நன்றாக வாழ்ந்த குடும்பம்தான். சுடர் திருமணம் முடித்து வந்த போது  வீட்டில் அத்தனை வளம். 

நேரம் சரியில்லை என்றால் என்ன செய்தாலும் இறங்குமுகம் என்பதற்கு ஏற்ப ஆகிப் போனது உத்தமனின் நிலை. 

ஒரு வழியாக கடனை எல்லாம் ஒழித்துக் கட்டி நிமிர்ந்து, விவசாயம் செய்யலாம் என யோசிக்க, சொந்த ஊரில் ஒரு சென்ட் நிலம் கூட அவர்களுக்கு சொந்தமாக இல்லை. மகள்களுக்கு என எதையும் விட்டு வைக்கவில்லை, இதில் சின்ன மகளின் சம்பாத்யத்தில் உட்கார்ந்து திண்பதா? என மனம் துவண்டு விட்டார் உத்தமன். 

என் அம்மாவின் ஊருக்கு செல்லலாம், அங்கிருக்கும் நிலத்தில் வீட்டை கட்டிக் கொண்டு ஓட்டலும் வைக்கலாம் என சுடர்தான் யோசனை தந்தார். இந்தக் கிராம புறத்தில் ஓட்டல் வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற முடியாவிட்டாலும் அன்றாடபாட்டுக்கு அந்தத் தொழில் கை கொடுத்தது. 

ஓட்டல் என்றால் வீட்டின் வெளியில் கொட்டகை போல போடப் பட்டிருக்கும். ஒரே நேரத்தில் ஏழு பேர் அமர்ந்து சாப்பிடலாம், அவ்வளவுதான். சமையல் எல்லாம் வீட்டின் பக்கவாட்டில் உள்ள இன்னொரு சின்ன கொட்டகையில் நடக்கும். 

சொந்தங்கள் எல்லாம் வசதி வாய்ப்பாக இருக்கும் போது தன் குடும்பம் மட்டும் இப்படியே நின்று விட்டதே, இரண்டு மகள்களை எப்படி கரை சேர்ப்பேன் என்ற கவலையிலேயே உத்தமனுக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் எல்லாம் வந்து விட்டது. 

சுடர்தான், “நம்ம பொண்ணுங்களுக்கு யோகமான ஜாதகம், அதெல்லாம் ஊர் மெச்ச வாழுவாளுங்க பார்த்திட்டே இருங்க” என கணவரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

பெரிய வீட்டின் வாசலில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்தான் சொக்கன். காலை மாலை என இரண்டு வேளைகளும் அவன்தான் பால் விநியோகம் செய்வான். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பால் விற்பனை ஆரம்பித்து விடும், ஆறு மணிக்கெல்லாம் டிப்போ வண்டி வரும், மீதமுள்ள பால் எல்லாம் டிப்போவுக்குத்தான். 

அதுபோல மாலையிலும் ஆறு மணி வரை தான் கணக்கு. 

அந்தக் காலத்தில் மாட்டுப் பண்ணை இருந்ததாம், இப்போது கறவை மாடுகள், காளைகள், கன்றுகள் என முப்பது இருக்கின்றன. தீவனம் வைப்பது, கடிவாளம் போடுவது, கால்நடை மருத்துவரிடம் காட்டுவது என்ன எல்லாம் சொக்கனின் வேலைதான். 

பிழைப்பு தேடி வெளியூரிலிருந்து இங்கு வந்தவர்கள் சொக்கனின் பெற்றோர், அந்த நேரம் ஊர் பண்ணையக்காரராக இருந்த சதாசிவம் சொக்கனின் அப்பாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டார். 

இப்போது அவனது பெற்றோர் உயிருடன் இல்லை, அவனுக்கென சின்ன குடிசை வீடு இருக்கிறது. ஆனால் அங்கே தங்க மாட்டான். இங்கேயே வேலை பார்த்து மூன்று வேளையும் சாப்பிட்டு, வீட்டின் கார் ஷெட் பக்கத்தில் அவனுக்கென ஏற்படுத்திக் கொடுத்த அறையிலேயே தங்கிக் கொள்வான். 

கௌரி பால் பணத்தை கொடுக்க சென்ற போது, நேரம் ஆறை கடந்திருந்தது. பணத்தை கொடுத்தவள் அரை லிட்டர் பால் கேட்க, “மணி என்னாகுது புள்ள? உன் இஷ்டத்துக்கு வந்து கேட்டா எப்படி கொடுக்க, டிப்போ வண்டிக்கு கொடுத்திட்டேன்” என்றான் சொக்கன்.  

“எலேய்! ஆயி வாடிக்கையா வாங்குதுல்லடா? தெரிஞ்சுகிட்டும் இல்லைங்கிற?” என்ன அவனை சாடினார் சதாசிவம். 

