அன்று மாலை அம்மாவின் வீட்டுக்கு சாதாரணமாக சிவா கிளம்ப, “அவ வந்து உறவாடிட்டு போனாளாம் ஆயி, எதுக்கு இதெல்லாம்னு உன் பெத்தவங்களுக்கு நீதான் எடுத்து சொல்லணும்” என்றார் வள்ளி.
அத்தையை ஒரு நொடி உற்றுப் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் மாடிக்கு சென்று விட்டாள். எங்கே மருமகள் தவறாக எடுத்துக் கொண்டாளோ என வள்ளிக்கு கவலையானது. மகன் வரவும் விஷயத்தை சொன்னார்.
கேட்டுக் கொண்டேன் என்பது போல பார்த்தான் ருத்ரன், அவ்வளவுதான்.
கௌரிக்கு நூறு நாள் வேலைக்கு சேர்வதில் ஏதோ சிக்கல். தனராஜன்தான் அவளுக்கு வாய்ப்பு கிடைக்க விடாமல் செய்கிறார் என அறிந்த கௌரி, தங்கையை பார்க்க அஞ்சலகத்திற்கு வந்து விட்டாள்.
அக்காவை பார்க்க பார்க்க சிவாவுக்கும் மனம் கலங்கியது. விவரம் சொன்ன கௌரி, தனக்கு வேலை கிடைக்க தடை செய்ய வேண்டாம் என உன் மாமனாரிடம் சொல் என கேட்டுக் கொண்டாள்.
கௌரி அதிக நேரமெல்லாம் அங்கு இருக்கவில்லை, தன்னால் தங்கைக்கு பிரச்சனை வேண்டாம் என நினைத்து விஷயத்தை சொன்ன உடனே கிளம்பியும் விட்டாள்.
ஆனால் இது பற்றி கணவனிடம் ஏதும் ஆலோசிக்கவில்லை சிவா. இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்து விட்டு மீண்டும் தங்கையிடம் வந்து நின்றாள் கௌரி, இந்த முறை அவளின் பெற்றோரையும் வரவழைத்திருந்தாள்.
அஞ்சலகத்தின் பின் பக்கம் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றாள் சிவா.
“நீ உதவி செய்வேன்னு நெனச்சிருந்தேன், காலைல கூட வேலைக்கு எடுக்க எம்பேரு ஏறலைன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாக” என்றாள் கௌரி.
“உன் புருஷனுக்கு பயந்து நாமதான் ஏதும் பணம் காசு தந்து உதவ முடியாது, இவ வேலைக்கு போறேங்கிறப்போ அதுக்காவது ஒத்தாசை பண்ணலாம்லடி?” என சின்ன மகளிடம் கேட்டார் சுடர்.
உத்தமனும் அப்படித்தான் பேசினார்.
தனராஜனுடன் தனக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்பதை சொன்ன சிவா, “என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லித்தான் அவர்கிட்ட பேச சொல்லலாம், ஆனா அப்படி செய்றது தப்பில்லையா ம்மா? அவருக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டாள்.
மகளின் கையை பிடித்துக்கொண்ட சுடர், “தப்பு சரியெல்லாம் எப்படி ஆயி பாக்குறது? உன் கூட பொறந்தவ இல்லையா?” எனக் கேட்டார்.
“இவ வேலைய கூட வுடு, இவ ஆம்படையானுக்கு இந்தூருல ஒருத்தரும் வேலை கொடுக்க மாட்டேங்குறாவோ, உன் ஆம்படையான் நீ எது சொன்னாலும் கேட்டுப்பாகதானே? அவ்வோகிட்டயெல்லாம் கௌரி ஆம்படையானை வேலைக்கு எடுத்துக்க சொல்லி ஒரு வார்த்தை சொல்ல சொல்லுடி, அது போதும்” என்றார் சுடர்.
“ஆமாம் ஆயி, தம்பி மேல உள்ள பயத்துலதான் இங்குட்டு சொக்கனால வேலை பார்க்க முடியலை, தம்பிக்கு பிரச்சனை இல்லைனு தெரிஞ்சுட்டா பொறவு இவுக இங்குட்டே பொழச்சுக்கிடுவாக” என்றார் உத்தமன்.
அக்காவை கலக்கமாக பார்த்த சிவா, “நான் சொன்னா அவங்க கண்டிப்பா மறுக்க மாட்டாங்க, அதுக்காக நானே எப்படி அவரை சங்கட படுத்துறது சொல்லு?” எனக் கேட்டாள்.
கௌரி மௌனமாக அழ, சிவாவுக்கும் அழுகை வருவது போலானது. முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள், “அவங்க மனசை நோகடிக்க என்னால முடியாது” என்றாள்.
கௌரி கோவமாக அங்கிருந்து செல்லப் பார்க்க, அவளின் கையை பிடித்து நிறுத்தினாள் சிவா.
“நிறைய காயப்பட்டு மீண்டவரு கௌரி என் புருஷன், நான் அவர் பக்கம் இல்லைனு தெரிஞ்சா… அத விட பெரிய கொடுமையை நான் அவருக்கு செஞ்சிட முடியாது. என் நிலைமையை புரிஞ்சுக்க, கோவ படாத” என்றாள் சிவா.
ஏதோ சமாதானம் ஆனவளாக தலையாட்டிக் கொண்டாள் கௌரி.
“எதுக்கு அக்காவும் அவ ஹஸ்பண்ட்டும் வேற வேலைக்கு போகணும்? உங்க கூடவே இருந்து ஓட்டலை பார்க்கட்டுமே” என அப்பாவிடம் சொன்னாள் சிவா.
