஏன்டி அழுவ வுடுற?” மகனுக்கு ஆடை மாற்றிக் கொண்டே கேட்டான் ருத்ரன்.
“ஹஹான் உங்க பொண்ண ஒரு வார்த்தை சொல்லக்கூடாது, ரோஷம் பொத்துகிட்டு வந்திடும். நீங்க வந்து பாருங்க” என்றாள் சிவா.
எழுந்து வந்தவன் தொட்டிலை விரித்துப் பார்த்தான்.
“உல்லலு… என்னடாம்மா… அம்மா திட்டினாளோ அவ கெடக்கா, எங்கம்மா சமத்துல்ல…” என அப்பா கொஞ்சவும் மீண்டும் விரல்களை வாயில் திணித்துக் கொண்டாள் செல்லப் பெண்.
“நீதான் விரலை எடுத்து எடுத்து விடுவ, இப்ப இப்படி சொல்லுற, நேரத்துக்கு தக்க மாத்தி மாத்தி பேசுற புள்ள. இவ ஒன்னும் தூங்குற மாதிரி தெரியலை. இப்பவே சொல்லுறேன் புள்ள இவ வளந்தா நமக்கு நெறைய சோலி கொடுப்பாடி” என சொல்லி சிரித்தான்.
“ஆமாம் அதுல பெருமை வேற?” என நொடித்தாள் சிவா.
“பொறவு பதிவிசாவே இருக்கணுமா?” என்றவன் மகளை தூக்க போக, மீண்டும் அழுகை.
அவனின் சுட்டி மகளுக்கு தொட்டிலில்தான் படுக்க வேண்டுமாம், யாராவது செல்லம் கொஞ்சிக் கொண்டே ஆட்டி விட வேண்டுமாம். அரை மணி நேரம் ஆட்டி மகளை உறங்க வைத்தவன் பெரு மூச்சுடன் மனைவியின் பக்கம் பார்த்தான்.
மகன் சமத்தாக அம்மாவின் பக்கத்தில் படுத்து உறங்கிப் போயிருந்தான்.
“சரி நீயும் செத்த கண்ணசரு, நான் சித்தப்பா வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு வாரேன்” என்றான்.
வேகமாக எழுந்த சிவா, “பொண்ணு மாப்ள எல்லாம் பொண்ணு வீட்டுக்கு போயாச்சு. அங்கே எந்த வேலையும் இல்லை இப்போ, உங்க உடம்பு அலுக்கல, ஒழுங்கா செத்த நேரம் படுக்குறீங்க” என கண்டிப்போடு சொன்னாள்.
“போலாங்க, ரெஸ்ட் எடுத்திட்டு போலாம். உடம்பு நல்லாருந்தாதான் எந்த வேலையும் செய்ய முடியும்” என்றவள் கணவனை இழுத்து மகனின் பக்கத்தில் படுக்க வைத்தாள்.
அவன் மனைவியையும் தன்னிடம் இழுத்துக் கொண்டான். இரண்டாவது பிரசவம் ஆன பிறகு கணவனுடன் இப்படி நெருங்கியிருப்பதை அவளால் அனுபவிக்க முடிவதில்லை. முழு நேரத்தையும் மகளே எடுத்துக் கொள்கிறாள்.
இப்போது இந்த தருணத்தை விடாமல் கணவனை அணு அணுவாக உணர்ந்து கொண்டாள். அவளின் மனம் அறிந்தவன் போல அவனும் அவளை அணைத்து, இதமாக வருடி என ஆசுவாசப் படுத்தினான்.
ருத்ரேஷ்வரன், சிவரஞ்சனி இருவருக்கும் புரிதல், அன்பு, காதல் எல்லாம் நிறைந்த பூரணமான வாழ்க்கைதான்!