அவர் சொன்ன விதமே பயப்பட ஏதுமில்லை என்பதை சொல்லி விட, கணவனும் மனைவியும் ஆவலாக அவரை பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் சிவா கருவுற்றிருக்கும் செய்தியை சொன்னார் மருத்துவர்.
குழந்தை ஆசையிருந்தாலும் இப்போது வரும் என எதிர்பார்திருக்கவில்லை இருவரும். அவன் அமைதியாகி விட்டான். அந்த மருத்துவமனையிலேயே உள்ள மகப்பேறு மருத்துவரை பார்க்கும் படி அனுப்பி வைத்தார் மருத்துவர்.
வெளியில் வரவுமே கணவன் முகத்தைத்தான் பார்த்தாள் சிவா. அவன் வெட்கப்பட்டு சிரித்தான்.
“ஆள பாரு! பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப என்ன வெக்கமா?” என கிண்டல் செய்தாள் சிவா.
“ஆமாம் புள்ள நீ எதுவுமே செய்யலங்கிற மாதிரி பேசாத” என்றான்.
“அத்தைகிட்ட சொல்லணும்” என்றாள்.
“இப்ப நான் சொன்னது நமக்குள்ளடி, அதை எதுக்கு அம்மாகிட்ட சொல்லணும்?” என ருத்ரன் கேட்கவும் வாய் விட்டு சிரித்தாள் சிவா.
மகப்பேறு மருத்துவரையும் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். சிவாதான் தன் மாமியாரிடம் சொன்னாள். மருமகளை அணைத்துக் கொண்டு விட்டவர் அவளின் கன்னம் வழித்து தன் மகிழ்ச்சியை சொன்னார்.
வைதேகி தவிர மற்ற உறவுகள் கிளம்பியிருந்தனர். பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டுதான் மாடிக்கு வந்தாள் சிவா. கேசரி செய்து மகிழ்ச்சியை கொண்டாடினாள் வைதேகி.
உடனே அனைவருக்கும் சொல்ல வேண்டாம், ஒரு மாதமாவது ஆகட்டும் என பாட்டியே சொல்லி விட்டார். தன் பெற்றோருக்கு மட்டும் கைப்பேசி வாயிலாக விவரம் சொன்னாள் சிவா. அவர்களுக்கும் ஆனந்தம்.
ருத்ரனால் வீட்டில் இருக்க முடியவில்லை, கோயிலில் நாற்பத்து எட்டு நாட்களுக்கு சிறப்பு மண்டல பூஜை இருக்கிறது. இன்று இவர்களின் குடும்பம் சார்பாக செய்யப் படுவதால் இவன் சென்றே ஆக வேண்டும்.
கோயிலுக்கு மக்கள் வந்தும் போயும் இருந்ததால் அந்த தெருவே பர பரப்பாகத்தான் இருந்தது.
சிவாவுக்கு உறக்கம் வரவில்லை என்றாலும் படுத்திருக்கவே தோன்றியது. கர்ப்பம் என தெரிந்த தெரிந்த முதல் நாளே இப்படியா என பயந்தும் போனாள்.
சற்று நேரம் சென்று எழுந்தவள் மாடியில் நின்று கொண்டே கீழே வேடிக்கை பார்த்தாள். கோயிலுக்கு போகும் வழியில் இருமருங்கிலும் குழல் விளக்குகள் அமைக்க பட்டிருந்தன. அங்கு ஏதோ வேலை நடந்து கொண்டிருக்க ருத்ரனும் அங்கு இருந்தான்.
எதேச்சையாக நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள் சிவா. என்னவென அவன் பார்வையால் கேட்க, உதடுகள் பிதுக்கி சலுகையாக செல்லம் கொண்டாடினாள். புன்னகை செய்தவன், மீண்டும் வேலை பார்ப்பவனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.
அவள் அங்கேயே நின்றிருக்க, “ஆயி உங்களையே பார்த்திட்டு நிக்கிறாகளே, என்ன சேதியோ” என்றான் வேலை செய்பவன்.
“அவ சும்மா வேடிக்கை பார்க்கிறா, நீ இங்குட்டு வேலைய பாரு” என்றவன் மனைவியை கடுமையாக பார்த்து ‘உள்ளே போ’ என்றான்.
முணு முணுப்பாக ஏதோ சொல்லிக் கொண்டே அவள் செல்வதை கண்டவன் எந்த வினையும் ஆற்றவில்லை.
இரவிலும் அன்னதான சாப்பாடுதான். இப்போது சிவாவுக்கு தேவலாம் போலிருக்க வீட்டுப் பெண்களுடனே சாப்பிட்டு வீடு திரும்பு விட்டாள்.
ஊரடங்கிய பிறகுதான் வீடு வந்து சேர்ந்தான் ருத்ரன். உறங்காமல் மாடியின் வெளிப் பகுதியில் நடை போட்டுக் கொண்டிருந்தாள் சிவா.
