கையில் பணத்தை கண்டால் சுடருக்கு இருப்பு கொள்ளாது, சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் பெண்களுக்கு ஆடைகள் வாங்கிடுவார், உறவு முறையில் யாருக்கேனும் ஏதாவது விஷேஷம் வந்தாலும் அடக்கமாக செய்யாமல் பணத்தை கரைத்து தள்ளி விட்டுத்தான் ஓய்வார்.
அம்மாவின் குணம் அறிந்து பணத்தை அவரின் கையில் தரவே மாட்டாள் சிவரஞ்சனி.
மாநிறத்தில் கண்களில் துடிப்போடு இருக்கும் குமரி சிவரஞ்சனி.
பத்தாம் வகுப்பில் பெற்றிருந்த நல்ல மதிப்பெண்களும் தனியாக முடித்திருந்த கணிப்பொறி கோர்ஸும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே அஞ்சல் துறையில் வேலையை வாங்கி தந்து விட்டது. அதன் பின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை முடித்து முதுகலை படித்துக் கொண்டிருக்கிறாள். ஓய்வு நேரத்திலும் ஆரி வேலைப்பாடு செய்து பொருளீட்டுகிறாள்.
இவர்கள் குடும்பம் இந்த ஊருக்கு வந்து இன்னும் ஒரு வருடம் ஆகியிருக்கவில்லை, இதற்கு முன் இருந்த பிறந்த ஊரும் இங்கிருந்து அதிக தூரமில்லை. சுடரின் பெயரில் இருந்த நிலம் இந்த ஊரில் இருந்ததால் இங்கே ஓட்டு வீடு ஒன்றை கட்டிக்கொண்டு நிரந்தரமாக இங்கேயே வந்து விட்டனர்.
சிவரஞ்சனி கல்லூரி படித்த காலத்திலேயே ஆரி வேலைப்பாடு செய்வதை கற்றுக் கொண்டாள். பட்டுக்கோட்டையில் உள்ள சில தையல்கடைகளில் இவளுக்கு நல்ல பழக்கம். வாரம் ஒரு முறை அந்த கடைகளுக்கு செல்வாள். தினம் இவளுக்கு கைவேலை இருக்கும் படி ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.
அரசாங்க வேலை என்றாலும் பெரிதான சம்பளம் இல்லை, போக போக அதிலேயே தேர்வுகள் எழுதி உயர்பதவி கிடைத்தால் நல்ல நிலைக்கு வந்து விடுவாள், ஆனால் அதற்கெல்லாம் காலம் எடுக்கும்.
அப்பா வாங்கிய கடனை அடைக்க இருந்த சொத்துக்களை விற்றுத் தீர்த்து விட்டார்கள். இரண்டு பெண் பிள்ளைகளுக்கு என சேர்த்திருந்த நகைகளில் பெருமளவில் இப்போது இல்லை.
ஆகவே நேரம் காலம் பாராமல் உழைக்கிறாள் சிவரஞ்சனி.
ஓட்டலில் உதவி செய்ய சுடர் கூப்பிட்டாலும் செல்ல மாட்டாள். “வர்ற நாலு பேரை கவனிக்க முடியாதாம்மா?” என கேட்பாள். அம்மா திட்டினாலும் அலட்சியமாக வாங்கிக் கொள்வாள்.
கடையில் உதவியாக கணவர் உத்தமன், பெரிய மகள் கௌரி என இருவர் இருந்தாலும் சின்ன மகள் போல சுறு சுறுப்பாக யாரும் செய்ய மாட்டார்கள் என சுடருக்கு எண்ணம். ஒரே நேரத்தில் நான்கு பேர் சேர்ந்தார் போல வந்தால் அவர்களை கவனிக்கவே உத்தமனுக்கும் கௌரிக்கும் திண்டாட்டமாகி விடும்.
அடுப்பில் இருந்து கொண்டு சுடராலும் சமாளிக்க முடியாது. இதே சிவா என்றால் சிட்டாக வேலை நடக்கும்.
சிவாவுக்கோ இந்த நேரத்தில் கூடுதலாக ஆரி வேலை செய்தால் அதிக லாபம் பார்க்கலாமே என்கிற எண்ணம்.
அம்மாவுக்கும் மகளுக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும். உத்தமன் மகள்களுக்கு நிறைய செல்லம் கொடுப்பார்.
“ஆளுங்க வந்திருக்காங்க ம்மா” என வந்து நின்றாள் கௌரி.
“இந்த நேரம் யாரு? ஏழு மணிக்கு மேலதான் சாப்பாடு ரெடியாகும்னு சொல்றதுக்கு என்ன?” என்றார் சுடர்.
கௌரி சரிதான் என திரும்பி செல்லப் பார்க்க, அவளை நிறுத்தினாள் சிவா.
“இந்த நேரம் சாப்பாடு கிடைக்காதுன்னு ஊருக்கே தெரியும், வேற விஷயமா வந்திருப்பாங்க, நீயே போய் பாரும்மா” என்றாள் சிவா.
வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றாலும் சுடரிடம் ஆர்டர் கொடுப்பார்கள், ஐம்பது நபர்களுக்கு உண்டான அளவில் சமைக்க வரும் ஆர்டர்களை எடுத்துக் கொள்வார் சுடர். அப்படித்தான் ஆர்டர் கொடுக்க என யாரோ வந்திருந்தனர்.
