“இன்னிக்கு நெசத்துக்கு வேலை புள்ள, அதான் தாமசம் ஆகிப் போச்சு” என்றான்.
“அப்ப நேத்து வரை வேணும்னேதான் லேட்டா வந்திருக்கீங்க?” என அவள் கேட்கவும் ஆம் என ஒத்துக் கொண்டு விட்டான்.
முறைத்துப் பார்த்தவளின் கன்னங்களை தாங்கிப் பிடித்தவன், “எதனால நான் அப்படி இருந்தேன்னு எல்லாம் உனக்கு தெரியும், திரும்ப இப்ப விளக்கம் சொல்லணுமா நான்?” எனக் கேட்டான்.
வேண்டாம் என மறுப்பாக தலையாட்டினாள். ஒரு கன்னத்தை தட்டிக் கொடுத்தவன், “உறக்கம் வரலையா?” எனக் கேட்டான்.
“நமக்குள்ள ஏதோ சரியில்லாம இருந்துச்சா அது ரொம்ப தொந்தரவா போச்சு. இப்ப நமக்குள்ள எல்லாம் ஓகே தானே?” எனக் கேட்டாள்.
அவளின் முக வடிவு, தனக்கென தவிக்கும் அவளின் குரல், விட்டு விலகாதே என சொல்லும் பாவம் என அனைத்தையும் சிந்தையில் ஏற்றிக் கொண்டவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“என்னாச்சு உங்களுக்கு, நமக்குள்ள சண்டை இல்லாமலே ஒழுங்கா பேசாம கொள்ளாம முறுக்கிட்டு திரிஞ்சீங்க, இப்பவும் நான் ஏதும் சொல்லாமலே சமாதானம் ஆகிட்டீங்க?” எனக் கேட்டாள்.
அவன் மௌனமாக இருக்க, “ஒரு விஷயம் சொல்லணும், அது… கௌரி…அப்பா ஓட்டல்ல…” வார்த்தைகள் சிக்காமல் தடுமாறினாள்.
“எனக்கு அவுக சம்பந்த பட்ட எதுவும் தெரிஞ்சுக்க வேணாம் புள்ள”என்றான்.
“அதில்லைங்க…”
“வுடுறீ, இப்ப எதுவும் பேசாம உன் கூட அமைதியா இருந்தா போதும்னுதான் இருக்கு புள்ள” என அவன் சொல்லவும், பின் ஏன் வாயை திறக்க போகிறாள் அவள்?
சுடரும் உத்தமனும் பெரிய மகள் மருமகனை தங்களுடன் அழைத்துக் கொள்ள அதிக நாட்கள் எல்லாம் காத்திருக்கவில்லை. அந்த வாரத்திலேயே நல்ல நாளாக பார்த்து வரவழைத்து விட்டனர்.
சொக்கன் நல்ல உழைப்பாளி, வந்த அன்று அந்த வீட்டில் நடமாட வெகுவாக சங்கட பட்டான். வேலைகள் செய்கிறேன் என இறங்கியதும் பர பரப்பாகி விட்டான்.
இப்படி சொக்கனை சேர்த்து கொண்டார்களே, நமக்கு என்ன மரியாதை இருக்கும் ஊரில் என பாட்டி அங்கலாய்க்க, தனராஜன், சேகர் இருவருக்கும் கூட அதே எண்ணம்தான். வள்ளிக்கு ஊரார் பற்றிய கவலை இல்லை, தன் மகன் வருத்தம் கொள்வானோ என ருத்ரனை பற்றி மட்டுமே யோசித்தார்.
பெரியவர் எப்போதுமே ஆழ்ந்து யோசிப்பவர். சொக்கன் செய்தது துரோகம்தான், அதற்காக அவனை வாழ விடாமல் செய்வது எல்லாம் பாவம், வேண்டுமென்றால் நாம்தான் விலகி இருக்கலாம் என தன் கருத்தை சொல்லி அமைதியாக இருந்து விட்டார்.