கௌரி முகம் மலர தன் அப்பாவை பார்த்தாள். “எங்களுக்கு அதுல சம்மதம்தான் ஆயி, ருத்ரன் தம்பி சரின்னு சொல்லணுமே?” என தயங்கினார் உத்தமன். சுடருக்கும் அதே சந்தேகம்தான்.
“அது அவங்க ஏதும் கேட்டா நான் பேசிக்கிறேன், ஆனா நான் அங்க வந்து போக இருக்க முடியாது” என்றாள் சிவா.
“அம்மாடி ஆயி!” அதிர்ந்தார் உத்தமன்.
“அவங்க ஏதும் அப்படி சொல்ல மாட்டாங்கப்பா, ஆனா நான் அப்படி இருக்கிறதுதான் சரியா இருக்கும். இவ மேல உள்ள பாசம் அக்கறை எதுவும் மாறிப் போயிடல, இந்த விஷயத்துலன்னு இல்லை எதிலேயும் என் புருஷனை விட்டு கொடுக்க முடியாதுப்பா என்னால, அப்படி செஞ்சா அவங்க தாங்குறாங்களோ இல்லையோ என்னைய என்னால மன்னிச்சுக்க முடியாது. உங்களை விட்டு விலகி நிக்கிறதால எனக்கு எந்த குறையும் இருக்க போறதில்லை, நீங்க இவளை பாருங்க” என்றாள் சிவா.
இதை தவிர வேறு வழி இல்லையா என தவிப்பாக பார்த்தனர் அந்த பெற்றோர்.
இந்தப் பக்கம் வேறு வேலையாக வந்திருந்த ருத்ரனுக்கு அவனது வேலை விரைவாகவே முடிந்து விட்டது. ஆகவே மனைவியை அழைக்க முன்னேரமாகவே அஞ்சலகம் வந்து விட்டான். அதாவது கௌரி வந்த சற்று நேரத்திற்கு பின் வந்திருந்தான்.
மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என கருதி வெளியிலேயேதான் காத்திருந்தான். அழைப்பு ஒன்று வரவும் பேசிக் கொண்டே அஞ்சலகத்தின் பக்கவாட்டு பகுதி வழியே எதேச்சையாக நடந்து வந்திருந்தான்.
அவர்கள் பேசிக் கொண்ட அனைத்தையும் கேட்டிருந்தான் ருத்ரன். அமைதியாக வந்த வழியே சென்றும் விட்டான்.
நேரத்தை பார்த்த சிவா, “அவங்க வந்திருப்பாங்க” என்றாள்.
“நீ கிளம்பு ஆயி, நாங்க பொறவு போயிக்கிறோம்” என சொல்லி மகளை அனுப்பி வைத்தார் உத்தமன்.
மனைவி வருவதை பார்த்தவன், “ஏன் எப்படியோ இருக்க புள்ள?” எனக் கேட்டான்.
“நல்லாத்தான் இருக்கேன்” என அவள் சொல்லவும் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்தான்.
வீடு வந்த பிறகு சாப்பிட்டு படுத்து விட்டாள் சிவா. உறங்கி எழவும் மனதில் அத்தனை பாரம் இல்லை. தனக்கு எல்லாமுமாக கணவன் இருக்க போகிறார், அக்காவும் நன்றாக இருக்க போகிறாள், இப்படித்தான் இதை கையாள முடியும் என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என தெளிந்து கொண்டாள்.
முகம் கழுவி தயாராகி கீழே வந்தவள் கோயிலுக்கு செல்வதாக மாமியாரிடம் சொல்ல, அவரும் வருவதாக கிளம்பினார். அருகிலுள்ள கோயிலுக்கு நடந்தே சென்று வழிபட்டு விட்டு திரும்பினார்கள்.
வீடு வந்த பிறகு இரவு சமையல் முடித்து விட்டு கணவனுக்காக காத்திருந்தாள் சிவா. நேரமாவதை பார்த்து வள்ளிதான் அவளை சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார்.
கோயில் பணி சம்பந்தமான வேலை, பதினோரு மணிக்குத்தான் வீடு வந்தான் ருத்ரன். புல்லட் வந்த ஓசை கேட்டு சிவா கீழே வந்து விட்டாள்.
வள்ளியும் எழுந்து வந்திருக்க, அம்மாவையும் மனைவியையும் மாறி மாறி பார்த்தவன், “போங்க போயி படுங்க” என்றான்.
மருமகளிடம் கண்களால் சொல்லிக் கொண்டு சென்று விட்டார் வள்ளி. சிவா சாப்பாடு எடுத்து வைக்க போக, “ஏட்டி நான் வச்சுக்க மாட்டேனா? எதுக்கு உறக்கத்தை கெடுத்துக்கிற?” எனக் கேட்டான்.
“என் உறக்கம் கெட்டு நாளாச்சு, உங்களுக்கு ஏன் கவலை?” என நொடிப்பாக கேட்டுக் கொண்டே பரிமாறினாள்.
புருவங்களை உயர்த்தி ‘ஏதும் பேசாதே டா!’ என தனக்கு தானே எச்சரித்துக் கொண்டு அமைதியாக சாப்பிட்டு முடித்தான்.
மாடி வரவும் ஆடை மாற்றிக் கொண்டு படுக்க போனவனை பிடித்துக்கொண்டாள் சிவா.
“அதிகமா போயிட்டிருக்கு உங்க அலப்பறை! ஏன் இப்படி தள்ளி தள்ளி போறீங்க, என்னை கண்டு பயமா, ஏதும் எடக்கு மடக்கா கேட்டு உங்களால செய்ய முடியாம போயிடும்னு நினைக்குறீங்களா?” என நேரடியாக கேட்டு விட்டாள்.