“என்ன ஏதுன்னு ஒழுங்கா விசாரிக்க மாட்டியா நீ? நான் போறேன், நீ இவகிட்ட பணத்தை வாங்கி காசை கொடுத்திட்டு அப்படியே பாலும் வாங்கியாந்திடு. ஒரு நாள் லேட்டானாலும் அந்தம்மா வைய ஆரம்பிச்சிடும்” என பெரிய மகளிடம் சொல்லி அகன்றார் சுடர்.
கௌரியும் தன் தங்கையிடம் பணம் கேட்க, காத்திருக்க சொல்லி விட்டாள் சிவா. பணமிருக்கும் இடம் இவளுக்கு தெரிவதும் ஒன்றுதான் அம்மாவின் கையில் அப்படியே கொடுப்பதும் ஒன்றுதான்.
“ரொம்ப நல்லது, எவ்ளோ வேலைதான் பார்க்கிறது? கை காலெல்லாம் நோவுது டி” வெறும் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்ட கௌரி, கால்களை அழுத்தி விட்டுக் கொண்டாள்.
அக்காவை வாஞ்சையாக பார்த்த சிவா, “ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் வேற வேலைக்கு போயிருக்கலாம்ல?” எனக் கேட்டாள்.
கௌரிக்கு சரியாக படிப்பு வரவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு முறை எழுதி தேர்வு செய்தவள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் எழுது என சொல்லிப் பார்த்த உத்தமனும் மகளின் அழுகையில் சரிதான் விடு என விட்டு விட்டார்.
சுறுசுறுப்பு மட்டும் போதாது, என்ன வேலை செய்தாலும் முகத்தின் பொழிவு கொஞ்சமும் குறையாமல், அவளை பார்த்தவர்கள் நல்ல அழகிதான் என உடனே சொல்லி விடும் அளவுக்கு இருந்தது கௌரியின் தோற்றம்.
சில இளவட்டங்கள் இவளை பார்க்கவெனவே இங்கு உணவருந்த வருவதுண்டு. யாரிடமும் ஒரு வார்த்தை கூடுதலாக பேச மாட்டாள். தேவையின்றி யாரின் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள்.
சுடரின் பார்வையில் பெரிய மகள் அப்பிராணி, வெகுளி, விவரம் போதாதவள், இந்த பெண் எப்படி வாழுமோ என அவருக்கு மனக் கவலையும் உண்டு. சின்ன மகளை நினைத்து அந்தக் கவலையெல்லாம் கிடையாது. அவளும் அதிகம் வாயடிக்க மாட்டாள்தான் என்றாலும் தைரியமானவள், எதையும் சமாளிப்பாள் என அவருக்கு நினைப்பு.
அக்காவின் மீது சிவாவுக்கு மிகுந்த பிரியம், அவளின் திருமணத்திற்கு எனதான் இப்போதைய சேமிப்பு.
வேலையை முடித்து நெட்டி முறித்துக் கொண்ட சிவா, அடுக்களையை ஒட்டியிருந்த படுக்கையறைக்கு சென்றாள். அவளுடைய பழைய பாடப் புத்தங்களில் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை கையில் எடுத்தாள். புத்தகத்தின் அட்டையில் போடப்பட்டிருந்த பழுப்பு காகிதத்தை பிரித்து உள்ளிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களில் தேவையானதை எடுத்துக் கொண்டவள் மிச்ச பணத்தை அப்படியே வைத்து அட்டையை சரியாக போட்டு வைத்தாள்.
அதிக பணத்தை இப்படி வீட்டில் வைத்துக்கொள்ள மாட்டாள். பெரும்பாலும் இவளுக்கு ஜி பே மூலமாகவே பணம் செலுத்தப் பட்டு விடுவதால் வங்கிக் கணக்கில்தான் இருக்கும். அஞ்சலகத்தில் நல்லதொரு சேமிப்புத் திட்டத்தில் மாதா மாதம் பணத்தை செலுத்தி விடுவாள்.
அது போக கையில் நல்ல தொகை சேர்ந்திருக்கிறது, வேறொரு திட்டமும் இருக்க, பால் பணத்தை தானே கொண்டு சென்றால் என்ன என யோசித்துக் கொண்டே வெளியே வந்தாள்.
“பால் கணக்கு உனக்கென்னத்தடி தெரியும், அந்த சொக்கன் ஒன்னு கெடக்க ஒன்னு பேசும், நானே போறேன்” என சொல்லி பணத்தை பெற்றுக் கொண்டாள் கௌரி.
“ஏன் என்னத்த பேசுவான், என்னமோ அவன் வூட்டு வியாபாரமா?” எனக் கோபமாக கேட்டாள் சிவா.
“நல்லா சொன்ன! மங்களத்தமா கூட ஒரு கிளாஸ் பால் கூடுதலா கொடுத்திடும், இந்த சொக்கன் ஒரு சொட்டு பால கூட அளந்து அளந்துதான் ஊத்தும். அப்படியே அவங்க அதுக்கு அள்ளி கொடுத்திடுற மாதிரி அவ்வளவு விசுவாசம்!” நொடித்துக் கொண்டே சென்று விட்டாள் கௌரி.