கோயில் பணிகள் எல்லாம் நிறைவடைந்து அன்றைய தினம் குடமுழுக்கு நடக்க இருந்தது. சிவரஞ்சனி அவளது மாமியார் நாத்தனார் மற்ற இரு சின்ன மாமியார்கள், பாட்டி என பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து நின்றிருந்தாள். மற்ற ஆண்கள் எல்லாம் ஏதாவது வேலையாக இருந்தனர்.
விடியற்காலையில் வீட்டிலிருந்து கிளம்பிய ருத்ரனை இன்னும் பார்த்திருக்கவில்லை சிவா. ஏற்றுக் கொண்ட பொறுப்பை குறையின்றி செய்து முடிக்கும் முனைப்பில் இருந்தான் அவன்.
மேள தாளம் முழங்க புனித நீர் நிறைந்த குடங்களோடு புரோகிதர்கள் மர ஏணி வழி ஏறி கோபுரத்தை அடைந்தனர். கருடன் வருகைக்காக அனைவரும் காத்திருக்க, அக்கம் பக்கம் ஊர் மக்களும் திரலாக வந்திருந்ததில் நல்ல கூட்ட நெரிசல்.
கணவனின் அதட்டும் குரல் கேட்டுத்தான் தலையை திருப்பிப் பார்த்தாள் சிவா. கையிலிருந்த துண்டையே ஆயுதமாக்கி கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான் ருத்ரன்.
கால்களால் எம்பி கையை காட்டி கணவனை அழைக்க முயன்று கொண்டிருந்தாள் சிவா.
“சும்மான்னு இருடி, இம்புட்டு கூட்டத்துல அவனால உன்னைய பார்க்க முடியாது” என்றார் வள்ளி.
மாமியார் சொன்னதில் அமைதியாக நின்றாலும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள் சிவா.
கருடன் வட்டமடிக்க குடமுழுக்கு நடந்தது. அனைவரும் மேல் நோக்கி பார்த்து கையெடுத்து கும்பிட்டனர்.
பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப் பட, கோயிலின் உட்பக்கமாக கூட்டம் நகர்ந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தன் கையை யாரோ பிடிக்கவும் தொடுகையை வைத்தே கணவன்தான் என அறிந்து நிமிர்ந்து பார்த்தாள், அவனேதான்.
கூட்டம் மனைவியை தள்ளி விடாதவாறு அரணாக நின்று கொண்டான். மனைவிக்கு முன்னால் மற்ற குடும்ப பெண்கள் நின்றிருக்க அவர்களும் பாதுகாப்பாகவே இருந்தனர்.
சில நிமிடங்களில் நெரிசல் குறையவும், “பத்திரமா நில்லுங்க, நான் வர்றேன்” என சொல்லி சென்று விட்டான்.
“என்னாடி ஆசைப்பட்ட மாதிரியே அவன் பக்கத்துல நின்னு கும்பாயிசம் பார்த்துப்புட்டியா?” எனக் கேட்டார் வள்ளி.
சிவா புன்னகை செய்ய, “அண்ணனுக்கு தலைக்கு மேல அம்புட்டு வேலை, இருந்தாலும் உங்களுக்காக ஓடி வந்திடுச்சே” என்றாள் வைதேகி.
“ஆக்கிப்புடுவன்னு சொல்லாதடி, அதெல்லாம் எப்பவோ ஆக்கிப்புட்டாவோ. அவுக அவுகளோட மவன் மருமவ எல்லாம் ஒரு செட்டு, நாம தனிதான்” என்றார் கோதை.
செங்கமலமும் அப்படித்தான் என சொல்ல, “கோயில்ல வந்து குடும்ப அரசியல் பேசாதீய!” என கடிந்தார் பாட்டி.
“உன் ஆத்தாளுக்கு வெவரமான காது, மவளும் செல்லமான பேத்தியும் எடக்கு மடக்கா பேசினா அந்த சேதியெல்லாம் காதுல வுழுகாது, நாம பேசுறது மட்டும் கரெக்ட்டா வுழுவும்!” என வைதேகியிடம் கிசு கிசுப்பாக சொன்னார் கோதை.
பேசாமல் இருங்கள் என வள்ளியும் கடிய, அமைதியாகி விட்டனர்.
அன்னதான பந்தி ஆரம்பித்திருந்தது. இப்போது ஊர் ஆண்கள் எல்லாம் அங்குதான். கூட்டம் குறையட்டும் என ருத்ரன் வீட்டு பெண்கள் வீடு திரும்பி விட்டனர்.
கௌரியும் சொக்கனும் உத்தமன் நடத்தும் ஓட்டலை கவனித்துக் கொள்கின்றனர். தேநீர் கடையும் போட்டிருக்கிறான் சொக்கன். பகலில் எந்நேரமும் இயங்குகிறது. வடை, பஜ்ஜி எனவும் விற்பனையாக கடை நன்றாகவே செல்கிறது. ருத்ரன் அந்தப் பக்கம் செல்வதில்லை, மற்றபடி ஊராருக்கு அந்தக் கடை ஒரு நாள் மூடப் பட்டிருந்தாலும் கடினம் என்ற நிலை.