“உங்களுக்கு என்னத்தய்யா தெரியும்? எடுத்து வைக்கிற அன்னிக்கு வேணாம்னு சொல்லிப்புடும், அரை லிட்டர் பால் வீணா போச்சுதேன்னு ஆத்தா என் காதை பிடிச்சு திருகும். உங்களை திருகினா தெரியும் வலி” என்றான் சொக்கன்.  

“அவ கெடக்குறா கழுத, அவளுக்கு பயந்துதான் விளக்கு வச்ச பிறகாலும் பணத்தை கொண்டாந்து நீட்டியிருக்கு. நீ உள்ளுக்கு போயி பால் எடுத்தாந்து ஆயிகிட்ட கொடு” புஷ்டியான வெள்ளை மீசையை தடவிக் கொண்டே சொன்னார் சதாசிவம். 

அலுத்துக் கொண்டே உள்ளே சென்று கேட்டான் சொக்கன்.  “கெழவனுக்கு வேற வேலை இல்லை, அவர் சொன்னாருன்னு நீயும் வந்தியாக்கும்? வீட்ல உள்ள பால் லட்சுமிடா, இப்ப எப்படி கொடுக்கிறதுங்கிறேன்?” என நொடித்தார் மங்களத்தம்மாள். 

வள்ளிக்கண்ணுதான், “அவ என்ன தெரியாத ஆளா அத்தை? ஒரு நாள் கொடுத்தா என்ன இப்போ?” எனக் கேட்டு மாமியாரை அடக்கினார். 

“இந்த மாசப் பணம் வந்துச்சாடா?” என விசாரித்து அறிந்து கொண்டே மேற்கொண்டு பேசாமல் பால் வழங்க சம்மதித்தார் மங்களத்தம்மாள். 

வள்ளிக்கண்ணு பிறைநிலாவுக்கு குரல் கொடுக்க அறையில் டிவி பார்த்துக் கொண்டே காதில் விழாதது போல இருந்து கொண்டாள். 

“நானே போய் எடுத்துக்கிறேன் ம்மா” என்ற சொக்கன் சமையலறை சென்று பால் அளந்து எடுத்துக் கொண்டு சென்றான். 

தான் கூப்பிட்டும் வெளியில் வராத பிறை மீது வள்ளிக்கண்ணுக்கு நல்ல கோவம். அவருக்கே போக்கு காண்பித்து விடும் வல்லமை படைத்தவள் அவள். 

ருத்ரனுக்கு இவளை நிச்சயம் செய்ய இருந்த நாள் அவரின் நினைவுக்கு வந்தது. ருத்ரனின் முதல் சித்தப்பா தனராஜின் மகன் கலையரசனை வீட்டினருக்கு தெரியாமல் மணமுடித்துக் கொண்டாள் பிறை. 

வீட்டின் வாசலில் மணமக்களாக அவர்கள் வந்து நின்ற போது, ருத்ரனுக்கு கட்டுக்கடங்காத கோவம். இப்படித்தான் என்பதை முன்னரே தெரிய படுத்தியிருந்தால் தனக்கு அவமானமாகி இருக்காதே என்ற நினைவில் தம்பியை அடித்து நொறுக்கி விட்டான்.

வள்ளிக்கண்ணு கூட தன் மகனை தடுக்கவில்லை. அவருக்கும் அவ்வளவு ஆத்திரம். கலையரசனின் அம்மா செங்கமலம் அதிர்ந்து போனவராக ஏதும் செய்ய முடியாமல் அழுகையோடு நின்றிருந்தார். 

மங்களத்தம்மாள்தான் குறுக்கே விழுந்து தடுத்தார். பிறையின் பெற்றோர், ருத்ரனின் சித்தப்பாக்கள் என அனைவரும் வந்து விட்டனர். எல்லோருக்குமே முன்பே சொல்லியிருக்கலாம் என்ற ஆதங்கம்தான். 

தன் அன்பான பேத்திக்காக ருத்ரனிடம் பேசி பேசியே வீட்டிலும் சேர்த்துக்கொள்ள வைத்து விட்டார் மங்களம். ஆமாம் அதென்னவோ அந்த அம்மாளுக்கு பிறை என்றால் அப்படியொரு பிரியம். உயிரை கூட உனக்கே என எழுதிக் கொடுத்து விடுவார்.

பிறைக்கு சின்னதிலிருந்தே ருத்ரன் என்றால் பயம்தான். அவளுக்கு என்னவோ ருத்ரன் சரியான காட்டான் எனதான் நினைப்பு. 

வெளியூர் சென்று கல்லூரியில் படித்திருப்பவன் கலையரசன். பேண்ட் சட்டை, ஸ்டைலான சிகை, கல கலப்பான பேச்சு என இருந்தவனைதான் அவளுக்கு பிடித்தது. இருவரும் ரகசியமாக பழக ஆரம்பித்து ஆறு மாதங்கள் இருக்கும். அண்ணனுக்கு பேசி வைத்திருகும் பெண் என்பதால் வீட்டில் சொல்ல கலைக்கு பயம், சொல்லி விடலாம் என பிறை கூறிய போது அவன்தான் தடுத்தான். 