ஹாலின் பின் பக்க வாயிலில் மனைவியை பார்த்துக் கொண்டே நின்று விட்டான் ருத்ரன்.
அவளும் கணவனை பார்த்தவள் மாலையில் தன்னை அதட்டியதால் முகம் திருப்ப நினைத்தாள். ஆனால் முடியவில்லை, வேகமாக கணவனை நோக்கி நடந்தாள். அவனும் அவளை நோக்கி நடந்து பாதி வழியிலேயே அவளை எதிர்கொண்டான்.
மனத் தாங்கலை சொல்லும் விதமாக அவன் மார்பில் இரண்டு முறை குத்தியவள் அடுத்து நொடியே அவனை கட்டிக்கொண்டாள்.
அவளை தரையிலிருந்து லேசாக தூக்கியபடி அணைத்துக் கொண்டான். சில நிமிடங்களுக்கு பின் கீழிறக்கி விட்டு, “என்னடி வாட்டம்?” என விசாரித்தான்.
“மசக்கை படுத்தி வைக்குமோ, எப்படி வேலைக்கு போறது, எப்படி என் சண்டியரை சமாளிக்கன்னு ஒரே யோசனை” என்றாள்.
“அதெல்லாம் நீ சமாளிச்சுப்புடுவ புள்ள, சங்கடம் வர்றப்ப பார்த்துக்கிடலாம், இப்பவே குழம்பிக்குவியா?”
“அப்படிங்கிறீங்க?”
“ஆமாம், இப்ப உறங்கலாம், காலைல வேலைக்கு போ வேணாமா?” எனக் கேட்டவன் விரைவாக ஆடை மாற்றிக் கொண்டு நாடாக் கட்டிலை எடுத்துப் போட்டான்.
கணவன் அருகில் இருக்கவும் மாலையில் தோன்றிய பயமெல்லாம் மறைந்து பலப் பட்டு போனது அவளின் உள்ளம்.
அலுப்பில் ருத்ரன் விரைவாக உறங்கி விட, அவனைப் போலவே குழந்தை வேண்டும் என்ற ஆசையோடு சிவாவும் இமைகளை அடைத்தாள்.
சில வருடங்களுக்கு பின்…
ஐந்து வயது மகனை குளிக்க வைத்து ஆடை போட்டு விட்ட ருத்ரன், “எம்புட்டு நேரம்டி சீக்கிரம்” என மனைவியை அவசர படுத்தினான்.
“நைட்டு முழுக்க அங்கதானே கெடந்தீங்க, செத்த இருங்க” என கணவனை அதட்டி மகளை அவனிடம் ஒப்படைத்தவள் வேகமாக புடவை கட்ட ஆரம்பித்தாள்.
குழந்தையை தூக்கவெல்லாம் இப்போது ருத்ரனுக்கு பயமில்லை, அழகாக கையாள்வான்.
கோதையின் மகனுக்குத்தான் திருமணம். ஏழரை மணி முகூர்த்தத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் மனைவி பிள்ளைகளை தயாராக வைத்திருந்தான். பட்டுக்கோட்டையில் திருமணம் நடக்க, வீட்டினர் எல்லாம் அங்கேயே தங்கி விட்டனர்.
சின்ன குழந்தை வைத்துக்கொண்டு மனைவிக்கு சரியாக வராது என்பதால்தான் அவளை இரவில் வீட்டிலேயே கொண்டு வந்து விட்டிருந்தான்.
அப்பாவிடம் சற்று நேரம் அமைதியாக இருந்த மகள் அழ ஆரம்பித்து விட்டாள். பெரியவன் விளையாட்டு காண்பித்து பார்த்து சோர்ந்து போனவனாக, “பாப்பா ரொம்ப சேட்டைப்பா” என்றான்.
“நீ பண்ணாததாடா?” எனக் கேட்ட ருத்ரனுக்கு மகன் பற்றிய நினைவுகள்.
சிவாவின் பிரசவத்தின் போது சுடரும் அம்மாவாக மருத்துவமனையில் இருந்து எல்லாம் பார்த்தார். உன் அம்மா வீட்டில் இருந்து கொள், எனக்கு பிரச்சனை இல்லை என ருத்ரன்தான் அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆனால் மனைவி மகனை பார்க்க அவன் அங்கு வர மாட்டான். அவனால் சாதாரணம் போல அங்கு செல்ல முடியவில்லை. வள்ளிதான் குழந்தையை தூக்கி வந்து மகனிடம் காட்டி விட்டு மீண்டும் மருமகளிடம் கொண்டு போய் விடுவார்.
மகனுக்கு முதல் தடுப்பூசி போட கணவனுடன் மருத்துவமனை சென்ற சிவா, திரும்பவும் ஊருக்கு வந்த போது புகுந்த வீட்டுக்கே சென்று விட்டாள்.