யாருமற்றவன், வசதியில்லாதவன், படிப்பில்லாதவன் என சொக்கனிடம் பல குறைகள் இருந்தாலும் உழைப்பால் அனைத்தையும் சரி கட்டியிருந்தான். தங்கள் மகளை நன்றாக வைத்துக்கொள்கிறான், நம்முடனே இருப்பதால் ஆண் மக்கள் இல்லாத நமக்கு துணையாகவும் ஆயிற்று என சுடரும் உத்தமனும் அவனை மனதார ஏற்றுக் கொண்டு விட்டனர்.
தன் காதலியை தன் முதலாளிக்கு வரனாக பேசியதும் தள்ளி நிற்க நினைத்துதான் அமைதியாக இருந்திருக்கிறான் சொக்கன். கௌரியோ பிடிவாதமாக நீ இல்லை என்றால் உயிர் வாழ மாட்டேன் என சொல்லி விட்டாள். ருத்ரனிடம் சொல்லும் காலம் எல்லாம் கடந்து போயிருக்க, பயத்தில் ஊரை விட்டு சென்று விட்டனர்.
ஒரு நாள் ருத்ரனை சந்தித்து இதை சொல்லி மன்னிப்பு கேட்டான் சொக்கன். “சரி போ” என்பதோடு முடித்துக் கொண்டான் ருத்ரன். ஆனால் விழுந்து பழகவெல்லாம் ருத்ரனால் முடியவில்லை, எப்போதும் போல விலகியே நின்று கொண்டான்.
பிறந்த வீட்டுடன் நீ பழக எந்தத் தடையுமில்லை என ருத்ரன் சொல்லியிருந்தாலும் சிவா அளவாகவே போக்குவரத்து வைத்துக்கொண்டாள். கைப்பேசியில் பெற்றோரிடம் தினமும் பேசி விடுவாள், ஆனால் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு அவசியம் என்றால் மட்டுமே செல்வாள். கணவனுக்கு சங்கடம் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொண்டாள்.
கலையால் பாதிக்க பட்ட பெண்ணை பட்டுக்கோட்டையில் தையல் வகுப்பில் பயில வைத்திருக்கிறான் ருத்ரன். இது முடித்து பிளவுஸ்களுக்கு ஆரி வேலைப்பாடு செய்யவும் கற்றுக் கொண்டால் அவளின் வாழ்க்கைக்கு அதுவே ஆதாரமாகி விடும் என சிவாதான் யோசனை சொன்னாள். அவளின் அம்மாவையும் தன் பெற்றோரின் ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறாள்.
இதெல்லாம் ருத்ரன் தலையீடு இல்லாமல் இயல்பாக நடப்பது போலவே பார்த்துக் கொண்டாள் சிவா.
அதே ஊரில் கட்டி முடிக்கப் பட்ட தனி வீட்டுக்கு குடி போய் விட்டனர் தனராஜன் குடும்பத்தினர். பிறையும் கணவனோடு சேர்ந்து வாழ வந்து விட்டாள். குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என சகுந்தலை தன் மகளுக்கு சொல்லியிருக்க, பிறையும் அதற்கான முயற்சியில் இருக்கிறாள்.
கலைக்கு தன் தவறு புரிந்திருக்கிறது. அம்மா பேசினாலும் அவரிடம் காணப் படும் வேதனை அவனை நிறையவே மாற்றியிருக்கிறது. அப்பாவின் சொல்படி கேட்டு நடக்கிறான். ஆனாலும் விவசாயத்தில் நாட்டமில்லை. ருத்ரன் கணித்து சொன்னது சரியென தனராஜனுக்கும் புரிபட அவனிடம்தான் போய் நின்றார்.
பட்டுக்கோட்டையில் கலையரசனின் நண்பன் ஒருவன் உணவகம் ஒன்று தொடங்க போகிறானாம். முதலீட்டு சிக்கலில் இருக்கிறான். அந்த விவரத்தை சொன்ன ருத்ரன், “கலையை அங்குட்டு பார்ட்னர் ஆக்கி விடுங்க. அது அவனுக்கு செட் ஆகும்” என யோசனையும் சொன்னான். கலையும் அதற்கு சம்மதித்திருக்க அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் தனராஜன்.
கோயிலுக்கு பக்கத்திலேயே ருத்ரனின் வீடு இருப்பதால் தனராஜன் குடும்பம் சேகர் குடும்பம் அவர்களின் சகோதரிகளின் குடும்பம் என அனைவரும் அங்கே இருக்க வீடே ஜே ஜே என இருந்தது.
சிவாவுக்கு என்னவோ போலிருக்கவும் நாத்தனாரிடம் சொல்லிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்.
“நாம இம்புட்டு பேர் இருக்கையில ஒரு காபி டீ ன்னு கொடுத்து கவனிக்காம ஓடி ஒளிஞ்சிட்டா பார்த்தீகளாடி? தரம் தெரியாதவ” என சகோதரிகளிடம் சிவாவை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார் சகுந்தலை.