இந்த திருமண யோசனை கூட கலையரசனுடையதுதான். ஏதோ மயக்கத்தில் அவனை மணம் செய்து கொண்டாள் பிறை. இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போதுதான் தான் முட்டாள்தனம் செய்து விட்டோம் என்பது அவளுக்கு புலப்படுகிறது. 

அரியர்ஸ் முடிக்காத கலையரசனுக்கு இன்னும் பட்டம் கையில் கிடைக்கவில்லை, பெண்கள் என்றாலே வழிசலான பேச்சுதான், அண்ணன் நிழலில்தான் வாழ்கிறான், சுயமாக நிற்கும் திறமையற்றவன் என்பதெல்லாம்  காலம் கடந்துதான் பிறைக்கு தெரிய வந்திருக்கிறது. 

பிறைக்கு தன் வாழ்வின் மீது அத்தனை திருப்தி கிடையாது. வீட்டில் எதையும் ஒட்டுதலோடு செய்ய மாட்டாள். தொட்டதற்கும் பாட்டியிடம் குறை படிப்பாள். 

மாமியார் என்ற முறையில் செங்கமலமே பிறையை கடிந்து கொள்ள முடியாது, அதற்கு மங்களத்தம்மாள் அனுமதிக்க மாட்டார். அப்புறம் வள்ளி என்ன அவளை கண்டித்து திருத்துவது?

எப்போதும் போல இப்போதும் பிறையை மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டு உள்ளே சென்று விட்டார் வள்ளி. 

வெளி வேலைகள் முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான் கலையரசன். சுடரின் ஓட்டலுக்கு வெளியில் ஏதோ வாக்குவாதம் போல் இருக்கவும் பைக்கை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்றான். 

கலையரசனை பார்த்ததும், “அண்ணன் வணக்கம் ண்ணா” என்றான் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவன். 

யாரென கலையரசன் புருவம் சுருக்க, “தெரியலைங்களா? பட்டுக்கோட்டை தனம் உரக்கடைல வேலை செய்றவனுங்க” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 

கலையரசனுக்கும் அவனை அங்கே பார்த்த நினைவு வந்தது. 

“ம்ம்… என்ன இங்க வந்து கரைச்சல் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான் கலையரசன். 

அவனுடைய தங்கைக்கு நிச்சயத்துக்கு ஆரி வேலை செய்ய பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தையல்கடையில் பிளவுஸ் கொடுத்திருக்கிறானாம். அது சிவரஞ்சனியிடம்தான் வேலைக்கு வந்திருக்கிறதாம். அந்த தையல் கடை அடைக்க பட்டிருக்க, முன்னர் அந்த கடைக்காரர் சொன்னதை வைத்து இவளிடமே வாங்கிக் கொள்ள என வந்திருக்கிறான். 

சிவாவுக்கு இவனை யார் என்ன என ஏதும் தெரியாது, கடையில் கொடுக்க படும் வேலையை செய்து அந்த கடையிலேயே கொடுத்து விடுவாள். இவன் சொல்லும் தையல் கடைக்காரரின் அலைபேசிக்கு முயன்றாலும் அழைப்பு செல்லவில்லை. 

எப்படி இவரிடம் கொடுப்பேன் என வாதம் செய்கிறாள் சிவா. 

கலையரசனுக்கு பெண்கள் என்றால் மனம் இளகி விடும். அந்த பெண்தான் சொல்கிறாளே, எங்க ஊருக்கே வந்து வம்பு செய்வாயா? என வந்தவனை அடிக்க கை ஓங்கினான். 

“அவர் சொல்றது உண்மையா கூட இருக்கலாம், அடிக்கலாம் செய்யாதீங்க” என பதறிய சிவரஞ்சனிக்கு இந்தாளை யார் அழைத்தது? என உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது. 

கலையரசனோ அந்த வீட்டு பெண்கள் முன்னிலையில் தன்னை நாயகனாக காட்டிக் கொள்ளும் முனைப்பில் இருந்தான். என்ன வம்பாகுமோ என பயந்து போயிருந்தனர் சிவாவின் பெற்றோர். 

அந்த வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ருத்ரன், கலையரசன் அங்கு நிற்கவும் தன் புல்லட்டிலிருந்து இறங்காமலேயே, “என்னடா இங்குட்டு நிக்கிற?” எனக் கேட்டான். 

அப்படியே ஒடுங்கிக் கொண்டு பவ்யமாக நின்று விட்டான் கலையரசன். 

‘வந்திட்டான் அடுத்த நாட்டாமை!’ மனதிற்குள் அலறினாள் சிவரஞ்சனி.