சொக்கன் கௌரி பற்றி கணவனாக ஏதும் கேளாமல் போகவும் சிவாவும் எந்த விளக்கமோ சமாதானமோ அவனுக்கு சொல்லவில்லை. அவளிடம் அவன் இயல்பு போலத்தான் இருந்தான்.
பிறை வாழப் போகும் வீட்டின் வேலைகளை பார்வையிட வந்திருந்தார் சகுந்தலை. அப்படியே பிறந்த வீட்டிற்கும் வந்தவர், கௌரியின் விஷயத்தை நடுக்கூடத்தில் வைத்து விமர்சனம் செய்தார்.
“முதல்ல பெத்தவகள உறவாட விட்டா, அடுத்து ஓடி போனவளையும் இந்த வூட்டுக்குள்ள சேர்க்க போறாளா இல்லையான்னு பாரு” என வள்ளியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அம்மாவிடம் சத்தமாக சொன்னார்.
வள்ளி கண்டும் காணாமல் இருக்க, “ருத்ரன் சும்மான்னா இருப்பான்? பொண்டாட்டிய அடிச்சு வெரட்டியடிக்க போறானா இல்லையா பாரு” என இன்னும் பேசினார் சகுந்தலை.
“இந்தாருங்க அத்தாச்சி… வந்தா வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா எந்த வேலையும் பார்க்க வேணாம்னு அக்கடான்னு படுத்து கெடந்தோமான்னு இருக்கணும். எம்புள்ள சேதி பத்தியெல்லாம் வாய்ல போட்டு மெல்ல வேணாம்” என பட்டென சொல்லி அகன்றார் வள்ளி.
‘நான் சொன்னது போல ருத்ரனுக்கும் சிவாவுக்கும் சண்டை வரப் போகிறதா இல்லையா என்று பார்’ என சவால் போல கேட்டு விட்டு கோவமாகவே புறப்பட்டு சென்றார் சகுந்தலை.
நாத்தனாருக்கு நன்றாக கொடுத்து அனுப்பி விட்டாலும் மகன் மருமகளுக்கு இடையில் பூசல் வந்து விடுமோ என்ற பயம் வள்ளியின் மனதிலும் இருந்ததுதான்.
இப்படியே சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் மாலை நேரத்தில் கோயில் வேலை நடக்கும் இடத்தில் இருந்தான் ருத்ரன். கோயிலுக்கு வந்த சிவாவின் பெற்றோர் அவனை கண்டு விட்டு பெருத்த சங்கடத்தோடு அமைதியாக அவனை கடந்து சென்றனர்.
இருவருக்கும் திருமண நாள் போல, அர்ச்சனைக்கு கொடுத்தவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சொல்லி, சிவா ருத்ரன் பெயர்களையும் சேர்த்து சொன்னார்கள்.
ருத்ரன் தள்ளி வந்து விட்டான். எடுத்து வந்திருந்த சர்க்கரை பொங்கலை தொன்னையில் வைத்து அனைவருக்கும் வழங்கினார்கள்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என சிவரஞ்சனி முன்னரே கணவனிடம் சொல்லியிருந்தாள். தயாராக இரு, வந்து விடுகிறேன் என சொல்லி விட்டுத்தான் இங்கு வந்திருந்தான் ருத்ரன்.
மாமனார் மாமியாரை தவிர்ப்பதற்காக உடனேயே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
இன்று ஏதும் விரத நாளாக கூட இல்லாமல் இருக்கவும் சிவாவும் அவளது பெற்றோருக்காகவே கோயில் போக நினைத்திருக்கிறாள் என புரிந்து கொண்டான். ஆனால் அப்படியா என கேட்கவுமில்லை, அழைத்து செல்ல மாட்டேன் என மறுக்கவும் இல்லை.
கணவனோடு கோயிலுக்கு வந்த சிவா சாதாரணமாகவே இருந்தாள். மனதில் நினைப்பதை எல்லாம் காட்டிக் கொள்ளவில்லை. இன்முகமாகவே கணவனோடு வலம் வந்தாள்.
பெற்றோரிடம் நான் மட்டும் பேச, பழக என இருக்கிறேனே ஒரு வார்த்தை தன்னிடம் கேட்பாள் என எதிர்பார்த்தான் ருத்ரன்.
அவள் அப்படி ஏதும் கேளாமல் போகவும், கோயிலிலிருந்து புறப்படும் நேரம், “ஏதாச்சும் வேணுமா புள்ள, என்ன வேணா கேளு” என அவனே வாய் விட்டு கேட்டான்.
“என்ன திடீர்னு? அப்படி ஏதும் தோணல, எல்லாம்தான் செஞ்சு தர்றீங்களே?” என சொல்லி விட்டாள்.
வெளித் தோற்றத்தில் சிவாவிடம் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் ஒன்றாக கூடி வாழ்பவனால் அவளிடம் பிறந்த வீட்டுக்கான ஏக்கம் இருப்பதை உணர முடிந்தது.
பட்டுக்கோட்டை தாண்டியதுமே கிராமப் புறம் வந்து விடும். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் இயற்கையை ரசித்துக் கொண்டே கணவனுடனான அந்தப் பயணத்தை அனுபவித்து கொண்டிருந்தாள் சிவா.
அவர்களின் ஊருக்குள் வண்டி நுழையவும், “நேரம் போனதே தெரியலைங்க, அதுக்குள்ள ஊர் வந்திடுச்சு” என்றாள்.
வீட்டை தாண்டி வண்டி செல்லவும் தனக்காக இன்னும் கொஞ்ச நேரம் வண்டியில் அழைத்து செல்கிறார் எனதான் நினைத்தாள் சிவா.
அவளின் அம்மா வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியவன், “இறங்கிக்க புள்ள” என்றான்.
ஒன்றும் புரியாமல் இறங்கிக் கொண்டவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.
“உள்ளுக்கு போ, இன்னிக்குன்னு இல்லை எப்ப தோணுதோ உன் பெத்தவங்க வீட்டுக்கு போய் வந்து இரு, தங்கணும்னா கூட தங்கு” என்றான்.
கணவனின் முகத்தை உற்று நோக்கினாள் சிவா. அவனிடம் துளியும் கோவமோ வருத்தமோ இல்லை, மிக இயல்பாக இருந்தான்.
அவள் தயங்கிய படியே நிற்க, “போய்ட்டு வா புள்ள, வீட்ல யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. எல்லார்கிட்டேயும் நான் சொல்லிக்கிடுறேன், உன் முன்னால ஏதும் எனக்கு பெருசில்லடி, நீ எனக்கு பொண்டாட்டியா கெடைச்சது எல்லாம் சத்தியமா வரம்தான் புள்ள, அதுக்கு கொஞ்சமாச்சும் தகுதியானவனா நானும் இருக்கணும்தானே?” எனக் கேட்டான்.
‘இப்படி ஒருவன் வாழ்க்கைத் துணையாக அமைய என்ன தவம் செய்து விட்டேன் நான்?’ எனதான் சிவா நினைத்தாள். உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தையாக ஏதும் வெளிப்படவில்லை.
அவளின் விழியோரம் கசிய, விரல் கொண்டு துடைத்தவன், “ராத்திரிக்கு என்கிட்ட வந்திடு புள்ள, நீ இல்லாம கஷ்டம் எனக்கு” என சொல்லி புறப்பட்டு விட்டான்.
சிவரஞ்சனியின் பார்வை அவனை தொடர, அவனுடன் ஒட்டிக் கொண்ட அவள் நெஞ்சமோ அவனுடனே சென்று விட்டது.